வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கால்சட்டை இல்லாமல் நடந்து போனான்

ஒரு கைக்குழந்தையை எந்த சூதானமும் இன்றி அநாயசமாக கையிலேந்தியபடி அந்தப் பெண் விரைவாக நடந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது கணவர் இரண்டு வயதிருக்கும் மகனை கையில் பிடித்து நடத்திக்கூட்டியபடி நெரிசலான அந்தச் சாலையில் (ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில்) நடந்து போனார். உடனிருந்த நண்பர் என்ன இப்படி அசிரத்தையாக போகிறார்கள் என்றார். பத்து நிமிடத்தில் கைக்குழந்தையை கணவனும் மூத்த மகனை மனைவியும் கூட்டிக்கொண்டு திரும்பி அதே வழியில் வந்தனர். கணவர் விரைவாக கடந்து போனார். மனைவி எங்களிடம் கையேந்தினார். ஏனோ இரு முறையும் இல்லை எனச் சொல்லி அனுப்பி விட்டேன். அவர்கள் நடக்கும் போதுதான் தெளிவாகப் பார்த்தேன். அந்தச் சிறுவனுக்கு செந்தூரன் வயதிருக்கும். கால்சட்டை இல்லாமல் நடந்து போனான். மிகவும் வேதனையாகிப் போனது. நண்பரிடம் வருத்தப்பட்டேன். மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பத்து ரூபாய் கொடுத்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். இந்த இரவு வேதனை மிக்க இரவு.

செப்டம்பர் 17, 2018; ஃபேஸ்புக் பதிவு

கலைஞர் எனும் வசீகர வார்த்தை


கலைஞர் எனும் வசீகர வார்த்தை
செப்டம்பர் 2018 உயிர்மை இதழில் வெளியான சிறு பதிவு





எங்கள் குடும்பத்தின் மிகப்பெரும்பாலான உறுப்பினர்கள் திமுக ஆதரவாளர்கள். அதற்கு ஒரே காரணம் கலைஞர் எனும் வசீகரவார்த்தை என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தக் காரணமும் தோன்றவில்லை. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதல் முறையாக சத்துணவில் முட்டை சேர்த்து வழங்கினார்கள். கலைஞர் பிறந்தநாள் அன்று அது ஆரம்பிக்கப்பட்டது. எனக்குத்தெரிந்து என் நினைவில் நிற்கும் கலைஞர் பற்றிய முதல் நினைவு அது. பேருந்தில் இலவசப்பயணம் பெற கலைஞரின் படம் போட்ட பாஸ் ஒன்றும் அந்த நாட்களில் வழங்கினார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக கவிதை என்ற பெயரில் ஒன்றை எழுதினேன். தமிழில் வாசிப்புக்கு என்னை ஈர்த்த முதல் இலக்கியப்பிரதி குங்குமம் இதழில் கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர். கல்லூரிக் காலத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சி. அப்போது அனைவரும் தமிழில் கையெழுத்திட கலைஞர் கேட்டுக்கொண்டார். அதுநாள் முதல் தமிழில் தான் கையொப்பம் இடுகிறேன். இளநிலைப் படிப்பு முடித்த பிறகு மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் முடித்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலமாக என் இளநிலை கல்லூரி வகுப்புத்தோழர்களில் ஐந்து பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற உதவ முடிந்தது. இதையெல்லாம் சாத்தியப்படுத்தியது பலரும் இன்று ஒத்துக்கொள்ள மறுக்கும் கலைஞரின் சமூகநீதியின் பயணங்கள். 

கலைஞர் என்ற வார்த்தை எப்போதும் என்னை வசீகரித்துக்கொண்டு இருப்பதற்கான அடையாளங்களாக வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, சென்னை மாநகரப்பூங்காக்களில் இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் சிலைகள், செம்மொழிப்பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, பராசக்தி, பொன்னர் சங்கர் காவியம் என இன்னுமிருக்கின்றன. கலைஞர் எனும் தீவிர அரசியல்வாதியின் இந்த கலை-இலக்கிய முகமே என்னை வசீகரித்து கலை இலக்கியங்களில் நாட்டம் கொள்ள வைத்தது. தொலைக்காட்சி –அச்சிதழ்களில் அரசியல் செய்திகளைக் கேட்பது மற்றும் படிப்பது என்பதைக் கூட மிகவும் விருப்பமாக ஆக்கியது கலைஞரின் வசீகரத்தமிழே. 

கலைஞர் எனும் கலைஞரின் கலை மனம் தந்த ஒவ்வொரு கொடையையும் பார்க்கும் போதும் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் இவர் போன்றதொரு ஆளுமை முன்னும் பின்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல்வேறு அரசர்கள் கலை இலக்கியங்களில் விற்பன்னர்களாக இருந்தார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் கலை இலக்கிய உலகில் தனக்கென ஒரு அரசாட்சியை அமைத்துக்கொண்ட வகையில், நவீன தமிழகத்தின் வரலாற்றில் என்றும் அழியாப்பெயருடன் இருக்கும்  அரசனாகவே நான் கலைஞரைப் பார்க்கிறேன்.

நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு


நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு
      - செப்டம்பர் 2018 படச்சுருள் இதழில்                 வெளியான கட்டுரை
வணிக மையமான தமிழ் சினிமாவுக்குள் பிம்பங்களை மறுதலித்த அல்லது பிம்பங்களின் மீது நம்பிக்கையற்ற சில கூறுகளை மட்டும் நான் எடுத்துக்கொண்டுள்ளேன். பிம்ப எதிர்ப்பு என்பதை பிம்பத்தைக் கட்டமைக்காமல் விடுவது என்று ரீதியில் இந்தக் கட்டுரை விசாரணை செய்கிறது. பிம்பம் என்பதை வெறும் நாயக பிம்பமாக மட்டும் நாம் பார்க்க வேண்டியதில்லை. இங்கே நாயகனுக்கு பிம்பம் உள்ளது; நாயகிக்கு பிம்பம் உள்ளது; இயக்குநருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, நடன இயக்குநருக்கு, குழந்தைகளுக்கு, துணை நடிகர்களுக்கு என எல்லோருக்கும் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் உள்ளன. நாயக பிம்பமானது எம்.கே.டி. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே உள்ளது. அது சிவாஜி கணேசன்-எம்.ஜி. ராமச்சந்திரன் காலங்களில் படங்களின் போக்கையே மாற்றியமைத்து இயக்குநர்களை கைவிலங்கோடு வேலை செய்யும் கொடுமையான நிலைக்குத் தள்ள ஆரம்பித்தது. நாயகியருக்கான பிம்பம் பின்னாட்களில் கண்ணாம்பாள் போன்ற நடிகைகளை அம்மா வேடங்களுக்கு என கட்டமைப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. நிறையப் படங்களில் குழந்தைகள் காதலுக்குத் தூது போவார்கள். 80-90 களில் வந்த படங்களில் குழந்தைகள் காதலர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் அதிமேதாவியாகக் காட்டுவதும் ஒரு வகையில் பிம்பக் கட்டமைப்புதான். கலைவாணர் காலத்தில் இருந்து காட்சிக்கு ஒவ்வாத உரையாடல்களோடும், சேஷ்டைகளோடும் நகைச்சுவை நடிகர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டது. தெருக்கூத்து காலங்களில் இருந்தே கோமாளிகள் மையக்கதையோடு ஒட்டாமல் தனித்து இயங்குவதாகத்தான் அவர்களின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. சில இயக்குநர்கள் படங்களுக்கு பெயர் சூட்டுவது முதல் டைட்டில் கார்டு போடுவது, இடைவேளை விடுவது என தமது தனிப்பட்ட பிம்பத்தை படங்களில் கொண்டு வந்துள்ளனர். திரைப்படம் என்பது இப்படியான தனிநபர்களைத் தவிர்த்த ஒரு கலாபூர்வமான செயல்பாடு. ஆனால் அது வணிகம் என்ற கட்டுக்குள் வந்த போது அதை பிம்பப்படுத்துவது கட்டாயமாகிறது. வியாபாரத்துக்கு பிராண்ட் அவசியம் என்று பேசப்படும் காலம் இது.  கேரள நண்பர் ஒருவர் ஒரு விநோதமான தகவலைச் சொன்னார். தமிழ் சினிமாவில் மட்டுமே ஒரு நடிகரின் ஒரு படத்தில் வந்த பாத்திரத்தின் பிம்பத்தை இன்னொரு படத்திலும் தொடர்கிறார்கள் என்று. ஒரு படத்தில் பெரும்பாலும் அது நகைச்சுவைக்கு உபயோகப்பட்டாலும் அதுவும் ஒருவகை பிம்பக் கட்டமைப்பே. ‘வரும்… ஆனா வராது’ என்று ஒரு படத்தில் பிரபலமான அந்தக் காட்சியில் ‘என்னத்த’ கண்ணையா சொல்வார். அவரே வேறொரு படத்தில் கதாநாயகனிடம் கேட்பார் ‘தம்பி அவங்களுக்குள்ள சண்டை வருமா…வராதா….???’ அதற்கு நாயகன்   ”ஓ! நீயா!…வரும்… ஆனா வராது” என்பார். இப்படியாக சகல மட்டத்திலும் பிம்பங்களைக் கட்டமைத்தல் தமிழ் சினிமாவுக்குள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த எல்லா பிம்பங்களிலும் மிகவும் முக்கியமானதும், ஒரு படத்தின் இயல்பையே மாற்றிப்போடுவதுமானது நாயக பிம்பம் தான். சினிமா வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டதால், இவர் படம்…அவர் படம்…என நாயகர்களை மையப்படுத்தி சினிமாவின் இயல்பான கதை சொல்லும் முறை பாதிப்புக்கு உள்ளாகிறது. நாமறிந்த வகையில் தயாரிப்பாளர்களும், நாயகர்களும் பெரும்பாலான எடுத்துக்காட்டுகளில் இப்படியான பிம்பச் சிக்கல்களுடன் கூடிய சினிமாக்களை உருவாக்கி விடுகிறார்கள். ஒரு நாயகனின் கால்ஷீட் கிடைத்த பிறகே கதையை யோசிக்கும் பரிதாபத்துக்கும் இயக்குநர்கள் ஆளாகிறார்கள். அநேகப் படங்களில் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி என்று கற்பிக்கப்படுகிறது. ஓரிரு இயக்குநர்களே இப்படியான பிம்பங்களை எதிர்க்கிற அல்லது மறுக்கிற சினிமாக்களை எடுத்துள்ளார்கள்; எடுத்தும் வருகிறார்கள். ‘மகதீரா’ என்ற படத்தை எடுத்த பிறகு அந்தப் படத்தில் சிறிய பாத்திரம் ஏற்ற சுனில் என்ற நடிகரை நாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற வணிக ரீதியான வெற்றிப் படத்தைக் கொடுத்தார் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘மகதீரா’ படத்தின் வணிக வெற்றிக்கு அதன் நாயகனே காரணம் என்ற பேச்சைப் பொய்யாக்கவே ராஜமவுலி இப்படியான படத்தை எடுத்தார் என்ற கருத்தும் பரவலாக உலவுகிறது. என்றாலும் பிம்பங்களை கட்டமைக்கும் இயக்குநர்களால் அந்த பிம்பங்களை உடைக்கவும் முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் நீரோட்டம் இதுவே. சேது என்ற கச்சாவான ரவுடி பாத்திரத்தை கோமாளி போலக் காட்டமுடியும் என்பதாக படத்தில் காட்சிகள் வருகின்றன. பாரதிராஜா தன்னுடைய ‘பதினாறு வயதினிலே’ படத்தில் நாயக பிம்பத்தை உடைத்தார் என்று பலரும் சிலாகிப்பதுண்டு. ஆனால் அந்தப் படத்தில் ‘சப்பாணி’ என்ற பாத்திரத்தில் நடிப்பது கமல்ஹாசன் என்ற பிரக்ஞை நமக்கு ஏற்படுத்தாமல் போனால் ஒழிய அப்படியான சிலாகிப்பை நாம் ஏற்க முடியாது. பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில், சிறைச்சாலைக்குள் நாயகன் ஒரு காவலரால் கடுமையாக தாக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும், மூன்று நிமிடங்கள் நீளும் அந்தக் காட்சியும் ஒரு வகையில் நாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிப்பதாகவே பார்க்க முடிகிறது.
பிரபல்யம் அடைந்து விடுகிற நடிகர்கள் நடிக்கிற படங்களில் பிம்பத்தை எப்பாடு பட்டும் எதிர்க்கவோ உடைக்கவோ முடிவதில்லை. ஆகவேதான் பிம்பங்களை நம்பாமல் சினிமாவைத்தர விரும்பும், விரும்பிய இயக்குநர்கள் பிரபலமான நடிகர்களை தவிர்த்து நல்ல படம் கொடுக்க முயல்கிறார்கள். 70 களின் இறுதி மற்றும் 80 களின் ஆரம்பங்களில் தமிழ் சினிமா சில அற்புதமான இயக்குநர்களின் படங்கள் மூலமாக மெல்ல மெல்ல உயர்தரத்துக்குப் போகின்ற வேளையில், ஏ.வி.எம் நிறுவனம் சீரான இடைவெளியில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எஜமான் போன்ற நாயக துதிப் படங்களைக் கொடுத்து வந்தது. இப்படியான படங்களின் வணிக வெற்றி இந்த வகை மாதிரியில் மேலும் சில நூறு படங்களைக் கொடுக்கும் ஆபத்தை  உருவாக்கின. 2002 இல் ‘ஜெமினி’ என்னும் படத்தையும் இதே போல இந்த நிறுவனம் உருவாக்கியது. இப்படியான நிறுவன மயமான படத் தயாரிப்புகள் லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொள்ளும் போது, வெற்றிகரமான பிம்பக் கட்டமைப்பு உள்ள படங்களே உருவாக முடியும். இந்த அசாதரணமாக சூழலிலும், சில இயக்குநர்கள் பிம்பங்களை உடைத்தெறியும் பரிசோதனைகளும் செய்துள்ளார்கள்.
நாயகர்கள் என்றால் அழகானவர்கள் வசீகரமானவர்கள் என்ற பிம்பங்களை ஆரம்பத்தில் சில தமிழ் இயக்குநர்கள் உடைத்தார்கள். அதில் பாலச்சந்தர் முக்கியமானவர். நாகேஷ் என்ற நடிகரை நாயகனாக ஆக்கி (தன் நாடகீய பாணியிலான கதை சொல்லலை முன்னிறுத்திய போதும்) நாயகர்களுக்கான சிறப்பு கவனிப்பை கேள்விக்கு உள்ளாக்கினார். பின்னாட்களில் இப்படியான நாயகர்களுக்கான சிறப்பு பிம்பத்தை உடைத்தவர்களில் இயக்குநர் பாலாவும் ஒருவர்.  தனது முதல் படம் தொடங்கி எல்லாப் படங்களிலும் நாயகர்களுக்கு அவர்களின் சொந்த முகமே மறந்து போகுமளவுக்கு மாறுபட்ட தோற்றங்களைக் கொடுத்தார். ‘சேது’ படத்தில் முதல் பாதியில் இயல்பான தோற்றத்தோடு வரும் நாயகன் பிற்பாதியில் பரிதாபத்துக்குரிய தோற்றத்துக்கு மாறி விடுவார். ‘இரத்தக் கண்ணீர்’ போன்ற நிறைய படங்களில் இப்படி நாயகர்களின் தோற்றம் மாறியிருந்த போதும் ஒரு வித தீவிரத்தன்மையோடு அப்படியான மாற்றங்களை தனக்கான பிம்பமாக கட்டமைத்தவர்களில் பாலா முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வழக்கமான சில நாயக பிம்பங்களை உடைத்த இயக்குநர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர். பெரும்பாலான படங்களில் போராட்டங்களை சந்திக்கும் நாயகர்களுக்கு இறுதியில் வெற்றியே கிடைக்கும். ஆனால் டி.ராஜேந்தரின் அநேக நாயகர்கள் தோற்றுப்போவார்கள் அல்லது இறந்து போவார்கள். ஆனால் இப்படியான பிம்ப உடைப்புகள் காட்சி அனுபவத்துக்காகவோ கலைக்காவோ என்று சொல்ல முடியாத நிலை தமிழ் சினிமாவில் தான் உண்டு. மேற்சொன்ன மற்றும் அவர்களை ஒத்த நாயக பிம்பங்களை அசைத்த இயக்குநர்கள் அதை நாயக பிம்பங்களை உடைப்பதற்கான உந்துதலில் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்ப வசமாக நாயக பிம்பங்களை உடைத்த சில சினிமாக்கள்-இயக்குநர்கள் உண்டு. பாலுமகேந்திரா, பாரதிராஜா மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் படங்களில் நாயகர்களுக்கு அவர்களின் சொந்த பிரபல்யத்தை இவர்களின் படங்களில் பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அப்படியான பிம்ப உடைப்புகள் இப்படியான இயக்குநர்களின் பிம்பங்களை கட்டமைத்துக்கொள்ளவே உதவியது.
வணிகசினிமாவின் பரப்பில் நாயக பிம்பங்களை உடைத்த இயக்குநர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரன் மற்றும் தேவராஜ்-மோகன். இதில் இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்த் மாதிரியான பிரபலமான நடிகர் பில்லா போன்ற நாயகத்துதி படத்தில் நடிக்கிற காலக்கட்டத்தில் ஜானி போன்றதொரு படத்தைக் கொடுத்தார். ஜானி நாயக பிம்பங்களை உடைத்த படம் அல்ல என்ற போதும் நாய பிம்பங்களை மறுதலித்த படங்களில் முக்கியமான படம். மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்திலும் நாயகனின் பாத்திரம் வழமையான பிம்பங்களை உதறியதாகவே இருக்கும். 1970-80 களில் சுமார் 17 படங்கள் இயக்கிய தேவராஜ்-மோகன் இயக்குநர் இணை நாயக பிம்பங்களை மறுதலித்த அல்லது ஒதுக்கிய ஒன்றாகும். இவர்களது பத்துக்கும் மேற்பட்ட படங்களின் நாயகன் சிவக்குமார். இந்த இரட்டையர்களின் மிக முக்கியமான படம் 1979 இல் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்ட கதையாக கட்டமைக்கப்பட்ட இந்தச் சினிமாவில் ‘செம்பட்டை’ எனும் கதையின் நாயகப் பாத்திரம் முக்கியமானது. வணிக மையமான தமிழ் சினிமா இலக்கணப்படி நாயகியர் அனைவரும் ஒழுக்கத்தில் சுத்தமானவர்கள். அவர்கள் கற்பு நெறி வழுவுவதில்லை. இந்த இலக்கணமும் நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவே. பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களின் இணையர் பாத்திரங்கள் கையில் மதுவோடும் அரைகுறை ஆடையோடும் இருப்பர். நாயகி நாயகனைத்தவிர மற்றெல்லாரிடமும் மிக ஒழுக்கமாக இருப்பதாகவே அநேகப் படங்கள் இருக்கும். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் நாயகிக்கு வேறொரு ஆணின் உறவு முக்கியமாகப் படும். அதைக் கேட்டும் அல்லது கண்டும் நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி வெட்டாமல், தன்னுயிரை மாய்த்துக் கொள்வான். இப்படியான காட்சியமைப்புகள் உள்ள படங்கள் அந்தக் காலக்கட்டங்களில் அவ்வப்போது வந்த போதும் அப்படியான படங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் பிரபல்ய விசையில் சிக்காத நாயகர்களே.
தமிழ் சினிமாவின் எல்லா காலக்கட்டங்களிலும், பிரபல வெளிச்சம் படாத சில நடிகர்கள் நாயகர்களாக சில படங்களில் நடித்து வந்துள்ளனர். நிதி நெருக்கடி போன்ற ஏதேதோ காரணங்களுக்காக அவர்களை இயக்குநர்கள் உபயோகப்படுத்தி வந்த போதும் அப்படியான நடிகர்கள் நடித்த அநேக திரைப்படங்கள் நாயக பிம்பங்களை மறுதலித்த அல்லது நாயக பிம்பங்களை பெரிதாக தூக்கிப்பிடிக்காத படங்களே. நாகேஷ் நாயகனாக நடித்திருந்த போதும் அவருக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டது. அதுவும் ஒரு பிம்பமாக நின்று விட்டது. அப்படியான முத்திரைகள் பிம்பங்கள் ஏதுமன்றி படங்களில் நடித்த நாயகர்களின் குறிப்பிடத்தக்கவர்கள் சிவக்குமார், ராஜேஷ், சுதாகர், ராஜா போன்றோர்.  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘செம்பட்டை’ என்ற பாத்திரத்தை ஏற்று நடித்த சிவக்குமாரால் எந்த யோசனையும் இன்றி அதற்கு நேர் மாறான ‘ஜே.கே.பி’ என்ற மிடுக்கான கர்நாடக சங்கீத வித்வான் வேடத்தில் சிந்து பைரவியில் நடிக்க முடிந்தது. ‘கிழக்கே போகும் ரயில்’ துவங்கி பல படங்களில் நடித்துள்ள சுதாகர் அந்தக் காலக்கட்டங்களில் சிறிய பட்ஜெட் படங்களின் விருப்பமான நாயகனாக எந்த பிம்பமும் இன்றி நடித்துள்ளார். எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் எனத்தொடங்கி நடிகர்களின் பிரபல்யத்துக்கு ஏற்ப தமிழின் வணிகத்திரைப்படங்கள் நாயக பிம்பம் என்ற மாய வலைக்குள் விழுந்தன. இயக்குநர்களே நினைத்தாலும் நாயக பிம்பத்தை உடைக்க முடியாத அளவுக்கு நடிகர்களின் பிரபல்யம் ஆட்டிப்படைத்தது. ஆட்டிப்படைக்கிறது. ஒளிவிளக்கு என்ற படத்தைத் தவிர எம்.ஜி ராமச்சந்திரன் வேறு படங்களில் குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தது கூட இல்லை; டி.ராஜேந்தரின் நாயகிகள் எவ்வளவு சிறிய உடைகளோடு ஆடினாலும் அவர்களின் மேல் சுண்டு விரல் கூட பட்டு விடாமால் தொடாமல் நடிப்பார்; இது போன்ற சினிமாக்களுக்கு அப்பாற்பட்ட ஒழுக்கசீல பிம்பங்களும் நாயக பிம்பங்களை உயர்த்திப் பிடித்தன.
ஏ.பி. நாகராஜன் போன்ற இயக்குநர்கள் புராண இதிகாசப் பாத்திரங்களை நாயகப் பாத்திரங்களாக்கி படங்களைக் கொடுத்து வந்தனர். அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்களின் தாக்கமாக அல்லது திராவிட இயக்கங்களின் பிரச்சார சாதனங்களாக வந்த சினிமாக்கள் பெரும்பாலும் கதையை முன்னிறுத்தின. நாயகர்களின் தனிப்பட்ட பிம்பம் அதில் முன்னிறுத்தப் படவில்லை. இப்படியான சிறிய மாற்றங்களைக்கூட ஏ.பி. நாகராஜனின் புராணப்படங்கள், தேவர் பிலிம்ஸின் பக்தி மற்றும் விலங்குகளை முன்னிறுத்திய படங்கள் சிதறடித்தன. பின்னாட்களில் திராவிட இயக்க பிரச்சாரங்களுக்காக முன்னிறுத்தப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பிரபல நடிகர்கள் நாயக பிம்பங்களை தமக்காக வளர்த்துக்கொண்டனர். சினிமாக்களில் இவர்களுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து உடைந்து நொறுங்கின. ‘காலா’ படத்தில் நாயகன் அறிமுகக் காட்சியில், கரிகாலன் ஒரு சிறுவனின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகும் காட்சியில் ரஜினிகாந்த்தை பொருத்திப் பார்க்க அவர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் முதிர்ச்சி இல்லாமல் போகலாம். ஆனால் ஊடகங்கள் கூட அந்தக் காட்சியைப் போதாத காட்சியென்றே வர்ணித்தன. ரஞ்சித் அந்தக் காட்சியைக்கூட ஒரு வகையான பிம்பக் கட்டமைப்புக்கு வைத்திருக்க வாய்ப்புண்டு. பாலா தனக்கென ஒரு பிம்பத்தை நிறுவ நாயகர்களை தோற்றப்பொலிவின்றி காட்டுவது போல.
காவிய புராண காலங்களில் இருந்தே இந்தியாவிலும் தமிழகத்திலும் கலை இலக்கியங்களில் பிம்பமாக கட்டமைக்கபடும் நாயகப் பாத்திரங்கள் எப்போதும் உண்டு.  இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நாயகர்களுக்கும் கட்டமைப்பட்ட பிம்பம் உண்டு. பழந்தமிழ் இலக்கியங்களிலும் விதந்தோதப்படும் நாயகப் பாத்திரங்கள் உண்டு. இராஜபார்ட் என்ற பெயரில் கடந்த நூற்றாண்டின் நாடகங்களில் நாயக பிம்பம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. வசீகரமான குரல்வளம் மிக்க நடிகர்களே அந்தப் பிம்பங்களுக்குள் பொருந்தி நாடக நடிகர்களாக வலம் வந்தனர். புராண நாடகங்களின் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி பெற்ற தமிழ் சினிமா அதே போலவே தோற்றப்பொலிவும் குரல்வளமும் மிக்க நாயகர்களைக் கொண்டே வளர்ந்தது. ஆனால் ஆரம்ப கட்ட படங்களில் நாயகனின் பிரபல்யம் படங்களின் போக்கை நிர்ணயித்ததாக தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ராமச்சந்திரன்-சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் வந்த பின் நாயகர்களின் தனிப்பட்ட பிரபல்யம் நாயக பிம்பத்தை கட்டமைத்து சினிமாக்களின் இருப்பையே மாற்றின. ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் உச்ச நட்சத்திரம் என்ற மிகை பிரபல்யத்தை அடைந்ததும், சினிமாவில் நடித்தவர்கள் அரசியல் தலைமை ஏற்றதும், நாயக பிம்பங்களை இன்னும் தீவிரமாக கட்டமைக்கக் காரணமாக அமைந்தன. ஆரம்பக் கட்டங்களில் இருந்தே சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதையும், காட்சி மொழியே சினிமாவின் ஆன்மா என்பதையும் நாயக பிம்பங்கள் மறைத்து விட்டன. அவ்வப்போது சில சிறிய சலனங்கள் ஏற்பட்ட போதும் நாயக பிம்பங்களை உடைத்துப் போட்டு சினிமாவின் ஆன்மாவைத் தூக்கி ப்பிடிக்கும் படங்கள் தமிழில் இனிமேல் தான் வரவேண்டும்.