புதன், 22 டிசம்பர், 2010

சோ ராமசாமியின் பேனாவைக் களவாடிய ஜெயமோகன்

அருந்ததிராயும் ஐஸ்வர்யாராயும் என்று வசவுக் கட்டுரையை எழுதிய ஜெயமோகனைக் கண்டித்தும் நடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்? என் கட்டுரையை எழுதிய தோழர் இரா. இளவரசன் அவர்களை வாழ்த்தியும் இந்தச் சின்னக் கட்டுரையை எழுதுகிறேன். தனது முதல் நாவலுக்குப் பிறகு அருந்ததி ராய் பெரிதான படைப்பிலக்கியம் செய்யவில்லை என்று யாரோ குறைப்பட்டு எழுதி இருந்தார்கள். உண்மையில் அப்படியான ஒரு முகத்துக்காக அருந்ததிராய் இப்போது முன்னிற்கவில்லை. முன்னிறுத்தப்படவுமில்லை. அப்படி அவர் எழுதாமல் இப்போது எழுதுகிற அரசியல் கட்டுரைகளையே அவரின் முன்னிறுத்தப் பட வேண்டிய முகமாக நான் கருதுகிறேன். படைப்பிலக்கியம் மட்டுமே செய்கிற இலக்கியவாதிகள் நிறைய. படைப்பிலக்கியம் செய்தவாறே மக்கள் நலன் பற்றியும் யோசிக்கும் இலக்கியவாதிகள் வெகு சிலரே. அந்தச் சிலருள் அருந்ததி ராய் முக்கியமானவர். ஈழத்தில் இறுதி யுத்த காலங்களின் போதும் அமைதி காத்த தமிழக எழுத்தாளர்கள் சிலருக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். ஏனிந்த அமைதியென்று. அவர்கள் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் கருத்தேயில்லாமல் இருப்பது மறைமுகமான வன்முறை. என்றாலும் நமது எழுத்தாளர்கள் ஈழ யுத்தம் பற்றி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற எதவது ஒரு நிலையை முன்னிறுத்த வேண்டி இருந்தேன். மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா எஸ் ராமகிருஷ்ணன் ஜெயமோகன் போன்ற வெகுசிலருக்கே அப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதுவரை உயிர்மையில் ஈழம் பற்றி எதுவும் கண்டுகொள்ளாமலிருந்த மனுஷ்யபுத்திரன் பிரபாகரன் தான் இதுக்கெல்லாம் காரணம் என்பது போன்ற தோற்றம் காட்டுவதான ஒன்றும் வரலாறு என்னும் பைத்தியக்கார விடுதி என்ற நெடுங்கவிதை ஒன்றையும் எழுதியிருந்தார். என் மடலின் காரனமென்று அதை நான் சொல்ல வில்லை. இருந்தாலும் அவரின் பதிவை நான் வரவேற்றேன். கருத்தே சொல்லாமல் மவுனம் காப்பது மிகவும் தவறு என்பது என் எண்ணம். சமகால நிகழ்வுகளை பதிவு செய்யாத கலை இலக்கியவாதிகள் அப்பட்டமான வரலாற்று மோசடிக்காரர்கள். என் அந்த மடலுக்கு ஜெயமோகன் மட்டுமே கூச்சல் மாதிரியான பல்வேறு பார்வைகளுக்கிடையில் தமது கருத்தை சொல்வது பலனளிக்காது என்ற ரீதியில் எனக்கு பதில் எழுதி இருந்தார். பதிலுக்கு நன்றியை இப்போதும் தெரிவிக்கிறேன். நெய்தல் என்ற எமது மாணவர்களின் இதழுக்கு தமது கட்டுரையை வழங்கி எங்கள் வேண்டுகோளையும் முன்னமே பூர்த்தி செய்திருந்தார். ஆனால் இங்கே ஜெயமோகனின் இந்த படைப்புலகம் சார்ந்த சுருங்கலையே முன்வைத்து அவருக்கு அருந்ததி ராயை விமர்சிக்கும் அருகதை இல்லை என்று சொல்ல விரும்புகிறேன். இந்தப்புள்ளியை தோழர் அருமையாக வலியுறுத்தியுள்ளார். அருந்ததி ராய் எழுதியோ இதுமாதிரி அரசியல் கருத்துக்களை சொல்லியோ என்ன பெரிதாக விளம்பரம் சம்பாதித்து விடப்போகிறார்? சுப்ரமணியம் சுவாமி மாதிரி இதற்கே சர்வதேச சதி என்றெல்லாம் ஜெயமோகன் உடுக்கை அடித்திருக்கிறார். அவராலாயே மறைக்கு முடியாமல் ஒரு அப்பட்டமான இந்து தேசியவாதியின் இலக்கியப் புலம்பல் என்ற ரீதியில் புலம்பித்தள்ளுகிறார். அருந்தததி ராய் சொன்னதையே வேறு வார்த்தைகளில் ஓமர் அப்துல்லா காஷ்மீர சட்டசபையிலேயே பேசி இருக்கிறார். அவர் மீது ஏன் இந்த இந்து தேசியவாதிகள் பாய வில்லை? வர்றார் சண்டியர் என்ற பிரேமின் படத்தை கண்டுகொள்ளாத புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கமலின் சண்டியர் என்ற பெயருக்கு மட்டும் பண்ணாத அலப்பறைகளை பண்ணினார். விளம்பரம் தேடலன்றி இதற்கு வேறொரு காரணமும் இல்லை. ஆனால் ஜெயமோகன் விளம்பரத்துக்காக இப்படி எழுதி இருப்பார் என்று எண்ணவில்லை. அவருக்கிருக்கும் இந்து நேச மனோபாவம் அவரை அப்படித் தூண்டி இருக்கிறது. அருந்ததி ராய் மக்கள் திரள் போராட்டங்களில் இறங்கவில்லை. ஊடக வெளிச்சப் போராட்டங்களில் மட்டும் முன்னின்றார் என்று எழுதும் முன்பாக ஜெயமோகன் எந்த மக்கள் திரள் போராட்டத்தில் நின்றார் என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். அப்படி யோசிக்கவே விடாமல் அவரை அவரின் இந்து வெறி செலுத்துகிறது. சோ ராமசாமி ராமகோபாலன் ரக இந்துவெறியர்களின் எண்ணப்போக்கில் தன் எழுத்து நடையில் அந்தக் கட்டுரையை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அருந்ததி ராயின் நாவலின் இலக்கியத்தரமெல்லாம் இன்று அர்த்தமற்றவை. அவர் ஒரு எழுத்தாளர் என்பதற்காக இன்கே நான் எழுதவில்லை. ஒரு சமூகப் போராளி. ஊடக வெளிச்சத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பது போல நீள்கிறது ஜெயமோகனின் கட்டுரை. மக்கள் பிரச்சனைகளை ஊடகத்தின் வெளிச்சத்துக்கு கொண்டு வராமல் வேறு எங்கே கொண்டு செல்வது? நான் சொல்ல நினைப்பதையெல்லாம் இரா. இளவரசன் சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் போல கும்பல் சேர்த்துக் கொண்டு வெட்டியான தனிநபர் விமர்சனங்களில் ஈடுபட்டும் தம் சிஷ்ய கோடிகளை அந்தக் குப்பைமேட்டில் தள்ளியும் வரும் ஜெயமோகனும் சாருவும் இம்மாதியான மக்கள் நல விவகாரங்களில் கருத்து சொல்லாமலிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கேரளாவில் ஆதிவாசிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டதாக அலப்பறை விடும் சாரு இங்கே என்ன செய்திருக்கிறார்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி பங்கு பற்றி என்ன எழுதியிருக்கிறார்? குறைந்த பட்சம் ராசா ஊழல் பேர்வழி மன்மோகன் சிங் நல்லவர் என்ற சுப்ரமணியசாமியின் ரீதியிலாவது எழுதியிருக்கலாமே? யாருடைய கருத்துரிமைக்காகவாவது பேசி இருக்கிறார்களா? இந்த சில எழுத்தாளர்களை ஆதர்சமாக நம்பிக் கொண்டு ஆயிரக் கணக்கில் அவர்களுக்கு வாசகர்கள் இருக்கிற போது இவர்கள் மக்கள் நலன் குறித்து கொஞ்சம் கவலைப்பட்டாலும் அது ஆயிரக்கணக்கானவர்களை எளிதில் விரைவில் அடையும். இப்படியான மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்காக குரல் கொடுத்து வரும் அருந்ததி ராய் ஒரு தகவல் புரட்சியை நிகழ்த்தி வருகிறார். அவர் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவரை பற்றிய செய்திகள் பொதுவான வாசகர்களிடையே ஒரு மாற்றுப்பார்வையை முன் வைக்கின்றன. ஊரே பற்றி எரிகிற போதெல்லாம் உறங்கிக் கொண்டிருந்த ஜெயமோகன்கள் இன்று தம் குறுகிய அரசியல் காரணிகளுக்காக ஒருமைப்பாடு கூப்பாடு போடுவது கேலிக்குரியதுதான்.


காஷ்மீர் பிரச்சனையில் பொதுவான மக்கள் தளத்தில் இந்தியாவின் வாதமே மேலோங்கி உள்ளது. அது பொதுவாக பாகிஸ்தானை குறை சொல்வதாகவும் உள்ளது. பாகிஸ்தான் தப்பு இல்லாமல் இல்லை. அப்ப்படிப் பார்த்தால் பலுசிஸ்தானிலும் மற்றும் பாகிஸ்தானிய வடமேற்கு எல்லைப்புற மாகானங்களில் இந்தியா திட்டமிட்டு பிரிவினைவாத சக்திகளைத் தூண்டி பாகிஸ்தானை பிளவுபடுத்த வேலை செய்வதாக பாகிஸ்தான் சொல்லி வருவதும் பொய்யல்ல. ஆனால் இங்கே இந்த காஷ்மீர பிரச்சனையில் மட்டும் இந்தியாவின் கருத்து அல்லது பாகிஸ்தானின் கருத்து மட்டுமே முன்வைத்து பொதுவில் பேசப்படுகிறது. ஆனால் காஷ்மீரிகளின் கருத்தை யார் கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒரு கருத்து உண்டு என்பதையே அடியோடு மறந்து விடுகிறார்கள். ஈழம் அரசியல் சட்டப்படி இலங்கையின் ஒன்றினைந்த பகுதி. அந்த மக்கள் தமிழ் மக்களாக இருப்பதால் நாம் ஈழ விடுதலையில் ஆர்வம் காட்டி வருகிறோம். ஆனால் ஆதே அளவுகோல் என்னாலும் காஷ்மீர மக்களுக்கு வைக்கப்படுவதில்லை. அது எப்போதும் பாகிஸ்தானை வைத்தே பேசப்படுகிரது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைகையில் இருந்த கருத்து கேட்கும் உரிமை இன்னமும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. காஷ்மீரில் நிலம் வெளிமானிலத்தவருக்கு தரப்படமாட்டாது என்ற ஒப்பந்தத்தை குப்பையில் போட்டுவிட்டு ஒரு இந்துக் கோயில் கட்ட இடம் கொடுத்த இந்தியாவின் நேர்மையை இந்த தெசியவாதிகள் கேள்வி கேட்டார்களா? என்றோ பிறந்ததாக இவர்களே சொல்லிக் கொள்ளும் ராமனின் பிறந்த இடத்துக்கு சட்டப்பூர்வமாக உரிமை கொண்டாட வரலாற்றுக்கும் முந்தைய புரானா காலத்தையும் தோண்டியெடுக்கும் இந்த தேசியவாதிகள் எல்லாரும் வெரூம் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இணைந்த காஷ்மீரின் வரலாற்றை திட்டமிட்டு மறப்பது மறைப்பதும் எதற்காக?

கருத்துகள் இல்லை: