சனி, 25 டிசம்பர், 2010

DISCOVERY OF DISCOVERY CHANNEL


கடந்த வாரத்தில் நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல என் ஊருக்குப் போயிருந்தேன். ஒரே ஒரு நாள் நண்பன் ஒருவனையும் ஒரு உறவினரையும் பார்க்க பக்கத்து ஊர்களுக்குப் போயிருந்தேன். அப்பா அம்மாவுடனான ஒரு மனப்பிணக்கை சரி செய்ய வேண்டிப் போயிருந்தேன். நான்கு நாட்களும் வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை. மழைக் காலமாதலால் சேறும் சகதியுமாக வருமென்பதால் ஆற்றுக்குக் கூட குளிக்கப் போகவில்லை. அம்மா மூன்று வேளையும் சமைத்தார்கள். மெத்தையை முன்புற தாழ்வாரத்தில் போட்டுக்கொண்டு முழு நேரமும் டி வி தான் பார்த்தேன். ஊருக்கு அருகாமையில் 3 தியேட்டர்கள் உண்டு. அதுக்கும் போகவில்லை. காமெரா இருந்தது. சித்தப்பாவின் ஸ்ப்ளென்டர் இருந்தது. கையில் கொஞ்சம் காசும் இருந்தது. ஆனாலும் எங்கும் போகவில்லை. வீட்டில் இருக்கும் டி.வி.டி பிளேயரில் கூட படம் பார்க்கவில்லை. மொத்தமாக டி விக்கு என்று ஒதுக்கிக் கொண்டேன். எங்க ஊர்ல 18 சானல்தான் வருகிறது. காலை 6 மணிக்கே ஆரம்பித்தாதால் டிஸ்கவரி, கே டி வி படங்கள் என மாறி மாறிப் பார்த்தும் பொழுது சலிக்கவில்லை. அவ்வப்போது அம்மா வறக்காப்பியோ அவங்களோட ஹார்லிக்ஸையோ கொடுத்தார்கள். சித்தப்பா வீட்டில் இருந்து கடலை வறுக்கப்பட்டு அனுப்பப்பட்டது. கடைகளுக்கும் போகவில்லை. ஒரே ஒரு நாள் கறிக்கடைக்கு போய் வந்தேன். மக்களிடமும் பெரிதாக பேசவில்லை. ஆனாலும் இந்த நாலு நாட்கள் எப்படி போனதென்று தெரியாத வகையில் கழிந்து போனது. மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வப்போது செய்திகளும் பார்த்ததால் வழக்கமான கோபங்களும் எழுந்தன. ஒரு நாள் செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது என் பாட்டா கூட இருந்தார். இந்தியா ஜெயிச்சுருச்சு இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு சொல்றானே? இந்தியான்னா எந்த ஊரு? என்றார். நம்ம நாடுதான் என்று அவருக்குத் தெரியாது. ஆந்திரா என்பதையும் வெளி நாடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் என்றால் என்னவென்று அவருக்குத் தெரிகிறது. நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாடமி விருது கொடுத்துள்ளது ஒரு மகிழ்வான செய்தி.
போக டிஸ்கவரி சானல் பற்றி எழுதியே ஆகவேண்டும். காமெரா கையில் இருப்பவர்கள் டிஸ்கவரி பார்த்தால் பெரிய பெரிய லென்ஸ்கள் வாங்க வேண்டும் என்ற வெறி மேலிடுகிறது. அட்டகாசமான படங்கள் அவை. என்ன அற்புதமான காட்சிகள். எத்தனை நாட்கள் மாதங்கள் காத்திருந்து அதை எடுக்கிறார்களோ? சிலபல கொமோடோ டிராகன்கள் ஒன்று சேர்ந்து பெரிய மிருகமான காட்டெருமையை காலில் கடித்து விடுகின்றன. அந்த விசத்தின் வீரியத்தால் காட்டெருமை சோர்ந்து விழும் ஆறேழு வாரங்கள் வரை அதை பின்தொடர்கின்றன இந்தக் கொமோடோக்கள். அதை இவர்களும் பின் தொடர்கிறார்கள். தேனீக்களை தொடர்ந்து செல்கிறார்கள். மலையிடுக்குகளில் வாழும் பாம்புகளின் கலவியை தேடியலைந்து காட்டுகிறார்கள். எறும்புகளின் நுண்ணறிவைக்காட்டுகிறார்கள். காட்டாறுகளின் வலிய வேகத்தைக் காட்டுகிறார்கள். பனிமுகடுகளின் மென்னமைதியைக் காட்டுகிறார்கள். இதுவரை டி வி இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை.இந்தச் சானலைப் பார்க்கவாவது விரைவில் ஒரு டி வி வாங்க வேண்டும். உன்மையில் மனிதனின் அற்புதங்களில் காமெராவும் ஒன்று. மிக அற்புதமான படங்கள். பிதுங்கி வழிகிற நகரத்தை பார்த்தவன் வெறும் விலங்குகள் மட்டுமே வாழுகிர பரந்த நிலப்பரப்பும் அவற்றில் அவை தமக்குள்ளான போட்டிகள் விட்டுக் கொடுத்தல்களோடும் வாழ்வதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இடங்கள் அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு இருப்புப்பாதையோ நேடுஞ்சாலையோ அணு உலையோ அங்கே அமைக்கப்படாமலிருக்கப் பிரார்த்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை: