செவ்வாய், 30 நவம்பர், 2010

ரேடியோ பொட்டியை யாரோ ஒடச்சுட்டாங்க

Thanks to southdreams.com for the image.

மிகக் கடுமையான பணி நெருக்கடியில் உள்ள போதும் நந்தலாலா என்னும் அற்புதத்தை பார்க்கவும் அதைப்பற்றி எழுதவுமான இந்த வேலைகளை எனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்கிறேன். கடந்த ஞாயிறன்று எனது அம்மாவுடன் மாயாஜாலில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படம் முடிந்து வெளிவரும்போதெல்லாம் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என கவனிப்பது என் வழக்கம். அன்று அப்படி செய்ய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கடைசி ஆளாக வெளியில் வந்தேன். ஆனால் என் அம்மாவிடம் படம் எப்படி என்று கேட்டேன். தாயன்பைத்தேடும் இரண்டு பேர் தங்களின் தாய்களை கண்டு கொள்வது தான் படமெனவும் தாய்களில் பலவகை உண்டெனவும் படம் சொன்னதாக என் அம்மா சொன்னார்கள். முதலாவதை மிஷ்கினே ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார். ஜெயமோகனனும் இதையே தொட்டு எழுதி இருந்தார். ஏழாவது மட்டுமே படித்த உலக சினிமா எனப்படுகிற எந்த ஒன்றையும் பார்க்காத அரிதாக திரைப்படங்கள் (இப்போது) பார்க்கிற என் அம்மாவுக்கு மிஷ்கின் சொல்ல வந்தது புரிகிறது என்னும் போது படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்தப் படத்துக்கெ எத்தனையோ விருதுகள் கிடைக்கும். அதில் என் அம்மாவின் இந்தப் புரிதல் முதல் விருதாக இருக்கட்டும்.

மிஷ்கின் ஒரு கலை ராட்சசன் என்றே சொல்ல வேண்டும். ஒரு வெறித்தனமான மெனக்கெடலோடு கூடிய இயல்பான நடிப்பைக் கொடுத்தது நடக்கிற நதியின் இசையாய் எளிமையும் கலையழகும் மிக்கதான இந்தப் படத்தை இயக்கியது என்று இரண்டு முகங்கள் கொண்ட இந்த கலை ராட்சசனை இதுவரை இல்லாவிட்டாலும் இனிமேலாவது தமிழ்த்திரை கொண்டாடும். ரஜினிகாந்துக்குப் பிறகு எல்லா காட்சிகளிலும் இயல்பாக நடிக்கும் ஒரு தமிழ் நடிகர் மிஷ்கின்.

இந்தப்படத்தை அலசுவதோ எனது கருத்துக்களை முன் வைப்பதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. நான் இந்தப் படத்தை பார்த்ததன் மூலம் அனுபவித்த அழகிய திரைமொழியை மற்றவர்களுக்கு கோடிட்டு காட்டவே இந்தச் சின்ன கட்டுரை. இன்னுமொருமுறை பார்த்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.

இந்தப் படம் அம்மாவின் அன்பை-அண்மையை தொலைத்து வாழ்வில் தனித்திருக்கும் இரு குழந்தைகள் தாயைத்தேடுவதன் திரைவடிவம் என்று ஜெயமோகன் எழுதினார். அதே தான் நானும் எழுத விரும்புகிறேன். அந்த இரு குழந்தைகளும் மேற்கொள்ளும் பயணத்தில் சந்திக்கிற நல்ல உள்ளங்கள் பல; எளிய அன்பை அவர்களுக்கு கையளிக்கிறார்கள். ஒவ்வொரு பயணமும் அன்பிழையால் இணைக்கப்பட்டது. இந்தக் குழந்தைகள் மேற்கொள்கிற பயணம் நெடுகிலும் அவர்கள் சக மனிதர்கள் மீதான பேரன்பை பொழிகிறார்கள்; மிக இயல்பாக; நனைதலை பரிசளிக்கும் மழை மனிதர்களைச் சந்திக்கிறார்கள்.

அவர்கள் மாறி மாறி பயணிக்கும் வேறு வேறு வாகனங்கள், அவர்களின் பயணம் நெடுகிலும் கூடவே வரும் அகியின் காலுறையிலிருக்கும் நூறு ரூபாய், அந்த மூவரையும் இணைக்கும் இரவுமழை, தாயின் மார்பு மச்சத்தை பரத்தையிடம் காண்பவனின் தேடல், அவிழும் பேண்ட்டை இறுக்கமாக்க கட்டப்படும் பாவாடைக் கிழிசல், கொடாப்பில் ஆண்டாண்டு காலமாய் கிடக்கும் பால்யத்தின் கூழாங்கற்கள், இப்படியான கவிதைகள் இந்தப் படத்தில் ஏராளம். உங்களின் தகுதிக்கும் திற்மைக்கும் ஏற்ப உங்களுக்கு கிடைக்கும் கவிதைகளின் எண்ணிக்கை அதிகமாகும். தன் தாயை பாஸ்கர் மணி தூக்கிப்போகும் போது தாயின் கால் விரல்கள் பாஸ்கர் மனியின் கைவிரல்களைப் போல சுவரை உரசிக்கொண்டே போகிறது. பாஸ்கர்மணி விரல்வைத்து அழுத்தியதும் அந்தத் தாயின் உணர்வுகளாக ரோகிணி காட்டும் நடிப்பு இதுவரை நான் பார்த்த நடிப்புகளிலேயே மிகச்சிறந்த ஒன்று.

படத்தின் ஆரம்பத்தில் இரு காட்சிகள் மற்றும் சில பாடல்கள் இவை தவிர வேறு எங்கேயும் இசை என்பது எனக்கு தனியே கேட்கவில்லை. அது திரையிசையின் மாபெரும் சாதனை என்றே கருதுகிறேன். படம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. இசை தனித்து இல்லை. தாலாட்டு கேக்க எத்தனை நாள் காத்திருந்தேன் என்ற பாடல் என்னைப் போன்ற சிறுவர்களை அழவைக்கிறது.

ஆராம்பம் முதலே தாய்வாசலையும் அன்னைவயலையும் வெறும் குறியீடென்றே நம்பி வந்தேன். இறுதியில் இருவரின் தாய்களும் அங்கே தான் கிடைக்கிறார்கள். நல்ல மனதின் பிரார்த்தனை வீண்போகாது. அவர்கள் இருவரும் தம் தாயைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்தப்படம் குறித்து மிஷ்கின் நிறைய பேசி வருகிறார். இன்னும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். பாவாடை கிழிசலுக்கும் தொப்புள்கொடி உறவுக்குமான தொடர்பை மிஷ்கின் ஒரு நேர்காணாலில் சொல்லி இருந்தார். இல்லாவிட்டால் எனக்கு அந்த காட்சியழகு கண்ணில் பட்டிருக்காது. இந்தப் படத்தை ஒரு பாடப்புத்தகமாக வைத்துக்கொண்டு மிஷ்கின் என்ற கலைஞன் சினிமா மொழிப்பாடத்தை கற்பிக்குமாறு வேண்டுகிறேன். அதற்கு சகலவிதமான ஊடகங்களும் உதவ வேண்டும். நல்ல சினிமா ரசனை உள்ள நண்பர்கள் இந்தப் படத்தை முன்வைத்து எழுதுங்கள். நான் இதுவரை கேட்ட வகையில் படத்தை எல்ல்லொரும் புதுவிதமாக அணுகுகிறார்கள். இதன் திரைமொழி என்னைப் போன்ற சரசரி ரசிகனுக்கு புதிதாக உள்ளது. இதை வைத்து கற்பிக்கும் போது இன்வரும் படங்களின் திரைமொழி லகுவாக புலப்படும். மக்களின் ரசனை மேம்படும். தமில் சினிமா ரசிகர்கள் என்னாலும் ரசனைஉணர்வு மிக்கவர்கள்தான். அதை ஒருமுகப்படுத்த இது போன்ற படங்கள் உதவும்.

படத்தைப் பாருங்கள் நண்பர்களே.

வியாழன், 25 நவம்பர், 2010

சீமான் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்


செய்திகள் கேட்பதும் நாளிதழ்கள் படிப்பதும் எப்போதும் கோபத்தையே தூண்டுகின்றன. இன்று ஒரு செய்தியை கேட்டதும் மிகுந்த கோபம் தான் பொங்கியது. சீமான் மீதான வழக்கு விசாரணை இன்றும் தள்ளிப் போய் உள்ளது. மத்திய மானில அரசுகளின் பழிவாங்கும் போக்குகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாக வாய்தா வாங்கி வாங்கியே வழக்கை ஒத்தி வைத்த அரசு இன்று வழக்கறிஞர் ஆஜராகாதால் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை நடந்தால் சீமான் விடுதலை பெற அல்லது வெளியே வர வாய்ப்புகள் அதிகம் என அரசு இதை ஒத்திப் போட்டு வருகிறது. இது ஒரு நாகரீகமான ஜன நாயகப்பூர்வமான செயல் அல்ல.இப்ப்படி பண்ணிப் பண்ணி தமில் தேசியவாதிகளை உசுப்பி விடவே செய்கிறது அரசு. சீமானின் பேச்சுக்கள் பெரும்பாலும் மறைக்கப் படுவதால் மக்கலீடையே அது பரவலாக பேசப்படுவதில்லை. ஆனால் கைது சிறை என சீமான் அடைக்கப்பட்டதும் எதற்கு என்ற கேள்வி வெகு இயல்பாக எழுகிறது. நான் தமிழ்தேசியம் ஆதரிப்பவன் அல்ல என்றாலும் அப்படி கேட்பவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை எதிர்க்கிறேன். தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியோடு பயண்படுத்தி வருகிறது. தமில்தேசியவாதிகள் வைக்கும் சில கேள்விகள் பதிலளிக்க முடியாத அளவு நியாயமாகவும் உள்ளன. பெரியார் அணைப்பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி நடந்து வரும் கேரள அரசு என்ன தெசிய ஒருமைப்பாட்டை பேணி வருகிறது? கோர்ட் சொன்னாலும் தண்ணீர் தரமுடியாது என்னும் கர்னாடகம் என்ன ஒருமைப்பாட்டை பேணுகிறது? தமிழக மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம் என்று பேசியதற்கே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் வாரம் மாதமொன்றாக ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருகிற தமிழக மீனவர்களை காக்க இந்த தேசிய பாதுகாப்புவாதிகள் என்ன செய்தார்கள்? அடுத்த ஆண்டு இந்த ஆண்டளவுக்கு மீனவர்கள் மீதான வன்முறை இருக்காது என்று ப சிதம்பரம் பேசுகிறார். ஒரு உள்துறை அமைச்சர் அதுவும் தமிழர் இப்படி பேசினால் எப்படி தமிழக மீனவர்கள் இந்திய தேசியத்தை நம்புவார்கள்? இப்படி பேச ஒரு அமைச்சருக்கு எந்தளவு கல்னெஞ்சமும் திமிர்த்தனமும் இருக்க வேண்டும்? இதைக் கேள்வி கேட்கவேண்டிய தமிழக மன்னர் சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார்; சினிமா நடிகைகளை ஆடவிட்டு ரசிக்கிறார். ஆனால் இந்த மீனவர்களின்பால் பேசிய ஒரு போராட்டக்காரரை சிறையிலடைத்து, வருகிற தேர்தலை மனதில் கொண்டு உள்ளேயே வைத்திருக்க இந்த மன்னர் நினைக்கிறார். சீமானின் அரசியல் நிலைப்பாடு எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும் அவரின் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்.

கூகிள் இமேஜுக்கு நன்றிகள்>

புதன், 17 நவம்பர், 2010

ஜார்ஜ் ஆர்வெல்லும் மாலதி மைத்ரியும் அதன் பின் அந்த விலங்குப் பண்ணையும்



ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் - விலங்குப் பண்ணை என்ற குறுநாவல் பற்றி சமீபத்தில் இரண்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். குமுதம் தீபாவளி மலர் இலக்கியச் சிறப்பிதழில் (எஸ் ராமகிருஸ்ணன் பெயரில் ஒரு அரைவேக்காட்டு கதையும் அதில் உண்டு) இந்த நூலைப் பற்றி மிகவும் சிலாகித்து சொல்லி இருக்கிறார் திரு. உதயச்சந்திரன் . . எஸ். படித்தவுடன் மிகவும் எரிச்சலாக இருந்தது. இதே புத்தகத்தை ஆரம்ப மற்றும் தீவிர வாசகர்களுக்கு சிபாரிசு செய்திருந்தார் மாலதி மைத்ரி அவர்கள். எல்லா நாட்டுக்கும் எல்லா அரசியல் நிலவரங்களுக்கும் இன்றும் பொருத்தமாக ஒருதீர்க்க தரிசனம் போல இந்த நாவல் இருக்கிறதென சொல்லி இருக்கிறார்உதயசந்திரன்.



இந்தப் புத்தகத்தை1997 ஆம் ஆண்டு ஆங்கிலத் தாளுக்காக பி. எஸ். சி யின் போதுபடித்தேன். செல்வின் என்றொரு அற்புதமான ஆசிரியர் அப்போது பாடம் எடுத்தார். நான் படித்தது கந்தசாமி கண்டர் கல்லூரி என்கிற ஒரு மிகவும் பின்தங்கிய கிராமப்புற அதுவும் மாலை நேரக்கல்லூரி (காலையில் அரசு உதவிபெறும் பிரிவுகளும் மாலையில் சுய நிதி பிரிவுகளும் இருக்கும். நான் மாலை நேர மாணவன்). இன்று நினைத்துப் பார்க்கும் போது அங்கே எனக்கு சில நல்ல வாத்தியார்கள் கிடைத்தது பெரும் ஆச்சர்யமாக உள்ளது. அவர்களுல் ஒருவர் செல்வின். ஒருமுறை சமாளிபிகேஷன் என்றால் என்னவென வகுப்பில்கேட்டார். வரிசையாக பெரும் பெரும் படிப்பாளிகள் எல்லாரும் என்னென்னவோ யூகித்தார்கள். என் முறை வந்தது. அது சமாளிப்பு என்பதன் பிறழ்வடிவம் என்பதை சொன்னேன். அவர் அதை சரியென்றார். இதற்குப் பிறகும் எனக்கும் அவருக்கும் ஒரு நட்பிழை வரவில்லை. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த வாத்தியார்களில் அவரும் ஒருவர். அவர்தான் இந்த நாவலை எடுத்தார். அப்போதே இது ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியையும் அதன் வீழ்ச்சிப் போக்கினையும் பேசும் நாவலென சொன்னார். உண்மையில் அது அப்படியான ரஷ்யப் புரட்சியை கிண்டலடிக்கிற கம்யூனிசத்தை கிண்டலடிக்கிற ஒரு அற்புதமான பகடியுடைய நாவல். எழுத்து என்கிற வகையில் அது மிக எளிதான அருமையான நடையில் எழுதப்பட்ட நல்ல நாவல்தான். ஆனால் அதில் பொதிந்திருக்கும் அரசியல் முதலாளித்துவ அரசியல். நான் கம்யூனிஸ்ட் அல்ல. என்றாலும் ரஷ்யப்புரட்சியை மதிப்பவன். அதை இந்த நாவல் கேலி செய்கிறது.
ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் (டிராட்ஸ்கி மற்றும் ஸ்டாலின்) என்ற இரு பன்றிகளின் தலைமையில் புரட்சி நடந்து பண்ணையாளர் விரட்டப்பட்டு விலங்குப் பண்ணை ஆக்கப் படுகிறது. ஸ்னோபால் மிகவும் திறமையான நன்னோக்கம் கொண்ட பன்றியாக காட்டப் படுகிறது. ஒரு கட்டத்தில் ஸ்னோபால் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டு விரட்டியடிக்கப் படுகிறது. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெப்போலியன்-பன்றிகள் ஆதிக்கம் அதிகமாகி சமத்துவ விதிகள் திருத்தப் படுகின்றன. பன்றிகள் வெலை செய்யாது . மேற்பார்வை மட்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைப் போல நடவடிக்கைகளை இந்த பன்றிகள் பெறுகின்றன. அதாவது ஸ்டாலின் காலத்தில்பொதுவுடமை சமத்துவம் எல்லாம் மீறப்பட்டதாக ஜார்ஜ் ஆர்வெல் இந்தநாவலில் சொல்கிறார். நெப்போலியன் தனக்கென வெறிபிடித்த வேட்டை நாய்களின் படையொன்றை வைத்துக் கொண்டு தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் ஸ்னோபாலின் ஆதரவாளன் என்று கொன்று குவிக்கிறது. இத்தனை களேபரத்திலும் பாக்சர் கடினமாக உழைப்பது மற்றும் நெப்பொலியன் செய்வதெல்லாம் சரி என்ற இரு கோட்பாடுகளை மிக கருத்தோடு கடை பிடிக்கிறது.

ஒரு
கட்டத்தில் சாத்தியமேஇல்லாத ஒரு காற்றாலையை நிறுவ பன்றிகள் உத்தரவிடுகின்றன. அப்பணியின்போது பல இடைஞ்சல்கள். எல்லவற்றுக்கும் அடித்து விரட்டப்பட்ட ஸ்னோபால் (டிராட்ஸ்கி) தான் காரணமென பொய் பிரச்சாரம் வேறு செய்யப் படுகிறது. பாக்சரும் இந்தகடின பணியின் போது இறந்து விடுகிறது. ஏழு கட்டளைகளை விதித்துக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விலங்குப் பண்ணையில் எழும் நெப்போலியன் ரக பன்றிகளால் மீறப்பட்டு ஏனைய விலங்குகள் மட்டும் கட்டாயமாக பின்பற்றுமாறு ஆக்கப் பட்டன. பிறகு முடியும் போது பன்றிகள்மனிதர்களோடு கூட்டகிவிடுவதாகவும் மனிதர்கள் போலவே நடை உடைகளைஅமைத்துக் கொள்வதாகவும் மற்ற விலங்குகள் அதை பீதியோடு பார்ப்பதாகவும்சொல்லப் படுகிறது இந்த நாவலில். நெப்போலியன் மனிதர்களோடு கூட்டு சேர்ந்து பணம் பன்னுகிறது. விலங்குப்பண்ணையின் பெயரும் மாறுகிறது. கடைசியில் மனிதர்களுக்கும் பன்றிகளுக்கும் வித்யாசமின்றி போகிறது.

இது கம்யூனிசத்தை விமர்சிக்கிறதோரணையிலான நாவல் அல்ல. கம்யூனிச வெறுப்பு எனும் ஊசியை பகடியெனும் பஞ்சைக் கொண்டு மூடி, கண்ணில் செருக முயலும் கயமைத்தனமான படைப்பு இது. கம்யூனிசம் மீது என்னவொரு பயம் இருந்திருந்தால் சென்னைப் பல்கலைக் கழகம் இப்படியான ஒரு நாவலை கல்லூரியில் நுழையும் இளைஞனுக்கு பாடமாக வைத்திருக்கும்?

உதயச்சந்திரன் அரசு இயந்திரத்தின் ஒரு அங்கம். எனவே அவர் இந்த நாவலின் பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவரின் அரசியல் என ஒத்துக் கொள்ளலாம். சுதந்திரமான படைப்பாளியான மாலதி மைத்ரி இந்த நாவலைப் பற்றி தெரிந்துதான் சிபாரிசு செய்தாரா? அப்படி தெரிந்து செய்து இருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். வெறும் படைப்பனுபவத்திற்காக அந்த சிபாரிசு என்றும் சப்பைக்கட்டு கட்டமுடியாது. இதை விட எளிமையான நல்ல நாவல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உண்டு. அப்படி இருக்கையில் மாலதி மைத்ரி இதை சிபாரிசு செய்தது ஒன்று அவரின் அறியாமையாக இருக்கும். அது மன்னிக்கப் பட வேண்டியது. அறிந்தே சொல்லி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. ஜார்ஜ் ஆர்வெல்லுக்கு கிடைத்தவெகுமதி அவருக்கும் கிடைக்கும்.