செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அசத்தப்போவது யாரு நாளைய இயக்குனர்

கடந்த சில வாரங்களாக ஊருக்குப் போயிருக்கும் போதெல்லாம் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியையும் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் டி விகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை. சும்மா போட்டியாளர்களை பொம்மை போல ஆட்டுவிப்ப்பதும் நடுவர்கள் தீர்ப்பு என்ற முறையில் தம் ஜபர்தஸ்த் வேலைகளை காட்டுவதும் இந்த சின்ன ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியாமல் கன்கலங்குகிற தொல்வியுற்ற போட்டியாளர்களும், அவர்களின் கண்ணீரை மென்சோக இசையுடன் ஸ்லோமோஷனில் காட்டி காசு பார்க்கும் நிகழ்சித்த் தயாரிப்பளர்களும் என இந்த நிகழ்சிகள் எல்லாம் எனக்கு காண்பதற்கு மிகவும் அருவருப்பக இருந்ததால் பார்ப்பதில்லை. ஆனால் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக வரும் மதன் பாபுவும் சிட்டி பாபுவும் மிகவும் ஆதரவாக பங்கேற்போரை நடத்துகிறார்கள். இது போட்டி நிகழ்ச்சி அல்ல என்பதாலும் இருக்கலாம். ஆனாலும் பார்ப்பதற்கு ஆறுதலாக இருந்தது. மிகவும் சின்னப் பையன்கள் கூட வந்து ஜோக் சொல்லி விட்டுப் போகிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வரும் பிரபலங்களும் ரசித்து நிகழ்ச்சியை பார்கிறார்கள். பங்கேற்பவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். சில வழக்கமான குறைகளும் இருந்தாலும் பொழுது போக்காக பார்க்க நல்ல நிகழ்ச்சி.

அடுத்தது நாளைய இயக்குனர். இதில் நடுவராக வரும் பிரதாப்போத்தன் மிகவும் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார். ஒவ்வொரு படத்தையும் பற்றி பாலசந்தர் பேசுகிறார். குறைகளையும் சொல்கிறார். பெரும்பாலும் நாசுக்கக சொல்கிறார். இன்னொரு நடுவரான மதனும் இதை நாசுக்காகவெ செய்கிறார். ஆனால் பிரதாப்போத்தன் மட்டும் அப்பட்டமாக சொல்கிறார். உன்மையை சொல்வதில் அதுவும் ஒளிவு மறைவின்றி சொல்வதில் தப்பில்லை. ஆனால் இவர் தேடிப்பிடித்து சொல்வது மாதிரி உள்ளது. இளம் படைப்பாளிகளை சுணங்க வைக்கும் விதமான ஒரு தொணியுடனே தனது தீர்ப்பை கூறுகிறார்.
என்றாலும் இந்த நிகழ்ச்சியில் காட்டப் படும் இளம் படைப்பாளிகளின் படங்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளன. கொஞ்ச நாட்கள் முன்பு வீட்டுக் கணக்கு என்ற படம் பார்த்தேன். எஸ் ராமகிருஷ்னன் கதை. மிகவும் நல்ல படம். நடிப்பு கொஞ்சம் சோடை போயிருந்தாலும் இதெல்லாம் நல்ல முயற்சிகள்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

லிபியாவில் மக்கள் பேரெழுச்சி


Above images are from

news.aol.co.uk

டுனீசியா, எகிப்தை தொடர்ந்து இப்போது லிபியாவிலும் மக்கள் பேரெழுச்சி நடந்து வருகிறது. (லிபியாவின் கடாபி தப்பி ஓடி வெனிசுலாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. கடாபியோ தான் தப்பியோடவில்லை; வெனிசுலாவில் இல்லை; ட்ரிபொலியில் தான் இருப்பதாக தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார்). புதிய ஜனநாயகம் இதழ் இதை சரியாக மக்கள் பேரெழுச்சி என்று எழுதியுள்ளது. இதை மக்கள் புரட்சியாக மாற்றுமளவு வலிமை வாய்ந்த பொதுவுடைமை சக்திகள் அங்கே இல்லை என்பதையும், இந்தப் பேரெழுச்சியே ஏகாதிபத்திய சக்திகளின் திசை திருப்பும் சதியோ என்பதையும் நான் யோசித்து வருகிறேன். செய்திகளில் பார்க்கிற போது லிபிய மக்கள் சிலர் சே குவேராவின் படந்தாங்கிய பதாகைகளை உயர்த்திப் பிடித்து நடக்கிறார்கள். சே குவேராவை ஒரு வணிகச்சின்னமாக்கிய எகாதிபத்தியத்தின் சதியாக இருக்குமோ என்ற என் சந்தேகம் அப்போது தான் எற்பட்டது. அதை விடவும் சிலர் தங்களைக் காக்குமாறு ஒபாமாவுக்கு வேண்டுகோள் வைக்கின்றானர். ஆப்கனின் பஷ்டூன் பழங்குடியினர் மீது ஆளில்லா விமானங்களை ஒரு வீடியோகேம் போல தொலைவில் இருந்து இயக்கி குண்டுகளை வீசி ஏதுமற்றவர்களைக் கொல்லும் ஒரு கொடிய நாட்டின் தலைவனுக்கு இவர்களைக் காப்பாற்ற என்ன தகுதி இருக்கிறது?

போகட்டும். இங்கே எழுத வந்த விசயம் என்னவென்றால் புரட்சி நடக்கும் காலகட்டம் எங்கேயும் இல்லை என்று சிலர் பொய்மொழிந்து வருகிறார்கள். அவர்களின் முகத்திலறையும் விதமாக இந்த நாடுகளில் நடந்த மக்கள் பேரெழுச்சியும் ஆட்சி மாற்றங்களும் உள்ளன. ஆனால் இங்கே கவனிக்க வேண்டியது ஆட்சி மாட்டும் தான் மாறியுள்ளது. அரசமைப்போ அரசியலமைப்போ மாறவில்லை. தேர்தல் ஜனநாயகம் இருந்தால் மக்கள் வாக்கால் தண்டித்து இருப்பார்கள் . அது இல்லாத இந்த நாடுகளில் மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அவ்வளவே.

ஆனால் இந்த மக்கள் பேரெழுச்சிகள் மிகவும் வரவேற்கத்தக்கன. யாருடைய தூண்டுதலினால் நிகழ்த்தப் பட்டிருந்தாலும். உலகெங்கிலும் உள்ள பொதுவுடமை சக்திகள் மக்கள் சக்தியின் வலிமையை இதன் மூலம் பரவலான தளத்த்தில் முன்வைக்கலாம். மக்கள் சக்தியில்லாமல் எந்த விடுதலையும் இல்லை.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

குழந்தைகள் வளர்ப்பு - சில ஆதங்கங்கள்


பணம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டதும் அதற்காக அசிங்கமான முறையில் சோதனையிட்டதாலும் எம். ஜி ஆர். ஜானகி கல்லூரி மாணவி திவ்யா தற்கொலை செய்துகொண்டார். கடந்த வாரத்தில். அது சம்பந்தமான நான்கு பேராசிரியைகள்(????) கைது செய்யப்பட்டது, அவர்கள் நால்வருக்கும் ஒரு சேர நெஞ்சு வலி வந்து அது சரி செய்யப்பட்டு பின் புழலில் இருப்பது தெரிந்த செய்தி. மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்க செய்தி. அந்த ஆசிரியைகள் நடந்து கொண்டதும் மன்னிக்க முடியாத குற்றம்.

ஆனால் இங்கே யோசிக்க வேண்டிய விசயம் அந்த மாணவியின் சமூக பொருளாதார நிலை. தந்தை காவலாளி; தாய் துப்புரவுப்பணியாளர்; ஆல்காட் குப்பம் குடிசை வீட்டில் வாசம் என மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து படிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்த திவ்யாவுக்கு இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது வருத்தத்துக்கு உரியது. கோடி கோடிகளாக திருடி விட்டு சகஜமாக உலவுகிற மானஸ்தர்கள் மிகுந்த இந்த நாட்டில் இந்த மாணவியின் தற்கொலை மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. நமது பெற்றவர்கள் குழந்தைகளுக்கு வெறும் படிப்பை-பட்டத்தை வாங்கித்தர மட்டுமே ஆசைப்படுகிறார்கள். வாழ்க்கையை சொல்லித்தருவதில்லை. அப்படியான ஒரு நிலைக்கு பிள்ளைகளை தயார்படுத்துவதில்லை. எல்லா விலங்குகளும் தம் பிள்ளைகளுக்கு தனித்து எந்த சங்கடத்தையும் சவாலையும் எதிர்த்து வாழ கற்றுக் கொடுக்கின்றன. மனிதர்கள் மட்டுமே அதுவும் நம் இந்தியாவில் இன்னும் மோசமாக கல்யானம் நடந்து முடிந்தாலும் பிள்ளைகளை தம் கட்டுக்கோப்பில் வைத்திருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வியுற்றால் குறைவாக மதிப்பெண் பெற்றால் இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளுமளவு பிள்ளைகளை தன்னம்பிக்கை இல்லாதவர்களாக நமது சமூகம் வளர்த்து வருகிறது. மேலும் ஒரு செய்தி. சேலத்தில் விடுதியில் தங்கிப்படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் தமது கிராமத்துக்கு வார விடுமுறைக்கு செல்லும் போது செருப்பு ஏற்றிச் செல்லும் ஒரு வேனில் உதவி கேட்டு வந்துள்ளனர். இறங்க வேண்டிய இடத்தில் வண்டி நிற்காததால், கடத்தப் படுகிறோம் என்று பயந்து நான்கு மாணவிகள் ஓடும் வண்டியில் இருந்து குதித்து விட்ட்டனர். அதில் ஒரு பெண் இறந்து விட்டாள். விசாரணையில் ஓட்டுனர் தாம் வண்டியை நிறுத்தும் முன்பாக அவர்கள் பயந்து இறங்கி விட்டதாக சொல்கிறார். இது மாதிரி இவர்கள் ஒவ்வொரு வாரமும் உதவி கேட்டு எதாவது வண்டியில் வருவது வழக்கம் என பிள்ளைகளின் பெற்றோர் சொல்லி இருக்கின்றனர். இங்குதான் பெற்றவர்களின் தப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு இதையும் சொல்லித்தர வேண்டும். கூடுமானவரை முறையான போக்குவரத்துகளை பயண்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்து செர்ந்து விட்டதால் அவர்கள் ஒன்றும் சொல்ல வில்லை. இப்படி பிரச்சனை என்றாகிற போது எல்லொருக்கும் வருத்தம்.

நிறைய உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன. கடந்த வருடத்தில் சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் ஒரு தொழிற்சாலை பார்வையிடலை முடித்து விட்டு வரும் வழியில் காவிரியில் குளிக்கும் போது முக்கொம்பு என்ற இடத்தில் இறந்து பட்டனர். அதில் ஒரு பையனின் அப்பா இது மாதிரி கல்விப்பயணங்கள் போகும் போது பெற்றோரிடம் எழுதி வாங்க வேண்டும் என்கிறார். அவரும் ஒரு பள்ளியின் தாளாளர். அவர் தன் பள்ளியில் இப்படி செய்திருப்பாறா என்பது சந்தேகமே. வீட்டுக்குத் தெரியாமலா ஒரு மாணவன் இரண்டு நாட்கள் கல்விப் பயணம் போகப் போகிறான். போகிற இடத்தில் இது மாதிரியான ஆபத்தான குளியல்களை அனுமதித்த ஆசிரியர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதே சமயம் ஆசியர்கள் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கும் அதே பொறுப்புணர்வை கொடுக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் மூன்று கைக்குழந்தைகளை மடியில் இருந்து தவற விட்டு சாகடித்த முதியவர்களைப் பற்றிய செய்திகளையும் படித்துள்ளேன். இதற்கு யாரை குறை சொல்வது?.

பொதுவாக நமது சமூகம் குழந்தைகள் வளர்ப்பில் இன்னும் அதிகமான புரிதலோடும் பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டும்.