சனி, 25 டிசம்பர், 2010

இஸ்ரோவின் ஜி எஸ் எல் வி ராக்கெட் ஏவுதல் தோல்வி: வாழ்த்தப்பட வேண்டிய ஒன்று
நேற்று மாலை நான்கு மணியளவில் சிரிஹரிஹோட்டாவில் சதீஷ் தாவான் மையத்தில் இருந்து ஏவபட்ட ஜி. எஸ். எல். வி F06 ராக்கெட் ஜிசாட் டி3 சாட்டிலைட்டுடன் 47 வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து கடலில் விழுந்தது. கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் வெடிக்க வைக்கப்பட்டதாக விண்வெளி மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே போல ஒரு ராக்கெட் எட்டு நிமிடங்களில் விழுந்து விட்டது. அது இந்தியாவின் சொந்த தயாரிப்பான ஒரு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினோடு ஏவப்பட்டது. அது 330 கோடி செலவில் ஏவப்பட்டது. நேற்று விழுந்த ராக்கெட்டுக்கான செலவு சுமார் 125 கோடி என்கிரார்கள். கடந்த ஏப்ரலில் விழுந்த போது நிறைய பேர்கள் இப்படி முன்னூறு கோடியை விரயமாக்கி விட்டார்களே என்று இஸ்ரோவைத்த் தாக்கி எழுதியும் பேசியும் வந்தார்கள். இந்தியா இப்போது இருக்கும் நிலையில் இந்த 330 கோடி 125 கோடியெல்லாம் சும்மா. லட்சக்கணக்கான கோடிகள் சுருட்டப்படும் நாட்டில் அறிவியல் முன்னேற்றங்களுக்காக ஆண்டுக்கு முன்னூறு கோடிகள் விரயமாவது ஒன்னும் தப்பில்லை. நடக்கவே நடக்காத ஒன்றான சேது சமுத்திரம் திட்டத்துக்காக கோடிகள் கடலிலும் கழகத்துக்கும் கொட்டப்படுகிற நாட்டில் இதெல்லாம் எம்மாத்திரம். இந்த இரு ராக்கெட்டுகளும் தகவல் தொடர்புக்கான சாட்டிலைட்டுகளை சுமந்து செல்ல ஏவப்பட்டவை. நான் சந்திராயன் திட்டத்தை குறை சொல்ல்லுகிற அதே வெலை இது மாதிரியானா சாட்டிலைட்டுகள் ஏவும் ராக்கெட் குறித்த ஆய்வுகளை வரவேற்கிறேன். இதில் நடக்கும் எந்த தோல்விகளும் தப்பில்லை. ராப்பகலாக உழைக்கும் நிபுணர்கள் தெரிந்தே தப்பு செய்வதில்லை. சுதந்திரம் அடைந்து இந்தியா முன்னேறிய துறைகளில் இது மிக முக்கியமானது. ரஷ்யாவின் உதவியோடு நல்ல முன்னேற்றம். ஏழு கிரையோஜெனிக் ராக்கெட்ட் எஞ்சின்களை கொடுத்த ரஷ்யா சர்வதேச முக்கியமாக அமெரிக்க நிர்ப்பந்தத்தால் அதன் தொழில் நுட்ப தகவல்களைத்தரவில்லை. அதனால் இந்தியா கிரையோஜெனிக் எஞ்சின்களை தயாரிக்க முனைந்தது. ஏப்ரலில் விழுந்த ராக்கெட்டின் இஞ்சின் இந்தியாவின் சொந்த தயாரிப்பு. இப்போது விழுந்தது ரஷ்ய எஞ்சின். இன்னும் ஒரே ஒரு ரஷ்ய இஞ்சின் மட்டும் உள்ளதாக சொல்கிறார்கள். வருமாண்டில் சில சாட்டிலைட்டுகளை வெளி நாட்டில் இருந்து ஏவப்போகிறார்கள். இதுமாதிரியான முயற்சிகளை வரவேற்கிறேன். வின்வெளி ஆய்வுகளில் இது மாதிரியான சறுக்கல்கள் தப்பில்லை. இதுமாதிரியான சாட்டிலைட்டுகள் ராக்கெட்டுகள் கட்டுதல் என்பது ஒரு மிகப்பெரும் அளவிலான கூட்டுமுயர்ச்சி. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு குழுவால் வேறு வேற்ய் இடங்களில் செய்யப்பட்டு ஏவுதளத்தில் இணைக்கப்பட்டு ஏவுதல் வரை எத்தனைஎத்தனை மனித அறிவுகள் வேலை செய்கின்றன. ஓரிடத்தில் பிசகினாலும் மொத்தமாக தோல்வியுறும். சில வேளைகளில் இயந்திரங்கள் சின்ன வால்வுகள் என இயந்திரக் கோளாறுகளும் நேரும். எனவே இப்படியான கூட்டு முயற்சிகளில் வெற்றி தோல்விகள் சகஜம். அந்த நிபுணர்கள் உத்வேகம் கொடுக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை அடுத்த வெற்றிக்காக வாழ்த்துவோம்.
மேலும் படங்கள் மற்றும் தகவல்களுக்கு

http://www.ndtv.com/article/india/disappointment-india-s-gslv-d3-mission-fails-20084
இங்குள்ள படங்களும் இதே தளத்தில் இருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளன


Photos from www.dailymail.com


கிறிஸ்துமஸ்- உலகமயமாக்கலின் மற்றொறு திணிப்பு


கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இப்போது எல்லோரும் எல்லோருக்கும் பகிர்ந்து கொள்வதை நகரத்தில் அதிகம் பார்க்கிறேன். நேற்று எனக்கு கூட ஒரு நாலு பேராவது சொல்லி இருப்பார்கள். இதை வெறும் மத நல்லிணக்கமாக பார்க்க முடியாது. சித்தாந்த ரீதியில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ரம்ஜானுக்கு யாரும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதில்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமே அது பண்டிகையென ஒதுக்கப் படுகிறது. ஆனால் இந்தக் கிறிஸ்துமஸ் மட்டும் அப்படியென்ன சிறப்பு மிக்கது? கிறிஸ்துமசை கிறிஸ்தவர்கள் கொண்டாடட்டும். நாம் அவர்கலுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். கேக் கொடுத்தால் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நகரங்களில் மிக சகஜமாகவும் அதுவும் படித்தவர்களாகவும் பணக்காரர்களாகவும் உள்ளவர்களிடையே மதங்களுக்கு அப்பாற்பட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். அடிப்படையில் மக்களுக்கு சந்தோசம் தரும் எதுவுமே எதிர்க்கப்பட வேண்டியதில்லை என்றாலும் இந்த கிறிஸ்துமஸ் என்பது அதை மற்ற மதத்தவரும் அனுசரிப்பது இதெல்லாம் ஒரு தகுதியாக அதாவது தராதரம் போல ஆகிவிட்டதோ என்ற மயக்கம் எனக்கு. குல்லாய்கள் முக மூடிகள் மிக சகஜமாக விற்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மேலை நாட்டின் விழாக்களும் இங்கே கடை விரிக்கின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் இந்தவகையில் சேர்க்கலாம். இதையெல்லாம் கலாச்சார ரீதியில் நான் தவறென்று சொல்லவில்லை. கலாச்சார தனித்துவம் பண்பாட்டு அடையாளங்கள் இவையெல்லாம் மாறி வருபவை அவற்றில் தூய்மையை எதிர்பார்ப்பது அறிவீனம் என்று தெரியும். இருந்தாலும் கிறிச்துமஸ் புத்தாண்டு இவை உள்ளே நுழைந்த காரணம் இங்கே பரிசீலிக்கபடவேண்டியது. இவையெல்லாம் உலகத்தை ஒற்றை மயமாக்கும் சதியின் சமகால விளைவுகள். மக்கள் எதெனெதன் பின்னாலோ ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

DISCOVERY OF DISCOVERY CHANNEL


கடந்த வாரத்தில் நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல என் ஊருக்குப் போயிருந்தேன். ஒரே ஒரு நாள் நண்பன் ஒருவனையும் ஒரு உறவினரையும் பார்க்க பக்கத்து ஊர்களுக்குப் போயிருந்தேன். அப்பா அம்மாவுடனான ஒரு மனப்பிணக்கை சரி செய்ய வேண்டிப் போயிருந்தேன். நான்கு நாட்களும் வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை. மழைக் காலமாதலால் சேறும் சகதியுமாக வருமென்பதால் ஆற்றுக்குக் கூட குளிக்கப் போகவில்லை. அம்மா மூன்று வேளையும் சமைத்தார்கள். மெத்தையை முன்புற தாழ்வாரத்தில் போட்டுக்கொண்டு முழு நேரமும் டி வி தான் பார்த்தேன். ஊருக்கு அருகாமையில் 3 தியேட்டர்கள் உண்டு. அதுக்கும் போகவில்லை. காமெரா இருந்தது. சித்தப்பாவின் ஸ்ப்ளென்டர் இருந்தது. கையில் கொஞ்சம் காசும் இருந்தது. ஆனாலும் எங்கும் போகவில்லை. வீட்டில் இருக்கும் டி.வி.டி பிளேயரில் கூட படம் பார்க்கவில்லை. மொத்தமாக டி விக்கு என்று ஒதுக்கிக் கொண்டேன். எங்க ஊர்ல 18 சானல்தான் வருகிறது. காலை 6 மணிக்கே ஆரம்பித்தாதால் டிஸ்கவரி, கே டி வி படங்கள் என மாறி மாறிப் பார்த்தும் பொழுது சலிக்கவில்லை. அவ்வப்போது அம்மா வறக்காப்பியோ அவங்களோட ஹார்லிக்ஸையோ கொடுத்தார்கள். சித்தப்பா வீட்டில் இருந்து கடலை வறுக்கப்பட்டு அனுப்பப்பட்டது. கடைகளுக்கும் போகவில்லை. ஒரே ஒரு நாள் கறிக்கடைக்கு போய் வந்தேன். மக்களிடமும் பெரிதாக பேசவில்லை. ஆனாலும் இந்த நாலு நாட்கள் எப்படி போனதென்று தெரியாத வகையில் கழிந்து போனது. மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வப்போது செய்திகளும் பார்த்ததால் வழக்கமான கோபங்களும் எழுந்தன. ஒரு நாள் செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது என் பாட்டா கூட இருந்தார். இந்தியா ஜெயிச்சுருச்சு இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு சொல்றானே? இந்தியான்னா எந்த ஊரு? என்றார். நம்ம நாடுதான் என்று அவருக்குத் தெரியாது. ஆந்திரா என்பதையும் வெளி நாடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் என்றால் என்னவென்று அவருக்குத் தெரிகிறது. நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாடமி விருது கொடுத்துள்ளது ஒரு மகிழ்வான செய்தி.
போக டிஸ்கவரி சானல் பற்றி எழுதியே ஆகவேண்டும். காமெரா கையில் இருப்பவர்கள் டிஸ்கவரி பார்த்தால் பெரிய பெரிய லென்ஸ்கள் வாங்க வேண்டும் என்ற வெறி மேலிடுகிறது. அட்டகாசமான படங்கள் அவை. என்ன அற்புதமான காட்சிகள். எத்தனை நாட்கள் மாதங்கள் காத்திருந்து அதை எடுக்கிறார்களோ? சிலபல கொமோடோ டிராகன்கள் ஒன்று சேர்ந்து பெரிய மிருகமான காட்டெருமையை காலில் கடித்து விடுகின்றன. அந்த விசத்தின் வீரியத்தால் காட்டெருமை சோர்ந்து விழும் ஆறேழு வாரங்கள் வரை அதை பின்தொடர்கின்றன இந்தக் கொமோடோக்கள். அதை இவர்களும் பின் தொடர்கிறார்கள். தேனீக்களை தொடர்ந்து செல்கிறார்கள். மலையிடுக்குகளில் வாழும் பாம்புகளின் கலவியை தேடியலைந்து காட்டுகிறார்கள். எறும்புகளின் நுண்ணறிவைக்காட்டுகிறார்கள். காட்டாறுகளின் வலிய வேகத்தைக் காட்டுகிறார்கள். பனிமுகடுகளின் மென்னமைதியைக் காட்டுகிறார்கள். இதுவரை டி வி இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை.இந்தச் சானலைப் பார்க்கவாவது விரைவில் ஒரு டி வி வாங்க வேண்டும். உன்மையில் மனிதனின் அற்புதங்களில் காமெராவும் ஒன்று. மிக அற்புதமான படங்கள். பிதுங்கி வழிகிற நகரத்தை பார்த்தவன் வெறும் விலங்குகள் மட்டுமே வாழுகிர பரந்த நிலப்பரப்பும் அவற்றில் அவை தமக்குள்ளான போட்டிகள் விட்டுக் கொடுத்தல்களோடும் வாழ்வதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இடங்கள் அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு இருப்புப்பாதையோ நேடுஞ்சாலையோ அணு உலையோ அங்கே அமைக்கப்படாமலிருக்கப் பிரார்த்திக்கிறேன்.

வியாழன், 23 டிசம்பர், 2010

எம். சி. ராஜா விடுதி மாணவர்கள் அண்ணா சாலையில் மறியல்

நேற்று சைதாப்பேட்டை எம். சி. ராஜா விடுதி மாணவர்கள் அண்ணா சாலையில் மறியல் செய்திருக்கிறார்கள்.அந்த மாணவர்களின் சாலை மறியல் வேறு வழியே இல்லாமல் நடந்தது. முன்னர் வைத்த வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்திருந்தால் இப்படி ஆகி இருக்காது. அந்த விடுதிகுள் ஒரே ஒரு நாள் போய் வாருங்கள். அவர்களின் அவலம் புரியும். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு எப்படி என்று பாருங்கள். வெறுத்துப் போவீர்கள். அங்கு படிக்கிற மாணவர்கள் என்றில்லை யாராரொவும் வந்து போகவும் தங்கவும் செய்கிறார்கள். இதுமாதிரியான சாலை மறியல்கள் நடக்கும் போது மக்கள் மறியல் பாண்ணுபவர்கள் மேல் வருத்தம் கொள்கிறார்கள். அவர்களின் நியாத்துக்கு துணை நிற்காவிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கலாம். ஒரு முறை வேளச்செரியில் இதே போல சாலைமறியல். எதோ நிவாரண நிதி கிடைக்காத மக்கள் கவுன்சிலரிடம் போக அவர் மிரட்டி அனுப்பி இருக்கிறார். அபுறம் மக்கள் வேறென்ன செய்வார்கள்? அரசியல் கட்சிகளின் போராட்டம் என்றால் ஒதுங்கிப் போகும் மக்கள் மக்கள் போராட்டம் என்றால் புலம்பவும் சிலர் அவர்களிடமே போய் ஏன் எங்கள் நேரத்தை வீண் செய்ட்கிறீர்கள் என்வும் கேட்கிறார்கள். மறியல் போராட்டங்களின் போது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஆதரவாகவும் நிற்க வேண்டாம். அவர்களின் போராட்டத்தை சகித்துக் கொண்டால் போதும்.உங்களுக்கும் ஒரு நாள் இந்த மாதிரி மறியலில் ஈடுபடும் நிலை வரலாம்.
http://www.facebook.com/note.php?note_id=165774453465976&id=545231892
விடுதியின் சில படங்கள் இந்த இணைப்பில் காணலாம்.

http://timesofindia.indiatimes.com/city/chennai/1000-students-crammed-into-52-rooms/articleshow/7147814.cms
செய்தியின் இணைப்பு இது.

சீக்கிரமே பெய்யக்கூடும் செம்மழை

இப்படியான ஒரு கட்டுரையை நான் எழுதுவதற்கான முழு யோக்யதை எனக்கில்லை. இந்தக் கட்டுரையில் வருகிற பெரும்பாலான கருத்துக்களும் பார்வைகளும் தோழர் சிற்பிமகனுடனான உரையாடலின் போது தொகுத்தவை. இந்தக் கட்டுரையை எழுவதற்கு என்னை நண்பர் சங்கர் தூண்டினார். காரணம் அதியமான் அவர்களின் கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

என்ற கட்டுரையை படித்த பின் அவருக்கு தோன்றிய குழப்பங்கள். நான் இந்தக் கட்டுரையை பல காலம் முன்பே படித்திருந்தேன். அதற்கு விளக்கம் எழுத தேவை இல்லாத அளவு பட்டப்பழைய பலவீனமான வாதங்கள் என்பதை முன்னமே உணர்ந்து தான் விட்டிருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரையின் சில பின்னூட்டங்கள் சங்கரைப் போன்ற சிலரின் சந்தேகங்கள் இவற்றால் எழுத முற்பட்டேன். அதியமான் வைத்திருக்கும் சப்பை வாதங்களை 1848 இல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலேயே பக்கம் பக்கமாக விளக்கி இருக்கிறார்கள். இந்த எல்லா கேள்விகளும் சந்தேகங்களும் அந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கமளிக்கப் பட்டுள்ளன. என்றாலும் இங்கே சங்கருக்கு மட்டுமே சில சந்தேகங்கள். ஆனால் அதியமானுக்கு சந்தேகமெல்லாம் இல்லை. சாடல் தான். தீர்மானம் தான். அதுதான் அவர்மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது. இணைய அரங்கிலும் வெளியிடங்களிலும் நானறிந்த வகையில் தன்னை வலதுசாரி என்று அறிவித்துக் கொண்ட ஒரே ஒருவராக அதியமான் அவர்களைப் பார்கிறேன். அந்த வகையில் அவருக்கு என் முதல் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு முத்திரை குத்தி வரும் எதிரியிடம் போரிடுவதென்பது எந்தவொரு வீரனுக்கும் மகிழ்ச்சியையே தரும். முகமூடி போட்டு வரும் கோழைகளோடு வாதிடுவதை விடவும் முகத்தோடு வரும் அதியமானோடு மோதுவது மகிழ்வைத்தருகிறது. எனவே அவரை இந்தக்கட்டுரை மூலமாக மதிப்புக்குரிய எதிரி என்று அறிவிக்கிறேன்.


1848 காலகட்டத்திலேயே கம்யூனிசம் என்பது மக்களின் மனோபவத்துக்கு எதிரானது என்ற சப்பை வாதத்துக்கு மார்க்சும் ஏங்கெல்சும் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பதில் சொல்லி இருக்கிறார்கள். சின்ன புத்தகம்தான். அதை படிக்குமாறு எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன். என்றாலும் இதற்கு எனது பாணியிலான பதிலையும் பதிகிறேன். கம்யூனிசம் இன்றைய சூழ்நிலையிலும் சரியாகவே இருக்கும். பொதுவுடைமை என்பது மனித மனோபாவத்துக்கு எதிரானது என்பது மிகவும் தட்டையான வாதம். மனித மனம் எப்போதுமே அடுத்தவர் துன்பங்களுக்கு இரங்குகின்றது. சுரண்டிக் கொழுத்த பெரும் பணக்காரர்களின் நிலையோ வேறானது. அடுத்தாரை சுரண்டி சம்பாதித்த குற்ற உணர்ச்சியை சரிகட்ட கோயிலுக்குக் கொடை கொடுக்கிறார்கள். பணவெறி இப்போது சில நூறாண்டுகளாகத்தான் வெகுவான மக்களிடையே துளிர்த்து வருகிறது. மனிதகுல நாகரீக வளர்ச்சியில் சக மனிதனுக்கிரங்கும் அடிப்படை உணர்வு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட அதியுன்னத மனித நேயத்தின் அடிப்படியில் அறிவியல்பூர்வமாக கட்டியமைக்கப்பட்ட பொதுடைமையை மனித மனோபாவத்துக்கெதிரானது என்று சும்மா கூட சொல்லக் கூடாது. கம்யூனிச சமூகம் என்ற ஒன்று இதுவரை எங்குமே உருவாக்கியிராத போது அதியமான் சொல்வதுபோல அது சோம்பேறித்தனத்தை நிலை நாட்டும் என்று எப்படி சொல்ல முடியும்? போகப்போக தொழில்களும் விவசாயமும் எல்லா வித சமூகங்களிலும் இயந்திரமயமாக்கப்படும். பொதுவுடமை சமூகங்களில் அப்படி இயந்திரமயமாக்கப்படும்போது பாட்டாளிகளின் ஓய்வு நேரம் மிகுந்து அது பிற மானுடமுன்னேற்றப்பணிகளுக்காக கலையிலக்கிய முன்னெடுப்புகளுக்காக பயண்படுத்தப்படும். ஜார்ஜ் ஆர்வெல் ரக தூற்றல்வாதிகளின் சதியிலக்கியங்களை அம்பலப்படுத்தவும் மக்கள் இலக்கியங்களை வளர்த்தெடுக்கும் டால்ஸ்டாய் மக்சீம் கார்க்கி சாதியினரின் படைப்புகளை படிக்கவும், படைக்கவுமாக அந்த ஓய்வு நேரங்கள் ஆய்வு நேரங்களாகவும் உபயோகிக்கப்படும். கம்யூனிச சமூகம் வராத காலத்திலேயெ ஜெயமோகன்கள் அங்கலாய்ப்பு படைப்புகளை அடுக்கும் போது உன்மையான கம்யூனிச சமூகம் வந்த பின் அதற்கு கலை இலக்கிய சமூக தலண்க்களில் பல வழிகளும் எதிர்த்தாக்குதல்கள் நடைபெறும். அதையெல்லாம் இனங்கண்டு கொள்ளவும் ஒதுக்கவும் சரியானதை முன்வைக்கவும் இந்த காலகட்டங்கள் பயண்படும். அது போக கம்யூனிச சமூகம் வரும் போது உழைப்பு என்பது பொதுவக்கப்படும். உழைப்பின் பலனும் பொது. எனவே நான் நன்றாக உழைத்தால் அதன் பலன் எனக்கும் உண்டு என்ற நிலை வரும்போது நான் ஏன் உழைக்காமல் இருக்கப் போகிறேன்? சோசலிச ரஷ்யா நமது என்கிற எண்ணம் வரப்போய்தான் உலகிலேயே அதிகளவில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சோவியத் மக்கள் தியாக உணர்வோடு களம் கண்டார்கள். ஆக சோம்பேறித்தனம் வளர்ந்து விடும் என்பது புரட்டுவாதமே. கம்யூனிசம் என்பது அறிவியல் பூர்வமாக உருவான ஒரு தத்துவம். அதை தவறென்று சொல்ல நிதர்சனமான உதாரணங்கள் தேவை; அல்லது ஒத்துக்கொள்ளக் கூடிய தர்க்க ரீதியிலான ஆய்வாவது தேவை. இவை எதுவும் இல்லாமல் கம்யூனிசம் ஒத்து வராது என்று சொல்வது சரியல்ல. முடவனாயிருக்கிற எனது மகனுக்கும் சேர்த்து நான் உழைப்பது அடிப்படை மனித மனோபாவம் என்றால், பொதுவில் எல்லோருக்குமாக எல்லொருடனுமாக உழைப்பையும் ஊதியத்தையும் பகிர்ந்து வாழ்வது மட்டும் எப்படி மனித மனோபாவத்துக்கு எதிராகப்போய்விடும்?


பொதுவுடமை என்பது சொத்துடமையை ஒழிப்பது அல்ல. தனிச்சொத்துடமையை ஒழிப்பதுதான். காரணம் தனியே ஒருவனுக்கு சொத்து எப்படி வரும்? பாடுபட்டு சொத்து சேர்த்தேன் என்பவர்களுக்கு மார்க்ஸும் ஏங்கெல்சும் அப்போதே பதில் சொல்லி இருக்கிறார்கள். இங்கே இவர்கள் சொல்கிற அறிவு, செயல் திறமை இதெல்லாம் ஒருவரின் தனியுடமை அல்ல. எல்லோரது அறிவும் திறமையும் இன்ன பிறவும் சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் விளைவால் உருவானவை. சமூகத்திடம் இருந்து பெறப்பட்டவை. அவை சமூகத்தின் சொத்து. இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. இதைத்தான் கம்யூனிசம் செய்யும். இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஆடைகளின்றி வனவிலங்குகளோடு திரிந்தவன், நெருப்பை க ண் டு பிடித்தவன், சக்கரம் கண்டு பிடித்தவன் இவர்களன்றி எந்த மனித அறிவு வளர்ந்திருக்கும்? எழுத்துக்களை உருவாக்கியவன் இல்லையென்றான் உங்கள் கம்ப்யூட்டரின் கீபோர்டுகளில் எதை வைத்திருப்பீர்கள்? இத்தனை ஆயிரம் ஆண்டுகளின் மனித குல சிந்தனையின் தொடர்ச்சிதான் உங்கள் எல்லோரின் மூளைச்செயல்பாடும். திடுமென பேரறிவுடன் யாரும் சுயம்புவாக தோன்றி விடுவதில்லை. இப்போது நாம் படிக்கிற கல்வி; அதை கற்க நமக்கிருக்கும் முன்னேறிய மூளை- இவை எதுவுமே நம்முடைய சொத்து அல்ல. காலங்காலமாக முன்னேறிய ஒட்டு மொத்த மனிதகுலத்தின்-சமூகத்தின் சொத்து. அப்படியிருக்க இன்று விண்டோஸ் செவெனுக்கு காப்புரிமை கேட்பது எந்த வகையில் நியாயம்? நாட்டு மருந்து கொடுப்பவர்கள் அதை குடும்ப ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று அங்கலாய்ப்பவர்கள் என்றேனும் இவை பற்றி யோசித்தது உண்டா?


கம்யூனிச சமூகத்தில் அறிவுக்கு மரியாதை இருக்காது என்ற தட்டையான வாதம் கொண்டிருபவர்களே!. இப்போதிருக்கும் சமூக அமைப்பில் அறிவுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அறிவோடு பேசியதற்காக அருந்ததி ராய் மீது வழக்கு போடுகிறார்கள். இருக்கிற மரியாதையை வைத்துக் கொண்டு மற்ற அறிவாளிகள் என்ன செய்கிறார்கள்? ராசா என்ன செய்தார்? எடியூரப்பா என்ன செய்தார். டெல்ஹி என்ன செய்தார்? போகட்டும். இந்த சாப்ட்வேர் எஞ்சினியர்கள் தான் என்ன செய்கிறார்கள். வங்கி கணக்குக்கு, மருத்துவ அறிக்கைகளுக்கு சாப்ட்வேர் எழுதுகிறார்கள். கூலிக்கு. இந்த மரியாதை போதுமா? இதை தான் கேட்கிறீர்களா? அப்படியான மரியாதை அங்கே கிடைக்காது தான். பொதுவாக கம்யூனிசம் பற்றி விமர்சிப்பவர்கள் ஸ்டாலின் காலத்தில் கருத்து சுதந்திரம் என்பார்கள்; டியான்மென் சதுக்கம் என்பார்கள். டிராட்ஸ்கி என்பார்கள். நான் இதையெல்லாம் சரியென்று வாதிட விரும்பவில்லை. இதை நீங்கள் தவறென்று சொல்லும் முன் இந்திய ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? சீமானுக்கு என்ன ஆனது? வைகோவுக்கு என்ன ஆனது? சொந்த நாட்டு மீனவர்கள் சாகிற போதெல்லாம் மேலாதிக்க நலன்களுக்காக சும்மா இருக்கிற இந்திய ஜனநாயகத்தின் யோக்யதை என்ன ஆனது?


என்னிடம் அறிவு இருக்கிறது. பணமும் இருக்கிறது. அதை வைத்து நான் சொத்து சேர்க்கிறேன். இதில் என்ன தப்பு என்பவர்களே!. அழகிரியிடம் பணம் இருந்தது. அதை விட்டால் ஓட்டு வாங்கலாம் என்ற அறிவும் இருக்கிறது. அதை வைத்து சம்பாதிக்க-தேர்தலின் போது ஓட்டுக்கு காசு கொடுத்து கொள்ளையடிக்க, அங்கீகாரம் கொடுப்பீர்களா? ரொம்ப அறிவாளித்தனமாக யோசிப்பதாக எண்ணிக்கொண்டு பலரும் கேட்பது கம்யூனிசம் தனிப்பட்ட திறமைகளை வளர்த்தெடுக்காது என்றுதான். அறிவாற்றலில் உயர்வு தாழ்வு பார்க்காமலிருந்தால் ஒரு சோம்பேறி சமுதாயம் உருவெடுக்கும் என்றும் அச்சப்படுகிறார்கள். இதற்கான நேரடி பதிலுக்கு முன்னதாக ஒரு பதில் கேள்வியும் வைக்கிறேன். அப்படி நீங்கள் அறிவிலும் திறமையிலும் முன்னேறியவராக இருந்தால் உலக வளங்களை சுரண்டி உங்கள் சொத்தாக்கிக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது? மேலே சொன்னதுதான் இதற்கும் பதில். இந்த தனித்திறமை அறிவாற்றல் எல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்புதான். உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல. அப்படியிருக்கையில் அதை வைத்து பொருள் சேர்ர்கும் உரிமையை எப்படி நியாப்படுத்துவீர்கள்? மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு அடியிலும்-ஒவ்வொரு முன்னேற்றத்திலும், உங்களின் இன்றைய அறிவுத்திறமைக்கான விதை ஊன்றப்பட்டிருந்தது.

தோழர் சிற்பிமகனுடன் பேசிக்கொண்டிருக்கையில் பெரியார்தாசனின் விளக்கம் ஒன்றை விளக்கினார். பட்டாம்பூச்சி, சிட்டுக்குருவி பருந்து இவை மூன்றும் பறப்பவை. பருந்து மிக வலியது என்பதால் சிட்டுகுருவியின், பட்டாம்பூச்சியின் திறன் குறைவு என்பதற்காக அவற்றின் வாழ்வதற்கான இடத்தையும் சூழலையும் மறுப்பதா? வல்லான் பொருள் குவிக்க இல்லான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்? ஒரு நாட்டின் பொருளாதார நிலைப்படி எல்லா மக்களும் ஒரு நாளைக்கு ஒரே ஒரு இட்லிதான் திண்ண முடியும் என்ற நிலையை கற்பனை செய்யுங்கள். அப்படியான நாட்டில் அதியமான் போன்ற ஒரு அறிவிற்சிறந்த திறமைசாலி சொத்துக்களை குவித்துக்கொண்டு மூன்று வேளையும் கறிச்சொறு தின்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவுடமை என்பது வெறும் தனிச்சொத்துடமையை மட்டும் ஒழிப்பதன்று. அந்த நெடிய வரலாற்றுப் பயணத்தின் முடிவில் உழைப்பும் சமூகச் சொத்தாக்கப்படும். அப்படியிருக்கையில்- தேவைக்கேற்ற உழைப்பு என்கிற வேளையில், எனது தனிப்பட்ட ஆற்றல் என்று சொந்தம் கொண்டாட எதுவும் இருக்காது. ஒரு வேளை பட்டினியா?- பகிர்ந்து கொள்வோம். மூன்று வேளையும் உணவா?-அதையும் பகிர்ந்து கொள்வோம் என்று பொதுவில் சிந்திப்பதற்கு உள்ள பொதுவான மனத்தடை என்னவென்று தெரியுமா?


தனிப்பட்ட முறையிலான அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்னும் எச்சரிக்கையுணர்வே அதியமான் போன்றவர்களின் இத்தகைய அங்கலாய்ப்புகளின் அடிப்படை. பொன்னியரிசி என்பது அறிவு மிகுந்த அதியமானுக்கும் ருசியாகத்தானிருக்கும். அறிவே இல்லாத எனக்கும் ருசியாகத்தானிருக்கும். அப்படியிருக்கையில் நான் புழுத்த அரிசியை திண்ண வேண்டும் அதியமான் பொன்னியரிசி திண்பார் என்பது சரியாகுமா? ஜெயந்தி திரையரங்கின் அருகே நடைபாதையில் உறங்கும் மக்களைப்போல கோடிக்கணக்கானவர்கள் இருக்கும் இந்த நாட்டில் வியாபார நுணுக்கம் தெரிவதால் அப்பன் சுரண்டிய சொத்துக்கள் இருப்பதால் முகேஷ் அம்பானியின் ஒற்றைக் குடும்பம் வசிக்க 27 மாடிகளைக்கொண்ட சொகுசு மாளிகையை கட்டுவதை சரியென்றா நீங்கள் சொல்கிறீர்கள்? இப்படியான இடைவெளியை சரிக்கட்டத்தான்-சமப்படுத்ததான் கம்யூனிசம் பாடுபடுகிறது. அப்படி இடைவெளி வேண்டாம் என்று நினைப்பவர்கள் நமது நண்பர்கள். தோழர்கள். அப்படியான இடைவெளி நியாயம் என்று சொல்லும் அதியமான்கள் ஜெயமோகன்கள் நமக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கும் எதிரிகள்.


கம்யூனிசம் என்பது நிறைவேற்றக் கடினமான ஒரு கனவுதான். ஆனால், எல்லோருக்கும் சமமான ஒரு சமுதாயம் படைக்க அப்படியான ஒரு கனவை நோக்கி உழைப்பதில் தப்பில்லை. அப்படி உழைப்பது உங்களின் சமூகக் கடமை. இன்றையை இந்திய சமூக அமைப்பில் உண்மையான கம்யூனிஸ்டுகள் முழு நேர கம்யூனிஸ்டுகள் யாரும் சொத்து சேர்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகள் சொத்து சேர்க்கிறார்கள் என்று புளுகும் யாரும் உண்மையான கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்புணர்வை வெளியே சொல்வதில்லை. அப்படியான கம்யூனிஸ்டுகள், மக்களிடம் போகும் கம்யூனிஸ்டுகள் காசே இல்லாமல் தான் பயணிக்கிறார்கள். சக தோழர்களின் பண உதவியால் தம் பிள்ளைகளின் மருத்துவ செலவுகளை சமாளிக்கிறார்கள். பயண தூரத்துக்கு தக்க காசை மட்டும் கம்யூனிச ஆதரவாளர்களிடம் வாங்கி பயணிக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் உண்டியலில் காசு போட யோசிக்கும் அதியமான்கள் அயோத்தி கரசேவைக்கு பண உதவி செய்வார்கள். கம்யூனிச ஆதரவாளர்களோ கம்யூனிஸ்டுகளின் அத்யாவசிய தேவைகளை அவர்கள் கேளாமலே பூர்த்தி செய்து வருகிறார்கள். இன்றைய சூழலிலும் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்கள் தம்மளவில் பொதுவுடைமைக்கான முன்னுதாரணத் தீவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பொதுவுடைமை சமூகம் உருவாகும் போது சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது அரசிடம் சொத்துக்களை ஒப்படைக்கும் முதல் மனிதர்கள் கம்யூனிச, கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். நானெல்லாம் முதலில் கொடுக்கும் லிஸ்டில் இருப்பேன். அதியமான் போல இது என் பணம் என்பவர்கள், பணத்தைத் தர யோசிப்பவர்கள் எல்லோரிடம் இருந்தும் பணமும் நிலமும் பறிக்கப்பட்டு இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இந்தப் பயமே, இவர்கள் வரவே வராது என்று சொல்லும் கம்யூனிசம் மீது எப்போதும் குற்றம் கூறச் சொல்கிறது. இப்படியான முன்னெச்சரிக்கைக்காரர்களே கம்யூனிசம் வரவே வராது என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஏசு எழுந்து வரமாட்டார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் ஏசு வரமாட்டார் என்று நான் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதியமான் என்றில்லை; இதைப்போன்ற மற்ற எல்லோருக்கும் என்றாவது கம்யூனிசம் வரும் என்று உள்ளூர இருக்கும் பயம்தான் அது வராது; அது வரவே வராது என்று அடிக்கடி பரப்புரை செய்யத் தூண்டி வருகிறது. மேலாக தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அடித்தட்டு மக்கள் நிறைந்த, கொபம் கனன்று கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மிகுந்த பகுதிகளில் குறிவைத்து இந்த நிறுவனங்கள் தம் முதலாளித்துவ தொண்டு செய்து வருகிறார்கள். அப்படியான நிறுவனங்களுக்கு உதவ என்று கம்யூனிசம் என்பதை கொடுங்கனவாக எண்ணிக்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தனியாக தமது பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகின்றன. பெருமுதலாளிகள் நிதி கொடுக்கிறார்கள். இந்த மக்கள் அரசிடம் இருந்து தள்ளி வைக்கப்பட்டும் அமைப்பாவதில் இருந்து தடுக்கப்பட்டும் இருக்க குறுகிய நோக்கில் அவர்களுக்கு உதவிகள் என்ர போர்வையில் மறைமுக சிறை வைக்க இந்த நிறுவனங்களின் வழி கம்யூனிச எதிரிகள் முயன்று வருகிறார்கள். சுய உதவிக்குழுக்கள், நமக்கு நாமே திட்டம் என்பதெல்லாம் இப்படியான நோக்கத்துடனே செயல்படுகின்றன. கம்யூனிசம் போலவும் மறைமுகமாக போலிகம்யூனிசத்தை வளர்க்கவும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல இலக்கியவாதிகள் எழுதி வருகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக மேற்சொன்ன நாடுகளின் உதவி பெற்றவர்களாக இருப்பார்கள். சாரு நிவேதிதா எழுதினால் நல்லி குப்புசாமி பணம் போட்டு கூட புத்தகம் கொண்டுவருவார். ஜாஹிர்ராஜா எழுதினால் செய்வாரா? சோவியத்தில் அமெரிக்க சதிப்பிரிவுகள் இறக்குமதி செய்த போர்னோகிராபி சமாச்சாரங்களை எதிர்ப்புரட்சி முஸ்தீபுகளையெல்லாம் சரியாக கண்கானித்து கட்டுப்படுத்தாததும் சோவியத் வீழ்ந்ததற்கான காரணங்களில் ஒன்று. சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு தேடிப்பிடித்து நோபல் பரிசு கொடுப்பதெல்லாம் எதுக்காம்? அமைதிப்பணிகளை இலக்கியப்பணிகளை ஊக்குவிக்கவா? ஆப்கானிஸ்தானின் பழங்குடி மக்களின் மேல் ஆளில்லா விமானங்கள் மூலம் மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் நடத்தி வரும் ஒபாமாவுக்கு அமைதிக்கு நோபல் பரிசு கொடுத்த விதத்தையும் மேற்சொன்னதையும் ஒப்பிட்டு நோக்கினால் உண்மை விளங்கும். கம்யூனிசம் மலரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னமெரிக்க கண்ட லத்தீன் அமேரிக்க நாடுகளில் இப்படியான உதவிகளின் வழியே தான் அவர்களின் இயற்கை வளங்களை சுரண்டுதல் மற்றும் கம்யூனிசப் பாதையிலிருந்து திசை திருப்புதல் என்ற இரு மாங்காய்களை அடித்தார்கள். இதை எப்படி எப்படி அடித்தார்கள் என்ன விதமான வேசித்தனமான காரியங்களை இதற்க்காக செய்தார்கள் என்பதை ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். அமேரிக்காவின் மேலாதிக்க, ஏகாதிபத்திய, புதிய காலணியாதிக்க நலன்களுக்காக அப்படியான கீழ்த்தரமான காரியங்களின் மூலம் மூன்றாம் உலக வளரும் நாடுகளை வஞ்சித்த நேரடி சாட்சியமான ஜான் பெர்க்கின்ஸ் என்பவர் மனசாட்சியின் உந்துதலால் எழுதியுள்ளார். கண்டிப்பாக அதை படியுங்கள். இப்போது மக்கள் எல்லோரும் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள்; சம்பாதிக்கிறார்கள்; எனவே கம்யூனிசம் பற்றிய சிந்தனையே தோன்றாது என்று பலரும் நம்பியும் சொல்லியும் வருகிறார்கள். அப்படி வராத ஒன்றை ஏன் வம்படியாக குறை சொல்ல வேண்டும்?. காரணம் ஒன்றுமில்லை. ஐரோப்பாவை 1848 இல் பிடித்து ஆட்டத்தொடங்கிய கம்யூனிசம் பூதம் இன்று அகிலம் முழுவதையும் பிடித்து ஆட்டுகிறது.


கம்யூனிசம் கனிவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை என்று சொல்லப் படுகிறது. இதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகளை துணைக்கழைக்கிறார் அதியமான். இது முதலாளித்துவத்தின் பொய்ப்பிரச்சாரங்களில் ஒன்று. அத்தகைய வதந்திகளை பரப்பும் பிரச்சார பீரங்கிகள் எல்லா நாடுகளிலும் உண்டு. அப்படி கம்யூனிச தாகம் இருந்து இப்போது இல்லாமல் போனதாக சொல்லப்படும் தேசத்து மக்கள் இப்போதிருக்கும் உலகமய முதலாளித்துவ சமூக அமைப்பை விரும்பியா ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? இடைவேளை போன்றதொரு இடைவெளி இது. அங்கேயும் சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஏன்? முதலாளித்துவ குறியீடான அமேரிக்க மக்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்டதை விரும்பியா ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அங்கே எதிர்த்து எதுவும் செய்யப்படவில்லையா? கம்யூனிசம் என்பது மற்ற சமூக அமைப்புகளைப் போலல்லாமல் நேரடியாக அரசியல் மயமாக்கப்பட்டதால் அதை நடைமுறைப்படுத்தும் போது சில பிழைகள் நேரும்- என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஒத்துக் கொள்கிறது. அதே சமயம் இந்தப் பிழைகளை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் தத்துவ வறுமை கொண்ட அமைப்பாக முதலாளித்துவத்தை அது அடையாளம் காட்டுகிறது.

பலரும் சொல்கிறார்கள். கம்யூனிசம் வருவதற்கான காலமும் சூழலும் இப்போது இல்லை என்று. இதுனால் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறென்பது வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும் என்று ஆரம்பிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரிடத்தில் சொல்கிறது. மத்திய தர தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் விவசாயிகள் எல்லோரும் முதலாளித்துவத்தின் கொடூர சுரண்டல்களால் பாட்டாளிகளாக உடலுழைப்புத் தொழிலாளிகளாக்கப்படுவார்கள். அவர்களே பாட்டாளி வர்க்கம். அவர்களே முதலாளிகளுக்கு எதிரான புரட்சியை நடத்தி தலைமை பொறுப்பை எடுப்பார்கள் என்று தெளிவுபடச் சொல்கிறது. இன்றைய லாபவெறி கொண்ட முதலாளித்துவ அமைப்பில் நான் உள்பட எல்லோரும் உடலுழைப்புத்தொழிலாளிகளாக (இங்கே அறிவை பயண்படுத்தி சாப்ட்வேர் எழுதும் பொறியாளர்களும் பாட்டாளி வர்க்கமே) மாறிவருகிறார்கள் என்பது கண்கூடு. விவசாயி கட்டிட வேலைக்கு வருகிறான் . இதன் பின் முதலாளித்துவம் அவனிடமிருந்து உழைப்பைச் சுரண்டி உபரியை சொத்தாக்கி வீங்கும். சுரண்டச் சுரண்ட ஒன்றுமே இல்லை என்று உணரும் காலம் வரும்போது யாரும் அழைப்பு விடுக்காமலேயே பாட்டாளிகளின் புரட்சி நிகழும். மாற்றவே முடியாதது இது.

எந்தவொரு உழைப்பும் தனியுடமை அல்ல என்கிறபோது அது சமூகத்தின் சொத்தாகிறது. உழைப்பு, அதனால் விளையும் உற்பத்தி அதன் பின் அதன் பகிர்வு இதை சமூக உடமை ஆக்குவதா தனிஉடமை ஆக்குவதா? என்ற கேள்விக்கான பதிலில் இருக்கிறது கம்யூனிசம் வேண்டுமா வேண்டாமா என்பதற்கு. சக்திக்கேற்ற உழைப்பு உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சோசலிசம். அதன் பின் சக்திக்கேற்ற/தேவைக்கேற்ற உழைப்பு-தேவைக்கெற்ப ஊதியம் என்பது கம்யூனிசம். சோசலிசத்தின் பலன்களை நாம் இந்தியாவில் நேருகாலத்தில் உண்டாக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் முதல் தலைமுறை ஊழியர்களிடம் கேட்க வேண்டும். இப்பொது அது தனியாருக்கு போக வேண்டும் என்பதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும் என்பதை படிக்கிறவர்களின் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஒருவர் எல்லோருக்காகவும் எல்லொரும் ஒருவருக்காகவும் ஆக இருக்கிற கம்யூனிச சமூகத்தில் உழைப்பு எனபது அது உடல் உழைப்பானாலும் மூளை உழைப்பானாலும் தனிப்பட்ட சொத்தாக் கருத முடியாத ஒரு மனோநிலைக்கு கொண்டு செல்லும். எல்லொருக்கும் அப்படியான சமமான வசதிகளை பகிர்ந்தளிக்கும் முன்னேறிய சமூகத்தில் இப்படியான சில்லறை வாதங்களுக்கு வேலை இருக்காது. வெறும் சில பத்தாண்டுகள் இப்படியானதொரு சோசலிச வாழ்க்கை வாழ்ந்த ரஷ்யாவில் இரண்டாம் உலகப் போரின் போது அந்த மக்களின் தியாக உள்ளம் என்பது இத்தகைய மனமாற்றத்தில் விளைந்தது. இப்பொதும் அந்த மக்கள் தம் பழைய வாழ்வை பிச்சையெடுக்காத வாழ்வை கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இரண்டடி பின்னே போயிருக்கிறார்கள். உவகையோடு ஏற்றுக் கொள்ளவில்லை.


ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.


இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள அதியமான் என்ற வார்த்தை நேரடியாக அதியமான் என்ற தனிநபரை குறிக்கவில்லை. அந்தப் பெயரைக் குறியீடாக்கி அப்படியான எண்ணம் கொண்ட எல்லோரையும் சொல்லி இருக்கிறேன். அதியமான் நம் மதிப்புக்குரிய எதிரி என்பதால் அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை. இருந்தாலும் மேலே சொன்னது பொதுவான வாசகர்களுக்காக.


வேலிக்குட்பட்ட அங்கேயும்

திரிய விடப்பட்ட இங்கேயும்

மழை இல்லை.

எதனாலும் தடுக்க இயலா

இடியின் குமுறல் தாங்கி

எங்கும் நீக்கமற

சீக்கிரமே பெய்யக்கூடும்

செம்மழை.

புலியூர் முருகேசன்

புதன், 22 டிசம்பர், 2010

சோ ராமசாமியின் பேனாவைக் களவாடிய ஜெயமோகன்

அருந்ததிராயும் ஐஸ்வர்யாராயும் என்று வசவுக் கட்டுரையை எழுதிய ஜெயமோகனைக் கண்டித்தும் நடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்? என் கட்டுரையை எழுதிய தோழர் இரா. இளவரசன் அவர்களை வாழ்த்தியும் இந்தச் சின்னக் கட்டுரையை எழுதுகிறேன். தனது முதல் நாவலுக்குப் பிறகு அருந்ததி ராய் பெரிதான படைப்பிலக்கியம் செய்யவில்லை என்று யாரோ குறைப்பட்டு எழுதி இருந்தார்கள். உண்மையில் அப்படியான ஒரு முகத்துக்காக அருந்ததிராய் இப்போது முன்னிற்கவில்லை. முன்னிறுத்தப்படவுமில்லை. அப்படி அவர் எழுதாமல் இப்போது எழுதுகிற அரசியல் கட்டுரைகளையே அவரின் முன்னிறுத்தப் பட வேண்டிய முகமாக நான் கருதுகிறேன். படைப்பிலக்கியம் மட்டுமே செய்கிற இலக்கியவாதிகள் நிறைய. படைப்பிலக்கியம் செய்தவாறே மக்கள் நலன் பற்றியும் யோசிக்கும் இலக்கியவாதிகள் வெகு சிலரே. அந்தச் சிலருள் அருந்ததி ராய் முக்கியமானவர். ஈழத்தில் இறுதி யுத்த காலங்களின் போதும் அமைதி காத்த தமிழக எழுத்தாளர்கள் சிலருக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். ஏனிந்த அமைதியென்று. அவர்கள் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் கருத்தேயில்லாமல் இருப்பது மறைமுகமான வன்முறை. என்றாலும் நமது எழுத்தாளர்கள் ஈழ யுத்தம் பற்றி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற எதவது ஒரு நிலையை முன்னிறுத்த வேண்டி இருந்தேன். மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா எஸ் ராமகிருஷ்ணன் ஜெயமோகன் போன்ற வெகுசிலருக்கே அப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதுவரை உயிர்மையில் ஈழம் பற்றி எதுவும் கண்டுகொள்ளாமலிருந்த மனுஷ்யபுத்திரன் பிரபாகரன் தான் இதுக்கெல்லாம் காரணம் என்பது போன்ற தோற்றம் காட்டுவதான ஒன்றும் வரலாறு என்னும் பைத்தியக்கார விடுதி என்ற நெடுங்கவிதை ஒன்றையும் எழுதியிருந்தார். என் மடலின் காரனமென்று அதை நான் சொல்ல வில்லை. இருந்தாலும் அவரின் பதிவை நான் வரவேற்றேன். கருத்தே சொல்லாமல் மவுனம் காப்பது மிகவும் தவறு என்பது என் எண்ணம். சமகால நிகழ்வுகளை பதிவு செய்யாத கலை இலக்கியவாதிகள் அப்பட்டமான வரலாற்று மோசடிக்காரர்கள். என் அந்த மடலுக்கு ஜெயமோகன் மட்டுமே கூச்சல் மாதிரியான பல்வேறு பார்வைகளுக்கிடையில் தமது கருத்தை சொல்வது பலனளிக்காது என்ற ரீதியில் எனக்கு பதில் எழுதி இருந்தார். பதிலுக்கு நன்றியை இப்போதும் தெரிவிக்கிறேன். நெய்தல் என்ற எமது மாணவர்களின் இதழுக்கு தமது கட்டுரையை வழங்கி எங்கள் வேண்டுகோளையும் முன்னமே பூர்த்தி செய்திருந்தார். ஆனால் இங்கே ஜெயமோகனின் இந்த படைப்புலகம் சார்ந்த சுருங்கலையே முன்வைத்து அவருக்கு அருந்ததி ராயை விமர்சிக்கும் அருகதை இல்லை என்று சொல்ல விரும்புகிறேன். இந்தப்புள்ளியை தோழர் அருமையாக வலியுறுத்தியுள்ளார். அருந்ததி ராய் எழுதியோ இதுமாதிரி அரசியல் கருத்துக்களை சொல்லியோ என்ன பெரிதாக விளம்பரம் சம்பாதித்து விடப்போகிறார்? சுப்ரமணியம் சுவாமி மாதிரி இதற்கே சர்வதேச சதி என்றெல்லாம் ஜெயமோகன் உடுக்கை அடித்திருக்கிறார். அவராலாயே மறைக்கு முடியாமல் ஒரு அப்பட்டமான இந்து தேசியவாதியின் இலக்கியப் புலம்பல் என்ற ரீதியில் புலம்பித்தள்ளுகிறார். அருந்தததி ராய் சொன்னதையே வேறு வார்த்தைகளில் ஓமர் அப்துல்லா காஷ்மீர சட்டசபையிலேயே பேசி இருக்கிறார். அவர் மீது ஏன் இந்த இந்து தேசியவாதிகள் பாய வில்லை? வர்றார் சண்டியர் என்ற பிரேமின் படத்தை கண்டுகொள்ளாத புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கமலின் சண்டியர் என்ற பெயருக்கு மட்டும் பண்ணாத அலப்பறைகளை பண்ணினார். விளம்பரம் தேடலன்றி இதற்கு வேறொரு காரணமும் இல்லை. ஆனால் ஜெயமோகன் விளம்பரத்துக்காக இப்படி எழுதி இருப்பார் என்று எண்ணவில்லை. அவருக்கிருக்கும் இந்து நேச மனோபாவம் அவரை அப்படித் தூண்டி இருக்கிறது. அருந்ததி ராய் மக்கள் திரள் போராட்டங்களில் இறங்கவில்லை. ஊடக வெளிச்சப் போராட்டங்களில் மட்டும் முன்னின்றார் என்று எழுதும் முன்பாக ஜெயமோகன் எந்த மக்கள் திரள் போராட்டத்தில் நின்றார் என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். அப்படி யோசிக்கவே விடாமல் அவரை அவரின் இந்து வெறி செலுத்துகிறது. சோ ராமசாமி ராமகோபாலன் ரக இந்துவெறியர்களின் எண்ணப்போக்கில் தன் எழுத்து நடையில் அந்தக் கட்டுரையை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அருந்ததி ராயின் நாவலின் இலக்கியத்தரமெல்லாம் இன்று அர்த்தமற்றவை. அவர் ஒரு எழுத்தாளர் என்பதற்காக இன்கே நான் எழுதவில்லை. ஒரு சமூகப் போராளி. ஊடக வெளிச்சத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பது போல நீள்கிறது ஜெயமோகனின் கட்டுரை. மக்கள் பிரச்சனைகளை ஊடகத்தின் வெளிச்சத்துக்கு கொண்டு வராமல் வேறு எங்கே கொண்டு செல்வது? நான் சொல்ல நினைப்பதையெல்லாம் இரா. இளவரசன் சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் போல கும்பல் சேர்த்துக் கொண்டு வெட்டியான தனிநபர் விமர்சனங்களில் ஈடுபட்டும் தம் சிஷ்ய கோடிகளை அந்தக் குப்பைமேட்டில் தள்ளியும் வரும் ஜெயமோகனும் சாருவும் இம்மாதியான மக்கள் நல விவகாரங்களில் கருத்து சொல்லாமலிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கேரளாவில் ஆதிவாசிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டதாக அலப்பறை விடும் சாரு இங்கே என்ன செய்திருக்கிறார்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி பங்கு பற்றி என்ன எழுதியிருக்கிறார்? குறைந்த பட்சம் ராசா ஊழல் பேர்வழி மன்மோகன் சிங் நல்லவர் என்ற சுப்ரமணியசாமியின் ரீதியிலாவது எழுதியிருக்கலாமே? யாருடைய கருத்துரிமைக்காகவாவது பேசி இருக்கிறார்களா? இந்த சில எழுத்தாளர்களை ஆதர்சமாக நம்பிக் கொண்டு ஆயிரக் கணக்கில் அவர்களுக்கு வாசகர்கள் இருக்கிற போது இவர்கள் மக்கள் நலன் குறித்து கொஞ்சம் கவலைப்பட்டாலும் அது ஆயிரக்கணக்கானவர்களை எளிதில் விரைவில் அடையும். இப்படியான மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்காக குரல் கொடுத்து வரும் அருந்ததி ராய் ஒரு தகவல் புரட்சியை நிகழ்த்தி வருகிறார். அவர் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவரை பற்றிய செய்திகள் பொதுவான வாசகர்களிடையே ஒரு மாற்றுப்பார்வையை முன் வைக்கின்றன. ஊரே பற்றி எரிகிற போதெல்லாம் உறங்கிக் கொண்டிருந்த ஜெயமோகன்கள் இன்று தம் குறுகிய அரசியல் காரணிகளுக்காக ஒருமைப்பாடு கூப்பாடு போடுவது கேலிக்குரியதுதான்.


காஷ்மீர் பிரச்சனையில் பொதுவான மக்கள் தளத்தில் இந்தியாவின் வாதமே மேலோங்கி உள்ளது. அது பொதுவாக பாகிஸ்தானை குறை சொல்வதாகவும் உள்ளது. பாகிஸ்தான் தப்பு இல்லாமல் இல்லை. அப்ப்படிப் பார்த்தால் பலுசிஸ்தானிலும் மற்றும் பாகிஸ்தானிய வடமேற்கு எல்லைப்புற மாகானங்களில் இந்தியா திட்டமிட்டு பிரிவினைவாத சக்திகளைத் தூண்டி பாகிஸ்தானை பிளவுபடுத்த வேலை செய்வதாக பாகிஸ்தான் சொல்லி வருவதும் பொய்யல்ல. ஆனால் இங்கே இந்த காஷ்மீர பிரச்சனையில் மட்டும் இந்தியாவின் கருத்து அல்லது பாகிஸ்தானின் கருத்து மட்டுமே முன்வைத்து பொதுவில் பேசப்படுகிறது. ஆனால் காஷ்மீரிகளின் கருத்தை யார் கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒரு கருத்து உண்டு என்பதையே அடியோடு மறந்து விடுகிறார்கள். ஈழம் அரசியல் சட்டப்படி இலங்கையின் ஒன்றினைந்த பகுதி. அந்த மக்கள் தமிழ் மக்களாக இருப்பதால் நாம் ஈழ விடுதலையில் ஆர்வம் காட்டி வருகிறோம். ஆனால் ஆதே அளவுகோல் என்னாலும் காஷ்மீர மக்களுக்கு வைக்கப்படுவதில்லை. அது எப்போதும் பாகிஸ்தானை வைத்தே பேசப்படுகிரது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைகையில் இருந்த கருத்து கேட்கும் உரிமை இன்னமும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. காஷ்மீரில் நிலம் வெளிமானிலத்தவருக்கு தரப்படமாட்டாது என்ற ஒப்பந்தத்தை குப்பையில் போட்டுவிட்டு ஒரு இந்துக் கோயில் கட்ட இடம் கொடுத்த இந்தியாவின் நேர்மையை இந்த தெசியவாதிகள் கேள்வி கேட்டார்களா? என்றோ பிறந்ததாக இவர்களே சொல்லிக் கொள்ளும் ராமனின் பிறந்த இடத்துக்கு சட்டப்பூர்வமாக உரிமை கொண்டாட வரலாற்றுக்கும் முந்தைய புரானா காலத்தையும் தோண்டியெடுக்கும் இந்த தேசியவாதிகள் எல்லாரும் வெரூம் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இணைந்த காஷ்மீரின் வரலாற்றை திட்டமிட்டு மறப்பது மறைப்பதும் எதற்காக?

அழகென்னும் வன்முறை

தோலைக் கிழிக்கும் சுனைகளுடைய நெற்பயிர்களை

அறுவடை செய்து,

வழுக்கும் குறுகிய வரப்புகளில்

தலைச்சுமையை இடையாட்டத்தோடு சுமந்து வருகிற

கூலிக்காரப்பெண்களின் புன்னகை

அழகிய பாடலென திரைகளில் கொண்டாடப்படுகிறது.பேருந்து நிலைய புறச்சுவர்களை ஒட்டிய

மழைக்கு ஒழுகும் பாலித்தீன் வீடுகளில் நின்று

மழையின் தாரைகளை தமக்குள் வீசியடிக்கும்

ஆடையற்ற அண்ணன் தங்கைக் குழந்தைகளின் விளையாட்டு

அழகனுவபம் பேசும் கவிதையாகிறது.ஊர்களைத் தவிர்த்து

வெளியே ஓடிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில்

மெல்லிய மஞ்சள் நிற எண்ணெய் விளக்கொளியை கசியவிட்டு

இருளில் தனித்திருக்கும் குடிசைகளின் சித்திரம்

எளிமையே அழகெனக் காட்டுகிறது.அழுக்கடைந்த கிழிசல் துணிகளோடும்

முகச்சுருக்கங்களோடும்,

நிலை குத்திய, வேதனை பேசும் விழிகளோடும்

பரபரப்பான நகரத்தெருவோரங்களில்

வாழ்வின் வெறுமையை அனுபவிக்கும்

முதியவளின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம்

அழகிய கலைப்படைப்பாகிறது.அழகென்ற நிழலில் நின்று

வன்முறை செய்வது கலையின் சாபமன்றி வேறில்லை.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

தீராத கேள்விகளின் ஒளி


மழழை பேசும் குழந்தைகளிடம்
கேள்விகள் தீரும் போது
இந்த உலகின் ஒளி
இறந்து போயிருக்கும்

திங்கள், 6 டிசம்பர், 2010

வீடற்ற குழந்தை

பேருந்து நிலையத்தில்
வீடற்ற குழந்தை
அம்மாவின் கந்தலைக் கடித்து
தன்னையும் கடிக்கும்
இந்த மழைக்குளிரில்
என்ன செய்யும் மாமா?

வியாழன், 2 டிசம்பர், 2010

மறுகாலணியாதிக்கம் என்பது புரட்டல்ல. உண்மைதான்.


மறுகாலணியாதிக்கம் என்பது ஒரு மாயை என்றும் புரட்டென்றும் அதியமான் அவர்கள் எழுதி இருக்கிறார். இப்போது பல வெளி நாட்டு நிறுவனங்களால் - பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் உருவாகி இருக்கும் அதிக சம்பளத்துடன் கூடியதான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, அவை கொண்டு வரும் அன்னிய செலாவணியையும் கணக்கில் கொண்டு அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என அறிகிறேன். இந்த நிறுவனங்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை என்ற என் வாதத்துக்கு தொழிற்சங்கங்கள் இருந்து கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கேட்பார்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்றும் பதில் வைத்திருக்கிறார். ஆனால் அவரின் வாதங்கள் மிகப் பழையன. பலர் கேட்டு பலர் பதில் சொல்லி புளித்துப்போனவை. என்றாலும் முதலாளி தொழிலாளி என்ற வர்க்கங்கள் இருக்கும் வரை இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும். பொருளீட்டும் வெறிகொண்ட சுரண்டல்வாதிகளான முதலாளிகளிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு இப்படியான கடமை - உரிமை கதைகள் எந்த நாளும் பேசப்படும்.

சில தொழிற்சங்கங்கள் வேலை செய்ய தடையாக இருப்பதும் சில தொழிற்சங்கவாதிகள் பணமீட்டும் வெறியர்களாக இருப்பது முதலாளித்த்துவத்தின் திட்டமிடாத தன்னியல்பான லாபவெறியின் விளைவுகளே. இந்த எளிய உண்மை அதியமான் ரக முதலாளித்துவ ஆதரவாளர்களுக் புரியாமல் இருக்காது. மேலும் இந்த மாதிரியான தொழிற்சங்கங்கள் இருப்பது இப்போதைய, முதலாளித்துவ சமூகத்தில் என்பது கவனத்தில் இருக்கட்டும். பொதுவுடமை சமூகத்தில் தொழிற்சங்கங்கள் செயல்படும் விதம் வேறு. வெறும் தொழிற்சங்கவாதி மட்டுமே இருக்கிற இடத்தில் திருட்டேது?. இடையில் லாபம் சம்பாதிக்க வெறி கொண்டலையும் சிலரால் அந்த தொழிற்சங்கவாதிகள் தடம் புரள்வதும் அல்லது இதை எதிர்பார்த்தே சங்கம் இருப்பது இவை எல்லாம் லாபவெறி மிக்கவர்களின் கூட்டுச் சதியே. சொத்துடைமை என்பது ஒழிக்கப்பட்ட பொதுவுடமை சமுதாயத்தில் யார் லாபம் சம்பாதிக்க இந்த தொழிற்சங்கவாதிகள் விலை போவார்கள்? இந்த மாதிரியான சங்கங்களின் போக்கு இந்த சமுதாய அமைப்பின் குற்றமாக இருக்கும் போது அதை பொதுவுடமையின் குற்றம் என்று சொல்வது ராசா தப்பே செய்யவில்லை என்பதைப் போலுள்ளது. நீங்கள் இப்போது இருப்பது பொதுவுடமை சமூகம் அல்ல. அதே நேரத்தில் பெயருக்கேனும் இத்தகைய சங்கங்கள் இல்லாவிட்டால் பெயரளவுக்கான உரிமைகளும் கிடைக்காமல் போகும். ஒரு சின்ன உதாரணம். கடந்த வாரத்தில் நீலகிரியில் ரயிலுக்கான முன்பதிவு மையத்தில் ரயில்வே ஊழியர்கள் அல்லாமல் ஒப்பந்த தனியார் ஊழியர்களை நியமித்ததை எதிர்த்து ஒரு சங்கம் போராடியது. தப்பா? சரியா?

இடதுசாரிகள் கேரளத்தில் ஆண்ட போது 2003 என்று நினைவு. அப்போது நாடெங்கிலும் சுங்கவரிகள் கட்டப்பட்டு பயணிக்கும் வகையான மேம்பட்ட நான்கு வழிச்சாலைகள் மிகுதியும் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. அந்த காலகட்டத்தில் ஆய்வுக்களப்பணி நிமித்தமாக நான் கோட்டயம் அருகே சென்றிருந்தேன். அப்போது வாகன ஓட்டியிடம் ஏன் சாலைகள் இப்படி மோசமாக உள்ளன? நெடுஞ்சாலைகள் எல்லாம் தரமுயர்த்தப்பட்டுள்ளனவே இது ஏன் இன்னும் இல்லை? என்றேன். அவர் சொன்னார் " எனது மாநில மக்கள் எமது நிலத்தில் சாலைகளில் செல்ல காசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றால் அப்படியொரு சொகுசு சாலை எங்களுக்கு வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார் எங்கள் முதல்வர். இப்போது திருச்சிக்கு நான்கு மணி நேரத்தில் நீங்கள் உங்கள் காரில் போகலாம். சாலை சுங்கமாக மட்டும் இரு நூறு செலுத்த வேண்டி இருக்கும். சாலை வரி வாங்கும் அரசு, வாகன வரி வாங்கும் அரசு எதற்காக இப்படி தனியாரிடம் சாலைகளை ஒப்படைக்க வேண்டும்? அந்த சுங்கவரியெல்லாம் எங்கே போகின்றன? இது மறுகாலணியாதிக்கம் இல்லையா? இந்த உலக வங்கிகள் எல்லாம் நமக்கு கடன் கொடுக்க என்ன அவசியம்?. நகரங்களை இந்த மாதிரி விரைவு சாலைகளால் இணைப்பதால் அவர்களின் வியாபரம்தான் பெருகும். தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி காணும். நெல் வயல்களுக்கு தரப்படாத மின்சாரம், அதிகம் காசு கொடுத்தால் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் தருவதாக சொல்கிறார் நமது முதல்வர். இங்கே யார் மக்கள் நல அரசு நடத்துகிறார்கள்?. இந்த அரசுகள் யாருக்காக வேலை செய்கின்றன? திருப்பூரிலும் கரூரிலும் நதிகளைச் சாகடித்து, விவசாயத்தை அழித்து, குடி நீரை நஞ்சாக்கி சாயமேற்றப்படும் துணிகளை அந்தக் கொடுமைகளை அனுபவிக்கும் மக்களா உடுத்துகிறார்கள்? இப்படி நதிகளை சாகடித்து, விவசாயத்தை அழித்து, குடி நீரை நஞ்சாக்கி சேர்க்கிற வெறிப்பணம் யாருக்கு? அப்படிப்பட்ட தொழில்வளர்ச்சி வேண்டுமா? அந்த முதலாளி அமராவதி ஆற்றின் தண்ணீரை தன் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுப்பானா? இப்படி மக்களை பலிகொடுத்து வருகிற அன்னிய செலாவணியால் நாடு கடன் இல்லாமல் இருப்பதை விட கம்பஞ்சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிடலாமே?

கேள்விக்கான பதிலுக்கு வருவோம். வெள்ளையர்கள் இங்கே வரும்போது காலணியாக்கம் செய்யவேண்டும் என்று வரவில்லை. வியாபாரம் தான் செய்ய வந்தார்கள். அதன் பின் தான் இந்திய நாடுகள் காலணியாகின. சின்ன விளக்கம் தான். என்ன குளிர்பானம் குடிப்பது என்பதைக் கூட பெப்சி கோலா நிறுவனக்கள் தான் தீர்மானிக்கிண்றன. சென்னையில் எங்காவது கோலி சோடாவை காட்டுங்கள். எனது சம்பளத்துக்கு எனது வருமானத்துக்கு ஏற்ற இரண்டு ரூபாய் கோலி சோடா எங்கும் இல்லை. கிளப் சோடா பனிரெண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள். தேர்வு செய்யும் உரிமை நமது. அதை அவர்கள் பறித்து விட்டார்கள். செல்போன் விலை குறைந்தென்ன? எத்தனை ஓட்டல்களில் குடிக்குமளவுக்கு சுத்தமான தண்ணீர் வைக்கிறார்கள்? பதினைந்து ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்தை என்னை போண்ற குறைந்த கூலிக்காரர்களுக்கு வித்தித்தது யார்? இந்த பன்னாட்டு நிறுவனங்கள்தானே? இது காலணியாக்கம் இல்லையா? அப்போது வெள்ளையர்கள் வந்து ஆதிக்கம் செய்தார்கள். இப்போது அவர்களின் ஏஜெண்டுகளாக நம்மவர்கள் அவர்கள் சம்பாதிக்க உழைக்கிறார்கள். அவனே தேடி வந்து கடன் கொடுக்கிறான். வண்டி வாங்க சொல்கிறான். வீடு வாங்க சொல்கிறான். மதி மயங்கிய மக்களும் வாங்கிவிட்டு பின் வாழும் காலமெல்லாம் வட்டி கட்டி வயிறெரிகிறார்கள். கால்சென்டர்களில்சொந்தப்பெயரை அடகு வைத்து விட்டு சம்பளமாம் சம்பளம்? அதை வாங்குகிறவர்கள் எத்தனை பேர் நிம்மதியோடு வாங்கிப் போகிறார்கள். ஊரே உறங்கும் வேலையின் தூக்கம் வழிய வழிய உழைக்கிறார்கள் இந்த நவீனப் பாட்டாளிகள். மணிக்கணக்கு பாராமல் மென்மொழி எழுதுகிறார்கள் என் இனிய பாட்டாளிகள். அவர்களுக்காக என் கண்கள் நனைகின்றன. காமத்தை, காதலை, உறவுகளை, நட்பை, பருவம் மாறி காலம் ஒப்பாது அவசரம் அவசரமாக Cab வருவதற்குள் செய்து விடத்துடிக்கும் அவர்களை சம்பாதிக்க வைத்து வாரக் கடைசியில் மாதக் கடைசியில் செலவு செய்யும் வெறிக்கு ஆளாக்கி வைத்திருக்கும் இந்த நிலை மறுகாலணியாதிக்கம் என்று நான் சொல்கிறேன். முதலீட்டியவாதி (மரியாதை!?) அதியமான் என்ன சொல்கிறார்? இப்படியான மேல் நாட்டு கடனுதவிகளை, நிறுவன நிர்மானங்களை எதை மையமாக கொண்டு யார் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலை படிக்குமாறு சந்தேகம் உள்ள எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன்.

நாட்டில் செய்யப்படும் ஏறக்குறைய அனைத்து முன்னேற்றப்பணிகளும் முதலாளிகள் லாபமீட்டவே உருவாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் குழந்தைகள் மிகுந்த தேசத்தில் முகத்துக்கு முகம் பார்த்து பேச வேண்டிய தேவை என்ன வந்தது? சாக்கடைகள் வீட்டுக்குள் புகும் நகரங்களில், பத்து பைசாவுக்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டிய தேவை என்ன வந்தது? என்ன அடிப்படை வசதிகள் இங்கே வந்துள்ளன? குறைந்த பட்ச மருத்துவ உதவிகள் கூட உறுதி செய்யப்படாத ஊரில் செல்போன் சிக்னல் கிடைத்தாலென்ன கிடைக்காமல் போனாலென்ன? சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு போங்கள். எத்தனை மக்கள் மருத்துவ வசதிகளுக்கு காத்திருக்கிறார்கள்? வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்து மருத்துவம் பார்த்துப் போகிறார்கள். உல்னாட்டு மக்கள் சாகிறார்கள்? நாய்க்கடிக்கு எத்தனை அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் உள்ளன? பாம்பு கடித்தால் எங்கே மருந்து உள்ளது என்பதை கண்டு கொள்ளும் முன்பே செத்துப் போகும் காசில்லாத கிராமவாசிகளின் ஊரிலெல்லாம் பெப்சியையும் கோக்கையும் யார் கேட்டார்கள்?

எனது மாமா ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு (இறந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன) திருச்சி பொது மருத்துவமனையிலிருந்து இங்கே சிபாரிசு செய்யப்பட்டிருந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் வெளிநோயாளிகள் பகுதியில் நாளெல்லாம் காத்திருந்து உள்ளே போனால் இவரின் நோய் முற்றி விட்டது. மருந்து மிக குறைவாக உள்ளது. வேறு சிலருக்கு கொடுக்கலாம். மருந்து உட்கொள்கிற நிலையை தாண்டி விட்டார் என்றார்கள். தயோயூரியா என்ற மருந்து என நினைக்கிறேன். அவர்கள் மருந்தை பதுக்கி விட்டு பொய் கூட சொல்லி இருக்கலாம். இங்கே சொல்ல விரும்புவது அப்படியான அத்யாவசிய மருந்துகளை அதிகளவு தயாரிக்கவும் வக்கற்ற ஒரு தேசத்தில் செல்போன் கம்பெனியும் கார் கம்பெனியும் தேவையா?. பச்சிளம் குழந்தைகளுக்கு தரமான பி ஸி ஜி வாக்சின் தயாரிக்க வக்கில்லாத சென்னையில் நொக்கியா தொழிற்சாலை உங்களுக்கு உவப்பாக இருக்கிறதா? வசதியுள்ளவன் வாழவும் காசில்லாதவன் சாகவுமான வாழ்க்கை உங்களுக்கு உவப்பாக உள்ளதா? அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்தாமல் தனியாரிடம் போய் சிகிச்சை செய்து கொள் காசை அவனுக்கு நான் கொடுக்கிறேன் என்று சொல்ல வைத்து எது? அரசு ஊழியர்களுக்கு பென்சன் இல்லையென்று சொல்ல வைத்தது எது? இதெல்லாம் மறுகாலணியாதிக்கம் இல்லையென்றால் உங்கள் அகராதியில் இவற்றுக்கெல்லாம் என்ன பெயர்?

இதெயெல்லாம் என்னைபோன்ற கீழ்மட்ட, நடுத்தர மக்கள் சகித்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள். விரும்பி வாழவில்லை. விரும்பி வாழ்கிறேன் என்று எவனாவது சொன்னால் அது பித்தலாட்டமே. காசு சம்பாதிக்க சென்னை வந்தவனெல்லாம் இதை வைத்துக் கொண்டு இங்கேயெ இருக்காமல் பொங்கலுக்கும் தீவாளிக்கும் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடுவது எதற்காக? எழுதப்படும் பத்து கவிதைகளில் எட்டு கவிதைகள் இழந்த வாழ்வின் வலியை பகிர்ந்து கொள்கின்றன.எதனால்? இந்த வாழ்வு பிடித்தால் அவன் இலக்கியத்தில் இது வரப்போகிறது? இன்னும் ஏன் பழையதை பேசுகிறான்?

இந்தச் சம்பளம்- வாங்கும் தகுதியை உயர்த்தியுள்ளது. ஒப்புக்கொள்கிறேன். ஒரே ஒரு நாள் சென்னையின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று பாருங்கள். எத்தனை கார்கள் கடந்து போகின்றன; எத்தனை பைக்குகள் கடந்து போகின்றன? எத்தனை பேர் தனி ஆட்டோ தேடுகிறார்கள்; ஷேர் ஆட்டொவில் ஏறுகிறார்கள்; குளிர்சாதனப் பேருந்தில் ஏறுகிறார்கள்; சொகுசுப் பேருந்தி ஏறுகிறார்கள் என்று. அவர்களெல்லாம் போன பின்னும் வெள்ளை போர்டு வராதாவென மணிக்கணக்காக காத்து நிற்கும் மக்கள் என் மக்களில்லையா? அவர்களுக்கு என்ன செய்தன இந்த அரசுகள்? இத்தனை கால் சென்டர்கள் இத்தனை மென்மொழி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவங்கள் வந்த பின்னும் இன்னும் இந்த மக்கள் ஏன் வெள்ளை போர்டுக்காக காத்திருக்கிறார்கள்? போருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்னும் கொடூரமான அட்டூழிய வசனத்தை விரும்பி வைத்திருக்கும் அதியாமானிடம் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கிறேன். (பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை-பார்க்கிற போதெல்லாம் அந்த வார்த்தைகளை எரிக்கத் தோன்றுகிறது; பொருளில்லாமல் இருப்பவர்களைத் தள்ள எந்த நரகத்தை வைத்துள்ளீர்கள்; இந்த உலகம் பொருள் உள்ளவர்களுக்கு அல்லது பொருள் சேர்க்கத்தெரிந்தவனுக்கு மட்டுமே என்னும் அதிகாரம் முதலாளித்துவத் திமிர் இல்லாமல் முதலீட்டிய பண்பா?; இதற்கும் பதில் சொல்லுங்கள்).