ஞாயிறு, 30 மே, 2010

மறைக்காத கதவு அல்லது கதவை ஊடுருவும் சிரிப்பு





கடினமான விடைபெறலுக்குப் பிறகு
கதவுக்குப் பின்னாலும் தெரிகிறது
குழந்தையின் மலர்ந்த முகம்

தேய்ந்து கொண்டே போகும் அபயக்குரல்

நெளியும் ஊர்திகளினூடே புகுந்து

சமிக்ஞை விளக்குகளைக் கடந்து

விரைவாய் முன்னேறுகிற

ஆம்புலன்ஸ் வண்டியின்

தேய்ந்து கொண்டே போகும்

அபய ஒலியால்

நெரிசல் மிக்க இந்த மாலைப்போக்குவரத்திலும்

அழகாய்த்தோன்றுகிறது

இந்த மாநகரம்.

செவ்வாய், 25 மே, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்

சிறிய பொத்தானை அழுத்தினால் போதும்;
வானொலிப்பெட்டி பாடுவதை நிறுத்தி விடும்.

மெலிதாக அதட்டினல் போதும்;
குழந்தைகள் அழுவதையும் நிறுத்தி விடும்.

கொஞ்சமாக நீரூற்றினால் போதும்;
கொதிக்கும் பால் கூட அடங்கி விடும்.

துன்பம் வடிக்கும் மனசுக்கு
துயரம் துடைக்கும் சொற்கள் வேண்டும்.

கண்ணீரை ஏந்திக்கொள்ள
மலர்ந்த சில கரங்கள் வேண்டும்

சோகம் சுமக்க
சலிக்காத சில செவிகள் வேண்டும்

காயங்களின் மேல்
சில கண்ணீர்த்துளிகளாவது விழ வேண்டும்

பின்
மன்னிப்பு நிழலில்
மறக்க வைக்கும் உறக்கமும் வேண்டும்.

மனிதனாய் வாழ்ந்து மரித்தும் போகலாம்.

வெல்லவே முடியாத ஆயுதம்

வலை விரிக்கும் தந்திரங்கள்
பசியோடலையும் சூழ்ச்சிகள்
என் பகைவனே-

இவற்றோடு
தேளின் சொற்கள்
போலியான புழுதியின் தூற்றல்கள்
தவறுகளின் மோப்ப நாய்கள்
மனதில் கொதித்து எழும் வன்மம்
இன்னும்... முதலான
ஆயுதங்கள் எல்லாமுமே
உன்னிடம் தோற்றுப்போனாலும்
தோல்வியை தோளில் சூடிக்கொண்டு
உன் தாள் தழுவி சரண் புகுவேன்.
அந்த ஆயுதம் ...
உன்னால் வெல்லவே முடியாதது.

புதன், 19 மே, 2010

முறிந்த குடை

உனது இரு முயற்சிகளையும் மீறி-

குடையை முறித்து...

சாரல் தெளித்து...

உன்னின் பதினோறு முக பாவங்களை

எனக்குக் காட்டிய

கோடைக்கால மழைக்காற்றுக்கு

இந்தக் கவிதையை

பரிசாகக் கொடுத்து விட்டு வந்தேன்.

புதன், 12 மே, 2010

அவர்கள் அதை கோபம் என்பார்கள்

ஏரிகளைக் குடித்து
ஊர்கள் பெருகும் போது-
வீடுகளைக் குடிக்க
மழைநீர் பெருகும்.

மரங்களை வெட்டி
வனங்களைத் தின்னும் போது-
வயல்களை நெரிக்க
பாலையின் விரல்கள் நீளும்.

உழைப்பவர் வாட…
ஒன்றுமில்லாதவர் வாட…
இந்தக் காலம்
இப்படியே தொடரும்போது-
வலிய இரும்புக் கதவுகள் நொறுக்கப்பட்டு
உன் சொகுசான வீடு சூறையாடப் படும்.

அவர்கள் அதை கோபம் என்பார்கள்;
நீ அட்டுழியம் என்பாய்;
அரசாங்கம் வன்முறை என்று சொல்லும்;
காவல்துறை கலகம் என்று சொல்லும்;
ஆனால் அதுவே-
புரட்சியாகவும் இருக்கலாம்.

இசை

எழுத உட்கார்ந்த போது-
எங்கிருந்தோ வந்து,
மூளையில் புகுந்து...
பேனாவில் வழிந்து...
தாளை நனைத்தது;
இசை.

புதன், 5 மே, 2010

பட்டை டம்ளர்

சில சம்பவங்களை பார்த்ததும் எழுதி விட வேண்டும் என்று தோன்றும். அதிலும் சில விசயங்கள் நமது பிள்ளைப் பருவ நிகழ்வுகளை தொட்டுச்செல்லும்போது மிகவும் முக்கியமாகப் படும். நேற்று மாலை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் உள்ள ஒரு பழச்சாறு கடையில் அத்திப்பழ சாறு அருந்திக்கொண்டு இருந்தேன். எதிரே ஒரு அம்மா தன் இரு சின்ன பெண் குழந்தைகளுடன் வேறு ஏதோ சாறு அருந்திக் கொண்டிருந்தார்கள். இரன்டு குழந்தைகளும் பத்து வயதுக்குள் இருபார்கள். இடையில் அந்த அம்மா எழுந்து போய் கடைகாரரிடம் " இந்த ஜூஸை வடிகட்டி தர முடியுமா? அவளுக்கு அது பிடிக்கல. " என்றார்கள். அதை கேட்பதற்கு அந்த அம்மாவுக்கு மிக தயக்கமாக இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. அவங்க இது போல குடிக்கும் போது எதாவது மாறி இருந்தால் கூட கேட்டிருக்கப் போவதில்லை. சின்ன வயசுல உள்ளூர்ல நடக்கும் கல்யாணங்களுக்கு என் அம்மா பெரும்பாலும் என் வீட்டில் இன்னமும் இருக்கும் ஒரு பட்டை டம்ளரை எடுத்துக் கொண்டு போவார்கள். கல்யாணம் முடிந்து வரும்போது எனக்கு பாயாசம் வாங்கி வர. கண்டிப்பாக என் அம்மா அப்போது ரொம்ப சங்கடப் பட்டிருப்பாங்க. ஊர்ல எல்லாரும் சொந்தக்காரங்க தான். யார் வீட்லயும் எப்பவும் போயி சாப்பிடலாம். ஆனாலும் விசேசங்களில் தனியாக வாங்கி வருவது என்னைப் பொருத்தவரை சங்கடமானது. இது வரை எனது பிரியமானவர்களுக்காக இந்த சங்கடங்களைக் கடந்து எதுவும் பெற்றுத்தந்ததில்லை. அப்படிப்பட்ட விசேசமான ஒரு தோழி விடுதி விழாவுக்கு வந்திருந்த போது அவள் விரும்பிக் கேட்ட பாடலை அவள் என்னிடம் கேட்டும் மீண்டுமொறு முறை போடுவதற்கு ஒலிபரப்புபவரை கேட்க சங்கடப்பட்டோ அல்லது அப்படி தனியாக சிபாரிசு செய்யத் தயங்கியோ முடியாது என மறுத்து விட்டேன். உண்மையான பிரியமாக இருந்திருந்தால் சங்கடத்தை பார்த்திருக்காது.