வியாழன், 23 டிசம்பர், 2010

சீக்கிரமே பெய்யக்கூடும் செம்மழை





















இப்படியான ஒரு கட்டுரையை நான் எழுதுவதற்கான முழு யோக்யதை எனக்கில்லை. இந்தக் கட்டுரையில் வருகிற பெரும்பாலான கருத்துக்களும் பார்வைகளும் தோழர் சிற்பிமகனுடனான உரையாடலின் போது தொகுத்தவை. இந்தக் கட்டுரையை எழுவதற்கு என்னை நண்பர் சங்கர் தூண்டினார். காரணம் அதியமான் அவர்களின் கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

என்ற கட்டுரையை படித்த பின் அவருக்கு தோன்றிய குழப்பங்கள். நான் இந்தக் கட்டுரையை பல காலம் முன்பே படித்திருந்தேன். அதற்கு விளக்கம் எழுத தேவை இல்லாத அளவு பட்டப்பழைய பலவீனமான வாதங்கள் என்பதை முன்னமே உணர்ந்து தான் விட்டிருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரையின் சில பின்னூட்டங்கள் சங்கரைப் போன்ற சிலரின் சந்தேகங்கள் இவற்றால் எழுத முற்பட்டேன். அதியமான் வைத்திருக்கும் சப்பை வாதங்களை 1848 இல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலேயே பக்கம் பக்கமாக விளக்கி இருக்கிறார்கள். இந்த எல்லா கேள்விகளும் சந்தேகங்களும் அந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கமளிக்கப் பட்டுள்ளன. என்றாலும் இங்கே சங்கருக்கு மட்டுமே சில சந்தேகங்கள். ஆனால் அதியமானுக்கு சந்தேகமெல்லாம் இல்லை. சாடல் தான். தீர்மானம் தான். அதுதான் அவர்மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது. இணைய அரங்கிலும் வெளியிடங்களிலும் நானறிந்த வகையில் தன்னை வலதுசாரி என்று அறிவித்துக் கொண்ட ஒரே ஒருவராக அதியமான் அவர்களைப் பார்கிறேன். அந்த வகையில் அவருக்கு என் முதல் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு முத்திரை குத்தி வரும் எதிரியிடம் போரிடுவதென்பது எந்தவொரு வீரனுக்கும் மகிழ்ச்சியையே தரும். முகமூடி போட்டு வரும் கோழைகளோடு வாதிடுவதை விடவும் முகத்தோடு வரும் அதியமானோடு மோதுவது மகிழ்வைத்தருகிறது. எனவே அவரை இந்தக்கட்டுரை மூலமாக மதிப்புக்குரிய எதிரி என்று அறிவிக்கிறேன்.


1848 காலகட்டத்திலேயே கம்யூனிசம் என்பது மக்களின் மனோபவத்துக்கு எதிரானது என்ற சப்பை வாதத்துக்கு மார்க்சும் ஏங்கெல்சும் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பதில் சொல்லி இருக்கிறார்கள். சின்ன புத்தகம்தான். அதை படிக்குமாறு எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன். என்றாலும் இதற்கு எனது பாணியிலான பதிலையும் பதிகிறேன். கம்யூனிசம் இன்றைய சூழ்நிலையிலும் சரியாகவே இருக்கும். பொதுவுடைமை என்பது மனித மனோபாவத்துக்கு எதிரானது என்பது மிகவும் தட்டையான வாதம். மனித மனம் எப்போதுமே அடுத்தவர் துன்பங்களுக்கு இரங்குகின்றது. சுரண்டிக் கொழுத்த பெரும் பணக்காரர்களின் நிலையோ வேறானது. அடுத்தாரை சுரண்டி சம்பாதித்த குற்ற உணர்ச்சியை சரிகட்ட கோயிலுக்குக் கொடை கொடுக்கிறார்கள். பணவெறி இப்போது சில நூறாண்டுகளாகத்தான் வெகுவான மக்களிடையே துளிர்த்து வருகிறது. மனிதகுல நாகரீக வளர்ச்சியில் சக மனிதனுக்கிரங்கும் அடிப்படை உணர்வு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட அதியுன்னத மனித நேயத்தின் அடிப்படியில் அறிவியல்பூர்வமாக கட்டியமைக்கப்பட்ட பொதுடைமையை மனித மனோபாவத்துக்கெதிரானது என்று சும்மா கூட சொல்லக் கூடாது. கம்யூனிச சமூகம் என்ற ஒன்று இதுவரை எங்குமே உருவாக்கியிராத போது அதியமான் சொல்வதுபோல அது சோம்பேறித்தனத்தை நிலை நாட்டும் என்று எப்படி சொல்ல முடியும்? போகப்போக தொழில்களும் விவசாயமும் எல்லா வித சமூகங்களிலும் இயந்திரமயமாக்கப்படும். பொதுவுடமை சமூகங்களில் அப்படி இயந்திரமயமாக்கப்படும்போது பாட்டாளிகளின் ஓய்வு நேரம் மிகுந்து அது பிற மானுடமுன்னேற்றப்பணிகளுக்காக கலையிலக்கிய முன்னெடுப்புகளுக்காக பயண்படுத்தப்படும். ஜார்ஜ் ஆர்வெல் ரக தூற்றல்வாதிகளின் சதியிலக்கியங்களை அம்பலப்படுத்தவும் மக்கள் இலக்கியங்களை வளர்த்தெடுக்கும் டால்ஸ்டாய் மக்சீம் கார்க்கி சாதியினரின் படைப்புகளை படிக்கவும், படைக்கவுமாக அந்த ஓய்வு நேரங்கள் ஆய்வு நேரங்களாகவும் உபயோகிக்கப்படும். கம்யூனிச சமூகம் வராத காலத்திலேயெ ஜெயமோகன்கள் அங்கலாய்ப்பு படைப்புகளை அடுக்கும் போது உன்மையான கம்யூனிச சமூகம் வந்த பின் அதற்கு கலை இலக்கிய சமூக தலண்க்களில் பல வழிகளும் எதிர்த்தாக்குதல்கள் நடைபெறும். அதையெல்லாம் இனங்கண்டு கொள்ளவும் ஒதுக்கவும் சரியானதை முன்வைக்கவும் இந்த காலகட்டங்கள் பயண்படும். அது போக கம்யூனிச சமூகம் வரும் போது உழைப்பு என்பது பொதுவக்கப்படும். உழைப்பின் பலனும் பொது. எனவே நான் நன்றாக உழைத்தால் அதன் பலன் எனக்கும் உண்டு என்ற நிலை வரும்போது நான் ஏன் உழைக்காமல் இருக்கப் போகிறேன்? சோசலிச ரஷ்யா நமது என்கிற எண்ணம் வரப்போய்தான் உலகிலேயே அதிகளவில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சோவியத் மக்கள் தியாக உணர்வோடு களம் கண்டார்கள். ஆக சோம்பேறித்தனம் வளர்ந்து விடும் என்பது புரட்டுவாதமே. கம்யூனிசம் என்பது அறிவியல் பூர்வமாக உருவான ஒரு தத்துவம். அதை தவறென்று சொல்ல நிதர்சனமான உதாரணங்கள் தேவை; அல்லது ஒத்துக்கொள்ளக் கூடிய தர்க்க ரீதியிலான ஆய்வாவது தேவை. இவை எதுவும் இல்லாமல் கம்யூனிசம் ஒத்து வராது என்று சொல்வது சரியல்ல. முடவனாயிருக்கிற எனது மகனுக்கும் சேர்த்து நான் உழைப்பது அடிப்படை மனித மனோபாவம் என்றால், பொதுவில் எல்லோருக்குமாக எல்லொருடனுமாக உழைப்பையும் ஊதியத்தையும் பகிர்ந்து வாழ்வது மட்டும் எப்படி மனித மனோபாவத்துக்கு எதிராகப்போய்விடும்?


பொதுவுடமை என்பது சொத்துடமையை ஒழிப்பது அல்ல. தனிச்சொத்துடமையை ஒழிப்பதுதான். காரணம் தனியே ஒருவனுக்கு சொத்து எப்படி வரும்? பாடுபட்டு சொத்து சேர்த்தேன் என்பவர்களுக்கு மார்க்ஸும் ஏங்கெல்சும் அப்போதே பதில் சொல்லி இருக்கிறார்கள். இங்கே இவர்கள் சொல்கிற அறிவு, செயல் திறமை இதெல்லாம் ஒருவரின் தனியுடமை அல்ல. எல்லோரது அறிவும் திறமையும் இன்ன பிறவும் சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் விளைவால் உருவானவை. சமூகத்திடம் இருந்து பெறப்பட்டவை. அவை சமூகத்தின் சொத்து. இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. இதைத்தான் கம்யூனிசம் செய்யும். இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஆடைகளின்றி வனவிலங்குகளோடு திரிந்தவன், நெருப்பை க ண் டு பிடித்தவன், சக்கரம் கண்டு பிடித்தவன் இவர்களன்றி எந்த மனித அறிவு வளர்ந்திருக்கும்? எழுத்துக்களை உருவாக்கியவன் இல்லையென்றான் உங்கள் கம்ப்யூட்டரின் கீபோர்டுகளில் எதை வைத்திருப்பீர்கள்? இத்தனை ஆயிரம் ஆண்டுகளின் மனித குல சிந்தனையின் தொடர்ச்சிதான் உங்கள் எல்லோரின் மூளைச்செயல்பாடும். திடுமென பேரறிவுடன் யாரும் சுயம்புவாக தோன்றி விடுவதில்லை. இப்போது நாம் படிக்கிற கல்வி; அதை கற்க நமக்கிருக்கும் முன்னேறிய மூளை- இவை எதுவுமே நம்முடைய சொத்து அல்ல. காலங்காலமாக முன்னேறிய ஒட்டு மொத்த மனிதகுலத்தின்-சமூகத்தின் சொத்து. அப்படியிருக்க இன்று விண்டோஸ் செவெனுக்கு காப்புரிமை கேட்பது எந்த வகையில் நியாயம்? நாட்டு மருந்து கொடுப்பவர்கள் அதை குடும்ப ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று அங்கலாய்ப்பவர்கள் என்றேனும் இவை பற்றி யோசித்தது உண்டா?


கம்யூனிச சமூகத்தில் அறிவுக்கு மரியாதை இருக்காது என்ற தட்டையான வாதம் கொண்டிருபவர்களே!. இப்போதிருக்கும் சமூக அமைப்பில் அறிவுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அறிவோடு பேசியதற்காக அருந்ததி ராய் மீது வழக்கு போடுகிறார்கள். இருக்கிற மரியாதையை வைத்துக் கொண்டு மற்ற அறிவாளிகள் என்ன செய்கிறார்கள்? ராசா என்ன செய்தார்? எடியூரப்பா என்ன செய்தார். டெல்ஹி என்ன செய்தார்? போகட்டும். இந்த சாப்ட்வேர் எஞ்சினியர்கள் தான் என்ன செய்கிறார்கள். வங்கி கணக்குக்கு, மருத்துவ அறிக்கைகளுக்கு சாப்ட்வேர் எழுதுகிறார்கள். கூலிக்கு. இந்த மரியாதை போதுமா? இதை தான் கேட்கிறீர்களா? அப்படியான மரியாதை அங்கே கிடைக்காது தான். பொதுவாக கம்யூனிசம் பற்றி விமர்சிப்பவர்கள் ஸ்டாலின் காலத்தில் கருத்து சுதந்திரம் என்பார்கள்; டியான்மென் சதுக்கம் என்பார்கள். டிராட்ஸ்கி என்பார்கள். நான் இதையெல்லாம் சரியென்று வாதிட விரும்பவில்லை. இதை நீங்கள் தவறென்று சொல்லும் முன் இந்திய ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? சீமானுக்கு என்ன ஆனது? வைகோவுக்கு என்ன ஆனது? சொந்த நாட்டு மீனவர்கள் சாகிற போதெல்லாம் மேலாதிக்க நலன்களுக்காக சும்மா இருக்கிற இந்திய ஜனநாயகத்தின் யோக்யதை என்ன ஆனது?


என்னிடம் அறிவு இருக்கிறது. பணமும் இருக்கிறது. அதை வைத்து நான் சொத்து சேர்க்கிறேன். இதில் என்ன தப்பு என்பவர்களே!. அழகிரியிடம் பணம் இருந்தது. அதை விட்டால் ஓட்டு வாங்கலாம் என்ற அறிவும் இருக்கிறது. அதை வைத்து சம்பாதிக்க-தேர்தலின் போது ஓட்டுக்கு காசு கொடுத்து கொள்ளையடிக்க, அங்கீகாரம் கொடுப்பீர்களா? ரொம்ப அறிவாளித்தனமாக யோசிப்பதாக எண்ணிக்கொண்டு பலரும் கேட்பது கம்யூனிசம் தனிப்பட்ட திறமைகளை வளர்த்தெடுக்காது என்றுதான். அறிவாற்றலில் உயர்வு தாழ்வு பார்க்காமலிருந்தால் ஒரு சோம்பேறி சமுதாயம் உருவெடுக்கும் என்றும் அச்சப்படுகிறார்கள். இதற்கான நேரடி பதிலுக்கு முன்னதாக ஒரு பதில் கேள்வியும் வைக்கிறேன். அப்படி நீங்கள் அறிவிலும் திறமையிலும் முன்னேறியவராக இருந்தால் உலக வளங்களை சுரண்டி உங்கள் சொத்தாக்கிக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது? மேலே சொன்னதுதான் இதற்கும் பதில். இந்த தனித்திறமை அறிவாற்றல் எல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்புதான். உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல. அப்படியிருக்கையில் அதை வைத்து பொருள் சேர்ர்கும் உரிமையை எப்படி நியாப்படுத்துவீர்கள்? மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு அடியிலும்-ஒவ்வொரு முன்னேற்றத்திலும், உங்களின் இன்றைய அறிவுத்திறமைக்கான விதை ஊன்றப்பட்டிருந்தது.

தோழர் சிற்பிமகனுடன் பேசிக்கொண்டிருக்கையில் பெரியார்தாசனின் விளக்கம் ஒன்றை விளக்கினார். பட்டாம்பூச்சி, சிட்டுக்குருவி பருந்து இவை மூன்றும் பறப்பவை. பருந்து மிக வலியது என்பதால் சிட்டுகுருவியின், பட்டாம்பூச்சியின் திறன் குறைவு என்பதற்காக அவற்றின் வாழ்வதற்கான இடத்தையும் சூழலையும் மறுப்பதா? வல்லான் பொருள் குவிக்க இல்லான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்? ஒரு நாட்டின் பொருளாதார நிலைப்படி எல்லா மக்களும் ஒரு நாளைக்கு ஒரே ஒரு இட்லிதான் திண்ண முடியும் என்ற நிலையை கற்பனை செய்யுங்கள். அப்படியான நாட்டில் அதியமான் போன்ற ஒரு அறிவிற்சிறந்த திறமைசாலி சொத்துக்களை குவித்துக்கொண்டு மூன்று வேளையும் கறிச்சொறு தின்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவுடமை என்பது வெறும் தனிச்சொத்துடமையை மட்டும் ஒழிப்பதன்று. அந்த நெடிய வரலாற்றுப் பயணத்தின் முடிவில் உழைப்பும் சமூகச் சொத்தாக்கப்படும். அப்படியிருக்கையில்- தேவைக்கேற்ற உழைப்பு என்கிற வேளையில், எனது தனிப்பட்ட ஆற்றல் என்று சொந்தம் கொண்டாட எதுவும் இருக்காது. ஒரு வேளை பட்டினியா?- பகிர்ந்து கொள்வோம். மூன்று வேளையும் உணவா?-அதையும் பகிர்ந்து கொள்வோம் என்று பொதுவில் சிந்திப்பதற்கு உள்ள பொதுவான மனத்தடை என்னவென்று தெரியுமா?


தனிப்பட்ட முறையிலான அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்னும் எச்சரிக்கையுணர்வே அதியமான் போன்றவர்களின் இத்தகைய அங்கலாய்ப்புகளின் அடிப்படை. பொன்னியரிசி என்பது அறிவு மிகுந்த அதியமானுக்கும் ருசியாகத்தானிருக்கும். அறிவே இல்லாத எனக்கும் ருசியாகத்தானிருக்கும். அப்படியிருக்கையில் நான் புழுத்த அரிசியை திண்ண வேண்டும் அதியமான் பொன்னியரிசி திண்பார் என்பது சரியாகுமா? ஜெயந்தி திரையரங்கின் அருகே நடைபாதையில் உறங்கும் மக்களைப்போல கோடிக்கணக்கானவர்கள் இருக்கும் இந்த நாட்டில் வியாபார நுணுக்கம் தெரிவதால் அப்பன் சுரண்டிய சொத்துக்கள் இருப்பதால் முகேஷ் அம்பானியின் ஒற்றைக் குடும்பம் வசிக்க 27 மாடிகளைக்கொண்ட சொகுசு மாளிகையை கட்டுவதை சரியென்றா நீங்கள் சொல்கிறீர்கள்? இப்படியான இடைவெளியை சரிக்கட்டத்தான்-சமப்படுத்ததான் கம்யூனிசம் பாடுபடுகிறது. அப்படி இடைவெளி வேண்டாம் என்று நினைப்பவர்கள் நமது நண்பர்கள். தோழர்கள். அப்படியான இடைவெளி நியாயம் என்று சொல்லும் அதியமான்கள் ஜெயமோகன்கள் நமக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கும் எதிரிகள்.


கம்யூனிசம் என்பது நிறைவேற்றக் கடினமான ஒரு கனவுதான். ஆனால், எல்லோருக்கும் சமமான ஒரு சமுதாயம் படைக்க அப்படியான ஒரு கனவை நோக்கி உழைப்பதில் தப்பில்லை. அப்படி உழைப்பது உங்களின் சமூகக் கடமை. இன்றையை இந்திய சமூக அமைப்பில் உண்மையான கம்யூனிஸ்டுகள் முழு நேர கம்யூனிஸ்டுகள் யாரும் சொத்து சேர்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகள் சொத்து சேர்க்கிறார்கள் என்று புளுகும் யாரும் உண்மையான கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்புணர்வை வெளியே சொல்வதில்லை. அப்படியான கம்யூனிஸ்டுகள், மக்களிடம் போகும் கம்யூனிஸ்டுகள் காசே இல்லாமல் தான் பயணிக்கிறார்கள். சக தோழர்களின் பண உதவியால் தம் பிள்ளைகளின் மருத்துவ செலவுகளை சமாளிக்கிறார்கள். பயண தூரத்துக்கு தக்க காசை மட்டும் கம்யூனிச ஆதரவாளர்களிடம் வாங்கி பயணிக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் உண்டியலில் காசு போட யோசிக்கும் அதியமான்கள் அயோத்தி கரசேவைக்கு பண உதவி செய்வார்கள். கம்யூனிச ஆதரவாளர்களோ கம்யூனிஸ்டுகளின் அத்யாவசிய தேவைகளை அவர்கள் கேளாமலே பூர்த்தி செய்து வருகிறார்கள். இன்றைய சூழலிலும் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்கள் தம்மளவில் பொதுவுடைமைக்கான முன்னுதாரணத் தீவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பொதுவுடைமை சமூகம் உருவாகும் போது சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது அரசிடம் சொத்துக்களை ஒப்படைக்கும் முதல் மனிதர்கள் கம்யூனிச, கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். நானெல்லாம் முதலில் கொடுக்கும் லிஸ்டில் இருப்பேன். அதியமான் போல இது என் பணம் என்பவர்கள், பணத்தைத் தர யோசிப்பவர்கள் எல்லோரிடம் இருந்தும் பணமும் நிலமும் பறிக்கப்பட்டு இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இந்தப் பயமே, இவர்கள் வரவே வராது என்று சொல்லும் கம்யூனிசம் மீது எப்போதும் குற்றம் கூறச் சொல்கிறது. இப்படியான முன்னெச்சரிக்கைக்காரர்களே கம்யூனிசம் வரவே வராது என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஏசு எழுந்து வரமாட்டார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் ஏசு வரமாட்டார் என்று நான் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதியமான் என்றில்லை; இதைப்போன்ற மற்ற எல்லோருக்கும் என்றாவது கம்யூனிசம் வரும் என்று உள்ளூர இருக்கும் பயம்தான் அது வராது; அது வரவே வராது என்று அடிக்கடி பரப்புரை செய்யத் தூண்டி வருகிறது. மேலாக தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அடித்தட்டு மக்கள் நிறைந்த, கொபம் கனன்று கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மிகுந்த பகுதிகளில் குறிவைத்து இந்த நிறுவனங்கள் தம் முதலாளித்துவ தொண்டு செய்து வருகிறார்கள். அப்படியான நிறுவனங்களுக்கு உதவ என்று கம்யூனிசம் என்பதை கொடுங்கனவாக எண்ணிக்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தனியாக தமது பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகின்றன. பெருமுதலாளிகள் நிதி கொடுக்கிறார்கள். இந்த மக்கள் அரசிடம் இருந்து தள்ளி வைக்கப்பட்டும் அமைப்பாவதில் இருந்து தடுக்கப்பட்டும் இருக்க குறுகிய நோக்கில் அவர்களுக்கு உதவிகள் என்ர போர்வையில் மறைமுக சிறை வைக்க இந்த நிறுவனங்களின் வழி கம்யூனிச எதிரிகள் முயன்று வருகிறார்கள். சுய உதவிக்குழுக்கள், நமக்கு நாமே திட்டம் என்பதெல்லாம் இப்படியான நோக்கத்துடனே செயல்படுகின்றன. கம்யூனிசம் போலவும் மறைமுகமாக போலிகம்யூனிசத்தை வளர்க்கவும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல இலக்கியவாதிகள் எழுதி வருகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக மேற்சொன்ன நாடுகளின் உதவி பெற்றவர்களாக இருப்பார்கள். சாரு நிவேதிதா எழுதினால் நல்லி குப்புசாமி பணம் போட்டு கூட புத்தகம் கொண்டுவருவார். ஜாஹிர்ராஜா எழுதினால் செய்வாரா? சோவியத்தில் அமெரிக்க சதிப்பிரிவுகள் இறக்குமதி செய்த போர்னோகிராபி சமாச்சாரங்களை எதிர்ப்புரட்சி முஸ்தீபுகளையெல்லாம் சரியாக கண்கானித்து கட்டுப்படுத்தாததும் சோவியத் வீழ்ந்ததற்கான காரணங்களில் ஒன்று. சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு தேடிப்பிடித்து நோபல் பரிசு கொடுப்பதெல்லாம் எதுக்காம்? அமைதிப்பணிகளை இலக்கியப்பணிகளை ஊக்குவிக்கவா? ஆப்கானிஸ்தானின் பழங்குடி மக்களின் மேல் ஆளில்லா விமானங்கள் மூலம் மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் நடத்தி வரும் ஒபாமாவுக்கு அமைதிக்கு நோபல் பரிசு கொடுத்த விதத்தையும் மேற்சொன்னதையும் ஒப்பிட்டு நோக்கினால் உண்மை விளங்கும். கம்யூனிசம் மலரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னமெரிக்க கண்ட லத்தீன் அமேரிக்க நாடுகளில் இப்படியான உதவிகளின் வழியே தான் அவர்களின் இயற்கை வளங்களை சுரண்டுதல் மற்றும் கம்யூனிசப் பாதையிலிருந்து திசை திருப்புதல் என்ற இரு மாங்காய்களை அடித்தார்கள். இதை எப்படி எப்படி அடித்தார்கள் என்ன விதமான வேசித்தனமான காரியங்களை இதற்க்காக செய்தார்கள் என்பதை ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். அமேரிக்காவின் மேலாதிக்க, ஏகாதிபத்திய, புதிய காலணியாதிக்க நலன்களுக்காக அப்படியான கீழ்த்தரமான காரியங்களின் மூலம் மூன்றாம் உலக வளரும் நாடுகளை வஞ்சித்த நேரடி சாட்சியமான ஜான் பெர்க்கின்ஸ் என்பவர் மனசாட்சியின் உந்துதலால் எழுதியுள்ளார். கண்டிப்பாக அதை படியுங்கள். இப்போது மக்கள் எல்லோரும் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள்; சம்பாதிக்கிறார்கள்; எனவே கம்யூனிசம் பற்றிய சிந்தனையே தோன்றாது என்று பலரும் நம்பியும் சொல்லியும் வருகிறார்கள். அப்படி வராத ஒன்றை ஏன் வம்படியாக குறை சொல்ல வேண்டும்?. காரணம் ஒன்றுமில்லை. ஐரோப்பாவை 1848 இல் பிடித்து ஆட்டத்தொடங்கிய கம்யூனிசம் பூதம் இன்று அகிலம் முழுவதையும் பிடித்து ஆட்டுகிறது.


கம்யூனிசம் கனிவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை என்று சொல்லப் படுகிறது. இதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகளை துணைக்கழைக்கிறார் அதியமான். இது முதலாளித்துவத்தின் பொய்ப்பிரச்சாரங்களில் ஒன்று. அத்தகைய வதந்திகளை பரப்பும் பிரச்சார பீரங்கிகள் எல்லா நாடுகளிலும் உண்டு. அப்படி கம்யூனிச தாகம் இருந்து இப்போது இல்லாமல் போனதாக சொல்லப்படும் தேசத்து மக்கள் இப்போதிருக்கும் உலகமய முதலாளித்துவ சமூக அமைப்பை விரும்பியா ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? இடைவேளை போன்றதொரு இடைவெளி இது. அங்கேயும் சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஏன்? முதலாளித்துவ குறியீடான அமேரிக்க மக்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்டதை விரும்பியா ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அங்கே எதிர்த்து எதுவும் செய்யப்படவில்லையா? கம்யூனிசம் என்பது மற்ற சமூக அமைப்புகளைப் போலல்லாமல் நேரடியாக அரசியல் மயமாக்கப்பட்டதால் அதை நடைமுறைப்படுத்தும் போது சில பிழைகள் நேரும்- என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஒத்துக் கொள்கிறது. அதே சமயம் இந்தப் பிழைகளை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் தத்துவ வறுமை கொண்ட அமைப்பாக முதலாளித்துவத்தை அது அடையாளம் காட்டுகிறது.

பலரும் சொல்கிறார்கள். கம்யூனிசம் வருவதற்கான காலமும் சூழலும் இப்போது இல்லை என்று. இதுனால் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறென்பது வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும் என்று ஆரம்பிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரிடத்தில் சொல்கிறது. மத்திய தர தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் விவசாயிகள் எல்லோரும் முதலாளித்துவத்தின் கொடூர சுரண்டல்களால் பாட்டாளிகளாக உடலுழைப்புத் தொழிலாளிகளாக்கப்படுவார்கள். அவர்களே பாட்டாளி வர்க்கம். அவர்களே முதலாளிகளுக்கு எதிரான புரட்சியை நடத்தி தலைமை பொறுப்பை எடுப்பார்கள் என்று தெளிவுபடச் சொல்கிறது. இன்றைய லாபவெறி கொண்ட முதலாளித்துவ அமைப்பில் நான் உள்பட எல்லோரும் உடலுழைப்புத்தொழிலாளிகளாக (இங்கே அறிவை பயண்படுத்தி சாப்ட்வேர் எழுதும் பொறியாளர்களும் பாட்டாளி வர்க்கமே) மாறிவருகிறார்கள் என்பது கண்கூடு. விவசாயி கட்டிட வேலைக்கு வருகிறான் . இதன் பின் முதலாளித்துவம் அவனிடமிருந்து உழைப்பைச் சுரண்டி உபரியை சொத்தாக்கி வீங்கும். சுரண்டச் சுரண்ட ஒன்றுமே இல்லை என்று உணரும் காலம் வரும்போது யாரும் அழைப்பு விடுக்காமலேயே பாட்டாளிகளின் புரட்சி நிகழும். மாற்றவே முடியாதது இது.

எந்தவொரு உழைப்பும் தனியுடமை அல்ல என்கிறபோது அது சமூகத்தின் சொத்தாகிறது. உழைப்பு, அதனால் விளையும் உற்பத்தி அதன் பின் அதன் பகிர்வு இதை சமூக உடமை ஆக்குவதா தனிஉடமை ஆக்குவதா? என்ற கேள்விக்கான பதிலில் இருக்கிறது கம்யூனிசம் வேண்டுமா வேண்டாமா என்பதற்கு. சக்திக்கேற்ற உழைப்பு உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சோசலிசம். அதன் பின் சக்திக்கேற்ற/தேவைக்கேற்ற உழைப்பு-தேவைக்கெற்ப ஊதியம் என்பது கம்யூனிசம். சோசலிசத்தின் பலன்களை நாம் இந்தியாவில் நேருகாலத்தில் உண்டாக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் முதல் தலைமுறை ஊழியர்களிடம் கேட்க வேண்டும். இப்பொது அது தனியாருக்கு போக வேண்டும் என்பதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும் என்பதை படிக்கிறவர்களின் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஒருவர் எல்லோருக்காகவும் எல்லொரும் ஒருவருக்காகவும் ஆக இருக்கிற கம்யூனிச சமூகத்தில் உழைப்பு எனபது அது உடல் உழைப்பானாலும் மூளை உழைப்பானாலும் தனிப்பட்ட சொத்தாக் கருத முடியாத ஒரு மனோநிலைக்கு கொண்டு செல்லும். எல்லொருக்கும் அப்படியான சமமான வசதிகளை பகிர்ந்தளிக்கும் முன்னேறிய சமூகத்தில் இப்படியான சில்லறை வாதங்களுக்கு வேலை இருக்காது. வெறும் சில பத்தாண்டுகள் இப்படியானதொரு சோசலிச வாழ்க்கை வாழ்ந்த ரஷ்யாவில் இரண்டாம் உலகப் போரின் போது அந்த மக்களின் தியாக உள்ளம் என்பது இத்தகைய மனமாற்றத்தில் விளைந்தது. இப்பொதும் அந்த மக்கள் தம் பழைய வாழ்வை பிச்சையெடுக்காத வாழ்வை கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இரண்டடி பின்னே போயிருக்கிறார்கள். உவகையோடு ஏற்றுக் கொள்ளவில்லை.


ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.


இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள அதியமான் என்ற வார்த்தை நேரடியாக அதியமான் என்ற தனிநபரை குறிக்கவில்லை. அந்தப் பெயரைக் குறியீடாக்கி அப்படியான எண்ணம் கொண்ட எல்லோரையும் சொல்லி இருக்கிறேன். அதியமான் நம் மதிப்புக்குரிய எதிரி என்பதால் அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை. இருந்தாலும் மேலே சொன்னது பொதுவான வாசகர்களுக்காக.


வேலிக்குட்பட்ட அங்கேயும்

திரிய விடப்பட்ட இங்கேயும்

மழை இல்லை.

எதனாலும் தடுக்க இயலா

இடியின் குமுறல் தாங்கி

எங்கும் நீக்கமற

சீக்கிரமே பெய்யக்கூடும்

செம்மழை.

புலியூர் முருகேசன்

2 கருத்துகள்:

K.R.அதியமான் சொன்னது…

///ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ///

அன்புள்ள ஜே.பி,

பல நாட்கள் பயணத்திற்க்கு பின், இன்றுதான் இணையத்தை பார்க்க முடிந்தது. வறுமையை ஒழிக்க சுதந்திர சந்தை பொருளாதாரமே சரியான மற்றும் சிறந்த வழி என்பதே எம் கோணம். அதை பற்றி ஒரு பதிவு :

http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்


///எனவே நான் நன்றாக உழைத்தால் அதன் பலன் எனக்கும் உண்டு என்ற நிலை வரும்போது நான் ஏன் உழைக்காமல் இருக்கப் போகிறேன்///

இதெல்லாம் வெறும் தியரி அல்லது idealism. நடை முறை யதார்த்ததை பற்றி பேசலாம். வரலாறு தரும் பாடங்களை பாருங்கள்.

இரவிசங்கரின் சொன்னது…

செம்மழை பெய்வதற்கான தருணம் இப்போது இல்லை ஜெ.பி. அவர்களே. இப்போது மட்டும் அல்ல எப்பொழுதும் பெய்வதற்கான தருணம் இல்லை! தங்கள் கட்டுரையை முழுவதும் படித்துவிட்டு விரிவான கருத்துகளை தெரிவிக்கிறேன். நன்றி