புதன், 30 ஜூன், 2010

நீதி வெல்லட்டும்

இன்று நீதிபதி கே சந்துரு பிறப்பித்த ஒரு உத்தரவு என்னை மிகவும் மகிழ வைத்தது. தமிழருவி மணியனை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி அந்த வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கெதிராக தமிழருவி மணியன் தொடுத்த வழக்கில் தான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்ற ஒரு சப்பைக்காரணத்தை காட்டி வீட்டுவசதி வாரியம் அவரை வெளியேறச்சொல்லி இருக்கிறது. வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக கட்டடத்தில் தமிழ் வாழ்க என்ற வாழ்த்து உள்ளதை சரியாக சுட்டிக்காட்டிய நீதிபதி தமிழறிஞர்களை மதித்தால்தான் தமிழ் வளரும் என்றும் அரசுக்கு எதிராக எழுதினாரென்பதற்காக அவரை பழிவாங்கும் இந்தப் போக்கைக் கண்டித்திருக்கிறார். நாறபது வருட பொதுவாழ்வின் பின்னரும் சொந்த வீடு இல்லாத மணியன் மாதிரியான ஆர்வலர்களை அரசு அரவணைக்க வேண்டும் என்றார். மேலும் அரசிடம் கொள்கை மாறுபாடு உள்ளவர்களை இந்தமாதிரி நெருக்கடி தருவதையும் கண்டித்தார். இப்படி சில தீர்ப்புகளை பார்க்கிற போதுதான் ஏன் மக்கள் இன்னமும் நீதிமன்றங்களை தேடிப்போகிறார்கள் என்று புரிந்தது. ஒரே நாளில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த விரைவான நீதிபதியாகவும் நீதிபதி சந்துரு இருக்கிறார். இப்படியான ஒருவர் நாம் வாழும் இந்த நெருக்கடியான காலத்தில் இருப்பது மிகவும் ஆறுதலான ஒன்றாகும். நீதி வெல்லட்டும்.

செவ்வாய், 29 ஜூன், 2010

காஷ்மீரில் நடந்து வரும் அடக்குமுறைகள்

காஷ்மீரில் நடந்து வரும் அரசின் அடக்குமுறைகள், அரசப்படைகளின் அத்துமீறல்கள் இந்தியாவை வேறெந்த உலக பிரச்சனையிலும் கருத்து சொல்லவும் கூடாத தகுதிக்கு இறக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும் ராணுவப்படையினருக்குமான (CRPF) மோதல்கலின் விளைவாக CRPF சுட்டதில் இது வரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

(http://timesofindia.indiatimes.com/india/JK-on-boil-as-CRPF-kills-2-protesters/articleshow/6103486.cms

http://timesofindia.indiatimes.com/india/Violence-spreads-to-south-Kashmir-3-killed-in-Anantnag/articleshow/6106570.cms )

எல்லோரும் மிக இளம் வயதினர் என்பது மிகவும் வருந்ததக்க ஒன்று. போராட்டக்காரர்களின் நோக்கம் மற்றும் அவர்கள் நடந்து கொண்ட முறை என்பதை விடவும் இங்கே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது துப்பாக்கிசூடுகள் நடத்தப்படுவது தான். முதல் நாளில் ஒரு சிறுவனும் இளைஞனும் கொல்லப்பட்ட பின்பு கொந்தளிப்படைந்திருக்கும் மக்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிசூடுகள் நடத்துவது அரசின் பயங்கரவாதப் போக்கை காட்டுகிறது. காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்று தம்பட்டம் அடிக்கும் இந்திய அரசு அங்குள்ள மக்களீன் மீது அளவுக்கதிகமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது மகா மட்டரகமான காரியம். ஒரு முறை டெல்லி போகும்போது ரயிலில் ஒரு ராணுவீரர் பேசிக்கொண்டு வந்தார். முன்பெல்லாம் காஷ்மீரில் விசாரணைக்காக மக்களை மிகவும் தைரியமாக மிரட்டுவோம். இப்போது ஊடகங்கள் வலுத்த பின்பு மனித உரிமைகள் வலியுறுத்தப்படுவதன் காரணமாக மக்களை வெகு எச்சரிக்கையாக விசாரிக்க வேண்டி இருக்கிறது என வருத்தப் பட்டுக் கொண்டார். உண்மையில் அவரைவிட எனக்குத்தான் வருத்தமாகிப் போனது. வேறொரு சமயத்தில் அலியான்ஸ் பிரென்ச் இல் ஈழத்தில் நடக்கும் அடக்குமுறைகள் தொடர்பான ஒரு ஆவணப்பட திரையிடலின் போது ஒரு காஷ்மீரத்து இளைஞன் நூற்றுக்கனக்கான ஆண்டுகளாக என் குடும்பம் வசிக்கிற என் ஊரில் என் வழிபாட்டுத்தளத்திற்கு போக நான் ரானுவத்தின் விசாரனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயெ நாங்கள் இப்படி கஷ்டப் படும் போது வெளியில் உள்ளவர்களை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்றான். ஈழக்கொடுமைகள் பேசப்படும் அளவுக்கு இங்கே யாரும் எங்கள் துன்பங்களை பேசுவதில்லை என குறைபட்டுக் கொண்டார். அவரின் பேச்சு முழுவதும் ஒத்துக்கொள்ளக் கூடியது அல்ல என்றாலும் காஷ்மீர மக்கள் படும் துயரங்கள் நமது கண்களை அடைவதில்லை என்பது வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.

பீட்டா கார்பன்

பீட்டா கார்பன்

பற்றித் தெரிந்து கொள்ளவா

நீ என் கனவில் வர வேண்டும்?

சனி, 26 ஜூன், 2010

இந்திய கெளபாய் உலகம்


சிம்புதேவன் இயக்கியிருக்கும் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் படத்தின் விளம்பரத்தில் இந்திய கெளபாய் உலகம் என்று வருகிறது. இந்த ரீதியிலான முந்தைய படங்கள் ஒன்றிரண்டைத்தவிர அதிகம் பார்த்ததில்லை. சமீபத்தில் குயிக் கன் முருகன் என்ற படம் வந்தது. அதையும் பார்க்கவில்லை. இந்த கெளபாய் உலகம் என்ற வரியை ஒட்டியே இந்தப் பதிவு.

சிம்புதேவனின் படத்தை- மிகவும் மெனக்கெட்டிருப்பார்கள் என்ற காரணத்தால், குறைத்துச் சொல்ல உறுத்தலாக உள்ளது. ஆங்கிலத்தில் வந்த பெரும்பாலான கெளபாய் படங்களை பார்த்திருக்கிறேன். உடைகள், இடங்கள், சில உத்திகள் என அதை பிரதிபலிப்பது போல வந்திருக்கும் சிம்பு தேவனது படம் மேற்சொன்னவற்றால் மட்டும் கெளபாய் படமாக ஆகிவிட முடியாது. கெளபாய் படங்களில் வருகிற ஒரு தெனாவெட்டான, ரொமான்டிக்கான அதிரடிகள் இந்தப் படத்தில் இல்லை. காமெடியாக சொல்ல கெளபாய் படம் எடுத்திருக்க தேவை இல்லை. ஆனால் படத்தில் வருகிற இடங்கள் அவர்களின் உடைகள், உபயோகிக்கும் பொருட்கள் செவ்விந்தியர்கள் என மிகுந்த உழைப்பை படத்திற்காக செலவு செய்திருக்கிறார்கள். லாரன்ஸ் ஸ்டைலானவர்தான் என்றாலும் அவரிடம் இருக்கிற ஒரு சிணுங்கல்தனமான பேச்சுத்தொணி இந்தப் படத்துக்கு பெரிய குறை. படத்தில் விஜய் அல்லது பிரபு தேவா நடித்து இருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.


கொஞ்ச நாட்களுக்கு முன்பு பண்டி சரோஜ்குமார் இயக்கி வெளிவந்த போர்க்களம் என்ற படத்தை இந்திய கெளபாய் படமாக சொல்லலாம் என தோன்றுகிறது. கெளபாய் பட நாயகர்களுக்கேயான அசிரத்தையான உடல்மொழி, அந்தப் படத்தில் நாயகனுக்கு. கெளபாய் படங்களைப்போலவே மிக கொஞ்சமான நடிகர்கள். எல்லாவற்றிக்கும் மேலாக இந்தப் படத்தின் கதை. மிகவும் ஸ்டைலிஷான படமாக்கம். படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இயக்குனர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்.

இந்த இரண்டு படங்களையும் எனது ஊரின் அருகிலுள்ள தொட்டியத்தில் இரு வேறு திரையரங்குகளில் பார்த்தேன். ஊரில் படம் பார்க்க போகும் போது எனக்கு துணையாய் வர இரண்டு நண்பர்கள் உண்டு. அதில் ஒருவன் படம் பார்ப்பான். இன்னொருவன் கடின உழைப்பாளி. அதனால் உடன் வந்து எப்போதும் தூங்குவான். இந்த இரண்டு படங்களின் போதும் இருவரும் தூங்கி விட்டனர். இந்த இரு படங்களையும் பார்த்த அரங்குகள் மிக மோசமான தரத்திலானவை. போர்க்களம் படம் மிக மிக இருட்டாகவே இருந்தது. படமே அப்படியா திரை அப்படியா என தெரியவில்லை.

9840529274

உறவும் நட்பும் சூழாத
நெடிதான இந்தப் பின்னிரவில்
அழைக்கவும் விளிக்கவும் யாருமற்ற
இவனை உயிர்ப்பிக்க
அவ்வப்போது வருகின்றன
விளம்பரக் குறுஞ்செய்திகள்.

வியாழன், 17 ஜூன், 2010

ஈரக்கவிதைகள் எழுதும் குழந்தை

தெருக்குழாயிலிருந்து
வழிந்தோடுகிற நீரில்
கால் நனைத்து
சிமெண்ட் சாலையில்
ஈரக்கவிதைகள் எழுதிப்போகிறது-
குழந்தை

ஓவியத்தில் எழுதிய பெயர்கள்

தரையில் உண்டாக்கிய வண்ணச்சிதறலை
தன்னுடைய பெயரென்றும்
தோழியின் பெயரென்றும்
மொழிகிறது குழந்தை.
குழந்தைகள்
தமக்கென உருவாக்குகிற மொழியை
நாம் ஒரு ஓவியமாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

வியாழன், 10 ஜூன், 2010

அரசு குறைந்த பட்சம் மக்களுக்கு வாழும் உரிமையையாவது உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த எட்டாம் தேதி ஒரு வேலை விசயமாக கலங்கரை விளக்கம் அருகே பேருந்தில் போய்க்கொண்டு இருக்கும் போது போபால் விபத்துக்கு காரணமானவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை என்ற செய்தித்தாள் விளம்பரம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நூற்றுக்கணக்கானவர்கள் செத்த மும்பை நட்சத்திர ஓட்டல்கள் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட அஜ்மல் கசாபுக்கு மரணதண்டனை விதித்த இந்திய நீதித்துறை 25 ஆயிரம் பேர்கள் உடனடியாக இறக்கவும் ஐந்து லட்சம் மக்கள் தினம் தினம் மரண வேதனையுடன் வாழவும் காரணமான போபால் யூனியன் கார்பைட் ஆலை விபத்துக்கு பொறுப்பாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமே நிகழக்கூடும். இப்படியொரு தீர்ப்பை யாருமே வரவேற்கப்போவது இல்லை. இதற்கு இந்த வழக்கின் தீர்ர்பு வழங்கப்பாடாமலேயே கிடப்பில் இருந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆனபின்னும் இழப்பீடு உரியமுறையில் வழங்கப்படவில்லை. அந்த மக்களுக்கு இந்த தீர்ப்பு இன்னும் ஒரு வேதனைதான். தீர்ர்ப்பு சொன்னவர்களை குற்றம் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்கப்பட்ட பிரிவுகள் அவ்வளவு பலவீனமானவை. அவ்வளவு பலவீனாமான பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்தை விடவும் கொடூரமானது.

இந்த விபத்தின் பிண்ணனி மற்றும் அதற்கு பின்னான நிகழ்வுகளை பற்றிய விரிவான கட்டுரைக்கு பின்வரும் இணைப்பை தொடரவும் (http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_4661.html). எல்லாவற்றையும்- எதிர்காலத்தையும் இழந்த லட்சக்கணக்கான மக்களுக்கான இழப்பீட்டுத்தொகையையும் முழுதாக வாங்கித் தர வக்கில்லாத இது நாள் வரை ஆண்ட இப்போது ஆள்கிற அரசுகள் மிகவும் கண்டனத்துக்குரியவை. மக்களாட்சி எனப்படுகிற இந்த தேசத்தில் இதுவரை எந்த அரசும் மக்களுக்கானதாக இருந்ததில்லை என்பதற்கு இதுவே வேதனையான சாட்சி. இவ்வளவு நடந்த பின்னும் 26 வருடங்களாக செய்ய முடியாத வாரன் ஆண்டர்சன் விசாரணையை செய்ய இன்னும் வாய்ப்புள்ளது என சப்பைக்கட்டு கட்டுகிறார் வீரப்ப மொய்லி. வாரன் ஆண்டர்சன் மீதான விசாரணைக்கு உதவுவது என்பது முடிந்து போன ஒன்று என்று அமேரிக்க தரப்பில் சொல்லி விட்டார்கள். அதன் பின்னும் மொய்லி இப்படி அளக்கிறார். ஹெட்லியை விசாரித்துக் களைத்து விட்டது போலும். ஆனாலும் தாமதமாக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டது எனவும் இந்த விவகாரத்தில் நீதி புதைக்கப்பட்டது எனவும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படி இதுவரை சாதித்தது போதாது என்று அணு உலைகள் அமைக்கிற வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு வசதியை செய்து வைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. எதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் வழக்கத்தில் பாதியளவு இழப்பீட்டை மட்டுமே சம்பத்தட்ட நிறுவனம் செய்யும் என்பதே அந்த வசதி. இது நாட்டில் பரவலாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பாதுகாப்பு குறைவாக உள்ள இந்திய அணு உலைகள் எந்த விபரீதம் விளைவிக்குமோ என்ற பயத்திற்கும் மேலாக இப்படி ஆரம்பிக்கும் போதே கைகழுவுகிற வேலையை செய்வது ஒரு மக்களுக்கான அரசு செய்வது அல்ல. அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத அரசு அடிப்படை உரிமைகளை காப்பாற்றித்தர முடியாத அரசு, குறைந்த பட்சம் மக்களுக்கு வாழும் உரிமையையாவது உறுதிப்படுத்த வேண்டும்.

செவ்வாய், 8 ஜூன், 2010

இன்று

எத்தனை அடிகள் குழிகள் வெட்டினோம்

என்ற கணக்கை மறந்து விட்டார்கள்.


நாளைய உறக்கம் எந்த நிலத்திலோ

என்ற கவலையை மறந்து விட்டார்கள்.


பகலெல்லாம் பட்ட வாதைகளை

இரவின் மடியில் இறக்கிவைத்துவிட்டார்கள்.


சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து

தகரச்சட்டிகளின் தாளமிணைத்து

வீடுகளற்ற

இந்தப் புறநகரப்பெருநிலத்தை-

இசையால் நனைத்து

சொந்த ஊருக்கு அவர்கள் நீந்திப்போகிறார்கள்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

எந்த ரகத்தில் சேர்ப்பது?

நள்ளிரவில்
குழந்தைகள் மற்றும் சுமைகளோடு
தவறான பேருந்து நிலையத்தில்
இறங்க நேர்ந்தது பிழையென
சுட்டிக்காட்டிய துணைவியை-
சுற்றியிருப்போரை திரும்ப வைக்கும் அளவுக்கு
பெருஞ்சத்தத்தோடு அறைந்தவனை ...........

சனி, 5 ஜூன், 2010

அவர்கள் - நாம் – இவர்கள்


அவர்கள்
மாவீரர் துயிலுமிடங்களின்
எஞ்சிய மண்ணையும் துடைத்தழிக்கிறார்கள்.


அவர்கள்
கடவுளுக்கு முன்பிறந்தவர்களையும்*
பச்சையாக வேட்டையாடுகிறார்கள்.

அவர்கள்
ஆடு மேய்ப்பவர்களையும்
ஏவுகணைகள் வீசிக் கொல்கிறார்கள்.

அவர்கள்
மருந்து எடுத்துப்போகிற
கப்பல்களையும் கவிழ்த்துச் சிரிக்கிறார்கள்.

அவர்கள்
பனிமூடிய முகடுகளிலும்
அடிமைவிலங்குகளைப் பூட்ட ஆட்களைத் தேடியலைகிறார்கள்


அவர்கள்
வனங்களின் சமாதிக்கடியில்
எரிஎண்ணெய் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும்
அவர்கள்
...........................................................
.........................................கிறார்கள்.

இவர்கள்
துப்பாக்கி தூக்குகிறார்கள்
எரிகணைகள் வீசுகிறார்கள்.
கண்ணிவெடிகள் வைக்கிறார்கள்.
உயிரையும் ஆயுதமாக்குகிறார்கள்.
கண்டன ஊர்வலங்கள் போகிறார்கள்.
முழக்கப்போர்கள் செய்கிறார்கள்.
துண்டறிக்கைகள் கொடுக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்
உண்ணா நிலை இருக்கிறார்கள்
மனிதச்சங்கிலி கோர்க்கிறார்கள்.
தெருமுனைக் கூட்டங்களில் பேசுகிறார்கள்.

வர்கள்
...........................................................
.........................................கிறார்கள்.

நடுவிலிருக்கும் நாம்..........?
வேறென்ன செய்வது?
வேடிக்கையாவது பார்ப்போம்.

நன்றிகள் :

இந்திரனுக்கு. * குறியிட்ட வரி அவருடையது

தலைப்புக்காக : சங்கருக்கும் பாலாவுக்கும்நெடுந்தொலைவு போகிற
சொகுசுப்பேருந்தினில்
நள்ளிரவுக்குப் பின்னிரவில்
விழித்துப் பார்த்த போது-
உறங்கும் முன் யாருமற்றிருந்த
பக்கத்து இருக்கையில்
விருப்பமானதொரு பரிசினைப்போல
ஒருக்களித்துப் படுத்தவாறு
உறங்கிக்கொண்டிருந்தான் சிறுவனொருவன்.

சாளரக்காற்றை
அவனுக்குத் தோதாக
ஒப்புரவு செய்து விட்டு
நானுமந்த
உறங்குகிற பரிசைப்போல-
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டேன்.