புதன், 22 டிசம்பர், 2010

அழகென்னும் வன்முறை

தோலைக் கிழிக்கும் சுனைகளுடைய நெற்பயிர்களை

அறுவடை செய்து,

வழுக்கும் குறுகிய வரப்புகளில்

தலைச்சுமையை இடையாட்டத்தோடு சுமந்து வருகிற

கூலிக்காரப்பெண்களின் புன்னகை

அழகிய பாடலென திரைகளில் கொண்டாடப்படுகிறது.



பேருந்து நிலைய புறச்சுவர்களை ஒட்டிய

மழைக்கு ஒழுகும் பாலித்தீன் வீடுகளில் நின்று

மழையின் தாரைகளை தமக்குள் வீசியடிக்கும்

ஆடையற்ற அண்ணன் தங்கைக் குழந்தைகளின் விளையாட்டு

அழகனுவபம் பேசும் கவிதையாகிறது.



ஊர்களைத் தவிர்த்து

வெளியே ஓடிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில்

மெல்லிய மஞ்சள் நிற எண்ணெய் விளக்கொளியை கசியவிட்டு

இருளில் தனித்திருக்கும் குடிசைகளின் சித்திரம்

எளிமையே அழகெனக் காட்டுகிறது.



அழுக்கடைந்த கிழிசல் துணிகளோடும்

முகச்சுருக்கங்களோடும்,

நிலை குத்திய, வேதனை பேசும் விழிகளோடும்

பரபரப்பான நகரத்தெருவோரங்களில்

வாழ்வின் வெறுமையை அனுபவிக்கும்

முதியவளின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம்

அழகிய கலைப்படைப்பாகிறது.



அழகென்ற நிழலில் நின்று

வன்முறை செய்வது கலையின் சாபமன்றி வேறில்லை.

கருத்துகள் இல்லை: