வியாழன், 28 அக்டோபர், 2010

தீதும் நன்றும் பிறர் தர வாரா?




எனக்கொரு கனவு நெடு நாட்களாய் உண்டு. ஊரில் எனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ஊர் காவிரியின் கரையில் இருந்தாலும் எங்கள் ஊருக்கு வடக்கே மேட்டு நிலம். காவிரி நீர் சுமார் அரை கிலோ மீட்டர்களுக்கு மேல் பாய்வதில்லை. எனவே அந்த மூன்று ஏக்கர் நிலமும் தரிசாகவே உள்ளது. எனது அப்பாயி பாட்டன் விவசாயம் பார்த்த என் பள்ளிப் பருவங்களில் அங்கே மானாவாரியாக கடலை, துவரை, தட்டைப்பயறு,

நரிப்பயறு , கொள்ளு மொச்சை என பயிரிட்டார்கள். பிற்காலங்களில் அந்த மாதிரியான விவசாயமே அற்றுப் போனது. இப்போது அப்படியான பயிர்களை யாரும் விளைவிப்பது இல்லை. செஞ்சியில் மட்டும் பேருந்து நிலையத்தில் வேகவைத்த மொச்சைப்பயிர்களை இப்பொதும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அது போகட்டும்.அந்த மூன்று ஏக்கர் நிலத்தில் நடுவினில் ஒரு வீடு கட்டி எளிமையான விவசாயம் செய்ய வேண்டும் என்பது

தான் அந்தக் கனவு. பாரதியின் காணி நிலம் கனவு போல. சின்ன வயதில் இருந்து விவசாயத்தை ஊன்றிக் கவனித்தது, விடாப்பிடியான ஒரு விவசாயியின் ஒரே மகனாக இருப்பது, பயிர்ப்பாதுகாப்பில் பத்தாண்டு கால ஆய்வு அனுபவம் இதனாலெல்லாம் என்னால் ஒரு விவசாயியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறேன். முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளோம். கொஞ்சம் அதற்கான பணிகளை ஆற்றி விட்டு ஆழ்குழாய் கிணறு போடுமளவு பணம் சேர்த்துக் கொண்டு ஒரு நடுத்தர வயதில் அந்தக் கனவு

வாழ்வை வாழலாம் என கனவு கண்டு வருகின்றேன்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனது பகுதிகளில் நிலவி வரும் சில சூழல்களைப் பார்க்கும் போது அது கனவாகவே இருந்து விடுமா என்று அச்சப்படுகிறேன். அந்த அச்சப்படும் சூழல் உண்மையில் எனது ஊரில் இன்னும் வரவில்லை. எனது ஊருக்கெ மேற்கே இருபது கி. மீ தொலைவில் உள்ள எனது அம்மாவின் ஊரான மேலப்பாளையத்தில் தான் அந்த கொடூரம் நிகழ்ந்து வருகிறது. புலியூர் மேலப்பாளையம் என்கிற அந்த ஊரில் எனது அம்மாவின் குடும்பம் அமராவதி நதிக்கரையில் தென்னந்தோப்பில் வசித்து வருகிறார்கள்; சில தலைமுறைகளாக.


வண்டல் படுகைகளில் தென்னையும் களிமண் பகுதிகளில் மஞ்சளும் நெல்லுமாக ஒரு வளமிக்க பகுதியாக அது இருந்தது. ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை. இந்த புலியூர் மேலப்பாளையம் என்பது கரூரில் இருந்து கிழகே சுமார் ஏழு கி மீ தொலைவில் உள்ளது. கரூர் நகரிலும் அதற்கு சற்று முன்னாலும் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் அமராவதி நதிக்கரையில் உள்ளன. அரசு அவ்வப்போது அவற்றை மூடுவதும் பிறகு திறப்பதும் செய்திகளாக பலருக்கும் தெரிந்திருக்கும். 1997-2000 வரையிலான மூன்றாண்டுகள் என் மாமா வீட்டில் இருந்து தான் படித்தேன். அப்போது அமராவதியில் மீன் பிடித்திருக்கிறேன். குளித்திருக்கிறேன். தண்ணீரைக் குடித்திருக்கிறேன். அதெல்லாம் அந்தக் காலம். இப்போது கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதியின் நிலத்தடி நீரும் நஞ்சாகிப் போய் விட்டது. ஆலைக்கழிவுகளால் மாசடைந்த பல நதிகளைப்பற்றி பல ஆவணப்படங்களில் பார்த்தும், செய்திகளில் கேட்டும் இருப்பவனுக்கு அனுபவிக்கும் நிலையும் வந்து விட்டது. இப்போது ஊருக்கு போகிற போதெல்லாம், ஒரு கிலோ மீட்டர் தள்ளி உள்ள கோவில்பாளையத்தில் இருந்து காவிரி நீர் வரும் குழாயிலிருந்து நீர் பிடித்து கொடுத்திருக்கிறேன். அமராவதியின் கரையில் காவிர்த்தண்ணீர் என்பது கேட்க சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அது மிகக் கொடுமையானது. கடந்த முறை ஒரு உந்துதலின் பேரில் மாமா தோப்பில் வருகிற ஆழ்குழாய் நீரை குடித்துப்பார்த்தேன். சத்தியமாய் அந்த தண்ணீர் நஞ்சே தான். தூள் படத்தில் வருவது போல அவ்வளவு கொடூரமாக அந்த தண்ணீர் இருக்கிறது. பட்டறைகள் அந்த ஊரில் இருந்து மேற்கே 7 கி மீ தொலைவில் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் அந்தப் பகுதி வரை நிலத்தடி நீரை நஞ்சாக்கியுள்ளன அந்தப் பட்டறைகள். தொழில் நகரம் என்ற பெருமையால் கரூர் திருப்பூர் முதலாளிகள் எல்லாம் பணத்தில் கொழிக்கிறார்கள். ஆனால் அதற்கு பின்னுள்ள விவசாயிகள்?

எனது பெரிய தாத்தாவுடன் கடந்த இரு சந்திப்புகளின் போதும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மஞ்சள் விவசாயம் அறவே அற்றுப் போய் விட்டது. நெற்பயிர்கள் நாற்றாங்கால்களில் கருகுகின்றன. தென்னைகளில் காய்ப்பு குறைந்து விட்டது. மொத்தத்தில் நதி செத்து விட்டது. விவசாயம் செத்து விட்டது. நீர் செத்து விட்டது. மக்கள் மட்டும் எப்படியோ தக்கன தழைத்தல் போல உயிரோடு இருந்து வருகிறார்கள்.

நான் அங்கே படிக்கிற போது எழுதி பயணம் புதிதில் வந்த கவிதை ஒன்று.

தாகமெடுத்தது ஆத்துக்கு.

வாய் நனச்ச புண்ணியம்

சாயப்பட்டறைக்கு.

சில வாரங்கள் முன்பு எழுதிய

“சாயமேற்றிய துணிகள் கப்பலேறி போகின்றன.

கழிவான சாயங்கள் நதியேறிப் போகின்றன.

நதியோர நிலங்கள் நஞ்சேறி மடிகின்றன.

அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்”

இந்தக் கவிதையின் நீட்சிதான் இந்தக் கட்டுரை?

இந்தக் கொடுமைக்கெல்லாம் யார் காரனம்? தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை மிக உயரிய தத்துவமாக சொல்லி வந்திருக்கிறேன். முருகேசன் மாமாவிடம் மூன்று முறை பலத்த விவாதமும் செய்து இருக்கிறேன். என்றாலும் இப்பொது அவர் சொல்வது தான் உண்மை எனப்படுகிறது. இந்தக் கொடுமைகளுக்கு யார் காரணம்? இந்த விவசாயிகளா?. இங்கே பருத்தி விளைகிறது. இங்கே சாயம் ஏற்றுகிறார்கள். இங்கே நதியை நஞ்சாக்குகிறார்கள். இங்கே நிலங்களை பாழ் பன்னுகிறார்கள். ஆனால் இத்தனையும் கடந்து இந்தத் துணிகள் ஏற்றுமதி ஆகின்றன. அங்கேயிருந்து ஒரு லேபில் சாய்த்து ஒட்டியிருந்தால் கூட அவன் திருப்பி அனுப்புகிறான். இவ்வளவு கொடுமைகள் இங்கே நிகழ்த்தி விட்டு துணிகளை நாம் உடுத்தினாலாவது பரவாயில்லை. நமது மக்களை சாகக் கொடுத்து நமது நிலங்களை சாகக் கொடுத்து நீரை நஞ்சாக்கி வெளி நாட்டுக்காரன் சட்டை போடும் இந்தத் தீமைக்கு யார் காரணம்? நாம் தானா? இந்தத் தீது பிறர் தந்ததா நாம் தருவித்ததா?

நான் ஆரம்பத்தில் சொன்ன கனவுக்கும் இந்த கொடுமைக்கும் தொடர்பு உண்டு. இந்த அமராவதி ஆறு புலியூரில் இருந்து எட்டு கி மீ தொலைவில் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. அந்த திருமுக்கூடலூரிலிருந்து பத்து கி மீ தொலைவில் என் சொந்த ஊர் உள்ளது. ஒரு ஆண்டுக்கு ஒரு கி மீ என்ற வேகத்தில் இந்த நஞ்சடைதல் பரவி வருகிறது. அப்படிப் பார்க்கையில் இன்னும் இருபது ஆண்டுகளில் இந்த நஞ்சு எங்கள் ஊர் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கும் பட்சத்தில் நான் விவசாயி ஆகும் கனவு எப்படி நனவாகும் என்ற பயம் எழுகிறது. என்றாலும் திருமுக்கூடலூருக்கு கிழக்கே மாயனூரில் ஒரு தடுப்பணை கட்டி வருகிறார்கள். அது நிலத்தடி நீரின் நஞ்சை நீர்த்துப் போக வைக்கும் என்று என் அம்மாயி ஊரில் நம்புகிறார்கள். அது ஒரு ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் அதன் சாத்தியக் கூறுகள் குறைவு. ஆற்றில் ஓடுகிற ஆலைக் கழிவு பத்தாண்டுகளில் நிலத்தடி நீரில் கலக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மணல் விபச்சாரமே. எந்தக் கட்சி ஆளுங்கட்சியானாலும் அவர் செய்கிற முதல் வேலை இதுவாக இருக்கிறது. காவிரியை விட அதிக காலம் இதில் மணல் அள்ளலாம் என்பதால் அள்ளித் தீர்த்து விட்டார்கள். அய்யர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த கொஞ்ச காலத்துக்கு மணல் விபச்சாரம் தடை பட்டிருந்தது. பின் பேராதரவோடு நடந்து வருகிறது.

இதற்கு என்னால் பெரிதாக ஒன்னும் செய்ய முடியவில்லை. ஆனால் ஆறுதலாக ஒரு ஆய்வு செய்து வருகிறேன். இந்தக் கொடுமையை தடுத்து நிறுத்தும் நிலையில் நான் இல்லை என்றாலும் இன்னும் ஒரு ஆண்டில் இதிலிருந்து விவசாயம் மட்டும் தப்பிக்குமளவு வழிமுறையை நான் சார்ந்திருக்கும் நுண்ணுயிரியல் புல அறிவைக் கொண்டு கண்டடைய முடியும் என்று நம்புகிறேன். அதை வெற்றிகரமாக முடித்து பின் உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்துகிறேன். படித்த படிப்பு இப்படியாவது உதவட்டும்.

புதன், 27 அக்டோபர், 2010

காஷ்மீர மக்களின் விடுதலைப் போராட்டங்கள் வெல்லட்டும்





காஷ்மீர மக்களின் விடுதலைக்கான போராட்டங்களை எல்லா இந்திய அரசுகளும் நசுக்கியே வந்திருக்கின்றன. இங்கே ஈழப்போராட்டத்தை ஆதரிக்கிறவர்கள் கூட இது பற்றி வாய் திறப்பதில்லை. ஆனால் அந்த மக்களிடையே கனன்று வந்த விடுதலைத்தீ கடந்த சில மாதங்களாக கொழுந்து விட்டெறிகிறது. அங்கே மக்கள் பிரிவிணையை கோரவில்லை; ீவிரவாதிகள் தான் தூண்டி வருகிறார்கள் என்று பேசி வந்த நடு நிலைமை பொய்யர்களும் வாயடைத்துக் கொள்ளும்படி செய்து விட்டன இளம்வயதினரும் பெண்களும் முன் நிற்கிற சமீப கால போராட்டங்கள். கற்களை வீசீத்தாக்கும் அந்த மக்களின் போராட்ட உக்கிரம் இந்திய ராணுவத்தை மட்டுமன்றி மைய அரசையும் அசைத்து விட்டது. அமைச்சர் ப. சிதம்பரம் பொய்யாகவேனும் சில பரிகாரங்களை முன் வைக்குமளவு வைத்து விட்டது. இப்பொது ஆஸாதி பற்றி பேசியதற்காக பா ஜ க அருந்ததி ராய் மீது புகார் அளித்துள்ளது. இது ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் விரும்பிய ஒன்றுதான். ஆள்பவர்கள் ஆதலால் வெளிப்படையாக விரோதம் பாராட்ட முடியாதல்லவா.அருந்ததி ராய் பற்றிப் புகார் அளிக்கும் பா ஜ கா காஷ்மீர் இன்னும் இந்தியாவுடன் இணையவில்லை என்ற உண்மையை சட்ட மன்றத்தில் பேசிய முதல் ஓமர் அப்துல்லா பற்றி என்ன சொல்லும்? இந்தியா வல்லரசாகிறது என்று சன் டி வி அரட்டை அரங்கில் பலர் பேசிக் கேட்டு இருக்கிறேன். ஒரு சர்வதேச வஸ்தாது போல எழுத்தாளர்களை-அவர்களின் கருத்துரிமையை பறிக்கும்- மறுக்கும் இந்தியாவிலுள்ள மைய அரசும் பல மானில அரசுகளும் அந்த வல்லரசு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளித்து விட்டன. திபெத்திய அகதிகளுக்கு தனியுரிமை அளித்து தலாஇலாமாவுக்கு தனியுரிமை அளித்து காப்பாற்றி வரும் இந்த அரசுகள் வங்க தேச வறிய அகதிகளை விரட்டி அடிக்கின்றன. உணவகங்களில் நேபாளி தொழிலாளிகளை பார்க்கும் போதெல்லாம் நமது அரசுகளின் நேபாள கம்யூனிஸ்ட் அரசு மீதான சதிவேலைகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஈழ அகதிகளை ஒடுக்கி வருகிறது. சீனாவிடம் மல்லு கட்ட திபெத்திய அகதிகளை தாஜா பன்னும் தரங்கெட்ட வெலையை செய்து வரும் எல்லா அரசுகளும் இலங்கை ஈழ அகதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை.

இங்கே காணும் படங்கள் கர்நாடகாவில் உள்ள ஒரு திபெத்திய குடியிருப்பில் உள்ள மடம். திபெத்தியர்களும் அகதிகள். ஈழத்தமிழர்களும் அகதிகள். ஈழ அகதிகளின் முகாம்கள் எப்படி உள்ளன. திபெத்திய அகதிகளின் முகாம்கள் எப்படி உள்ளன என்று யோசிக்கவே இந்தப் படங்கள். தந்து செல்போனில் எடுத்த படங்களை கொடுத்த நண்பர் செந்திலுக்கு நன்றிகள்.

கனவுகளின் பெருவேந்தன்

கனவுகளின் தெருவில்
காணாமல் போனவன் நான்.
கனவுகளின் கானகத்தில்
வேட்டையாடும் பிராணியும் நான்.

வாயிலிருந்து ஒழுகும்
பற்பசை நுரையென
படுக்கையின் விளிம்பெல்லாம்
கனவுகள்.

கனவுகளைக் கொன்றழிக்கும் உத்வேகத்துடன்
உறங்கப் போகிறேன்.
உன் கைகள் படப் பட...
கனவுகள் கரைவதாய்-
இப்போதொரு கனவு
கண்டு கொண்டிருக்கிறேன்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தும்மல் எப்படி உண்டாகிறது?- சில அடிப்படை செய்திகள்



கடந்த வெள்ளி மதியம் சாப்பிடும் போது நண்பன் கார்த்திக் தும்மல் பற்றிய சில சந்தேகங்கள் கேட்டான். சில நாட்களுக்கு முன்புதான் அதைப்பற்றி படித்திருந்தேன். சொல்லி விட்டு இதெல்லாம் மக்கள் கிட்ட சொன்னா தும்முவதற்கே பயப்படுவாங்க என்றேன்.ஆனால் கார்த்திக்கின் கருத்து வேறாக இருந்தது. இதையெல்லாம் சொல்லனும். அப்போதான் மக்கள் அதைப் பற்றி தெளிவு கொள்வார்கள். தும்முவதை அநாகரீகம் என்று கருதி பலர் அதை அடக்க முயல்கிறார்கள். அது சரியல்ல. எனவே அவர்கள் தும்மலின் பின்னுள்ள செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றான். நான் நேரம் வாய்க்கிற போதெல்லாம் மக்களிடம் சொல்வேன். என்றாலும் கொஞ்சத்தை இங்கேயும் எழுதி வைப்ப்போமே என்றுதான் இந்தக் கட்டுரை.


தும்மல் என்பது ஒரு தன்னிச்சையான உடனிகழ்வு. மூக்கிலோ அல்லது அதன் முனையிலோ எதாவது விரும்பத்தகாத- நம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத ஒரு பொருளோ- காரணியோ படும்போது மூக்கின் நுனியிலுள்ள நரம்புகள் மூளையில் உள்ள தும்முவதற்கான மையத்திற்கு இந்தத்தகவலை கொண்டு சேர்க்கின்றன. அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் ஒரு கூட்டு நடவடிக்கை போல. நாக்கு மேல்நோக்கியவாறு எழும்பும். வாய் அடைக்கப்படும். கண்கள் மூடப்படும். இதற்கும் முன்னதாக ஆழமான ஒரு சுவாசம் இழுக்கப்படும். இந்த அதிகப்படியான காற்று நுரையீரலில் நுழைந்து மார்புத்தசைகளை இறுக்கமாக்கும். ஒரு நிலையில் படாரென இந்த மார்பிலுள்ள காற்றழுத்தம் விடுவிக்கப்படும்போது வாய் மற்றும் மூக்கின் வழியாக இந்த அடைத்து வைக்கப்படிருந்த காற்றானது சுமார் நூறு மைல்கள் (மணிக்கு) வேகத்தில் வெளியேற்றப்படுகின்றன. அப்போது கோழை (சில சமயங்களில்) மற்றும் எச்சிலோடு மூக்கிலுள்ள விரும்பத்தகாத பொருட்களாகிய தூசி கிருமிகள் முதலானவை வெளித்தள்ளப்படுகின்றன. இது ஒருவிதத்தில் நமது நரம்பு மண்டலத்தின் துணையுடன் நோயெதிர்ப்பு மண்டலம் நன்றாக செயல்பட உதவும் ஒரு காரியமாகும். பெரும்பாலும் தூசி, கிருமிகள் பொன்ற நோயுண்டாக்கும் காரணிகளை முதலிலேயே தவிர்க்க இந்த தும்மல் உதவியாக உள்ளது. இப்படி இருக்கையில் தும்முபவர் சுவாசமண்டல நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பின் இந்த தும்மல் மூலமாக அந்தக் கிருமிகளும் வெளியேற்றப்படும் போது அது நோய்களை பரப்புவதாகவும் உள்ளது. எனவே தும்மல் என்பது மிக அவசியாமான ஆனால் பொறுப்புடன் கவனிக்க வேண்டிய ஒரு நிகழ்வு.


இந்தத் தும்மலைப்பற்றி படிக்கும் போது சில வியப்பளிக்கும் தகவல்களும் இணையத்தில் கிடைத்தன.


1. தூங்கும் போது தும்மல் வருவதில்லை. நாம் தூங்கும் போது தும்முவதற்கான மையமும் அந்த நரம்புப் பாதையும் ஓய்வெடுப்பதால் இப்படி.

2. மூன்றில் ஒரு பங்கினருக்கு பிரகாசமான சூரிய ஒளி தும்மலை உண்டாக்குகிறதாம். அதுவும் ஒருவித ஒவ்வாமை என்கின்றனர்.

3. தும்மும் போது கண்கள் திறந்திருப்பதிலை. திறந்திருந்தால் விழிகள் வெளியே பிய்த்தெறியப்படும் அளவுக்கு தும்மல்கள் அழுத்தமும் வேகமும் மிக்கவை. ஆனால் அப்படி நடக்கவே நடக்காது. விழிகளைத்திறந்து கொண்டு நீங்களே தும்ம நினைத்தாலும் முடியாது.

4. தும்முதற்கு முன்பு மார்புக்கூட்டில் மிக அதிகளவு அழுத்தத்தோடு காற்று சேகரமாவதல் தும்மலை நிறுத்த முயல்வது மார்பெழும்புகளை முறிக்கவும் கூடும். பொதுவாக தும்மல் ஆரம்பித்தி விட்டால் நிறுத்த முடியாத ஒரு தன்னியல்பான நிகழ்வு என்பதால் இப்படியெல்லாம் நடக்காது.


ஆகவே தும்மல் வந்தால் அடக்காமல் தும்மிவிடவும். ஆனால் இந்தக் கிருமிகள் மற்றவர்களுக்கும் பரவும் என்பதால் தும்மும் போது நமது எச்சில் அடுத்தவர் மேல் படாதவாறு முன்னெச்சரிக்கையாக தும்முவது மிக பொறுப்பான செயல்.



Thanks to www.fotosearch.com for royalty free image used in this article.


திங்கள், 11 அக்டோபர், 2010

இன்னும் என் பிளேலிஸ்ட் மாறவில்லை


உயிர்மையில் ஷாஜி மற்றும் சாரு நிவேதிதா போன்றவர்கள் இசையைப் பற்றி அடிக்கடி எழுதி வருகிறார்கள். சாரு நேரடியாகவும் ஷாஜி சுற்றி வளைத்தும் இளையராஜாவின் இசையை எதிர் நிலையில் நின்று விமர்சித்து வருகிறார்கள். சாரு நிவேதிதா உலகின் பல்வேறு இசைகளையும் அதன் விற்பன்னர்களையும் இதற்காக துணைக்கழைத்து வருகிறார். எனக்கு இசையின் அடிப்படைகள் கூடத்தெரியாது. இளையராஜாவுக்கு பகழ் பரப்பு செயளாலரும் அல்ல. என்றாலும் எனது கல்லூரி காலந்தொட்டு சுமார் பத்தாண்டுகளாக இசையை ரசித்து வருபவன். உண்மையில் இளையராஜாவின் மிகப்பல பாடல்கள் அற்புதமான பாடல்கள். இப்போதைய தமிழ்ச்சமூகத்தில் திரைப்படம் நமது சமகால கலைவடிவமாகவே உள்ளது. அதில் திரைப்பட பாடல்கள் நமது வாழ்வின் பெரும்பாலான களிப்புக் காலங்களை தன்னுள் கொள்கிறது. அப்படியான ஒரு தளத்தில் இளையராஜாவின் இசை செலுத்திய தாக்கம் கற்பனைக்கெட்டாதது. எந்த ஒன்றையும் அடிப்படை தகுதி இல்லாமல் பெருமக்கள் திரள் ஒத்துக்கொள்ளாது. ரஜினிக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச அங்கீகாரமும் இதே வகையே. இவர்கள் இருவரும் எழுதுவதை தொடர்ந்து படிக்கும் ஒருவருக்கு இளையராஜாவெல்லாம் சும்மா; உண்மையில் நல்ல இசை என்பது வேறு என்ற மயக்கத்தை உண்டு பண்ணும். ஒவ்வொருவரின் ரசனையும் வித்தியாசப்படும். ஒருவருக்கு நல்ல இசையாக தோன்றுவது இன்னொருவருக்கு சாதாரணமாக தோன்றும். இதில் தப்பில்லை. கோடிக்கனக்கானவர்களை வருடக்கணக்கில் கட்டி ஆண்ட இசையை ரசனை போதாமை என்று சொல்வது மேதமை அல்ல. ஒரு நிகழ்ச்சியை யாரோ சொன்னார்களோ எங்கோ படித்தேனோ நினைவில்லை. உண்மையாக நடந்தது. ஒரு மது விருந்தில் ஒரு கப்பல் மாலுமியிடம் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். இறுதிவரை அந்த மாலுமி தன் கோப்பையில் உள்ள ஒயினை அருந்தவே இல்லை. கையில் வைத்து பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் கேட்கிறார். என்னங்க குடிக்காம அப்படியே வைத்துக் கொண்டு இருக்கிங்க என்று. மாலுமி சொல்கிறார். முதல் சிப்பில் அருந்திய ஒயினின் சுவையை இன்னமும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று. நானெல்லாம் அந்த மாதிரி. முதல் சிப்பின் சுவையை இன்னமும் ருசித்துக் கொண்டு இருப்பவன். எனவே இளையராஜா மீதான இந்த இருவரது கட்டுரைகளும் கட்டுக் கட்டிய உரைகளே என்று அறிவிக்கிறேன்.

எனது விருப்பமான சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். இதற்கெல்லாம் இளையராஜா மட்டுமே இசையமைத்தாரா என்பது தெரியவில்லை. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வாசு மாமா இருப்பதால் வேண்டும் போது கேட்டுக் கொள்ளலாம். இப்பொதைக்கு பாட்டுக்களை கேட்பதோடு சரி. எனது WINAMP பிளேலிஸ்டில் இளையராஜாவின் 237 பாடல்களும் உள்ளன. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறேன் என்றாலும் என் கம்ப்பியூட்டர் வாங்கி மூன்றாண்டுகள் கடந்தும் இன்னும் என் பிளேலிஸ்ட் மாறவில்லை.

சில பாடல்கள் மட்டும் இங்கே.

ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆசைய காத்துல தூது விட்டு

ஆயிரம் மலர்களே மலருங்கள்

மன்றம் வந்த தென்றலுக்கு

பூங்காற்று திரும்புமா

அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

எங்கே செல்லும் இந்தப்பாதை

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் இல்லை

பூங்காற்று புதிரானது

என் இனிய பொன் நிலாவே

ராக்கம்மா கையத்தட்டு

நினைவோ ஒரு பறவை

ரு விட்டு ரு வந்து

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா

காட்டுக்குயிலு மனசுக்குள்ள

இப்படி அது பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.


Thanks to Yahoo movies for photo.


அலைக்கற்றையும் ஆறு ரூபாய் ஐஸ்கிரீமும்


ஆறு ரூபாய் இல்லாததால்
ஐஸ்கிரீம் கேட்ட குழந்தையை
கடிந்து கொள்ளும் தகப்பன்;

பத்து ரூபாய் போதாமல்
கர்ப்பிணி மனைவி கேட்ட
இனிப்பை வாங்கித்தர முடியாதவன்;

என்று இவர்களும்-

அறுபதாயிரம் கோடி ரூபாய்கள் அமுக்கப்பட்ட
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த
இந்தியாவில் தான்
இருக்கிறார்கள்.

Thanks to: www.fotosearch.com for royalty free image