ஞாயிறு, 20 டிசம்பர், 2009

முன் திட்டமிடலோடு புனையப்படும் அலங்காரக்கோவை : பாமரனின் எழுத்துக்கள்

சமீபத்தில் வந்திருக்கும் பேராண்மை படத்தை விமர்சிக்கிறேன் என்ற ரீதியில் முற்போக்குப் போர்வையை போர்த்திக் கொண்டு ஜனநாதன் இனி இதுபோல படம் எடுக்க வேன்டாம் என்று அருளுரை வழங்கி இருக்கும் மதிமாறனைப் (http://mathimaran.wordpress.com/) பற்றி எழுதுகையில் “இப்படியே போனால் மதிமாறன் கோவை பாமரன் (http://pamaran.wordpress.com/) போலாகி விடுவார்” என்று எழுதிவிட்டேன். பாமரன் அப்படியென்ன கீழாகிப் போய் விட்டார் என்று ஒருவர் கேட்டார். மேலே வைத்துப் பேசக்கூடிய அளவுக்கு பாமரனின் எழுத்து ஒன்றும் முக்கியத்துவமானது அல்ல என்ற எனது முந்தைய கருத்தை வலியுறுத்தியே இந்த கட்டுரை.

பாமரன் என்ற பெயரிலான தனிமனிதனை நான் இங்கே விமர்சிக்கப் புகவில்லை. அவரின் சமூகப் பொறுப்புணர்வையோ அரசியல் நடவடிக்கைகளையோ நான் எடை போடவில்லை. அதற்கான அவசியமும் இங்கே இல்லை. ஆனால் பாமரனின் எழுத்தை விமர்சிக்க தமிழில் படிக்கும் வாசகன் என்ற குறைந்த பட்ச தகுதியே போதுமானது. பாமரனின் எழுத்துக்களை அவ்வப்போது வியாபாரத்துக்கென நடத்தப் படும் இதழ்களில் படித்து வந்திருக்கிறேன். அவரின் இணைய பக்கத்தையும் அவ்வப்போது படிப்பதுண்டு. ஒரு பொழுதுபோக்கின் வகையென இதை நான் கொண்டிருந்தாலும், வெளிப்பார்வைக்கு நன்றாக இருக்கிறதேயென்று சேரும் ஊருக்குப் போகாத ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பவருக்கு அந்தப் பேருந்து அவருக்கான பயணத்துக்கல்ல என்று சொல்லும் குறைந்த பட்ச சமூகப் பொறுப்புணர்வோடு பாமரனின் எழுத்தைப் பற்றி இந்தச் சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.

நண்பர் சங்கர் ஒருமுறை சொன்னார். தொடர்ச்சியாக செய்திகளை கவனித்துக் கொண்டு வருபவர்களுக்கு எப்படியும் எதையாவது விமர்சிக்கிற குறைந்த பட்ச அறிவு வளர்ந்து விடும் என்று. உண்மைதான். நிறைய படிக்கவும் டி வி பார்க்க நேரமும் இருக்கிற ஒருவருக்கு பல அபிப்ராயங்கள் தோன்றும். எழுதுவதற்கு கொஞ்சம் மொழியும் கைவந்து விட்டால் அதற்கு நேரமும் கிடைத்து விட்டால் என்னத்தையும் எழுதி விடலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு படைப்பாளி என்பவன் தனது எழுத்து அல்லது படைப்பு மூலமாக ஒரு கருத்தை உருவாக்க வேண்டும்; கருத்தை நிறுவ வேண்டும்; கருத்தை ஆராய வேண்டும். இந்த அளவுகோளின் படி பாமரனின் எழுத்து எனது கனக்கில் வரவில்லை.

பாமரனின் எழுத்து ஒரு சாயங்கால நேரத்து நொறுக்குத் தீனீ போல. உப்பு சப்போடு இருப்பதாகத் தோன்றினாலும் உடம்புக்கு ஒன்றும் வலு சேர்க்காது. தேவையில்லாதது. அவரின் மொழிநடை பரவலாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் வசீகரத்தொனி. வைரமுத்துவின் மேடையலங்காரப் பேச்சு அதன் உச்சரிப்பால் கேட்பவர்களை வசீகரிக்கிறது. அதைப்போல பாமரனின் எளிய வசீகர நடையில் மயங்கி அதைப் பிடிக்கிறதென்று பலரும் சொல்கிறார்கள். இப்படியாகிவிட்ட பட்சத்தில் அவர் உண்மையாகவே ஒரு நல்ல கருத்தை முன்வைத்தாலும் மொழிநடையினது மாய வசீகரம் அதை மறைத்து விடுகிறது.

நான் சில சிற்றிதழ்களுடன் அறிமுகமானவன். அந்த எளிய இதழ்களிலும் பாமரன் போன்றதொரு தொனியில் எழுதுகிறவர்களது படைப்புகளும் வருவதுண்டு. வாசிப்பனுபவமே இல்லாதவர்கள் கூட அவற்றின் நடை தரும் சுகத்துக்காக படிப்பார்கள். நன்றாக இருக்கிறதென்றும் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் படித்ததை மறந்து விடுவார்கள். அவருக்கு அந்த எழுத்தின் சாரம் மறந்து போகும். ஆனால் நன்றாக இருக்கிறதென்ற பிம்பம் நிலைத்துப் போகும். அத்தகைய விபத்துதான் பாமரனின் எழுத்துக்கும் நேர்ந்துள்ளது.

ஈழத்தின் நான்காம் கட்டப் போரின்போது பலரும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதினார்கள் . பேசினார்கள். ஆனால் அதிலெல்லாம் ஒரு அவலச்சுவை மேலோங்கி நின்ற காரணத்தால் மக்கள் அனுதாபப் பட்டார்களேயொழிய ஆத்திரப் படவில்லை. திண்டுக்கல் லியோனி பேசினால் மக்கள் ரசிப்பார்கள். கூட்டம் முடிந்த பின்பு என்ன பேசினாரென்று ஒருவருக்கும் நினைவிருக்காது. லியோனி சிரிக்கச்சிரிக்கப் பேசுபவர் என்ற பிம்பம் நிலைத்து விடும். பாமரனுக்கும் இந்த நிலைதான். இதற்காக அவரை நான் புறக்கணிக்கச் சொல்லவில்லை. ஆனால் அதன் பின்னாலுள்ள உண்மையை எல்லோருக்கும் சொல்வது எனது கடமை. பாரதி மேல் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவனை அதற்காகப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அவனின் படைப்பின் மேன்மை தாங்கி நிற்கிறது. பாமரனின் எழுத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை என்கிற விஷ்ணுபுரம் சரவணனின் கருத்தை (http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5416156027488091983) நான் மதிக்க இதுவே காரணம். இந்த நுண்ணிய தொடர்பிழை பலருக்கும் புரிவதிலை. பாமரனின் எழுத்தை நான் விமர்சித்தால் அதற்கு குதர்க்கமான காரணங்கள் கற்பிப்பதால் பாமரனின் எழுத்தின் தவறுகளை நீங்கள் மறைத்து விடவோ பிழையே இல்லையென்றாக்கி விடவோ முடியாது. அப்படி நினைப்பிருந்தால் அது அறிவீனமே.

பாமரனின் எழுத்துக்களின் பலமாக விஷ்ணுபுரம் சரவணன் சொன்ன இன்னொன்று அரசியல் கட்டுரைகளில் பகடி. பாமரனிடம் நான் காணும் மிகப் பெரும் பலவீணமே அவர் பகடி பன்னுகிற விதம் தான். குஷி கிளம்பிய குழந்தை, செய்ததையே அல்லது சொன்னதையே மீண்டும் மீண்டும் நம் கவனிப்புக்காக சொல்வதை/செய்வதைப் போல, வாசகர்கள் ரசிக்கிறார்களேயென்று பகடியாகவே அதை பண்ணுகிறார். பகடி பன்னுவதற்காக விசயங்களை எடுத்துக் கொள்கிறாரோ என்ற மயக்கமும் எனக்கு உண்டு. இதுபோக, தொடர்பில்லாவிட்டாலும் இங்கே ஒன்றை பதிகிறேன். தமிழில் அரசியல் கட்டுரைகளை நுணுக்கமான அதெசமயம் எளிமையான பகடியுடன் எழுதுபவராக என் கண்ணுக்குப் படுபவர் சாரு நிவேதிதா.


சாரு நிவேதிதா தற்கால இலக்கிய உலகில் மிகவும் எளிமையான அருமையான மொழி நடை உள்ளவர். அவரும் அவ்வப்போது அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார். அதற்காகவே அவரின் அரசியல் கட்டுரைகள் முக்கியமானவை என்று சொல்லி விட முடியாது. ஒருவித சார்புடனே, சமரசத் தன்மையோடே எழுதுகிறார். கலகக்குரல் போன்றாதான மாயையில் அவரின் அரசியல் சமரசத்தன்மை மறைந்து விடுகிறது. பாமரனின் எழுத்துக்கள் காத்திரமான விசயங்களை சமரசத்தன்மை அற்று பேசுகிறது என்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர் என்கிறார். இதெல்லாம் மட்டுமே ஒரு எழுத்தை நல்ல எழுத்தென்றாக்கி விடாது. அவரின் சமரசமற்றத்தன்மை என்பது வியப்புக்குரியதோ பாராட்டுக்குரியதோ அல்ல. மேலுள்ள வரியை எழுதியால் நான் அவர் சமரசமற்ற எழுத்தைக் கொடுப்பவர் என்று ஒப்புக்கொள்ளவில்லை. வியாபாரமாக்கப் பட்ட இதழ்களில் எழுதுகிறவர்கள் அப்படித்தான் எழுத முடியும். எழுதியாக வேண்டும். இது ஒருவகையில் அந்த இதழ்களின் வியாபார யுக்தி. அவர்களின் எதிர்பார்ப்புக்கு பாமரனின் எழுத்து கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. எனவே அவரின் சமரசமின்மை இயல்பானது அல்ல. அவர் எழுத்துக்களுக்கான பரவலான வரவேற்பினால் நிகழ்ந்த தொடர்விபத்து என்றே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

முன்னர் சொன்னது போல குறைகள் இல்லாதது எதுவுமே இல்லை. குறைகள் இருக்கிறதென்பதாலேயெ ஒன்றை முற்றாகப் புறக்கணிக்கவும் கூடாது. மனிதர்களை அவர்களின் பலவீனங்களுடனே ஏற்றுக் கொள்பவன் நான். நமது சமூகம் பாசாங்குகளால் நிரம்பியது. ஈழம் என்பவர்கள் இன உணர்வாளர்கள்; குரசோவவைப் பேசுகிறவர்கள் சினிமாக்காரர்கள்; புதிய ஜனநாயகம் என்பவர்கள் புரட்சிக்காரர்கள்; பாப்லோ நெரூடாவென்றால் அவர்கள் முற்போக்குவாதிகள்; பின் நவீனத்துவம் தெரிந்தவர்கள் இலக்கியவாதிகள். இப்படியாக பிம்பங்கள் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சூழலில் யாதொரு கருத்தை முன்வைத்து பொதுவுக்கு வந்தாலும் எதிர்ப்பும் ஆதரவும் சகஜமானதே. அதற்கு பாமரனும் தயாராக இருக்க வேண்டும். நானும் தயராக இருக்க வேண்டும்.

பாமரனின் எழுத்துக்களுக்கு நேர் மாற்றாக நான் முன்வைப்பது புதிய ஜன நாயகத்தின் எழுத்துக்களை. அதன் அரசியல் போக்கோடு எனக்கு சில நெருடல்கள் இருந்தாலும் அந்த எழுத்துக்களின் எளிமைத்தன்மை பூண்ட வீரியத்தை சொல்ல வேண்டும். அதீத எளிமையோடு அசலான தீவிரத்தோடு அவர்கள் உபயோகிக்கிற வார்த்தைகள் ஒரு காத்திரமான எழுத்தை நம் முன் வைக்கின்றன.

கீழுள்ள வரியை எழுதி விட்டதனால் பின்வருபவர்களோடு நான் பாமரனை ஒப்பிடுவதாக தப்பர்த்தம் பண்ணிக் கொள்ள வெண்டாம். தமிழில் முன் திட்டமிடல் இல்லாமல் சுயமாக சரளமான எளிமையான எழுத்தை கைவரப் பெற்றவர்கள் மிகக் குறைவு. பாரதி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் மற்றும் விக்கிரமாதித்யன் என்கிற எனது இந்தப் பட்டியல் ரொம்பச்சின்னது. பெருமாள் முருகனின் பட்டியல் இன்னமும் சின்னது. பாரதியும் புதுமைப்பித்தனும் தான்.இறுதியாக, பாமரனின் எழுத்துக்கள் வாசகர்களை கவரும் வண்ணமாக முன் திட்டமிடலோடு புனையப்படும் அலங்காரக்கோவை என்பது என் ஒட்டு மொத்தக் கருத்து.

வியாழன், 17 டிசம்பர், 2009

நான் ரகசியங்களை விற்பவனல்ல

நான் ரகசியங்களை விற்பவனல்ல;
என்றாலும்-
உன் பரிவான சொற்களைக் கொடுத்து
என் ரகசியங்களை வாங்கிக் கொண்டு போகிறாய்.
அல்லது-
உன் பரிவான சொற்களை வேண்டி
என் ரகசியங்களை படையலிடுகிறேன்.

உனது பரிவான சொற்களால்
சிறியதாய் ஒரு தலையணை செய்து
எனக்கேயான உறக்கங்களில்
உடன் வைத்துக் கொள்கிறேன்.

என்னதான் செய்வாய் நீ-
என் ரகசியங்களை?

சாவின் சூட்சுமம்

சாவதற்கு நல்ல வழி
கேட்டவனிடம்-

தூக்க மாத்திரைகள்
நல்ல தேர்வு அல்ல என்று சொல்லி,
மண்ணில் புதையுண்டிருக்கும்
இரும்புக் கத்தியை எடுத்து
துருப்பிடித்த.... மழுங்கின....
அதன் முனையால்
குரல்வளையை அறுத்துக் கொள்;
என வழிமுறை கூறுகிறாய்.

ஒரு வேளை
உயிர் போவதற்கான
ரத்த இழப்பு இல்லாமற் போனாலும்-
விரைவில்,
சீழ் பிடித்து சாவு நேரும்;
என சாவின் சூட்சுமம் சொல்கிறாய்.

கனவில்தானென்றாலும்
இது பெருங்கொடூரமடி ஜோதி.

வாழ்வின் சுவாசம்

பூவுதிர்க்கிற பெருமரங்களையும்

பட்டுப் போக வைக்கும்

வேரடி பூஞ்சையாய் -

நிராசைகளின் பக்கங்களை

புரட்டிக்கொண்டு இருக்கும்

உள்மனம்

வாழ்வின் எளிய தருணங்களையும்

வெறுமையாக்குகிறது.

நிறைந்து போய் விடாத அந்த

வெறுமைகளில் இருக்கிறது

வாழ்வின் சுவாசம்.

சனி, 12 டிசம்பர், 2009

நான் மனிதன் என்று உணர்கிறேன்

சோகம் ததும்புகிற இசைக்காக
கண்கள் தளும்புகிற கணங்களில்
நான் மனிதன் என்று உணர்கிறேன்.