சனி, 26 மார்ச், 2011

எண்ணெய்வளம் என்ற சாபம் உங்களை சும்மா விடாது

அமெரிக்கப் பேரரசின் தலைமையிலான நேட்டொ படைகள் லிபியாவில் பிரச்சனையைத் தீர்க்கிறேன் என்று வம்படியாக இந்த நாட்களில் யுத்தத்தை தொடங்கியுள்ளன. எதிர்பார்த்தது போலவே சீனாவும் ரஷ்யாவும் இந்தப் படையில் இல்லாததோடு இந்தத்தாக்குதலை கண்டனம் செய்துள்ளன. அமெரிக்காவின் அடியாளான இந்தியா என்ன செய்கிறதென்று தெரியவில்லை. யுத்தம் எங்கு நடந்தாலும் அழிவு பொதுமக்களுக்குத்தான். வீரம் என்பதெல்லாம் இந்தத் தொழில் நுட்ப உலகில் பின்னுக்குத்தள்ளப்பட்டு அழிவு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு யுத்தங்கள் செய்யப்படுகிறன. அமெரிக்கப் படைகள் தாலிபான்களை அல் காயிதாவை குறி வைப்பதாக சொல்லிக் கொண்டு ஆப்கனின் பழங்குடி மக்கள் மீது ஆளில்லா விமானங்களை ஏவி குண்டுகளை வீசிக் கொள்கிறது. எந்த நாடானாலும் அமெரிக்காவுக்கு பயிற்சிக்களம் தான். இலங்கையில் இதை விடவும் பல்லாயிரம் மடங்கு சொல்லொணாத்துயரில் மக்கள் அரசப் படைகளின் அடக்கு முறைக்கும் பேரழிவுக்கும் உள்ளான போது சொரணை வராத இந்த அமெரிக்க அடியாள்களின் கூட்டத்துக்கு இப்போது என்ன லிபிய மக்கள் மீது கரிசனம்?. இரண்டு நாடுகளுக்கும் உள்ள ஒரே வித்யாசம் எண்ணெய்வளம். வேறொரு காரணமும் இல்லை.

இப்போது இந்த விசயத்தில் கருத்து சொல்லும் சீனாவும் ரஷ்யாவும் உண்மையில் மக்களுக்காகப் பேசுவதாக தெரியவில்லை. வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் முதல் கியூபா சீன வரை எல்லோரும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக நின்றவர்கள். எனக்குத்தெரிந்து அதற்கு ராஜபக்சே அமெரிக்காவின் அங்கிகரிக்கப் பட்ட அடியாளாக இல்லாமல் இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன்.

மிகவும் வருத்தம் என்னவெனில் சொந்தமாக அடிவாங்கிக் கொள்ளக் கூட இந்த உலகில் மக்களுக்கு உரிமை இல்லை. வாயில் எச்சில் ஒழுகக் காத்திருக்கும் அமெரிக்க ஒநாய்க்கு பலியாகவிருக்கும் லிபிய மக்களுக்கு என் அனுதாபங்கள். எண்ணெய்வளம் என்ற சாபம் உங்களை சும்மா விடாது. அது போக எகிப்து டுனீசியா மாதிரி லிபியாவில் நடக்கும் மக்கள் பேரெழுச்சிப் போராட்டங்களை மக்கள் கிளர்ச்சிகளை புரட்சி என்றும் அது அடக்கப்படுகிறது என்றும் மலினப்படுத்தும் குயுக்திக்காரர்களை ஊடகவியாபாரிகளை கண்டிக்கிறேன். நண்பர்கள் சிலரும் அதை உண்மை என நம்பியிருக்கிறார்கள் . அதுவும்வருத்தம்.

இந்த விசயம் குறித்து மிக விரிவானதொரு முழுமையானதொரு கட்டுரையை பின் வரும் இணைப்பில் காணலாம். நான் எழுத நினைத்த நிறைய தகவல்கள் அதில் உள்ளன. மிகவும் அற்புதமான கட்டுரை. அவசியம் படியுங்கள். பரப்புங்கள்.

லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்

http://kalaiy.blogspot.com/2011/03/blog-post_23.html

செவ்வாய், 22 மார்ச், 2011

உன் பரிசு


மழைக்காலத்தின் முதல் தூறல்

உன் பரிசு.


துள்ளியோடும் பசுங்கன்றின் தாய்மடி

உன் பரிசு.


நள்ளிரவுக்குப் பின்னிரவின் சுவை தேனீர்

உன் பரிசு.


குழந்தைகள் பறித்துச் செல்லும் சிறிய மஞ்சள் மலர்

உன் பரிசு.


மரங்களுக்குப் பின்னால் நகரும் மாலை நேரச் சூரியனின் ரம்மிய ஒளி

உன் பரிசு.


மலைப்பகுதிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளத்தாக்குகளின் பேரமைதி

உன் பரிசு.

திங்கள், 21 மார்ச், 2011

சின்னத் தாய்கள்


இடுப்பில் சுமந்திருக்கும்

சிறிய குழந்தையின்

கணம் தாளாமல் தடுமாறினாலும்

பெரிய குழந்தைகள்

தமது குறும்-தாய்மையை

விட்டுவிடுவதில்லை.


குழந்தைகளுக்கு
சொல்லிக் கொடுக்காதீர்கள்;
குழந்தைகளிடம்
கற்றுக் கொள்ளுங்கள்.

வெள்ளி, 11 மார்ச், 2011

கனவுகளின் பெருவேந்தன்


கனவுகளின் தெருவில் காணாமல் போனவன் நான்

கனவுகளின் வனத்தில் வேட்டையாடும் பிராணியும் நான்.


வாயிலிருந்து ஒழுகும் பற்பசை நுரையென

படுக்கையின் விளிம்பெல்லாம் கனவுகள்.


வெடித்துப் பரவும் விதைகளின் நிலமெல்லாம்

எருக்கஞ்செடிகள்.


கனவுகளைக் கொன்றழிக்கும் அகமுனைப்புடன்

உறங்குகிறேன்.


உன் கை படப்பட….

கனவுகள் கரைவதாய்

இப்போதொரு கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.



Royalty free image from http://www.fotosearch.com/illustration/dream.html