வியாழன், 29 ஏப்ரல், 2010

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம பாரதி

கடந்த வாரம் நண்பர் சங்கர் மூலமாக கவிதா எழுதியமொக்கத்தாயிஎன்ற கதை படிக்கக் கிடைத்தது. மேலோட்டமாகப் பார்த்ததில் பட்டினியால் செத்த ஒரு முதியவளின் கதை அது. என்றாலும் உடனடியாகப் படிக்கவில்லை. கடந்த 28 ம் தேதி படூருக்கு வேறொரு வேலையாகப் போயிருந்தேன். போக்குவரத்துக்கு விருப்பம் போல பயணம் செய்யும் சீட்டு வைத்திருந்தேன். ஆனால் காலையில் மிக குறைவாக சாப்பிட்டதால் மதியம் கொடூரமான பசியாகி விட்டது. எதாவது ஆந்திரா மெஸ் இருக்குமா என பார்த்துக் கொண்டே வந்தேன். முன்பு நண்பர்கள் பிரஷாந்த்தும் விஜய்யும் அங்கே தங்கி படித்த காலங்களில் சில ஆந்திரா மெஸ்களில் சாப்பிட்டு இருக்கிறேன். என்னைப் போல அதிகமாக, விரும்பி சாப்பிடுகிறவர்களுக்கு ஆந்திரா மெஸ் ஒரு விருப்பமான இடம். அங்குதான் நல்ல சோறு வேண்டுமளவு போடுவார்கள் ஆனால் அன்று எந்த ஆந்திரா மெஸ்ஸும் இல்லை. என்றாலும் வேறொரு கடைக்குப் போனேன். சாப்பாடு எவ்வளவு என்றேன். 33 என்றார்கள். லிமிட்டெட்- அன்லிமிட்டெட்- என்றேன். அன்லிமிட்டெட் என்றார்கள். கொஞ்சம் தாரளாமாக காசு புழங்குகிற நாட்களில் வரும் சில்லறைகளை எதிர்கால தேவை கருதி பேக்கிலேயே போட்டு வைப்பது வழக்கம். எனவெ உட்கார்ந்து சில்லரைகளை எண்ணிப் பார்த்தல் நோட்டும் சில்லறையுமாக நாற்பது ரூபாய் இருந்தது. ஒரு ஆம்லெட்டோடு அமர்க்களமாக சாப்பிட்டு வந்தேன். அன்று அறை வந்த உடனேயே மொக்கத்தாயி கதையை படித்து முடித்தேன். கவிதா நன்றாகவே எழுதி இருந்தார்கள். நடைதான் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமானது என்றாலும் கதை நன்றாக இருந்தது. நான் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி படித்திருக்கிறேன். அந்தக் கதையில் இதே போல பசிக்கொடுமையாலோ வேறு எதாலோ ஒரு முதியவளை நெற்குதிருக்குள் போட்டு உயிரோடு மூடி வைப்பதாக ஒரு பகுதி வரும். அந்த முதியவள் செத்தும் நிறைய பெருக்கு பேயாக தெரிவதாக அந்தப் பகுதி போனதாக நினைவு. அந்தப் பகுதியை நினைவு படுத்தும் விதமாக மொக்கத்தாயி என்ற முதியவள் கவிதாவின் கதையில் பசிக்கொடுமையால் ஒரு அடைமழைக்காலத்தில் உயிர் விட்டு விடுகிறாள். அந்தப் பக்கமாக வருவோரையெல்லை பேயாகப் பிடித்துக் கொள்கிறாள். பசிக்குது பசிக்குது என்ற குரல் கேட்டுக்கொண்டே இருப்பதாக கதை முடிகிறது.

பசி என்பது என்னைப் பொறுத்தவரை மிகக் கொடுமையானது. ஊரில் நிலம் வைத்து நெல்லறுக்கும் விவசாயி என் அப்பா. பல பேருக்கு குறிப்பாக முதியவர்களுக்கு எனது வீட்டில் இருந்து பல நேரங்களில் அரிசியாகவோ சாப்பாடாகவோ போகும். அதெல்லாம் வெறும் உறவின் நிமித்தம் மட்டும் செய்யப்படுவதல்ல. காவிரிக்கரையில் இருக்கும் எனது ஊரில் இது போல அரிசியோ சாப்பாடோ கொடுப்பது பெரிதல்ல. ஆனாலும் எனது ஊரிலேயே பட்டினியால் அவதிப்படுவர்கள் இருக்கும் போது வறட்சி தழும் தென் மாவட்டங்களில் அப்படியானவர்கள் என்ன செய்வார்கள்? கவிதாவின் கதை எனக்கு மிகவும் பிடித்ததற்கு இதுவும் ஒரு காரணம். குழந்தை மற்றும் முதியவர்களின் பசி உலகின் கொடூரங்களில் ஒன்று. கதையின் ஒரு இடத்தில் கதைசொல்பவருக்கு பிடித்தமான உணவு பற்றிய செய்தியும் அதன் பின்னே பட்டினியால்தான் மொக்கத்தாயி செத்ததாகவும் செய்தி வரும். சினிமாக்களில் வருகின்ற காட்சிகளின் தொடர்ச்சி போல இது எனக்குப்பட்டது. இடத்தில் கதைசொல்பவருக்கு பிடித்தமான உணவு பற்றிய செய்தியும் அதன் பின்னே பட்டினியால்தான் மொக்கத்தாயி செத்ததாகவும் செய்தி வரும். சினிமாக்களில் வருகின்ற காட்சிகளின் தொடர்ச்சி போல இது எனக்குப்பட்டது. இன்னும் வெளிவராத இந்தக் கதையை மேலும் எழுதுவது நல்லதா என தெரியவில்லை. கதை விரைவில் வெளிவரும்போது இன்னும் விரிவாக எழுதலாம். ஆனால் பசி தொடர்பான எனது அனுபவத்தை இதை ஒட்டி பதிவு செய்யவே இதை எழுதுகிறேன்.


நமக்கு அதாவது எனக்கு வயிரும் பசியும் மிகப் பெரியது. கொஞ்ச நேரம் தள்ளிப்போனால் கூட கைகால்கள் நடுங்க ஆரம்பித்து விடும். பெரும்பாலும் கடந்த பத்து வருடங்களாக வெளியேயே சாப்பிடுவதான வாழ்க்கை எனக்கு. வெகு சில நாட்களைத்தவிர மற்றெல்லா நாட்களிலும் சாப்பிடுவதற்கு காசு இருக்கும். அல்லது நண்பர்கள் இருப்பார்கள். அப்படியிருந்தும் இரண்டு பசி நாட்கள் என்னனால் மறக்க முடியாதவை ஆகிவிட்டன. ஒரு நாள் 2003 ல். அப்பொது ஐந்தாயிரம் கூலிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வெலையில் இருந்தேன். அந்தக் குறிப்பிட்ட நாலன்று கையில் காசு சுத்தமாக இல்லை. அழுக்காக இருந்ததா என்று எண்ண வேண்டாம். கொஞ்சம் கூட காசு இல்லை. மதியம் எனது துறை, உயிர் நண்பன் இருந்த ஜியாலஜி அண்ணன்கள் நிறைய பேர் இருந்த பயோகெமிஸ்ட்ரி என எங்கேயும் உரிமையோடு கேட்கும் நண்பர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. சொந்த துறையிலும் கேட்டு வாங்கும் அளவுக்கு ஆட்கள் இல்லை. அக்கம் பக்கமும் யாரும் இல்லை. கை காலெல்லாம் நடுங்க மனம் வெறுத்துப் போய்க்கொண்டு இருந்தேன். அப்பொது எம். எஸ். சி. கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டு இருந்த இளையவரான வீரமணி கண்ணில் பட்டார். அவர் அப்போது மிகவும் நெருங்கிய நண்பரல்ல. அப்போது கேண்டீனில் சாப்பாடு பத்து ரூபாய்தான். வீரமணி ஒரு பத்து ருபாய் இருந்தா கொடுங்க என்று கேட்டேன். நல்ல வேலையாக அவரிடம் இருந்தது. அன்று சாப்பிட்டேன்.

அதன் பின் 2004 ல் ஒரு நாள். அப்போது வால்பாறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒரு ஆவணப்படம் பார்க்க (படம் பெயர் "பீ") கோயம்புத்தூர் சென்று வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இரவு பதினொன்றுக்கு மேல் இருக்கும். தங்கியிருந்த அறை கடை வீதியில் இருந்து தள்ளி இருந்தது. அப்போதும் பயங்கர பசி. நண்பர்களை தூக்கத்தில் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை. காசை பார்த்தால் பத்து ரூபாயும் கொஞ்சம் சில்லரையும் தான் இருந்ததது. அந்த நேரத்தில் ஒரு சாலையோரக் கடையில் சூடாக இட்லி வைத்திருந்தார்கள். நான் கடை அருகே போய் காசை மறுபடியும் எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் இட்லி விலையை விசாரித்தேன். அவர் என் நிலைமையை புரிந்து கொண்டவராக காசப்பத்தி கவலைப்படாதீங்க சார். நல்லா சாப்பிடுங்க. இருக்கறத கொடுங்க. மீதியை முடிஞ்சா நாளைக்குக் கொடுங்க என்றார். அன்று சாப்பிட்டது என் வாழ்வின் மிக அருமையான சாப்பாடாக எனக்குப் பட்டது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மதித்த விதம் மனிதன் என்கிற விதத்தில் என்னை கவுரமாக எண்ண வைத்தது. நான் யார் என்பது அவருக்கு நிச்சயம் தெரியாது. அப்படியிருந்தும் என்னை மனதாற சாப்பிட சொன்ன அந்த நண்பரின் பெருந்தன்மைக்கு என்ன செய்தாலும் தகும். ஆனால் நான் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்புடையவர்களிடம் மீண்டும் வலிந்து தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. அது ஏனென்று இன்னும் விளங்கவில்லை. இதே போல சேலம் பேருந்து நிலையத்தில் இருந்த காசை பறி கொடுத்து விட்டு வெறும் ஆளாய் நின்றவனுக்கு ஊர் திரும்ப காசு கொடுத்த கல்லூரியில் வேறொரு பிரிவு மாணவரிடம் பணத்தை திரும்பக் கொடுத்ததோடு வெறு தொடர்பு இன்னும் இல்லை. அப்படி தொடர்பு கொள்ளாதால் தான் இன்னும் அந்த நிகழ்வுகள் நினைவில் உள்ளனவோ என்றும் நினைக்கிறேன்.

சாகாதிருக்கும் உனக்கான ப்ரியங்கள்

தொலைக்காதிருந்த என் கண்ணியம்

மீண்டெழுந்திருந்த என் தன்மானம்

இன்னும் எல்லாமும்

சாகாதிருந்த உனக்கான ப்ரியத்தின் முன்

இன்று மண்டியிட்டு விட்டன.


முட்களால் அலங்கரிக்கப்பட்ட பாதுகை

அணிந்த உன் கால்கள்

என் ஞாபகக் கிடங்கில்

புழுதியெழுப்பும்படியாக

நடனம் தொடங்கி விட்டன.


காலம் அழித்தொழித்த

என் வடுக்களின் மேலெல்லாம்

உன் புன்னகை வாளெடுத்துப்

புதுக்காயங்கள் செய்கின்றாய்.


உடலில் தைத்து ரணமாக்கிய

கண்ணாடிச்சில்லுகளையெல்லாம்

இந்த நெடிய பயண வழியில்

களைந்து விட்டேன்

பாதை நெடுகிலும்

இறைந்து கிடந்த அவற்றை

பெரும் சிரத்தையுடன்

பொறுக்கியெடுத்து வந்து

இன்றென் விழிகளில் வீசிப்போகிறாய்.


தேவதையே!

என் சிறகொடித்தத் தெருவிளக்கே!!

மீண்டுமுன்னைக் காணச்செய்த

காலத்தின் அந்தக் கணத்தை

எனக்காய்ச் சபித்து விடு.

சாபங்கள் உனக்குப் புதிதா என்ன?

புதன், 21 ஏப்ரல், 2010

அசிங்கமான தொழிலை பண்ணி வரும் சன் டி வி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. அது சன் டி வி யில் டீலா நோ டீலா என்கிற சூதாட்ட நிகழ்ச்சி. சமிபத்தில் எனக்கு தெரிய வந்த மற்றுமொரு அயோக்கியத்தனமான நிகழ்ச்சி. அதில் ஒரு குடும்பத்தையே அழ வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள். நான் முதலில் பார்த்த அன்று ஒருவர் மிக சொற்பமன பணம் மட்டுமே அந்த சூதாட்டத்தில் ஜெயித்தார். எனவே அவரின் குடும்பமே அழுகிறது. அதற்கு தோதான பின்னணி இசை. இந்த நிகழ்ச்சியில் ஜெயித்து தம் குடும்ப கஷ்டங்களை தீர்க்கலாம் என்று இருந்தார்களாம். நிகச்சியிலேயெ அழுகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தும் அழுகிறாரகள். ஒரே வார்த்தையில ஒஹோன்னு வாழ்க்கை என்று பூட்டான் லாட்டரி மாதிரி விளம்பரம் வேறு. நிகழ்ச்சியில் அழுதது போதாது என்று முடிந்தும் அழுகிறார்கள். இப்படி எளிய குடும்பங்களை தெரிந்தெடுத்துக் கொண்டு வந்து சென்னையில் அழ வைத்தி அல்லது பரிசு கொடுத்து கஷ்டங்களை தீர்ப்பது மாதிரி அசிங்கமான தொழிலை பண்ணி வரும் சன் டி வி யின் முகத்தில் காறிப் துப்புவதாக நினைத்துக் கொண்டு இந்தப் பதிவை இங்கே எழுதுகிறேன்.

திங்கள், 19 ஏப்ரல், 2010

வெயிலைத்தாண்டுகிற சிறுமி


கீழே காணும் இரண்டும் சொல்ல வருவது ஒன்றுதான். இரண்டு மாதிரி எழுதி இருக்கிறேன்.


1. வெயிலைத்தாண்டுகிற சிறுமியின்
செருப்பில்லாத பாதங்களுக்காக
நிழலாய்க் கனிகிறது
மரக்கிளை.


2. மரத்தின் கிளைகளினூடே
உருகிவழிந்த
சூரியனின்
வெம்மை தாளாமல்
திட்டுத்திட்டாய் கனிந்திருந்த
நிழல்தீவுகளின் மேல் பாதம் பதித்து
வெயிலைத்தாண்டுகிறாள்
செருப்பில்லாத சிறுமி.

புதன், 14 ஏப்ரல், 2010

நீ வருகிறாயோ…
இல்லையோ….
எல்லாப் பயணங்களிலும்
உன் ஞாபகங்கள்
வழித்துணையாய்
வந்து செல்கின்றன.

திங்கள், 12 ஏப்ரல், 2010


மலர்ந்த முகத்தோடு முன்னின்று
விரல்களின் ஒற்றைச் சொடுக்கலில்
சவுரீஷின் முகத்தில்
புன்னகையை வரவழைத்ததை விடவும்
நான் பெரிதாய் ஏதும் சாதித்து விடவில்லை.

புதன், 7 ஏப்ரல், 2010

வருத்திற்குரிய நாள்.

இன்று இரன்டு வகைகளில் மிகவும் வருத்திற்குரிய நாள்.


முதலாவது நேற்று இரவே ஆரம்பித்து விட்டது. எனது செல்போன் அறுனூற்று ஐம்பது ருபாய் செலவு செய்து இரண்டு மணி நெரம் கழித்து வீடு வந்த பின்னர் பழையபடி செத்து விட்டது. இதற்காக இருபத்தி ஐந்து நாட்கள் காத்திருந்தேன். எனது இப்பொதைய பொருளாதார சூழலில் 650 என்பது பெரிய இழப்பு. போக இது ஆகாது என தெரிந்து இருந்தால் மெலும் ஒரு 600 போட்டு வெறு ஒரு சின்ன போன் வாங்கி இருக்கலாம். சர்வீஸ் சென்டரிடம் போய் வம்பு பண்ணும் எண்னமும் இல்லை. ஏற்கனவே வேண்டிய அளவுக்கு பண்ணியதால் இந்த விளைவாக இருக்கலாம். மீண்டும் போய் தெவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திக் கொள்ள எண்ணமில்லை.

இரண்டாவது மிக முக்கியமானது. ஆர்குட்டில் உலகத் தமில் மக்கள் அரங்கில் இன்று ஒரு மிகப்பெரும் அசிங்கத்து உள்ளாக்கிக் கொண்டேன். பல்லவர்களின் கால வரையறை குறித்த ஒரு செய்தியை மிக மட்டமாக தப்பாகச் சொல்லி விட்டேன். தப்பு என்பதை விடவும் அதை நான் சொன்ன விதம் வாதம் பண்னிய தமிழன்பன் என்பவரை மட்டப்படுத்தும் தொனியில் கிண்டலாக சொல்லி இருந்தேன். நேரில் இது நடந்து இர்ருந்தால் அரங்கே காறித்துப்பி இருந்திருக்கும். கம்ப்பியூட்டர் என்பதால் அந்தளவு போகவில்லை. என்றாலும் ஒரு மனிதனை மட்டப்படுத்த மகா மட்டமான ஒரு தப்பான ஒரு தகவலை சொன்னது மிகவும் வருத்தமாக உள்ளது. அது எனது கவனக்குறைவு அல்ல. நான் உள்வாங்கிக் கொன்டதிலோ அல்லது நினைவில் நிறுத்திக் கொண்டதிலோ நேர்ந்த பிழை. மஹெந்திர வர்ம பல்லவனின் காலம் ராஜராஜனின் கால்த்துக்கும் பிந்தியது என்ற மிகப்பெரும் தவறு அது. பள்ளியிலெல்லாம் இதை படித்ததாக நினைவில்லை. எனது தாத்தாவின் MA புத்தகங்களில் படித்தது தான். அதிலேயெ தவறாக புரிந்து இருக்கிறேன். இதே தவறை இதற்கு முன் உறவினர் ஒருவருடன் மஹாபலிபுரம் போன போதும் செய்திருக்கிறேன். நமது மூளை நினைப்பது எல்லாம் உண்மை என நம்ப வைக்கிறது. அதனால்தால் ஆர்க்குட்டில் அவ்வளவு தெனாவெட்டாக இந்த தகவலை தப்பாக கொடுக்க சொன்னது. எதிராளிக்கு பெருத்த கொண்டாட்டம். எனக்கொ பெருத்த வருத்தம். என்றாலும் இன்றாவது இது தெளிந்ததே என்ற சின்ன திருப்தி. மேலும் மஹெந்திர பல்லவர் தெலுங்கில் எழுதினார் எனவும் எனது நினைவு சொல்கிறது. அதையும் எழுதி இருக்கிறேன் . அதையும் சரி பார்க்கனும். இந்த நினைவுக்கோளாறால் நான் படித்த எல்லாமெ இனி சந்தேகமாக இருக்கிறது. பொது இடத்தில் கவனமாக பேசனும். யொசித்தும் பேசனும்.

தூக்கம் கலையாத பயணி

அவன் காதில் செல்போனை வைத்து
பாட்டையோ பேச்சையோ பிற எதையோ
அவன் தோழி
அவனுக்காக ஒலிபரப்பிய
அந்த முதிர்ந்துவிட்ட வைகறைப்பொழுதில்
தூக்கம் கலையாத பயணிகளோடு
நானுமொருவனாய்
அந்தப் பேருந்து நிறுத்தத்தில்
நின்றிருந்திருந்தேன் என்பதை
இந்தக் கவிதை
அந்த நண்பனிடம் சொல்லி விடுமா?

காசில்லாத முதியவளின் நெடுந்தொலைவுப் பயணம்

5E

பெருவிருப்போடு

நண்பர்களிடம் பேசுகிற தருணங்களை

களவாடுகிற பேருந்துகள்

சிலவற்றைக் கொண்டது

இம்மாநகரம்


காசில்லாத முதியவளின் நெடுந்தொலைவுப் பயணம்
ஏதுமறியாத குழந்தையின் பசியை விடவும் கொடுமையானது.

கடந்த சில நாட்களில் முருகேசன் மாமாவே கவிதை என்று ஒத்துக் கொள்கிற தரத்தில் சில கவிதைகளை இங்கே பதிந்துள்ளேன். சங்கர் உள்ளிட்ட சிலரும் நன்றாக இருக்கிறதென்று சொன்னார்கள். எல்லோருக்கும் எனது நன்றி. அந்த கவிதைகள் குறித்த உரையாடலின் போது நான் அந்தக் கவிதைகளை எழுதிய சூழல் அந்தக் கவிதைகளில் காணக்கிடைக்கவில்லை என்று சங்கரும் மாமாவும் சொன்னார்கள். குறிப்பாக மாநகரப் பேருந்துகள் பற்றியது.

விஜய் ஆனந்த் எனக்கு மிகவும் இணக்கமான நண்பன். தோழர் என்ற சொல் அவனது அப்பாவிடமிருந்து எங்களுக்கு ஒட்டிக்கொண்டது. அதை ஒரு வழமையாகவே நான் விஜய் மற்றும் முத்தெழிலன் இவர்கள் மூவரும் சொல்லிக்கொள்வதுண்டு. சொல்ல வந்தது விஜய் ஒரு அருமையான நண்பன் என்பதைத்தான். மிகவும் இயல்பானவன். சலிப்பு என்பதை நான் அவனிடம் கண்டதில்லை. பெண்கள் விரும்பும் பெரும் பேச்சாளன். எனது மிக நீண்ட சில கடிதங்களை படித்தவன். அதை பத்திரப்படுத்த சொல்லித்தான் எழுதி இருந்தேன். பத்திரமாக வைதிருக்கிறானாவெனத் தெரியவில்லை. போகட்டும். ரொம்ப நாள் கழித்து சென்ற வாரம் வியாழக்கிழமை என்று நினைவு. நானும் முத்துவும் விஜய் சுதாவின் முதல் பெண்ணான பாரதியை பார்க்க போயிருந்தோம்.

பாரதிக்கு அன்று கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. வயிற்றுப்போக்கு. மருத்துவர் தாய்ப்பாலைத்தவிர பிற எதுவும் சில நாட்களுக்குத் தரவேன்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் பாரதிக்கு போதவில்லை. பசியால் பல நேரங்களில் அழுவதாக விஜய் சொன்னான். நான் போயிருந்த நேரத்திலும் பாரதிக்கு பசி போலும். மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தக் குழந்தைக்கு வயிற்றுப்போக்கும் தெரியாது. வேறு எதுவும் தெரியாது. அது பசிக்கு அழுகிறது. நம்மால் அதன் பசியை முழுமையாக திருப்திப்படுத்த முடியாத நிலையில் அந்தக் குழந்தையின் அழுகையை கேட்டுக் கொண்டிருப்பது வாழ்க்கை யின் மிகவும் கொடிய தருணமாக எனக்குப்பட்டது. என்ன செய்வது. இதையும் கடக்கத்தான் வேண்டும். அதன் பின் தோழர் முத்து அவசர வேலை இருப்பதாகச் சொல்லி கிளம்பிவிட்டான்.
நான் விஜயிடம் பேசிவிட்டு போகலாம் என இருந்துவிட்டேன். வெறும் வாயால் பேச முடியாது இல்லையா?. எனவே அவன் வீட்டு அருகில் உள்ள அஞ்சுகத்திற்கு போனோம். சாப்பிட்டோம். பேசினோம். நேரம் நிறைய ஆகி இருக்கவில்லை. பேச வெண்டியது இன்னும் நிறைய இருந்தது. எங்களுக்குள் தீர்ந்துவிடக்கூடிய பேச்சுகள் எதுவுமே இல்லை. ஆனால் வெளியே வந்ததும் ஒரு 5 E பேருந்து வந்து விட்டது. கூட்டம் இல்லை. எனக்கு மிகவும் தோதான பேருந்து. ஆனால் கடந்து விட்டது. எனவெ பேச்சை முறித்துக் கொண்டு விஜய் என்னை அடுத்த நிறுத்தத்திற்கு கூட்டிப் போய் அதே பேருந்தில் ஏற்றி விட்டான். பேருந்தில் ஏறிய பின் தான் எனக்கு வருத்தமாக இருந்தது. இன்னும் ஒரு அரைமணி நேரம் கூட இருந்து பேசிவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி இருக்கலாமே என்று. அதனால் என்மீதும் 5E மீதும் கோபம் வந்தது. அதைத்தான் அப்படி எழுதிவிட்டேன். ஆனால் அது கொஞ்சம் மாற்றப்பட வேண்டியது என்று மாமாவும் சங்கரும் சொன்னார்கள். மாற்றுவோம்.

அதே நாளில் தான் அடுத்த நிகழ்வும். 5E இல் இருந்து அடையார் பேருந்து நிலையத்தில் இறங்கி C51 பிடித்து ஈஞ்சம்பாக்கம் வந்தேன். மணி பத்தை தாண்டி விட்டது. அதன்பின்னும் உத்தண்டிக்கு பேருந்து உண்டு என்றாலும் உட்கார்ந்து போக வேண்டி ஷேர் ஆட்டோவில் போவது வழக்கம். இந்த ஷேர் ஆட்டோ பயணங்களைப்பற்றி தனியே எழுத வேண்டும். பலவிதமான அனுபவங்களையும் பலவிதமான நிகழ்வுகளையும் கொண்டன இந்தப் பயணங்கள். பிறகு பார்ப்போம். அந்த நாளில் நான் ஏற இருந்த ஆட்டோவில் ஒருமுதியவள்என்னை உள்ளே அமரச் சொல்லிவிட்டு வாசலருகே அமர்ந்தார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. தள்ளாத வயது. கூண் விழுந்த முதுகு. குள்ளமான பெண். போற வேகத்துல விழுந்தரப் போறம்மா என்றும் சொன்னேன். இருந்தாலும் அந்த அம்மாவின் மன தைரியத்தை பாராட்டியும் (இந்த இடத்தில் பிதாமகன் பட சூர்யா நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி) அவர்கள் இறங்க வேண்டிய நைனார்குப்பம் எனக்கு முன்னதான நிறுத்தம் என்பதாலும் நான் உள்ளே அமர்ந்து கொண்டேன். கொஞ்ச தூரம் போனதும் அந்த அம்மா என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தன்னிடம் ஒரு ரூபாய்தான் உள்ளதென்றும் மேலும் ஒரு ஆறு ரூபாய் ஆட்டோ கட்டணமாக வேண்டுமென்றும் கேட்டார். அவர் ஏற்கனவே திருவாண்மியூரில் இருந்து ஐந்து ரூபாய்க்கு ஈஞ்சம்பாக்கம் வந்தவர். நானும் தருகிறேன் அம்மா என்றேன். அந்த அம்மா அதன்பின் மிகவும் நன்றிகள் சொன்னார். என்னை தம்பி என்று சொல்லி அதை சொல்லி இருந்தால் கூட வருத்தப்பட்டிருக்கமட்டேன். ரொம்ப நன்றிங்க என்று சற்று மரியாதையாக சொன்னது மனவருத்தம் கொடுத்தது. கையெடுத்து கும்பிடுகிற கடைசி நிலையில் அந்த அம்மா வரவே நான் தோளைத்தொட்டு ஒன்னும் சொல்லாதீங்கம்மா நீங்க இறங்குங்க நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி மேலும் ஒரு பத்து ரூபாயை கொடுத்து அனுப்பினேன். என்னிடம் அன்று அந்த அம்மாவுக்கு கொடுக்க பணம் இருந்ததை என் சம்பாத்யத்தின் சாதனையாக நினைத்துக் கொண்டேன். பெரும்பாலான நாட்கள் காசில்லமல் அல்லது தொட்டுக்கொள்ள துடைத்துக்கொள்ளத்தான் இருக்கும். அன்று அந்த அம்மாவிற்கு கொடுக்க அதற்கு மேலும் பணம் இருந்தது. அது தெவை அற்றது என்பதால் கொடுக்கவில்லை. அந்த அம்மா இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டும் நண்பர் அந்த அம்மாவிடம் பெரும்பாலும் காசே வாங்கறதில்ல சார் என்றார். வழக்கமாக வருபவர் போலும் என்று நினைத்துக் கொண்டேன். இதில் வருந்தத்தக்க விசயம் என்னவென்றால் அத்தனை முதிய வயதில் அந்த அம்மா ஒரு ஆறு ரூபாயை என்னைப்போன்ற வயதினனிடம் மிக உரிமையோடு கேட்டிருக்கலாம். அந்தளவு கூசிப் போய் கேட்டதும் மிகவும் தழுதழுத்து சொன்ன நன்றி என்னை மிகவும் மன வருத்ததில் அமிழ்த்தின. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? ஒரு முதியவளுகு வசதியான பயணத்தைக்கூட வழங்க முடியவில்லை. அந்த முதியவள் ஒரு தேவையை உரிமையாக கேட்க முடியாமல் உதவியாகக் கோரும் அளவுக்கு நமது சமூகம் பாழ்பட்டுக் கிடக்கிறதா? இத்ததனையிலும் ஆறுதலான விசயம் அந்த ஓட்டுனர்தான். ஆட்டோ ஒட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய லாபகரமான தொழில் அல்ல. ஆட்டோவை வாடகைக்கு விடுபவர்கள் லாபம் சம்பாதிப்பவர்கள். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசே ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து நைனார்குப்பத்திற்கு 7 ரூபாய் வாங்கும் வேளையில் இந்த ஆட்டோ ஓட்டுனர்களும் அதே கட்டணத்தில் பயணிகளை கூட்டிப்போகிறார்கள். பெரிய லாபம் வந்துவிடப்போவதில்லை. அந்த நிலையிலும் அந்த நண்பர் அந்த அம்மாவுக்கு பணம் வேண்டாமென்று சொல்லி விட்டார். விஜயகாந்த் தலைகீழாக நின்று பார்த்தும் மண்டபத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலையில் அதை விட்டுத் தர சம்மதித்த போது அவர் மக்கள் நலனுக்காக பெருந்தன்மையாக செய்கிறார் என்று தம்பட்டம் அடிக்கப்பட்டது அப்போது என் நினைவுக்கு வந்தது. அந்த ஆட்டோ ஒட்டுனர் அன்று எனக்கு உண்மையான மனிதனாகப் பட்டார். என்னிடம் அன்று அதிகப்படியான பணம் இருந்ததால் நான் கொடுத்தது பெரிதில்லை. ஆனால் அவர் செய்தது மிகவும் பெரிய விசயம். நேரடியாக பாராட்டாவிட்டாலும் அந்த அம்மா அடிக்கடி வர்றவங்களாண்ணே என்று கேட்டு விட்டு வந்தேன்.

இந்த நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக எழுத நினைத்தேன். ஆட்டோ சம்பவத்தை ஒரு சிறு சிறுகதையாக மாமா எழுதச்சொன்னார். செய்வோம். இந்தப் பதிவும் மிகத் தெளிவாக இருக்காது. நானே டைப் செய்வது பெரிய வேலையாக இருப்பதால் நினைப்பதை கொண்டு வர முடியவில்லை. எழுதி விட்டு அடிப்பதும் இரட்டை வேலை. எனவே ஒரு தந்தி போல இந்தப் பதிவு. பின்னர் விரிவாக தெளிவாக நேரம் வாய்க்கிறபோது எழுதலாம்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

கைக்குட்டைகள்
கண்ணீரை மட்டும்தான் துடைக்கும்;
கவலைகளையுமா துடைக்கும்?

திங்கள், 5 ஏப்ரல், 2010

உலக ஆராய்ச்சியாளர்களே!
பரிசோதனைக்காக
ரத்த நாளங்கள் தேடப்படும்
பச்சிளம் குழந்தையின் வலியை நான் வாங்கிக்கொள்ள
ஒரு வழியை கண்டுபிடியுங்களேன்?

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

காசில்லாத முதியவளின் நெடுந்தொலைவுப் பயணம்
ஏதுமறியாத குழந்தையின் பசியை விடவும் கொடுமையானது.