புதன், 20 மார்ச், 2013

பரதேசி-பாலாவின் முதல் படம்


பரதேசி-பாலாவின் முதல் படம்




பரதேசி-பாலாவின் முதல் படம்
சில காலமாக படங்களை திரையரங்கம் சென்று பார்க்க முடியாத அளவுக்கு நேர நெருக்கடியில் இருக்கிறேன். ஊருக்குப் போனால் மட்டுமே படங்கள் பார்ப்பது என்றாகி விட்டது. கடந்த திங்கள் அன்று கரூர் பொன் அமுதாவில் முருகேசன் மாமாவுடன் பரதேசி பார்த்தேன். முடிந்து வெளியில் வரும்போது சொன்னேன்; இந்தப் படம் விருதுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று.
இந்தப் பதிவு பரதேசிக்கான விமர்சனம் அல்ல. படத்தைப் பார்க்க என் பரிந்துரை.
பாலா என்ற படைப்பாளியின் மற்றெல்லா படங்களைக்காட்டிலும் இந்தப் படம் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் இதை பாலாவின் முதல் படம் என்கிறேன். மற்ற படங்கள் அவருக்கான பயிற்சி.
படத்தைப் பற்றி பலவிதமான எதிர்க்கருத்துகள் உலவுகின்றன. நீங்கள் கிராமத்தில் வாழ்ந்தவராக-வாழ்பவராக இருந்தால் அவசியம் பார்க்கவேண்டிய படம். எதிர்க்கருத்துகள் பேசுபவர்கள் பெரும்பாலும் நகரவாசிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. என்னென்னவோ சொல்கிறார்கள். கேமரா, இசை, இந்துத்துவம், சாதியம் என்று பல தளங்களில் பாலாவின் இந்தப் பரதேசி படம் விமர்சன்ங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்தப் பதிவு அந்த விமர்சன்ங்கள் எதையும் மறுக்கவோ வக்காலத்து வாங்கவோ அல்ல.
எல்லோரும் சொல்வதைபோல இந்தப் படம் வெறுமனே தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் அவலத்தை மட்டும் சொல்லிப்போகவில்லை. எதோ ஒரு காரணத்துக்காக புலம் பெயரும் யாவரும் அனுபவிக்கும் வாதைகளை தேயிலைத்தோட்ட பிண்ணனியில் இந்தப் படத்தில் பார்க்கிறேன். இயல்பான கிராம வாழ்வின் எளிமையான கொண்டாட்ட வாழ்வை அழுத்தமாக பதிவு செய்யும் முற்பாதியின் தலைகீழ் தொடர்ச்சியாக அங்கிருந்து காசுக்காக புலம் பெயரும் மக்களின் அடிமை வாழ்வை பிற்பாதியில் தனக்கே உரிய குரூரக்காட்சிகளால் சொல்லிப்போகிறார் பாலா. அந்த மக்கள் பஞ்சத்துக்காக போவதாக காட்சிகள் இல்லை. இருக்கிற வாழ்வில் இருந்து மேலெழும்பும் முகமாக அவர்கள் புலம் பெயர்வதும் அதனால் அவர்கள் படும் துயருமே பட்த்தின் மையப்புள்ளி. இடைவேளைக்கு முன்னதான அந்த நெடிய அற்புதமான பாடலில் ஒரு வரி-ஊரைத்தேடி ஊரை விட்டு ஊர் போகுதே என்று. அதுதான் படத்தின் ஆன்மா.
கருத்த கண்ணி-படத்தின் உண்மையான கதை நாயகி. இயக்குநரின் மொழியை பேசுபவள். பட்த்தின் துவக்கத்தில் மொத்த பட்த்திலும் பேரழகியாக பெருமகிழ்வானவளாக அறிமுகமாகி பட்த்தின் இடைவேளையில் ஒரு இருண்மைத்தன்மையை முகத்தில் காட்டி படம் நகர நகர மெய்யழகு அழிந்து கடைசியில் மரித்தும் போகிற அவளது பாத்திரம் இயக்குநர் சொல்வதை சொல்லிச் செல்கிறது.
பாலா தன் முந்தைய எல்லா படங்களிலும் அய்யர்கள் சினிமாக்காரர்கள் போன்றோரை மிகவும் கேவலமாக சித்தரித்து கிண்டலடித்தே பழக்கப்பட்டவர். இந்த முறை மதம் மாற்றும் கிறிஸ்தவர்களை சகிக்கமுடியாத வகையில் கிண்டலடித்து இருக்கிறார்.
வால்பாறையில் ஒரு வருடம் வாழ்த்திருக்கிறேன். அடகுக் கடைகளே அதிகம். கூலி தரும் நாளில் கந்து வட்டிக்காரர்கள்  தனிவரிசையில் நின்று வாங்கிப் போவார்கள். பலப்பல கட்சிகள் உள்ள இந்தக் காலத்திலும் இதுதான் நிலை. அடிமைத்தனம் என்பது நம் ரத்த்தில் ஊறியது. அது பயம், விசுவாசம், பாதுகாப்பு என பல வடிவங்களில் காலங்காலமாக வாழ்ந்து வருகிறது. வேலூர்க்கோட்டையில் முதல் முதலாக நுழையும் போது ஒரு வெள்ளைக்கார தளபதி நினைத்திருக்கிறார்- இங்குள்ள மக்கள் ஆளுக்கு ஒரு கல்லை எறிந்தால் கூட நம் சின்னப் படை சின்னா பின்னமாகி விடும் என்று. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆயிரம் லட்சம் என பல எண்ணிக்கைகளில் சகோதரர்கள் கொல்லப்பட்ட போது சினிமா கிரிக்கெட் என அந்தக் குறையும் இல்லாமல் அநேகம் பேர் இருந்தோம். அப்படியான வழக்கமான் ஒரு தமிழ்ச்சமூகம் அங்கே ஆனைமலையில் பட்ட துன்பங்களை பதிவு செய்திருக்கும் வகையில் தமிழின் மிக முக்கியமான படங்களின் வரிசையில் பரதேசியும் சேர்கிறது. பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து முதல் முறையாக ஒரு மக்களுக்கான படம் வந்திருக்கிறது. இதை பாலு மகேந்திராவே விரும்பியிருக்க மாட்டார்.
மிக நீண்ட பதிவாக எழுத வேண்டியது. நேர நெருக்கடி காரணமாக முடிக்க வேண்டி உள்ளது.
கலை-அறிமுகம் அருமை. என்ன ஒரு நேர்த்தி என்ன ஒரு மெனக்கெடல்? அட்டகாசம்.
செழியன் பாலாவின் கண்களை கடன் வாங்கி ஒளிப்பதிவு செய்திருப்பார் போல. பட்த்தின் ஆன்மாவை உயிரூட்டிய ரத்த ஓட்டமாக இவரின் உழைப்பு. வாழ்த்துக்கள் தோழர்.
இளையராஜா இல்லாவிட்டால் என்ன? எட்டுத்திக்கும் சென்று ஈட்டி வந்ததை ஜி.வி பிரகாஷ் கொட்டியிருக்கிறார்.
நியாயம்மாரே என ராசா அரற்றும் அந்த இறுதிக்காட்சியில் புதிய அடிமைகள் வரும் வரிசையில் தன் துணையையும் மகனையும் பார்க்க நேர்ந்தது எப்பேர்ப்பட்ட குரூரம்? அந்தச் சிறுவன் என் மகன் சாயலில் மகன் கலரில் இருக்கிறான் என்ற நினைப்பே என்னை கொல்கிறது. அப்படியான சூழலில் வாழ நேர்ந்திருக்கும் ஒருவனுக்கு அந்தக் கொடூரம் எப்படி இருந்திருக்கும்? அய்யோ....
அடக்குமுறைகளின், அடிமைத்தளைகளின் படி நிலை; பெண் சமத்துவம்; மதத்தின் பேராலான சுரண்டல், காதல் என பலதரப்பட்ட தளங்களின் வழியே பயணித்து யதார்த்தத்தின் குரூரம் முகத்தில் அறையும் படி முடியும் பாலாவின் இந்த முதல் படத்தை பார்ப்பது இதுவே கடைசி. 

images from : http://chennai365.com/events/director-balas-paradesi-audio-launch-invite-stills/


கருத்துகள் இல்லை: