வியாழன், 14 ஜூலை, 2011

நேற்றும் மும்பையில் குண்டு வெடிப்புகள்: இன்னும் எத்தனை?

இன்றைய இந்து நாளிதழில் மும்பையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை நிறைய போட்டிருந்தார்கள். பெரும்பாலும் இது போன்றவை வெறும் செய்திகளாகவே நான் கடந்து போவதுண்டு. இன்று அவ்வாறு முடியவில்லை. அந்தப் படங்கள் மிக அப்பட்டமாக குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு உயிரொடு இருப்பவர்களின் ரணங்களைக் காட்டியது என்னை மிகவும் வருத்தியது. இந்த மாதிரி படங்களை வெளியிடக் கூடாது என்பது என் தணிப்பட்ட எண்ணம். அது மக்கள் மனதில் உடனடியாக ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணும். அடிக்கடி இப்படி பார்கிற போது அது பழகி பின் நேரில் நடந்தால் கூட சகஜமாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. பத்திர்க்கைகள் விற்க வேண்டும் என்பதால் வெரும் ஓரிரு படங்களுக்கு பதிலாக இப்படி அதிக படங்களை போடுகிறார்கள். அது குறைக்கப்பட வேண்டும்.

மும்பை வாசிகள் உன்மையிலேயே தைரியசாலிகள் தான். எத்தனை குண்டுவெடிப்புகள்? பயங்கரவாத தாக்குதல்கள்? இத்தனைக்கும் மீறி மக்கள் அங்கே குவிந்த வண்ணமும் பிழப்பு நடத்தியும் வருகிறார்கள். தமில் நாட்டில் எவ்வளவு பயமின்றி வாழிகிறோம். சில நாட்களில் நான் பேருந்து ரயில்களில் போகும் போது நினைப்பதுண்டு. மும்பை மக்கள் நம்மைப் போலவே கவலையின்றி போவார்களா படு கவனத்தோடு போவார்களா என்று. அங்கே அமைதி நிலவட்டும்.

மும்பை போன்ற பெரு நகரங்களில் இது மாதிரியான தாக்குதல்கள் மிக எளிதாக நிகழ்த்தப் படுகிண்ரன. உலவுத்துறையாகட்டும் பாதுகாப்புத்துறையாகட்டும். கண்கானிப்பது மிக கடிணம் தான். மக்கள் கொஞ்சம் விழிப்போடும் பொறுப்போடும் இருந்து கொள்ள வேன்டியதுதான். இது மாதிரியான எல்லா நாசகாரியங்களிலும் உள்ளூர் வாசிகள் சிலரின் உதவியும் இருப்பதுண்டு. அது குறையாமல் அல்லது குறைக்கப் படாமல் இது மாதிரியான சதிச்செயல்கலை தடுப்பது கடினம்.

இந்த குண்டுகளை யார் வைத்தார்களோ?

திங்கள், 11 ஜூலை, 2011

மதுபான பொருட்களின் விலையேற்றம்: ஒழுக்கக்கேடான தமிழக அரசு

ரொம்ப நாட்களாக எதுவும் எழுதவில்லை. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற சிறு தயக்கம். அது நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கேட்டபோது மறைந்து விட்டது. மதுபானங்களின் விலையை முன்னறிவிப்பின்றி அரசு உயர்த்தியுள்ளது. குவாட்டருக்கு ஐந்து ஆFப்புக்கு பத்து fபுல்லுக்கு இருபது என அநியாய விலை உயர்வு. அதுவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி. சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை ஊழியர்களே மூடிவிட்டதாக சன் நியூஸ் சொன்னது. காரணம் மதியம் விலையுயர்த்தி விட்டு காலை விற்ற சரக்குக்கும் அதே விலைப்பட்டியல் படி பணம் கேட்டார்களாம் அதிகாரிகள்.

இது மட்டும் இல்லை. இது மாதிரியான எல்லா விலை உயர்வுகளுக்கும் இவர்கள் சொல்லும் அடிப்படை காரணம் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையுயர்வை காரணம் காட்டி விலையேற்றி வந்தன மைய அரசுகள். ஆனால் இப்போதை மைய அரசு ஒரு படி மேலே போய் இனி பெட்ரோலிய பொருட்களின் விலையை நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என நாயை அவிழ்த்து விட்டுவிட்டது. விளைவு கச்சா எண்ணெயின் விலை குறைவு பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பலமுறை விலையேற்றம் நடந்துவருகிறது.
இது மாதிரியான மக்கள் விரோத அரசுகள் இப்படித்தான் செய்யும். அதிலும் முந்தைய மற்றும் இன்னாள் தமிழக அரசுகள் இன்னும் கொடூரமானவை. மிகவும் சல்லித்தனமானவை. மாநகரப் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டணக் கொள்ளை நடத்துகின்றன. எங்கும் வெள்ளைப்பலகை பேருந்துகளே இல்லை (இவற்றில் குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் ரெண்டு). ஏழை மக்கள் அதிகம் புழங்கும் எல்லாப் பகுதிகளிலும் சொகுசுப் பேருந்துகளும் M வரிசைப்பேருந்துகளும் அலைந்து மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. இதனினும் மேலாக கையில் சீட்டு கிழித்து கொடுக்கும் நடத்துனர்கள் புதியவர்களிடம் விருப்பம் போல விலையேற்றி கொடுப்பதை நானே அனுபவித்திருக்கிறேன். மெசினில் கொடுக்கும் டிக்கெட்டில் ஊர் பெயர் இருக்கும். கையில் கொடுப்பதில் இருக்காது. இதனால் மூன்று ரூபாய் பயணத்துக்கு நான்கு ரூபாய் டிக்கெட் கொடுப்பதெல்லாம் நடக்கிறது. இது கண்டிப்பாக நடத்துனர்கள் செய்யும் திருட்டு அல்ல. அவர்களின் மேல் திணிக்கப் படும் அதிகாரிகளின் லாபவெறி. இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே உரித்தான குணம் .
சேவைத்துறையில் உள்ள அரசு நிறுவன்ங்கள் ஏன் லாபம் சம்பாதிக்க வேண்டும்? அன்றாடக் கூலிகளிடம் ஐம்பது பைசா கொள்ளையடித்து அல்லது பிச்சை எடுத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டுமா? டாஸ்மாக் ஊழியர்களும் இது போல லாபம் சம்பாதிக்க நிர்பந்திக்கப் படுபவர்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை (அவர்கள் அரசிடம் திருடுவதும் உண்டு/குடிமகன்களை ஏமாற்றுபவர்களும் உண்டு.). டாஸ்மாக் பார்களில் ஒரு தண்ணீர்ப்பொட்டலத்தின் விலையென்ன என்ரு விசாரித்துப் பாருங்கள். பிரபஞ்சன், சாரு நிவேதிதா அ. மார்க்ஸ் முதலானோர் டாஸ்மாக் பார்களின் சுகாதாரக் கேடு பற்றியும் இழி நிலை பற்றியும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வரவேற்கத்தக்கது. குடிகாரர்கள் என்று இழித்துப் பேசப்படும் அவர்கள் தான் இந்த அரசு இயந்திரத்தின் சக்கரங்களை ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு இப்படி சரக்கு விற்று சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அதன் லாபவெறி அப்படி செய்யத்தூண்டுகிறது.
மதுபான பொருட்களின் விலையேற்றம் வெறும் குடிகாரர்களை மட்டும் பாதிப்பதல்ல. அது நல்லறம் பேண வேண்டிய அரசின் குணக்கேட்டின் மற்றுமொரு எடுத்துக்காட்டு.