வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தங்கமீன்கள் என்றொரு தமிழ்ப்படம்

நேற்று நங்கநல்லூர் வெற்றிவேல் திரையரங்கில் கடைசிக் காட்சியாக ஓடிக்கொண்டிருந்த தங்கமீன்கள் படத்தை நண்பர் கண்ணனுடன் சென்று பார்த்தேன். படம் பேசப்படவேண்டிய படம் என்பதை வெளியாவதற்கு முன்பே நிறைய பேசியும் எழுதியும் தீர்த்துவிட்டார்கள். உண்மையில் நல்ல படம் தான். சினிமாவின் ஆதாரகுணங்களோடு வந்திருந்தாலும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். சிலர் குடும்பமாக வந்திருந்தார்கள். அனைவரும் மிகவும் ஆர்வமுடனே பார்த்தார்கள். எக்ஸிட் கமெண்ட்களிலும் பலரும் படத்தை பாத்திரங்களை பேசினார்களே ஒழிய யாரும் படத்தை சலித்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் நான் கவனித்த மிக முக்கியமான ஒரு முன்னேறம் இது. இந்தப் படம் இதனாலே வெற்றிப்படமாகிறது. நல்ல படமாகவும் ஆகிறது. இதற்காக கவுதமுக்கு பாராட்டுக்கள்; ராமுக்கு இந்த வாய்ப்ப்பை வழங்கியதற்காக.

ராமின் கற்றது தமிழ் ஒரு நல்ல படமாக வேண்டி செய்யப்பட்ட படம். நல்ல படம் உருவாக வேண்டும். செய்யப்பட கூடாது என்பது என் கருத்து. தங்கமீன்களும் சற்றேறக்குறைய அதே பாணியில் இருந்தாலும் நன்றாக கொடுக்கப்பட்டிருக்கிறது. படம் நிறைய விவாதங்களை தூண்டுகிறது.

அரட்டை அரங்க - சூப்பர் சிங்கர் பாணியிலான பாண்டிராஜின் பசங்க படம் போலியான நல்லபடத்துக்கு மிகச்சரியான உதாரணம். உண்மையான அழகியலோடு எங்கேயும் இடறாமல் படைக்கப்பட்ட நல்ல படத்துக்கு தங்கமீன்கள் உதாரணம். எனக்கென்னவோ ராமை இந்தப் படத்துக்காக பாரட்டத்தோன்றவில்லை. இன்னும் மிக நல்ல படங்களை அவர் தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அவரின் சினிமாவெறிக்கு இந்தப் படம் சாதாரணம் எனவும் கருதுகிறேன்.

ஒரு பாடலில் வறியவன் என்ற வார்த்தை வருகிறது. மிகச்சரியாக உபயோகிக்கப்பட்ட வார்த்தை. படத்துக்கு மிக நெருக்கமாக கொண்டு சேர்த்த வார்த்தை. கையில் முன்னூறு ரூபாய் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு 299க்கு ஒரு செருப்பை தேர்வு செய்து செருப்பில்லாத என் மகன் கால்களில் அணியவைத்துவிட்டு பணம் கட்டும் நேரத்தில் 20 ரூபாய் குறைந்து விட்டது ஒரு நாளில். பிறகு மகன் கால்களில் இருந்து செருப்பைக் கழட்டி அவர்களிடம் கொடுத்து விட்டேன். வறியவனாக அந்தக் கணத்தில் நான் உணர்ந்ததை வோடபோன் நாய்க்காக கல்யாணி அலையும் போது திரும்பப் பெற்றேன். நான் நடைமுறையுணர்ந்த அப்பனாகவும் கல்யாணியை ப்ரியமிக்க அப்பனாகவும் அறிந்தேன்.

வியாபார வெறியில் தலைதெறித்தாடும் சமூகக் கட்டமைப்பில் கல்யாணியின் பாத்திரம் நடைமுறைக்கு ஒவ்வாத பாத்திரமாகத்தோன்றும். குடும்ப நிலை தெளிவாக தெரிந்த நானும் என் தங்கையும் அம்மாவிடம் காசு எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் ஒரு ஐஸைக்கூட கேட்போம்.

வழக்கமாக அம்மாயி வீட்டுக்கு போகவும் வரவும் காவிரி ஆற்றை சித்தலவாய் என்ற இடத்தில் (அங்கு அகலம் 2 கி. மீ மேல்) கடந்து பின் பஸ்ஸேரி போவோம். தண்ணீர் அதிகம் உள்ள நாட்களில் குளித்தலை பெரியார் பாலம் வழியாக பயணம். செல்வும் நேரமும் அதிகம். ஒருமுறை சித்தலவாயில் இறங்கி அம்மா எங்கள் இருவருக்கும் பூரியோ என்னவோ வாங்கி கொடுத்து விட்டு ஆற்றங்கரைக்கு போனால்...தண்ணீர் கூடி விட்டது. நடந்து கடக்க முடியாது. கொடுமைக்கு எல்லா காசும் தீர்ந்து விட்டது. பிறகு அம்மா கையோடு கொண்டு வந்திருந்த சில தேங்காய்களை ஒரு கடையில் விற்றுவிட்டு குளித்தலை சுற்றி வீடுவந்தோம். இது யதார்த்தம். நடைமுறை. ஆனால் கல்யாணி யதார்த்தததை மீறிய ஒரு கனவுடன் இருக்கிறான். வோடபோன் நாய்க்குட்டியையும் வாங்கி விடுகிறான்.

நிறைய எழுதத் தோன்றுகிறது. செல்லம்மா தங்கமீனாக போகும் தருணத்தில் குளத்தில் கால் வைத்தவுடன் நீரின் சில்லிப்பு ஒலி இதயத்தை சில கணங்கள் நிறுத்தி வைத்தது. அத்தனை தவிப்பை அது இறக்கியது. படம் நெடுகவும் காட்சிகள் மாறும் போதோ அல்லது சில அழுத்தங்கள் தேவைப்படும் இடத்திலோ மிகவும் கணத்த ஓசையை ராம் பயண்படுத்தியிருக்கிறார். ரயிலோசை, கப்பல் ஹாரன் என மிக அருமையான உபயோகங்கள் அவை.

படக்கென்று தெரிந்த குறை - இசை. டைட்டிலில் இழையும் அதே இசை நீருக்கடியிலும் தொடர்வது ஒரு ஈர்ப்பாக இல்லை. தீம் மியூசிக் என்றால் என்னவென்று யுவன் போன்றோரெல்லாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் ரயிலோசை, கப்பல் ஹாரன் என்பனவற்றை உபயோகித்தது ராமின் இசை.
படம் நெடுகிலும் ஒரு மிகை கலையுணர்ச்சி அல்லது கவிதையுணர்ச்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. அது யதார்த்ததை கொஞ்சம் மிகை அழகியலோடு தந்திருக்கிறது. இது என்னைப்பொறுத்தவரை ஒரு குறைதான். ஆனால் இந்தக் குறை இல்லாமல் இருந்தால் படம் ஒரு வெகுமக்கள் படமாக ஆகி இருக்காது.
ராம் என்ற நடிகர் திரையில் இல்லாமல் பின்னால் இயக்குநராக இருந்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்குமோ? இதற்கு வேறு யாரும் பொறுத்தமாக இருப்பார்களா? ஆனால் திரையில் கல்யானியை விட ராமே அதிகம் தெரிகிறார்.
ராமை திரையில் பார்க்க எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவர் அருமையாக செய்திருக்கிறார். அதில் பிழையில்லை. ஆனால் அவரை ஒரு படைப்பாளியாக மட்டும் வைக்காமல் கலைஞனாகவும் மாற்றிய இந்த தமிழ்த்திரைச்சூழலை சபிக்காமல் இருக்க முடியவில்லை. படத்தின் குறைகளாக பலவும் பேசலாம். ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு தனிக்குரலாக ஒலிக்கும் தோழர் ராமின் உழைப்புக்காக.........எதையும் பேசாமலிருப்பது நல்லது.
மீண்டும் ஒருமுறை பார்த்து கோர்வையாக நிறைய எழுதுகிறேன்.


Image from: www.4tamilmedia.com with many thanks