திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கொசஸ்தலை ஆறு-செத்த நாயின் பிணம்

ஞாயிறண்டு காஞ்சிபுரம்-நெமிலிக்கு ஒரு நண்பர் வீட்டுக்கும் அவரின் வேளாண்பண்ணைக்கும் நண்பர் Krishnaraj Mannangattiஉடன் போயிருந்தேன். அங்கே விருந்தெல்லாம் முடித்து விட்டு திரும்பும் வழி கேட்ட போது நண்பர் தக்கோலம் -திருவாலங்காடு வழியா திரும்புங்க; கொஞ்சம் தூரம் கம்மியாகும் என்றார். இரண்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள் ஆதலால் அப்படியே கிளம்பினோம். தக்கோலம் ராஷ்டிரகூடர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே நிகழ்ந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த போர் நடைபெற்ற இடம். தக்கோலம்-திருவாலங்காடு ாலையின் ஓரமாக ஒரு மிகப்பெரும் பரந்த காலி நிலப்பரப்பு V வடிவில் இருந்தது. அங்கேதான் சண்டை நடந்திருக்க வேண்டும். கூழாங்கற்கள் நிறைந்த வனாந்திர பரப்பு அது. இப்போது தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் முகாம்கள் அங்கே உள்ளன. திருவாலங்காடு காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற இடம் என்கிறார்கள். போக தொழுதாவூர் என்ற ஊரில் இருந்துதான் தலையால் நடந்து சென்றார் என்று சொல்லி ஒரு பழைய கோவிலை புதிய பக்திக்கு முன்னிறுத்துகிறார்கள். அதையும் பார்த்தோம். திருவாலங்காட்டில் ஒரு காளி கோயில் உள்ளது. அங்கே கூட்டம் அதிகம். அங்கிருக்கும் சிவன் கோயிலையே நாங்கள் பார்க்கப்போனது. அங்கேகூட்டமே இல்லை. முன்னதாக கங்கை கொண்ட சோழபுரத்தில் மட்டும் ஒரு முறை தனியாக சிவலிங்கத்தின் முன் நிற்கும் வாய்ப்பு அமைந்தது.இந்த முறை தோழர் ஒருவருடன். இந்தக் கோயிலின் வெளி மண்டபத்தின் ஒரு தூணில் மிக வித்யாசமான கலவி நுணுக்க சிற்பம் ஒன்று உள்ளது. அங்கே மணி 4 ஆகிவிட்டது. ஐந்து மணிக்குள்ளாக ஸ்ரீபெரும்புதூரில் ஒருவரைச் சந்திக்க வேண்டும். சிறந்த வழி எது என ஒரு அன்பரிடம் கேட்டோம். பேரம்பாக்கம் வழியாக போங்கள் என்றார். இந்தப்பயணுத்துக்குள்ளாக கொசஸ்தலை ஆற்றை மூன்று முறை கடந்து விட்டோம். அப்படி சுற்றிச் சுற்றி ஓடுகிறது ஆறு. திருவாலங்காடு-பேரம்பக்கம்-ஸ்ரீபெரும்புதூர் வழியெங்கும் காய்ந்த நிலங்கள். பெரும்பாலும் வீட்டு மனைகளாகி விட்டன. செம்மறி ஆடுகளையும் மாடுகளை மேய்ப்பவர்கள் தான் இருந்தார்கள். சுமார் 4-5 ஆண்டுகள் முன்பு வரை நெல் விளைந்த பூமியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சமீப காலத்திலே தான் வீட்டு மனையாகி இருக்க வேண்டும். எல்லா காலி வயல்களின் நடுவிலும் கண்ணாறு எனப்படும் சிறு கால்வாய்கள் ஓடின. வறண்டு போய்த்தான் இருந்தன. அந்தக் கால்வாய்களே அவை விவசாய நிலங்கள் என்பதற்கு சாட்சியம். விளை நிலங்களில் வீடு கட்டி விட்டால் கூடப் பரவாயில்லை. காசை காபந்து பண்ண அல்லது பெருக்க வீணில் வாங்கி சும்மா பொடுவது வளனை பதுக்கல் தான்.
அன்று பார்த்த அத்தனை வயல்களும் காய்ந்து போனதற்கு ஆறுகள் நீரின்றிப்போனது; வேளாண் வேலைகளுகு ஆட்கள் தட்டுப்பாடு; பொருட்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை இப்படி பலகாரணங்கள்.எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வருத்தமாகத்தான் இருக்கிறது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தக்கோலத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கும் அக்கரையிலிருக்கும் ஒரு சிவன் கோயிலுக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக ஊரார் சொல்கின்றனர். அப்படி பாய்ந்த ஒரு நதி, இன்று காய்ந்து முழுவதுமாக மணல்களும் சுரண்டப்பட்டு ஒரு செத்த நாயின் காய்ந்த பிணம் போல கிடக்கிறது.
Top of Form

Like
Love