வெள்ளி, 31 அக்டோபர், 2008

சந்திராயண்

சந்திரனுக்கு


விண்வெளி ஓடம் அனுப்பி இருக்கிறீர்களாமே?


வாழ்த்துக்க‌ள்; ம‌கிழ்ச்சி.


முடிந்தால் -


த‌னுஷ்கோடி க‌ட‌லின்


ம‌ண‌ற்திட்டுக‌ளுக்கும்


இர‌ண்டு ப‌ட‌குக‌ள் அனுப்புங்க‌ள்;


அங்கே க‌ண்டிப்பாய் உயிர்க‌ள் இருக்கும்.


க‌ண்ணீரையும் அங்கே க‌ண்டு பிடிக்க‌லாம்.

குருட்டுச்சுகம்

பேருந்தின்
நெரிசலால் உந்தப்பட்டு
முதுகிலுரசி நிற்கும் பெண்_
தன் நெஞ்சோடணைத்திருக்கும்
கைப்பையைத்
திரும்பிப் பார்க்காத வரை -
பாகங்கள் பற்றிய கற்பனைகளில் ,
குருட்டுச்சுகத்தோடு
தொடரும் பயணம்

நிலா பார்த்தல்

நகரத்து மொட்டை மாடிகளில்
நிலா பார்த்தல்
சுகமானது;
வானூர்தி வராத நேரங்களில்.

மழைக்குப் பெயரும்...............
சேர்ந்தாற் போல

நாலைந்து நாட்கள்

விடாது பெய்தால்

மக்களிடம்

மழைக்குப் பெயரும் சனியன்


புதன், 29 அக்டோபர், 2008

பாதைகள்நடந்து பயன்படுத்தவும்


ஆட்கள் இல்லாத பாதைகள்


துணைக்குப் புற்களை வளர்த்துக் கொள்ளும்

புதன், 22 அக்டோபர், 2008

ஒற்று 2

கையில் வளை இறுக்க
கண்ணிப் போனது
என் மனம் .

- புலியூர் முருகேசன்

காதுவளையங்களில்
மாட்டிக்கொண்ட நான்
கனக்க வில்லையா உனக்கு ?

- இது நான்

ஒற்று

உன் தப்படி நிழல்
மறைய - என்
பேனாவிற்குப் பிள்ளைவாதம்

- புலியூர் முருகேசன்

தொலைதூர வளைவில்
உன் வருகை ;
தாள் தேடும் பேனா

இது நான்

குண்டு மழையும் வான் மழையும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பாகவே இலங்கையில் யுத்த மேகங்கள் திரண்டு விட்டன. ஒட்டு கேட்கும் அரசியல் கட்சிகள் சில சேர்ந்து தி மு க தலைமையில் மத்திய அரசுக்கு ஒரு சால்ஜாப்பு கெடு வைத்தன. நாடகத்தின் அடுத்த காட்சியாக மு. கருணாநிதி நேற்று மனித சங்கிலிக்கு அழைப்பு விடுத்தார். எனக்குத்தெரிந்து கட்சியில் இல்லாதவர்கள் சிலர் கூட சங்கிலியில் பங்கேற்க தயாராக இருந்தனர். உண்மையான உணர்வோடு. ஆனால் நேற்று பெய்த மழைக்கு பயந்து மனிதச்சங்கிலி ஒத்தி வைக்கப்பட்டதென தி மு க அறிக்கை விட்டது. இது எவ்வளவு கேவலமானது?
அங்கே அவர்கள் குண்டு மழையில் வாழ்வையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நம்மால் ஒரு சிலர் மணி நேரங்கள் மழையில் கூட நிற்க முடியாதா? மழையிலும் நமக்காக நம் உறவுகள் நின்றன என்ற குறைந்த பட்சஆறுதலைக்குட அவர்களுக்கு தரத் தயாராய் இல்லாத நமக்கு அவர்கள் பேரை சொல்லி பிழைப்பு நடத்தவோ அரசியல் பண்ணவோ துளியும் அருகதை இல்லை.
இந்த நேரத்தில் கவிஞர் அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு (நன்றி புலியூர் முருகேசன் ) விஷயம் இதுபோல ஆனால் வடிவமும் வார்த்தைகளும் மாறி இருக்கலாம் .
இந்தச்சின்னத் துறலுக்கே
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒடுங்குகிறீர்களே ..
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்
அடேய் ....
எந்தக் குடையில் ?

வியாழன், 16 அக்டோபர், 2008

தமிழ் ஈழம் என்கிற ஊறுகாய்

எப்போதெல்லாம் இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கிறதோ அப்ப்போதெல்லாம் தமிழக அரசியல் களம் பரபரப்பாகும். வீரப்பன் ஆள் கடத்திய போதெல்லாம் "புலனாய்வு" பத்திரிக்கைகள் காட்டிய பரபரப்புக்கு சற்றும் குறையாதது இந்த பரபரப்பு. யார் உண்மையான தமிழ்ரத்தம் என இப்போது உரசிப்பார்த்துக்கொள்வார்கள். இது ஒரு சடங்கு போல. தனுஷ்கோடி மணல் திட்டுக்களில் பாலுக்கு இல்லாமல் செத்த குழ்ந்தைகள், கடல்நீரில் மூழ்கிய மக்கள் என இவர்களுக்கு மறந்து போன பலவும் இப்போது நினைவுக்கு வரும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் நடத்துகிற அறிக்கை போர் புஷ் இன் ஈராக் போரை விடவும் கேவலமானது. திருமாவளவன் மருத்துவர் அய்யா என சகலரும் தற்போது களம் இறங்கி உள்ளார்கள். தமிழ் மக்கள் செத்தால் மட்டும் அல்ல. உலக மக்களில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்காக உண்மையில் கசிகிற மனத்தோடு நாம் செய்யும் சிறு முனுமுனுப்பு அரச பயங்கரவாதிகளை அதிர வைக்கும். மக்கள் மட்டுமே இது போன்ற நேரங்களில் சாதிக்க முடியும். பொதுவாக இது போன்ற சமயங்களில் மக்கள் சக்தியை ஒன்று படுத்துகிற தலைமையை நாம் தமிழ் நாட்டில் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு இன்றைய பொழுது போக ஈழம் ஒரு செய்தி. நெருப்பு சுடுமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு சுடுமென்று சுடு படுகிரவனுக்கும் பட்டவனுக்கும் மட்டுமே தெரியும். (நண்பர் ஒருவரின் வார்த்தைகள்.). நமக்கு அவர்களின் வலி தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் போலித்தனம் அறிந்து கொள்கிற அறிவு இருக்கிறது. அறிந்து கொள்வோம். இரண்டு வாரத்தில் யுத்தம் முடிந்து விடும் என்ற தெம்பில் கேடு வைக்கிறார்கள். நாலு மாதம் தானே தேர்தல் வர என தமிழம்மாவும் பொதுவாக அறிவித்து விட்டார். நல்ல கேள்வி ஒன்றும் கேட்டுள்ளார். உங்கள் எம் பி களுக்கு பதிலாக எம் எல் எக்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என்று. இதற்கு பதில் வராது.

சனி, 4 அக்டோபர், 2008

மழைக்காற்றிடம்

மயங்கும் பூக்கள்

என் நாசியும். - புலியூர் முருகேசன்

நீயுமிருப்பதாய்

குழம்பி யுரைக்கும் என் நாசி;

மலர் வனங்களில். - ஜெயப்பிரகாஷ்வேல்