புதன், 23 நவம்பர், 2011

என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்?


என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்?

செய்த்தித்தாள்கள் பார்க்காமல், செய்திகள் கேட்காமல் இருந்தால் ஒழிய ஒருவரால் இந்தியாவில் மன நிம்மதியோடு இருந்து விட முடியாது. எத்தனை எத்தனை கொடுமைகள் நடக்கின்றன? கொஞ்ச நாட்களாக படிக்கவும் எழுதவும் முடியாத அளவுக்கு பணிச்சுமை கூடி விட்டது.  ஆனாலும் சில செய்திகளைப்பற்றிய என் பார்வையை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

1. பேருந்துக் கட்டணம்- பால் விலை உயர்வு.

என்னைப்போன்ற மாதக் கூலிக்கார குடும்பஸ்தனுக்கு இதைவிடவும் பெரிய சோதனை இருக்க முடியாது. ஜெயலலிதா என்ற சர்வாதிகாரியின் இந்த கடும் விலை உயர்வு சற்றும் நியாயப்படுத்த முடியாதது. இதே கட்டணத்தில் தனியார் பேருந்துகள் லாபமீட்டி வருகையில் அரசுப்போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன எனச் சொல்வது ஆடத்தெரியாதவர் வீதி கோணல் என்பதைப் போல உள்ளது. ஏற்கனவே கருணாநிதி என்பவர் நகர்ப்புறங்களில் சொகுசுப் பேருந்துகளை மட்டுமே அலைய விட்டு மறைமுகமாக மக்களை வதக்கினார். இந்த அரசு நேரடியாகவே வதக்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல்களில் அம்மாவின் நல்லாட்சியால் வென்றதாக சொன்ன அத்தனை அதிமுக வெற்றியாளர்களையும்  கேட்கிறேன் இதுதான் நல்லாட்சியா?

இந்த இரு விலை உயர்வுகளும் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மக்கள் மாதம் ஒரு நூறோ- இருநூறோ அரசுக்கு பிச்சையாக அனுப்பி நிதிச் சுமையை குறைக்க வேண்டுகிறேன். இதுவே தாங்க முடியவில்லை, இன்னும் மின்கட்டணம் எப்படி இருக்குமோ?

2. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள்

இந்தப் போராட்டங்கள் மிகுந்த சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. வேறெந்த மக்கள் பிரச்ச்சனைகளுக்கும் முன்னே வராத கிறித்தவ பாதிரியார்கள் இந்தப் போராட்டத்தில் மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கி இரூக்கிறார்கள். இதை மதத்தோடு சம்பந்தப்படுத்தக் கூடாது என்றும் இது வெளி நாட்டு சக்திகளால் பண உதவி செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என்று முழுதாக யாரும் சொல்லி விட முடியாது. போராட்டக் குழுவில் யாரும் அணுசக்தி நிபுணர்கள் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனாலும் என்னவோ பெரிய விஞ்ஞானிகள் அளவுக்கு உலையின் வரைபடம், எரிபொருளின் தன்மை, கழிவுகளின் விபரங்கள் என்று சகட்டு மேனிக்கு அண்ணா ஹஸாரே பாணியில் கேட்டு நிர்ப்பந்திக்கிறார்கள். இவர்கள் சந்தேகம் கேட்பது போல இல்லை. விபரங்களைக் கேட்டு புதிய அணு உலை கட்டுவார்களோ என்று எண்ணுமளவு உள்ளது.

அப்துல் கலாம் இவர்களைப்பார்க்கும் முன்பு “அவர் ஒரு தமிழனாக வந்தால் பார்ப்போம்; அணுசக்தி நிபுணராக வந்தால் பார்க்க மாட்டோம்” என்று சொல்லி விட்டு அவர் போன பின்னாலே அவர் எங்களை வந்து பார்க்கவில்லை என்கிறார்கள். நடுவணரசின் நாரயணசாமி போரட்டத்துக்காப செலவுக் கணக்குகளை கேட்கிறார். இவர்களும் ஒன்றும் பேசவில்லை. நியாயமாகப் பார்த்தால் அவர்கள் காங்கிரசுக் கட்சியின் செலவுக் கணக்குகளையும் வரவின் மூலங்களையும் கேட்டிருக்க வேண்டும்.

இந்த உலை குறித்த பாதுகாப்பு அம்சங்களை அரசு மக்களிடம் மிகத்தெளிவாக விளக்க வேண்டும். ஆனால் இந்தப் போராட்டக் காரர்களுக்கு அதையும் தாண்டிய பயம் இருக்கிறதா அல்லது அவர்கள் வேறு எதையாவது எதிர்பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை.
இந்தியா போன்ற நாடுகளில் மின்தேவை அதிகமாக உள்ளது. பிற மின் உற்பத்தி முறைகள் நமது தேவையை ஈடுகட்டுவதாக இல்லை. பாதுகாப்பான அணு உலைகள் தவிர்க்க முடியாதவை.

3. முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு என்பது வெறும் ஆறு அல்ல. அது தமிழகத்தின் ஆறு மாவட்ட்டங்களது ரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருப்பது. தேனிப் பகுதிகளில் போய்வந்த யாவரும் இதை மறுக்க முடியாது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதிகம் தமிழகத்தில் உள்ளன. அணையின் உறுதித்தண்மை குறித்த எந்த தொழில் நுட்ப அறிவியல்பூர்வமான விபரங்களையும் கவணத்தில் கொள்ளாமல் கேரளவாதிகள் அணைய இடிப்பதில் குறியாக இருக்கிறார்கள். புதிய அணையில் இருந்து தண்ணீர் தருவோம் என்று எழுதிக் கொடுத்தாலும் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும்.

இத்தனை களேபரங்கள் போதாது DAM999 என்று என்ற படத்தையும் இறக்கி விட்டிருக்கிறார்கள். சீன அணையின் கதை இது என்றும் உலகின் அனைத்து பாதுகாப்பற்ற அணைகளின் மொத்த உருவகம் என்றும் அதன் இயக்குனர் அளந்து விட்டாலும் பெயரில் உள்ள 999 என்பது அது முல்லைப்பெரியார் அணைதான் என்று சொல்லாமல் சொல்கிறது. ஆமாம் அப்படித்தான் என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எடுக்கிற படமெல்லாம் நல்ல படமாக இருக்க முடியாது. அரசியல் உள்னோக்கம் கொண்ட படமே இது. இந்தப் படம் கேரளாவில் பிரச்சாரத்துக்கு பயண்படலாம். தமிழ் நாட்டில் வெளியிடப்படாமல் இருப்பது நல்லது.

4. ஏழாம் அறிவு

இது ஒன்றும் நல்ல படம் அல்ல. மற்ற எந்த மசாலாப்படங்களை விடவும் முன்னாடி நிற்பதல்ல. ஒரு சராசரி படம் அவ்வளவே. தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்புகிறது என்று சொல்கிறார்கள். அப்படி அல்ல. அது படத்தின் வியாபாரத்துக்காக சேர்க்கப்பட்டது. ஒரு நேர்காணலில் உதயநிதியிடம் கேட்கிறார்கள். ஆட்சி மாறிவிட்டதே உங்களின் சினிமாக்கள் இனி எடுபடுமா என்று. அவர் சொல்கிறார். சினிமாவும் அரசியலும் ஒன்று கலக்க தெவையில்லை என்று. வெறும் நாடாள்வது மாட்டுமே அரசியல் என்று புரிந்து கொண்டஒருவரின் படத்தில் இன அரசியல் இருக்கும் என்று சொன்னால் சிரிக்கத்தான் வேண்டும்.
இந்தப் படத்தில் ஒரு நல்ல விசயம் பார்த்தேன். வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கிருமிகள் எப்படியெல்லாம் பரவலாம் என்பதை மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப்பகுதி தனியாக மக்களிடம் பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டும். மிக அருமையான பொது சுகாதார விழிப்புணர்வு அது.

இந்தப் படத்தின் மைய இழையான இறந்த ஒருவரின் திறமைகளை அவரின் சந்ததியினரிடம் தூண்டலாம் என்பது நல்ல கற்பனை. பாராட்டத்தக்கது. மற்றபடி அதில் சொல்லப்படுகிற அறிவியல் விளக்கங்கள் எல்லாம் அபத்தங்களே. ஸ்ருதிஹாஸன் இந்தப் படத்தில் பேசுகிற தமிழின் அழகு இந்தப் படம் தமிழினப்பெருமையை சற்றும் உயர்த்தவில்லை என்பதற்கு ஒரு சான்று. வெறும் வியாபாரத்தந்திரம். அவ்வளவே.


Image from : http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/97/DAM_Poster.jpg/220px-DAM_Poster.jpg