வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் -1

நேற்று இரவு போராட்டம் நடக்கும் மெரினாவுக்குச் சென்றிருந்தேன் நண்பர்கள் உடன். தமிழர் என்ற வார்த்தை அல்லது ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை அங்கே தமிழர்களை மட்டும் அல்ல. இங்கே இருக்கும் பலரையும் அது ஒன்றிணைத்து இருக்கிறது. இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் அல்ல. அது ஒரு குறியீடு. எல்லா பிரச்சனைகளிலும் பேச வாய்ப்பு இல்லாதவர்கள் இப்போது பேசுகிறார்கள். முடிவு எப்படியாகினும் பிரச்சனைகளைப் பேசுவதே பெரிய மாற்றத்துக்கான ஆரம்பம்.
என்.டி.டி.வி இணையதளத்தில் வியாழன் பார்த்தபோது 3000 பேர் மெரீனாவில் போராடுகிறார்கள் என்றது. நேற்று இரவு சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையத்தில் நின்றவர்கள் மட்டும் ஆயிரம் பேர் இருக்கும். மெரீனாவின் மொத்த நீளத்துக்கும் மக்கள் தலைதான்.
குடும்பத்துடன் எதோ கோயிலுக்கு போவது போல மக்கள் தம் கைகளில் எதிர்ப்பு வாசகங்களை ஏந்திப் போகிறார்கள். நான் பார்த்த அத்தனை ஆயிரம்முகங்களிலும் உண்மையான நம்பிக்கையைப் பார்த்தேன். இது நடக்குமா நடக்காதா என்ற வாதத்தைத்தாண்டு நடக்க வேண்டும் என்ற உறுதியையே அங்கே அதிகம் பார்த்தேன். உண்மையில் குப்பைகளை பொறுக்குகிறார்கள். குப்பைக்கூடைகளில் போடுகிறார்கள். பெண்கள் சர்வ சுதந்திரமாக நடக்கிறார்கள்; முழங்குகிறார்கள்; நடனமாடுகிறார்கள். அனைத்துப் பெண்களைட்யும் தம் வீட்டுப் பெண்களாக கவனிக்கிறார்கள்.
மக்கள் பாடகர் தோழர் கோவன் தன் பாடல்களாலும் குழுவின் வசனங்களாலும் அங்கே ஒரு கலை இரவை நடத்திக்கொண்டிருந்தார். 100 அடிக்கு ஒரு பறையிசைக்குழு அல்லது தன்யே ஒரு பறை என இசை அங்கே முழங்குகிறது. ஒவ்வோரு ரயில் நிலையமும் வழிகிறது. முழக்கங்கள் பிளக்கிறது.
ஒரு கொண்டாட்ட மனநிலையிலான இந்தப் போராட்டத்தை நிறுத்துவது மிக கடினம். 100 பேர் வீட்டுக்குப்போனால் 300 பேர் புதிதாக வருகிறார்கள். அங்கங்கே சிறு சிறு குழுக்கலாக போராடுகிறார்கள்.
உண்மையில் நாம் வாழும் காலத்தின் மகத்தான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்த நாட்களில் சென்னையில் இருந்தேன் என்பது என் பெருமிதங்களில் ஒன்று.
அனைவருக்கும் வாழ்த்துகள். .