சனி, 24 ஆகஸ்ட், 2013

மாற்று சினிமா என்னும் மாய மான்

சமீப காலமாக தமிழ் ஸ்டூடியோ அருண் உள்ளிட்டவர்கள் மாற்று சினிமா என்று பேசியும் இயங்கியும் வருகிறார்கள். வாழ்த்தலாம். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை மாற்று சினிமா என்ற ஒன்று நம் தமிழ் சினிமாவில் சாத்யமில்லை என்றே படுகிறது. தெரிந்தோ தெரியமலோ தமிழில் சினிமா என்பது முக்கிய கலாச்சாரக்கூறாகவே மாறிவிட்டது. மக்களின் அன்றாட வாழிவியலின் ஒரு அங்கமாகவே உள்ளது. அப்படிப்பட்ட சினிமாவில் மாற்றத்தை விரைவில் எதிர்பார்த்துவிட முடியாது. மேலாக இவர்கள் சொல்கிற வணிக சினிமாவுக்கு வெளியே நின்று கொண்டு மாற்று சினிமாவை கட்ட முடியாது.
காட்சிப்பிழை இதழ் தமிழின் வெகுஜன சினிமாவில் உள்ள காட்சிகள் படைப்புகளில் இருந்தே தமக்கான தரவுகளைப் பெற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கிறது. சினிமாவின் நற்கூறுகளை சொல்ல வரும் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய இரானிய கொரிய இன்னேரமுள்ள பிற மொழிப்படங்களை முன்வைத்தே பேசுகிற இந்த காலகட்டத்தில் பாமர சினிமா ரசிகனான என்னைப் போன்றவர்களுக்கு சினிமாவை சரியாக அறிமுகப்படுத்தி வருகிறது காட்சிப்பிழை. சகிக்கமுடியாத சில படைப்புகள் அதில் இருந்தாலும், சினிமா குறித்த முன்னெடுப்புகளின் சமீப காலத்திய பொருட்படுத்த்ததக்க மாற்றமாக இதைக் காண்கிறேன்.
உண்மையில் இவர்கள் சொல்கிற வணிக சினிமாவிலும் கலையை நெருங்கும் சில தருணங்கள் கடந்து போகின்றன (நன்றி கவுதம சித்தார்த்தனுக்கு). கரூர் ராமானூர் வெற்றியில் அமர்ந்திருந்த எனக்கு கடல்புறத்தை மிக நெருக்கமாக்கியது நீர்ப்பறவை. லூர்துசாமி தன் மகனின் குடிப்பழக்கத்தை மாற்றிய மருத்துவருக்கு மிகப்பெரிய மீனை காணிக்கையாக்கும் காட்சியும் இறுதியில் மகனின் பிணத்த புறங்கடலில் தூக்கும் காட்சியிலும் கலைக்கு மிக அருகாமையில் கொண்டு போயிருப்பார் சீனு ராமசாமி. இன்னும் அற்புதமாக பண்ணியிருக்க வேண்டியது. தவற விட்டிருக்கிறார். இப்படியாக இவர்கள் சொல்கிற குப்பைகளிலும் முத்துக்கள் உண்டு. அதில் இருந்து ஆரம்பித்தால் மிகவும் அணுக்கமாக இருக்கும்.
வெகுமக்களிடம் போகாத எந்த மாற்றமும் பழக்கமாகாது. அதேநேரத்தில் எல்லாம் வியாபாரமயமாக்கிவிட்ட இந்த பகாசுர காலகட்டத்தில் சினிமாவில் மட்டும் தனியாக மாற்றத்தை கொண்டு வர முடியாது. சாதிய சமூகத்தில் மாற்றம் கொண்டு வர விரும்புவர்கள்; சூழலியல் மாற்றம் கொண்டுவர விரும்புபவர்கள் என்று எல்லோருக்கும் இதேதான். எதிர்மறை எண்ணங்களை விதைத்து விட்டுப் போவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. பல்வேறு தளங்களில் மாற்றத்தை விரும்பும் சக்திகள் ஒருங்கிணைந்து ஒட்டு மொத்த சமூக மறுமலர்ச்சியை உண்டாக்கும் வேலைத்திட்டத்தில் உழைக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.

இது பிராண்டுகளின் உலகம். இயற்கை வேளாண்மையா கூப்பிடு நம்மாழ்வாரை! அணுசக்தி எதிர்ப்பா அதான் உதயகுமார் இருக்காரே!!. காட்டுயிர் பாதுகாப்பா தியோடர் பாஸ்கரனைக் கேளுங்க!!! என்று மாற்றத்தை விரும்பும் இவர்களையும் பிராண்டுகளாக்கி விட்டது இந்த காலகட்டம். இப்படியான சக்திகள் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பின் கீழ் இயங்கும் போது சமூக மாற்றம் சாத்தியப்படும் என்று நம்புகிறேன். ஆனால் அப்படியான ஒரு வலுவான அமைப்பு இல்லை என்கிற பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறோம். நான் மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் கவனித்த வகையில் இப்போதைய பொருட்படுத்தத்தக்க எண்ணிக்கையிலான இளம் வயதினருக்கு இந்த மாதிரியான சமூக அக்கறை கொஞ்சம் துளிர்த்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அவர்களெல்லாம் திசைக்கொன்றாக பிளவுண்டு கிடக்கிறார்கள். ஒருவேளை இவர்களின் பிள்ளைகள் தெளிவான திசையைக் கண்டடைந்து மிகப்பெரும் சக்தியாகலாம் என்பது என் எதிர்பார்ப்பு. அதுவரை தொடர்வோம்.

சந்ததியை நீட்டித்தல்

பரிணாம வளர்ச்சியைப் பற்றி தொழில் நிமித்தமாக அடிக்கடி படித்து வருகிறேன். ரொம்ப காலமாகவே இந்த வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் நானும் ஒரு விலங்குதான் என்று எனக்கு நினைவுக்கு வரும்.  ஆனாலும் மனிதன் தவிர்த்த பிற விலங்குகள் நம்மளவு மூளை வளர்ச்சி அடையவில்லை. அதனால்தான் நாம் சுரண்டல், போட்டி, துரோகம், கருணை இப்படியான சகல மனிதப்பண்புகளோடும் இருக்கிறோம்.
நான் படித்தவரை பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும்- அவை எத்தனை சிறிய-பெரிய அல்லது அறிவு வளர்ந்த அல்லது வளராத உயிரினமாக இருந்தாலும் சரி-அடிப்படையாக சில உந்துதல்கள் அல்லது கடமைகள் உள்ளன.
1.       உடல் வளர்ப்பது (உணவு தேடல் அல்லது உற்பத்தி (உதாரணம்-தாவரங்கள்); உடலை பாதுகாப்பது-இருப்பிடம் பேணல்)
2.       வளர்சிதை மாற்றம் (உடலை வளர்க்க சாப்பிடுவதை செரிப்பது; உடலில் உயிர்மூலக்கூறுகளை உண்டாக்குவது மற்றும் அழிப்பது)
3.       சந்ததியை நீட்டித்தல் (தனது மரபணுக்களை சந்ததிகள் வழி பரப்பி சாகாமல் வைத்திருப்பது)
மேலுள்ள காரணிகள் மூன்றாம் காரணிதான் என்னை பெரிதும் ஈர்த்தது. ஒவ்வொரு உயிரும் மிகவும் பிரயத்தனம் எடுத்து தம் மரபணுக்களை சந்ததி வழி பரப்புகின்றன. இது ஒரு அடிப்படை உந்துதலாகவே நடக்கிறது. மரபணுக்களை கடத்தவே தாம் இந்த செயலை செய்கிறோம் என்று தெரியாமலே அடிப்படையான உந்துதலால் அந்த செயல்கள் செய்யபடுகின்றன. உறவுக்கு பின்னும் நாய்கள் பின்னிக் கொண்டிருப்பது ஆண் நாய்களின் குறி விரைத்து அடைத்துக் கொள்வதுதான் காரணம் என்ற எங்கோ படித்திருக்கிறேன். அப்படியாக இருப்பதன் மூலம் தன் விந்து மட்டும் கருப்பையை அடையவும் பிற நாய்கள் உறவு கொண்டு விந்துப் போட்டியை உருவாக்காமல் தடுக்கவும் செய்கின்றன. வாரிசு அரசியலுக்கெல்லாம் இதுதான் அடிப்படை உந்துதல் என்று நான் நம்புகிறேன். தன் சந்ததி வெற்றிகரமாக நீடித்திருக்க வேண்டும் என்ற அடிப்படை உந்துதலாகக் கூட அது இருக்கலாம். ஆனால் பிரம்மச்சர்யம் மேற்கொள்ளும் சிலர் (சாமியார்கள் உட்பட) அடிப்படை உயிர்ப்ப்பண்பையே விலக்கி வைக்கிறார்கள். அப்படியாக செய்வதன் மூலம் அவர்கள் இயற்கைக்கு மாறான ஒரு காரியத்தையே செய்கிறார்கள்.


சந்ததியை நீட்டித்தல் என்கிற விசயத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கின்றன. மனைவியை குழந்தைப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்ற அதிகாலைத்தகவலோடு கிடைத்த குருவாயூர் எக்ஸ்பிரஸில் பொதுப்பெட்டியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். கொள்ளிடம் பாலத்தின் மேல் ரயில் போகும்போது ஆண்குழந்தை என்ற தகவல் கிடைத்ததும்  சீரங்கத்தில் இறங்கிவிட்டேன். மிகவும் உணர்ச்சிப்பெருக்கான நிலை. ஆண்களுக்குத்தான் தம் சந்ததியை  நீட்டிப்பதில் பெருவிருப்பம். நானும் விதிவிலக்கல்ல. கண்களில் நீர் வந்து விட்டது. சித்திக்கு போன் போட்டு என் பாட்டனிடம் தகவல் சொல்லுமாறு சொல்லும் போது குரல் உடைந்து அழுகை எட்டிப்பார்த்தது. என்னை விடவும் என் பாட்டனுக்கு இந்த செய்தி பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்றே நம்பினேன். அது உண்மையும் கூட.