சனி, 29 நவம்பர், 2014

பல்லுயிரியம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை

ரெண்டு நாட்களுக்கு முன்பு பல்லுயிரியம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு கருந்தரங்குக்கு போயிருந்தேன். வழக்குரைஞர்கள், கல்விப்புல அறிவியளாலர்கள், காப்புரிமை அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், தொழில்புல ஆய்வாளர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது. இரு வழக்குரைஞர்கள் அதில் பேசினார்கள். பேசியதன் சாரம் இந்தியாவின் காப்புரிமை மற்றும் பல்லுயிரியம் குறித்த சட்டங்கள் நடைமுறைகள் உயிர்த்தொழில் நுட்பவியல் சார்ந்த ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் காப்புரிமைகளையும் குறைத்து வருவதாக அங்கலாய்த்தார்கள். உயிர்த்தொழில்நுட்பவியல் குறித்த வணிகநோக்கோடு கூடிய ஆய்வுகளுக்கும், ஆய்வு முடிவுகளை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கும் முன்பும், காப்புரிமையின் போதும் தேசிய பல்லுயிரிய ஆணையத்திடன் முன் அனுமதி பெற வேண்டும் என்பது 2002 இல் இருந்து நடைமுறை. தேசிய பல்லுயிரிய சட்டம் 2002 இப்படித்தான் சொல்கிறது. அதுதான் இவர்களுக்கு பெரிய தடங்கலாம். அதனால் தொழில் நலிந்து வருகிறதாம். அதில் ஒருவர் சொல்கிறார் பத்தாண்டுகளாக பணத்தைக் கொட்டி ஆய்வு செய்தவர்கள் இப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டால் எப்படி நாட்டின் வருமானம் உயரும் என்று.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்? Part 1

யமுனா ராஜேந்திரனின் சமீபத்திய பதிவு ஒன்றில் “காட்சிப்பிழை' முன்னிறுத்தும் வெகுஜன சினிமா பார்வையில் எனக்குக் கிஞ்சிற்றும் உடன்பாடு இல்லை” என்பதாக எழுதி இருந்தார். ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து என் பார்வையில் கொஞ்சம் விரிவாக எழுதி வருகிறேன். அதற்கு முன்னோட்டமாக இது. தற்கால சூழலில் காட்சிப்பிழையின் தேவை மிகவும் அவசியம். தமிழின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக சினிமா மாறி விட்டது. வெகு மக்கள் பேசுகிற பேச்சுகளில் எடுத்தாளுகிற உவமானங்களில் எல்லாமும் சினிமா இரன்டற கலந்து விட்டது. சில மாதங்கள் முன்பு கவுதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு வரி-வணிக சினிமாவில் கலையின் சாத்தியங்களை அடையக் கூடிய இடங்களும் உள்ளதாக வருகிறது. உண்மை. சிவாஜி கனேசன் நன்றாக நடித்த படங்களும் உண்டு. வணிக சினிமாக்களை முற்றாக புறக்கனித்து விட்டு மாற்று சினிமா என்று சொல்லப்படுவதையோ நல்ல சினிமா என்பதையோ முன்னெடுத்து விட முடியாது. உணர்வெழுச்சியால் மட்டுமே ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் வெகுஜன சினிமாவின் வலைமையை புரிந்து கொண்ட அலவு கூட லட்சிய பின்புலமுள்ள அமைப்புகளோ சிந்தனையாளர்களோ புரிந்து கொள்வதில்லை. இங்கே சினிமா என்ற பெயரில் ஒன்று இருக்கிறது. அதில் இருந்து தான் நல்ல சினிமா தர முடியும். இலக்கியங்கள் பிறந்த பின்புதான் இலக்கணங்கள் எழுதப்பட்டன. ஆக நல்ல சினிமா என்பதன் அளவுகோல்கள் வெளியே இருந்து வந்து விட முடியாது. ஏற்கனவே இருப்பது ஒன்றில் இருந்து வருவது எளிதாகவும் முன்னெடுத்துச் செல்ல லகுவாகவும் இருக்கும். நாளைய இயக்குனர்கள் காப்பி அடிக்கிறார்கள் அப்படி இப்படி என்று சொன்னாலும், அவர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். கதாநாயக பிம்பங்களை உடைத்து வருகிறார்கள்.  ஆனானப்பட்ட விஜயே நண்பன் படத்தில் நடிக்கிறார். இப்படியான மாற்றங்களை விரும்புபவர்கள் வெகுஜன சினிமாவை கவனிப்பதும் அதில் நல்ல அம்சங்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி சினிமா பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்தவும் செய்தல் முக்கியமானது.

இலக்கியம் எதற்காகப் படிக்கிறீர்கள்?



கடந்த சில வாரங்கள் முன்பு நண்பர் சங்கர் அவர்களின் இல்லத்தில் கவிஞானி சபரி வந்த ஒரு மாலை வேளையில் பலதரப்பட்ட பேச்சுக்களின் நடுவே இலக்கியவாதிகளின் நாடகத்தனம் பற்றிய பேச்சு வந்தது. எழுத்தாளர் கவிதா எழுத்துக்கும் எழுதுபவர்களின் வாழ்வுக்கும் இடையேயான முரண்களை மிகவும் கடுமையாக விமர்சித்தார். எழுத்தில் அன்பையும் அறத்தையும் சொல்லிவிட்டு வாழ்வில் வன்மத்தையும் குரூரத்தையும் வெளிக்காட்டும் இலக்கியவாதிகள் மிகவும் எமாற்றுக்காரர்கள் என்று ஆதங்கப்பட்டார். மற்றெல்லாரின் கருத்தும் அதுவேவாக இருந்தது. நான் மட்டும்வேறு கட்சி (போலி அறிவுஜீவியாதலால்). அதில் என்ன ஆச்சர்யம்... அப்படியானவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது என்று கேட்டேன். ஒட்டு மொத்த தேசமே ஒருவன் அல்லது அணி நல்லா விளையாடனும் என்று எதிர்பார்க்கிறது. காசுக்காக தோற்றுப் போகிறார்கள். போலியாக சினிமா செய்கிறார்கள். போலியாக வைத்தியம் பார்க்கிறார்கள் போலியாக கல்வி கொடுக்கிறார்கள். இப்படி அடிப்படை விஷயங்களிலேயே போலித்தனமாக இருக்கும் சமூகத்தில் ஏன் இலக்கியத்தில் மட்டும் தூய்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றேன்.  சபரியும் சங்கரும் சொன்னார்கள் இலக்கியம் மனுஷனை பண்படுத்துவது. ஒரு நல்ல இலக்கியப்படைப்பை வாசிக்கும் போது மனிதனின் மனோபாவம் பண்படுகிறது. ஒரு அருமையான படைப்பை வாசித்து முடித்த உடனே ஒருவன் ஒரு கொடுமையான செயலை செய்து விட முடியாது என்றனர். நான் அப்படி எந்தெந்த இலக்கியவாதிகள் ஏமாற்றி விட்டனர் என்று கேட்டேன். அவர்கள் சொன்னதில் சற்றேரக்குறைய தமிழில் அதிகம் புத்தகம் விக்கிற எழுதுகிற எழுத்தாளர்கள் மிகப்பெரும்பாலோனோர் வந்து விட்டனர். எனக்கு அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நான் சில ஆண்டுகளுக்கு முன் பெற்ற முதிர்ச்சியை இப்போது நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்றேன். நல்ல இலக்கியவாதிகள் இன்னுமுள்ளனர் என்றும் அவர்கள் விளம்பரத்தில் பெரும்பாலும் இல்லை என்றும் முக்கியமாக சென்னைக்கு வெளியே நிறைய பேர் உள்ளனர் என்றும் சொன்னேன்.

வேடசந்தூர் என்னும் சிறிய நகரத்தில் மணிகண்டன் என்ற நண்பர் பால் வியாபரம் செய்கிறார். குறி என்கிற இலக்கிய இதழை நடத்தி வருகிறார். அந்த பத்திரிக்கையில் அவர் எழுதுவதில்லை. நிறைய பேர்களை எழுத வைக்கிறார். தமிழின் பெரும்பாலான புத்தகங்களை படிக்கிறார். புத்தகங்களை படிக்க வைக்கிறார். ஜீவ கரிகாலன் இருக்கிறார். குகை மா புகழேந்தி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலக்கிய உலகில் இவர்களைபோல எத்தனையோ பேர்கள் இலக்கியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். வெளிச்சத்தில் மட்டுமே உண்மை இருப்பதில்லை. உண்மை இருட்டிலும் இருக்கும். நான் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி சொல்வது ஒன்று. இது போலிகளின் உலகம். இங்கே உண்மையை கண்டடைவது பெரும் சாதனை.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்று உறுதியாக நம்புகிறவன் நான். எனது நண்பர்கள் இந்த நம்பிக்கை அதாவது எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருக்கனும் என்ற நம்பிக்கை எனக்கு மிகப் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையும் கொடுத்தது. கவிஞர் முருகேசனின் ஒரு தோழியின் வாசலில் முன்னுரையில் வாசு மாமா எழுதியிருப்பார். எதிர்பார்ப்புகளின் திடவடிவம் தான் எஅம்பிக்கை என்று. அப்படியான நம்பிக்கையை நொறுக்கும் விதமான ஒரு வாழ்வை இன்றைய ந்கர்வுகலாச்சார பயணாலிகளான சில போலி இலக்கியவாதிகள் நொறுக்கி வருவது சகஜமாகிவிட்டது. நிறைய பேர் புதிதாக படிக்கவும் படைக்கவும் வருகிறார்கள். அப்படியான காலகட்டத்தில் வெளிச்சத்தில் வாழும் இலக்கியவாதிகள் உண்மையில் இலக்கியத்தின் உள்ளர்த்தத்தை உண்மையாக்க வேண்டும். பிழைக்க வழிகள் நிறைய உள்ளன.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014


ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சிம்மாசனங்களும் கிரீடங்களும் பல

ஒரு முறை என் அப்பவுடன் (2003 என்று நினைவு) சென்னை புத்தகக் காட்சிக்கு போயிருந்தேன். நிறைய நண்பர்கள் சூழ விக்ரமாதித்யன் நின்று பேசிக்கொண்டிருந்தார். கவிஞர் முருகேசன் மாமா மூலமாக சில முறைகள் அவரைப்பார்த்தும் பேசியும் இருக்கிறேன். அவரை முதலில் சந்தித்து பேசியது அகலாத நினைவு. பின்னொரு முறை எழுதுகிறேன். அவரிடம் போய் பெயர் சொன்னவுடம் தெரிந்து கொண்டார். மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தார். பெரும் சிரிப்போடு உடனிருந்தவர்களிடம் "இவன் நம்ம பயடா..." என்று தோளோடு இருத்தி சொன்னார். வேறெந்த படைப்பாளியிடமிருந்தும் இப்படியொரு அணுக்கமான வார்த்தைகளை இன்னமும் கேட்கவில்லை.பின்னர் கடந்து வந்ததும் என் அப்பா சொன்னார். "இவ்வளவு பெரிய ஆளுக்கெல்லாம் உன்னைத்தெரியுதே"..மதுபோதையில் இருந்த ஒரு தாடிக்காரரை அப்பா பெரிய ஆள் என்று சொல்ல ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். என்னை விக்ரமாதித்யன் எதிர் கொண்டதும் அணுக்கமாக பேசியதும் தான். இப்படியாகத்தான் விக்ரமாதித்யன் என்ற கவியையும் கடந்து ஒரு தனி மனிதனாகவும் அண்ணாச்சியை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. அவர் மெல் பெரு மதிப்பும் ப்ரியங்களும் வைத்துள்ளேன்.
அண்ணாச்சிக்கு சாரல் விருது என்று ரொம்ப நாள் முன்பாக அறிந்தேன். விழா விபரங்கள்  பேஸ்புக்கில் இருந்தது. மதியமே அவரிடம் பேசிவிட்டு நேற்று மாலை விழாவுக்குப் போயிருந்தேன். போய் வாழ்த்து சொன்ன போது அவருடன் சுகுமாரன் இருந்தார். கண நேர யோசனையும் இல்லாமல் என்னைப்பற்றியும், படிப்பு, தங்கியிருக்கும் இடம், நெய்தல் மூன்று இதழ்கள் கொண்டு வந்தது (மூன்று இதழ்களிலும் அவர் எழுதினார்; முதல் இதழ் வெளிவர பெரிதும் உதவினார்) நான் தற்போது வேலை பார்க்கு இடம் எல்லாமும் சொன்னார். அதுதான் அண்ணாச்சி. கண்ணிகளை இணைத்துக்கொண்டே போவார். புதுப்புது நட்புகளை அறிமுகம் செய்வார். பார்க்கும் போதும் பேசும் போதும் படிக்க வேண்டிய நூல்களை பரிந்துரைப்பார். என்னை அவர் நினைவு கொள்ள வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. ஆனாலும் கொஞ்சம் தமிழ் இலக்கியம் படிக்கிறவன் என்பதால் என்னையும் கணக்கில் வைத்திருக்கிறார்.
ஜேடி ஜெர்ரி பாராட்டுக்குரியவர்கள். அண்ணாச்சி உட்பட தகுதியான பலருக்கும் சாரல் விருதளித்துள்ளார்கள்.நன்றிகள் பல- அவர்களுக்கும் அவர்களது அறக்கட்டளைக்கும். ஞானக்கூத்தன், பாலா, நக்கீரன் கோபால், தேணுகா, கரு. பழனியப்பன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் பேசினர். அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த போதே நான் எழுத யோசித்த பல விஷயங்களையும் பின் மேலும் பலவற்றையும் சுகுமாரன் பேசினார். அவர் பேசப்பேச அண்ணாச்சி குறித்த இந்தப்பேச்சுக்களை ஒரு டாக்குமெண்டரியாக தொகுக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த வீடியோக்களை ஜேடி ஜெர்ரியோ பிறரோ படமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். விக்ரமாதித்யன் குறித்த சுகுமாரன் நக்கீரன் கோபல் கரு பழனியப்பன் இவர்களின் பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டியன. யாரவது தகுதி உள்ளவர்கள் உடனடியாக இதைச்செய்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நானே பண்ன வேண்டியிருக்கும்.
நேற்று நானிருந்த மனநிலையில் எழுதியிருந்தால் இன்னும் நேர்த்தியாகவும் விரிவாகவும் இருந்திருக்கும். அவசரகதியில் இதை எழுதுவதால் இப்படியாகிவிட்டது. இரண்டு நிமிடங்களில் தன் ஏற்புரையை முடித்துக்கொண்டார் விக்ரமாதித்யன். கபிலர் முதல் லிபி ஆரண்யா வரையான தமிழ்க்கவிகள் (விக்ரமாதித்யன் சொன்னது) மரபின் முக்கிய ஆளுமையான விக்ரமாதித்யனை புற அடையாளங்களை அளவீடாகக் கொண்டு நம் தமிழ் இலக்கியப்பரப்பு அவரை அளவிட்டுவிட்டதோ என்று தோண்றும் அவ்வப்போது. அணுகுவதற்கு இலகுவான எளிமையும் கிரகிக்க தோதான நேரடித்தன்மையும் சிலாகிக்க வேண்டிய கவித்துவ அழகும் ததும்பும் விக்ரமாதித்யனின் படைப்புக்கள் என்னைப்போன்ற பாமர ரசிகர்களை மட்டுமல்ல விக்ரமாதித்யன் சுகுமாரன் போன்ற கவி ஆளுமைகளையும் ஈர்ப்பதில் வியப்பில்லை.

தமிழ்க்கவிகளே தமிழின் அடையாளம் என்று உரக்க சொன்ன அண்ணாச்சியின் வார்த்தைகளில் இரண்டு கவிதைகள் எழுதியவன் என்ற முறையில் எனக்கும் கொஞ்சம் இருமாப்பு கூட பசியையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் விளக்கு வரை நடந்து வந்து பேருந்தில் வீடு திரும்பினேன். எனக்கு விருது கிடைத்தால் கூட இப்படியொரு மனநிறைவு இருந்திருக்காது. ராபர்ட் ஆரொக்கியம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த நிகழ்வுக்குப் பின் நெய்தல் மீண்டும் வரும் அபாயம் உள்ளது. அண்ணாச்சி பற்றிய ஒரு டாக்குமெண்டரி செய்யவும் கூடும்.
சிம்மாசனங்களும் கிரீடங்களும் பல; உங்கள் பிருஷ்டமும் சிரசும் பொருந்தினால் சரி -விக்ரமாதித்யன் (வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை)