புதன், 28 ஜூலை, 2010

ஒதுங்கியும் பதுங்கியுமென்ன?

யாருக்காகவோ தயாரிக்கப்பட்ட தூக்கு மேடையில்
நீங்கள் ஏற்றப்படலாம்.

யாருக்காகவோ சுடப்பட்ட தோட்டா
உங்களைத் துளைக்கலாம்.

யாருக்காகவோ வீசப்பட்ட கொடுவாள்
உங்கள் இதயத்தை கிழிக்கலாம்.

யாருக்காகவோ வெட்டப்பட்ட சவக்குழியில்
நீங்கள் கிடத்தப்படலாம்.

யாருக்கோவானது நமக்கும் என்கிற போது
ஒதுங்கியும் பதுங்கியுமென்ன?

ஒரே குரலெடுப்போம்.

திங்கள், 26 ஜூலை, 2010

இரட்டைக் குழல் துப்பாக்கி

காற்றில் அசைந்தாடி

தரை நழுவிய முகம் பார்க்கும் கண்ணாடி...

இரவின் பேரமைதியை உடைத்துக் கொண்டு...

என் உறக்கத்தை

குத்திக் கிழித்துப் போட்டது.

நிலமதிர கீழே விழுந்து

நெஞ்சதிர மூச்சை நிறுத்துகிற குழந்தை-

என்னை உயிர்ப்பிக்க

பின்னொரு கணத்தில்-

பெருங்குரலெடுத்து அழுகிறது.
நன்றிகள்:


தலைப்புக்காக முருகேசன் மாமாவுக்கும் ஜாஹிர் ராஜாவுக்கும்.

இந்த இரண்டு கவிதைகளும் ஒன்று போலவே ஒரே தொனியில் இருப்பதாக கவிஞர்கள் முருகேசன் மாமாவும் சங்கரும் சொன்னார்கள்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

நாதியற்ற சாவு

அடிக்கடி போய் வருகிற அந்த
பெருநகர நெடுஞ்சாலையில்,
ஏதோவொரு நாளில்,
கழிவு நீர்க்கால்வாயின் புறத்தில்,
அந்த செத்த நாயின் உடலைப் பார்த்தேன்.

முன்தினமோ கொஞ்சம் முன்னரோ
அது செத்திருக்க வேண்டும்.

பற்கள் மட்டும் மூக்கருகே துருத்தியிருக்க
நாற்றமெடுக்காத அந்த நாயின் சடலம்
கவனிப்பாரற்றிருந்தது.

பின்வந்த நாட்களிலெல்லாம்
நாளொரு நாற்றமும்
பொழுதொரு மாற்றமுமாக
நாயின் உடலம் உருக்குலைந்து வந்தது.

காகங்கள் குறைந்த
இந்தப் பெருநகரத்தில்
நாயின் அழுகல்
மெதுவாகவே நிகழ்ந்தது.

பின்
ஏதோவொரு நாளில்
அழுகுவதற்கு ஏதும் சதைகளற்று
நாறுவதற்கு ஏதும் அழுகலற்று
வெறும் எலும்புகளின் கூடென
நாயின் சடலம் காய்ந்து கிடந்தது.

அன்று-
தூரத்தில்...
யாரோ யாரையோ...
நாதியற்றுச் சாவாய்- எனத்திட்டியது
காதில் விழுந்தது.

செவ்வாய், 20 ஜூலை, 2010

பள்ளியில் தொலையும் பால்யங்கள்


அடித்து...
துவைத்து...
பிழியப்பட்ட...
குழந்தையின் பால்யமென-
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது;
மழலையர் பள்ளிச் சீருடை.

புதன், 14 ஜூலை, 2010

கரிம வர்த்தகம் - அறிமுகம்

கரிம வர்த்தகம் - அறிமுகம் (நெய்தல் ஜனவரி ௨௦௦௯ இதழில் வெளியானது )


கார்பன் டிரேடிங் (Carban trading) என்ற வார்த்தை எனக்கு 2007 ஜனவரி மாதம் கொச்சியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அறிமுகமானது. ஜெனித் என்ற மரபுசாரா எரிபொருட்களுக்கான ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி இந்தத் தலைப்பில்பேசினார். அப்போது எனக்கு மிகவும் புதுமையானதாகவும் ஈர்ப்பூட்டக் கூடியதாகவும் இருந்தது. பிறகு இணையத்திலும் பிற அறிவியல் இதடிநகளிலும் கார்பன் டிரேடிங் பற்றி நிறைய படிக்கக் கிடைத்தன. நக்கீரன் இதழை தொடர்ச்சியாகப் படிப்பவர்கள் கிரீன் இந்தியா கார்பன் மிடிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற அமைப்பின் மரம் வளருங்கள், பணம் பண்ணுங்கள் என்ற விளம்பரத்தையும் நினைவூட்டிக் கொள்ளுங்கள். ஏறத்தாழ ஒன்னரை வருடங்கள் கழித்து இந்தத் தலைப்பில் எழுத வேண்டிய அவசியமோ முக்கியத்துவமோ எனக்குத் தோன்றாவிட்டாலும் எழுதுவதற்காக என்னைத் தூண்டிய சிறு விஷயத்தை சொல்வது நலம் என்று நினைக்கிறேன். கடந்த மாதத்தில் ஒரு உணவக தேடுதல் வேட்டையில் நானும் நண்பன் பால்ராமும், பாண்டிபஜார் ரத்னா பேன் அவுஸ் பக்கம் போய்க் கொண்டிருந்த போது, கிரீன் இந்தியா கார்பன் மிடிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடட் இன் அலுவலகம் கண்ணில் பட்டது.

அதைப்பற்றி நண்பன் பால்ராமுக்கு சிறிய விளக்கம் கொடுத்த போது அவன் காட்டிய சிறு ஆச்சர்யம் இந்த விஷயத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. எனவே இந்த நெய்தல் இதழில் இதை நான் எழுதியிருக்கிறேன்.

கரிம வர்த்தகம் அப்படியென்றால் என்ன?

கார்பன் என்பதற்கு இணையான தமிடிநச் சொல்லாக கரிமம் என்பது நெடுங்காலமாக உபயோகிக்கப்பட்டு வருவதாலும் அதுவே தகுதியெனத் தோன்றுவதாலும் அதே பதத்தை இந்தக் கட்டுரையில் உபயோகித்திருக் கின்றேன். டிரேடிங் என்பதற்கு வர்த்தகம் என்றும் எழுதியிருக்கிறேன். தனித் தமிழா என்ற ஆராய்ச்சிக்குப் போகாமல் எளிமையாகப் புரிவது என்ற அளவுகோளில் கார்பன் டிரேடிங் என்பதை கரிம வர்த்தகம் என உபயோகித்திருக்கிறேன். இனியாவது கட்டுரைக்கு வருவோம்.

கார்பன் வர்த்தகம் என்பது பசுமையக வளிகளை (Green house gases) அதிகம் வெளியிட்டு பூகோள வெம்மைக்கு காரணமாகும் அமைப்புகள், தொழிலகங்கள் இன்னபிற அங்கங்கள் யாவும் தாம் வெளியிடும் பசுமையக வளிகளை (மிகக் குறிப்பாக கார்பன் டை ஆக்ஸைடு) குறைத்துக் கொள்வது அல்லது அதற்கு ஈடாக அவற்றை பூமியின் மட்டத்திலேயே உறிஞ்சிக் கொள்கிற / குறைக்கிற செயல் திட்டங்களுக்கு பணம் செலவிடுதல் ஆகும். மிகவும் குழப்பி விட்டேன் போல. எளிமையாக்க முயல்கிறேன். இதற்கு நாம் கொஞ்சம் முன்னே போக வேண்டும். மனித சமூகத்தின் முன்னேற்றம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளினால் பசுமையக வளிகளின் அளவு வளிமண்டலத்தில் கூடிக் கொண்டே போகிறது. இந்த வளிகளின் அளவு கூடும்போது அவை மேலிருந்து வருகிற சூரியனின் ஒளி மற்றும் வெப்பம் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிற அளவைக் குறைக்கின்றன. இதனால் வளிமண்டலத்தின் வெப்ப அளவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. இதுவே Golobal Warming எனப்படுகிறது. வரும் 2100க்குள் நமது பூமியின் வளிமண்டல வெப்பம் 1.4 - 5.8டிஉ அதிகரித்து விடும் என்பது கணிப்பு. நூறாண்டுக்குள் இத்தனை பெரிய உயர்வு மிகவும் கடுமையான சூழலியல், காலநிலை விளைவுகளை உண்டு பண்ணக் கூடியது. ஊடகங்களின் தீராத பிரச்சாரத்தால் இதன் விளைவுகள் எப்படியிருக்குமென எல்லோருக்கும் தெரியும். நிலப்பகுதிகள் கடலாகும். மழை மாறிப்பொழியும்; வனங்கள் பாலையாகும். மெதுவாக; ஆனால் உறுதியாக.

எனவே இந்த பூகோள வெம்மையடைதல் நிகடிநவை கட்டுக்குள் வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானது கியோட்டோ வழிமுறைகள்(Kyoto protocol). பன்னாட்டு காலநிலை மாற்றத்திற்கான செயல்பாட்டு கூட்டமைப்பு (Internatoinal Frame Work Convention of Climate Change) என்ற அமைப்பு 1997ம் ஆண்டு டிசம்பர் 11ல் கியோட்டோ நகரில் அவர்களது மூன்றாவது கருத்தரங்கிற்காக கூடியது. அக்கருத்தரங்கின் இறுதியில் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக பசுமையக வளிகளை குறைப்பதற்காக சில வழிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அந்த வழிமுறைகளே கியோட்டோ வழிமுறைகள் என வழங்கப்படுகிறது. 1997ல் ஏற்படுத்தப்பட்டாலும் இந்த வழிமுறைகள் 2005இல் இருந்துதான் நடைமுறைக்கு வந்தன. நவம்பர் 2007 கணக்கின்படி மொத்தம் 178 நாடுகள் இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. கியோட்டோ வழிமுறைகளின் சாராம்சம் பூகோள வெம்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் பசுமையக வளிகளின் அளவைக் கட்டுப்படுத்துவதே கியோட்டோ வழிமுறைகளின் ஆகப்பெரும் நோக்கம். கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட ஆறு பசுமையக வளிகள் பல்வேறு நடவடிக்கைகளால் பூமியில் அதிகரிக்கின்றன. அனல் மின்சாரத் தயாரிப்பு, பல்வேறு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள், வாகனப் போக்குவரத்து, குளிர்சாதனங்கள் மற்றும் நெல் வயல்கள் என இந்தப் பசுமையக வளிகளை அதிகப்படுத்தும் காரணிகள் பல உள்ளன. இவற்றில் எந்தெந்த காரணிகளின் பயன்பாட்டைக் குறைத்தால் (அது மனிதகுலஉபயோகத் தளத்தையும் பாதிக்காத வண்ணம்) இந்த வளிகளின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை அந்த மாநாட்டில் அலசினார்கள். அதன்படி வளர்ந்த நாடுகள் எனக் கருதப்படும் 31 நாடுகள் தங்களது பசுமைய வளிகளை அதிகப்படுத்தும் செயல் பாடுகளை 2005இல் இருந்து குறைத்து கொள்வது எனவும் மீதமுள்ள 130க்கும் அதிகமான வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் இந்தச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் உதவலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு கியோட்டோ வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

இதன்படி வளர்ந்த நாடுகள் தமது பசுமையக வாயுக்களை அதிகமாக்கும் செயல்களைக் கட்டுப்படுத்தலாம் அல்லது பூமியின் வேறெந்த இடத்திலும் இத்தகைய பசுமையக வாயுக்களை குறைக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் அவர்களின் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளலாம் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கடைசி வழிமுறைதான் கார்பன் வர்த்தகத்திற்கு அடிகோலியது. வளர்ந்த நாடுகளின் தொழில் நிலையங்கள் பசுமையக வளிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக உலகின் பிற பகுதிகளில் பசுமையக வளிகளைக் குறைக்கும் செயல்பாடுகளை நிதியுதவி செய்தன. இது உண்மையில் வியாபாரம். நிதியுதவி என்ற வார்த்தை இங்கே சரியாகப் பொருந்தாது. இது எப்படி வியாபாரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு ஒரு வளர்ந்த நாட்டின் அனல்மின் நிலையம் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடும் அளவைக் குறைப்பதற்கு பெரும் செலவாகுமென்று அறிந்து கொண்டால் பூமியின் மற்ற இடங்களில் குறிப்பாக வளரும் நாடுகளில் காற்றாலை மின்சாரமோ புனல் மின்சாரமோ தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு குறைத்த அளவை பணத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த புனல் மின்சார நிறுவனம் தன் செயல்பாட்டால் எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைத்ததோ அது கார்பன் கிரெடிட் எனப்படும். இந்தக் கார்பன் கிரெடிட்- ஐ வளர்ந்த நாடுகளில் உள்ள அனல் மின் நிலையங்களோ வேறெந்த தொழில் நிறுவனங்களோ விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

இப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவர் குறைத்த கார்பன் டை ஆக்ஸைடை தன்னுடைய குறைப்புக் கணக்காக காட்டிக்கொள்ளலாம். நமது பூமிக்கு இருப்பது ஒரே வளிமண்டலம். ஓரிடத்தில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகப்படுத்துபவர்கள் வேறொரு இடத்தில் குறைத்து தன் பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்வது போல என்றும் இதை நாம் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இடையே பணம் இருக்கிறது என்பதை மறக்கலாகாது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்கள் நாட்டிலேயே Clean Development Mechanisam என்ற செயல்முறையை அங்கீகரிக்கும் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த அமைப்புகள் கியோட்டோ வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தியாவில் இதுவரை 154 CDM கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை நம் உள்நாட்டுக் குழு பரிசீலித்து ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் அங்கீகாரத்திற்கு அனுப்பும். அதன்பின் இந்த CDMகளை விண்ணப்பித்த நமது நாட்டு நிறுவனங்கள் தங்களது கார்பன் கிரெடிட்களை வேறு நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் பார்க்கலாம்.

இந்த ஊனுஆகள் நிறைய வகைப்படுகின்றன. தரிசு நிலையங்களில் மரம் வளர்த்தல், சாண எரிவாயு, குப்பையிலிருந்து மின்சாரம், கடலலைகளில் இருந்து மின் உற்பத்தி, நீர் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி என இந்த பட்டியல் நீள்கிறது. மொத்தத்தின் பாசில் ஃபியூல் எனப்படுகிற நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக்கள் இவற்றை எரிக்கும் செயல் முறைகளைத் தவிர்த்து மாற்றான வழிகளில் சக்தியை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் CDMயில் அடங்கும். மேலோட்டமாகப் பார்த்தால் வியாபார ரீதியில் நல்ல நடைமுறையாகவும் சூழலியல் ரீதியில் பெரிதும் வரவேற்கத்தக்கதுமான இந்த கியோட்டோ வழிமுறைகளின்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டவில்லை.மேலாக அமெரிக்கா இந்த விதிமுறைகளை ஏற்று நடைமுறைப்படுத்த இன்னும் கையெழுத்து போடவில்லை. கியோட்டோ, வழிமுறைகள் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்படவில்லை என்று ஜார்ஜ் புஷ் அறிவுப்பூர்வமாக(!) மறுத்து விட்டார். மேலும் தனது நாடு இது குறித்த ஆடீநுவில் தொடர்ந்து ஈடுபட்டு உண்மை நிலையினை வெளிப்படுத்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவர் முன்பான அதிபர் தேர்தலில் செலவழித்த தொகையில் நான்கில் ஒரு பங்கு. தனக்காக நான்கு பங்கு. உலக நன்மைக்கு கால் பங்கு. இதை நான் சொல்லவில்லை. டேவிட் கார்ன் என்கிற மேலைநாட்டு பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார். இதற்கு மேலும் ஒரு படி போடீநு இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் இந்த வழிமுறைகளின்படி விலக்கு அளிக்கப் பட்டிருப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறது அமெரிக்கா. உலகின் மொத்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் 20 சதவீதம் அமெரிக்கா மட்டுமே பங்கு வகுக்கிறது. 1990 கணக்கின்படி பசுமையக வளிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய பட்டியலில் இருந்த ரஷ்யா பின்னர் 50 சதவீதம் தமது கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைத்ததும் கரிம வர்த்தகத்தில் இப்போது பணம் பார்ப்பதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

வளரும் நாடாக உள்ள இந்தியா இப்போது தன் கார்பன் கிரெடிட்களை விற்று வருவதால் வளர்ந்த நாடாகிய பின் யாரிடம் போடீநு கார்பன் கிரெடிட் வாங்கும் என்ற கேள்வியும் இன்று எழுகிறது. மொத்ததில் பூமி சூடாவதைத் தடுக்கிற வகையில், வளரும் நாடுகளை கட்டுப்படுத்தாலும் இருக்கிற இந்த கியோட்டோ வழிமுறைகள் வரவேற்கத்தக்கன. கரிம வர்த்தகம் என்பது தற்சமயம் நலம் தருவதாக இருந்தாலும் அதன் எதிர்கால விளைவுகள் பரவலாக விவாதிக்கப்பட வேண்டியவை. இதுபோக பூகோள வெம்மையைத் தடுக்க சாதாரண மக்கள் கூட தம்மாலான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தேவையற்ற நேரத்தில் எரிகிற மின்விளக்கை நீங்கள் அணைத்தால் எங்கோ ஒரு காட்டில் வெட்டப்படுகிற மரத்தைத் காப்பாற்றுகிறீர்கள். சாதாரண தொலைவுப் பயணத்திற்கு தனிப்பட்ட உங்களின் வாகனப் போக்குவரத்தை நீங்கள் குறைத்தால் ஒரு மரம் நட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம். உபயோகிக்கும் உரிமையும் எதிர்கால சந்ததிக்கு காத்து வைக்கிற கடமையும் எல்லோருக்கும் உண்டு.

பனித்துளி செய்யும் பாக்டீரியாநீரின் வெப்ப நிலை 0ºC க்கு கீழ் செல்லும்போது அது ஐஸ் எனப்படுகிற பனிக்கட்டி நிலையை அடைகிறது. சுருக்கமாக சொன்னால் நீரின் திடவடிவம் தான் பனிக்கட்டி. இது பொதுவாக எல்லொருக்கும் தெரிந்த தகவல் தான். ஆனால் ஒரு வகை பாக்டீரியாவே பனிக்கட்டியை உருவாக்குகிறது என்பது வியப்பளிக்கும் செய்திதானே?.அப்படி ஒரு பாக்டீரியா உண்டு. அதன் பெயர் சூடோமோனாஸ் சிரிஞ்சே. பாக்டீரியாக்கள் என்பவை நுண்ணோக்கி மூலமாகவே பார்க்க முடிகிற ஒரு செல்லால் ஆன உயிரினங்கள். இந்த சூடோமோனாஸ் சிரிஞ்சேவின் மேற்புறத்தில் ஒருவகை புரதம் உள்ளது. அதுதான் இப்படி நீரை பனிக்கட்டியாக்கும் வித்தையை செய்கிறது.


இந்தப் புரதங்கள் பனிக்கட்டியை உண்டாக்கத்தேவையான உட்கருவாக செயல்படுகின்றன. சாதாரணமாக வளிமண்டலத்தில் உள்ள தூசு தும்புகள் வெப்ப நிலை குறைகிற சூழலில் இதுபோல பனித்திவலைகளை பனித்தூவல்களை உண்டாக்குவதுண்டு. இவை மழை பொழிய பெரிதும் காரணமாக இருப்பவை. ஆனால் இந்த பாக்டீரிய புரதங்கள் சாதாரண வெப்ப நிலைகளில் கூட இது போல பனித்தூவல்களை உண்டக்கக் கூடியவை. அதனால் தான் சில பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை மையங்களில் இந்தப் பாக்டீரியாக்களைக் கொண்டு பனிமழை அல்லது பனித்தூவல் என்றெல்லாம் செய்யப்படுகிறது.

இந்த பாக்டீரியாவை முதலில் கண்டறிந்த விதம் இன்னும் ஆச்சர்யமானது. மேற்கத்திய குளிர் பிரதேசங்களில் பனிக்காலங்களில் தாவரங்களின் இலைகள் கருகிவிடுவது வழக்கம். அதன் தொடர்பான ஆராய்ச்சியில் தான் இந்த பாக்டீரியாவானது இலைகளின் உள்ளே உள்ள நீரை பனிக்கட்டியாக்கிவிடுவதன் மூலம் அந்த இலைகளை கருகடிக்கிறது என கண்டு கொண்டார்கள். அதற்கு பின்னான அறிவியல் முன்னேற்றங்கள் கொஞ்சம் கவலை தரக்கூடியன. இந்த மாதிரி இலைகளை கருகடிப்பதால் பெரும் பொருள் நட்டம் ஏர்படுவது வழக்கம். அதனால் இந்த தாவர நோயுருவாக்கியை அழிக்க சிலர் ஒரு வழி கண்டார்கள். இயல்பாக பனிக்கட்டியை உண்டாக்குகிற இந்த வகை பாக்டீரியாக்களுக்கு மாறாக அது போல செய்யாத சில இதே ஜாதி பாக்டீரியாக்களை கண்டு பிடித்து விட்டார்கள். முன்னதுக்கு ஐஸ் பிளஸ் (Ice+) எனவும் பின்னதுக்கு ஐஸ் மைனஸ் (Ice-) எனவும் பெயர். இந்த Ice- பாக்டீரியாக்கள் பனிக்கட்டியை உண்டாக்கும் புரதத்தினை உற்பத்தி செய்யும் திறனற்றவை. இயற்கையாகவே இது போல Ice- பாக்டீரியாக்கள் உள்ளன என்றாலும் மரபணுத்திருத்தத் தொழில்னுட்பம் மூலம் இதுபோல அதிகளவு Ice- பாக்டீரியாக்களை உருவாக்கி அதை தாவரங்களில் தெளித்தார்கள். அப்படி தெளிக்கும் போது Ice+- Ice- இரண்டுக்கும் உள்ள போட்டியின் காரணமாக இலைகள் கருகுவது குறைந்தது.
ஆனால் இதில் உள்ள மற்றொரு அபாயம் மிகப்பெரியது. இந்த சூடோமோனாஸ் வகை பாக்டீரியாக்கள் சுற்றுப்புறங்களில் பெரிதும் பரவுபவை. காற்றில் இயல்பாக கலக்கக் கூடியவை. இவை வளிமண்டலத்தில் கலக்க நேரிடும் போது மழை உண்டாவதற்கான சாத்தியங்களை பெரிதும் குறைக்கக் கூடியது. எனவே அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் முயற்சிகள் சற்றே தொய்வடைந்துள்ளன. இதையே திருப்பி போட்டால் அதாவது பாcடீரியாவை பயண்படுத்தி மழையை உண்டாக்கலாம் என கண்டும் கொண்டார்கள். மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் பார்க்கவும். http://news.mongabay.com/bioenergy/2008/02/scientists-discover-rain-making.html

பொதுவாக நான் இணையத்தில் இருந்து படங்களை எடுத்து பயண்படுத்துவது இல்லை. ஆனாலும் இதற்கு படங்கள் இருந்தால் நல்லது என்பதால் அப்படி செய்திருக்கிறேன். நான் வால்பாறையில் வேலை செய்த போது தேயிலையில் இது போல பனியால் இலை கருகுவதை கண்டு இந்த வகை பாக்டீரியா கிடைக்குமா என கொஞ்ச காலம் ஆய்வு செய்தேன். வெற்றி காண முடியவில்லை. அது நடந்கிருந்தால் எனது படங்களையே பயண்படுத்தியிருப்பேன்.

Pictures are from

http://www.decoratingstudio.com/images/images_fringe/beaded_garland/faux_ice_cubes.jpg

http://genome.jgi-psf.org/psesy/Psyr_72.jpg

http://news.mongabay.com/bioenergy/2008/02/scientists-discover-rain-making.html


செவ்வாய், 13 ஜூலை, 2010

மழை பெய்தால் மண்வாசம்
மழை பெய்தால் மண்வாசம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த வாசம் மண்ணுக்கு வந்தது எப்படி என்பது நுண்ணுயிரியாளர்களுக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தெரியுமா என தெரியவில்லை. நான் UG படித்த போது (உண்மையில் அப்போது படித்தேன்; அது தான் இன்னமும் என்னை இன்னமும் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது). நானும் நண்பர் சேரலாதனும் அடிக்கடி நூலகம் செல்பவர்கள். அங்கே ஒரு அற்புதமான நுண்ணுயிரியல் புத்தகம் இருந்தது. அதில் ஒவ்வொரு பாடத்திலும் நுண்ணுயிரியல் தொடர்பான வியப்புக்குரிய செய்திகளை கட்டம் கட்டி கொடுத்திருப்பார்கள். அப்போதே எங்களுக்கு ஆங்கிலம் நன்றாகப் புரிந்தது ஒரு சந்தோசமான விசயம் தான். அந்த வியப்புச்செய்திகள் என்னை எப்போதுமே வியப்பிலாழ்த்தி வருபவை. ஆனால் இந்த விசயம் அந்தளவு அல்ல. அவை பற்றி மெதுவாக எழுதுகிறேன்.

மழை பெய்ததும் வருகிற மண்வாசம் மண்ணின் வாசம் அல்ல. மண்ணில் இருக்கிற ஆக்டினோமைசீட்ஸ் என்கிற ஒருவகை பாக்டீரிய நுண்ணுயிர்கள் வெளியிடும் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை வேதிப்பொருள் தான் அந்த வாசத்திற்கு காரணம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது அந்த நுண்ணுயிர்கள் தமது உடலின் மேற்பரப்பிலிருக்கிற ஸ்போர் என்னும் ஒருவித இனவிருத்திக்கான உடலிகளை வெளியிடும் வேலையை ஆரம்பிக்கின்றன. அப்பொதுதான் அந்த வேதிப் பொருட்கள் வெளியிடப்படுகின்றன. மின்னல் அல்லது மழை இந்த இரண்டும் அந்த வேலையை தூண்டும் காரணிகளாகின்றன. அந்த வேதிப் பொருட்கள் காற்றில் கற்பூரம் போல கரைபவை. எனவே அந்தப் பகுதி முழுக்க அந்த வாசம் விரவி நிற்கும். இந்த வித நுண்ணுயிரிகளிலிருந்து தான் சுமார் 75 சதவீதம் ஆண்டிபயாடிக் எனப்படுகிற உயிரெதிர்ப்பொருட்கள் பெறப்படுகின்றன. காயம் பட்ட இடத்தில் மண்ணை எடுத்து அப்பிக்கொள்ளும் கிராமத்தவர்களது பழக்கம் இந்த உயிரிகளால் தான் சரியான செயலாகிறது.


பிழைப்புவாதம்

அப்டின்னா பெருசா நினச்சுக்க வேண்டாம். பிழைப்புக்காக நான் சார்ந்திருக்கக் கூடிய துறையில் எனக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச செய்திகளை முக்கியமாக சுவாரஸ்யமான செய்திகளை இனிமேல் அவ்வப்போது இந்தத் தலைப்பின் கீழ் எழுதலாம் என்று நினைக்கிறேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வோம்.

வியாழன், 8 ஜூலை, 2010

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை

நண்பர் சங்கரின் அரசியல் அங்கத சினிமாவின் துவக்கம் – நண்பர் ஜே.பிக்கு ஓர் எதிர்வினை என்ற பதிவுக்கு என் பதிலாக இந்தப் பதிவு

சங்கர்

ரொம்ப நிறைய எழுத முடியாத நிலை. என்றாலும் உங்கள் பதிவின் நோக்கம் எழுதத் தூண்டுகிறது. எந்த நோக்கமானாலும் சமூகம் பற்றிய சமகால அரசியல் பற்றிய விமர்சனங்கள் தாங்கி வரும் படைப்புகளை வரவேற்கவே செய்ய வேண்டும். மணிரத்னம் கூட அவருடைய பார்வையில் சமகால அரசியலை அவர் படங்களில் அலசுகிறார். ஆனால் நான் மணியையும் சிம்புதேவனையும் ஒப்பிடவில்லை. நான் சிம்புதேவனின் பேட்டி பற்றி எழுதியதற்கு காரணம் படம் ஒரு இந்திய கெளபாய் படமாகத்தான் விளம்பரப்படுத்தப்பட்டது. தொலைக்காட்சிகளில் சிம்புதேவனும் அதை முன்னிறுத்தி, லாரன்ஸை முன்னிறுத்தி, செட்டுகளை முன்னிறுத்திதான் பேசினார். நான் இரண்டு நேர்காணல்களை பார்த்தேன். படம் வந்த பிறகு நான் அவரின் நேர்காணல்களை படிக்கவோ பார்க்கவோ இல்லை. எஸ் ராமகிருஷ்னன் குட்டி ரேவதி சர்ச்சையில் எஸ் ராம்கி என்ற தனிப்பட்ட மனிதன் மீதான மரியாதை குறைந்தது. நீங்கள் படத்தில் கண்டடைந்த அரசியல் மற்றும் அங்கதத்தை சிம்பு தேவன் முன்னிறுத்த வேண்டியது அவசியம் என்று நான் நினைப்பதற்கு மற்றுமொரு தமிழ்ப்படைப்பாளியை இங்கே அழைத்து வருகிறேன். எஸ். பி. ஜனநாதன். வணிக சினிமாவுக்கான அம்சங்களுடன் வந்த அவரது ஈ என்ற படம் விமர்சித்த அரசியல் சம்காலத்து சர்வதேச அரசியல் தான். அது மிகவும் நேரடியாக விமர்சனம் செய்த படம். அந்த படத்தின் கடையில் நெல்லை மணி பேசும் வசனங்கள் சுலபமாக சென்சாரால் தடை செய்யப்பட்டிருக்க வேண்டிய, அமேரிக்காவே பயப்பட வேண்டிய வசனங்கள். நான் பேராண்மை படத்தை பெரிதாக சிலாகித்து எழுதி இருந்தாலும் ஈ படம் நான் மிகவும் அதிசயித்த படம். சமகால அரசியலை சமரசம் இல்லாமல் விமர்சித்த எம். ஆர். ராதாவை என்ன பன்ன முடிந்தது இவர்களால்?

அமெரிக்க எதிர்ப்பு என்பது என்னைப்பொறுத்த வரை ஒரு வெகுஜன ரசனைக்கு வந்து விட்டது. அதை சிம்பு தேவன் உபயோகித்துக்கொண்டாரோ என்ற மயக்கம் எனக்கு உண்டு. யாரையும் சந்தேகப்படுவது எனது இயல்பு. அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால் மகிழும் முதல் ஆளும் நான் தான். உண்மையில் வெறும் அமெரிக்க எதிர்ப்பும் விமர்சனங்களும் ஒரு வகை திசை திருப்பல்கள் தான். பிரச்சனைகளின் மையம் அமெரிக்கா அல்ல. அமெரிக்கா அந்த பிரச்சனைகளை செயல்படுத்தும் கைகள் அவ்வளவே. என்றாலும் தமிழ்ப்படங்களில் இந்தளவாவது காட்டியிருப்பது மகிழ்ச்சிதான். ஆனாலும் அதன் நோக்கம் குறித்த என் சந்தேகங்கள் தீரவில்லை. சிம்புதேவன் ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர் என்று நினைவு. அதுகூட இப்போது செம்மொழி மாநாட்டை படு கேவலாமக விமர்சித்து எழுதி இருக்கிறது. அந்த ஒரு கட்டுரையை பாராட்டலாமே தவிர அந்தப் பத்திரிக்கையை முற்போக்கானதாக கருத முடியாது. அது என்ன நோக்கத்துக்காக அப்படி எழுதுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். அது போலத்தான் சிம்புதேவன் மீதான என் சந்தேகமும். இதற்கும் அவர் அங்கே வேலை பாத்ததுக்கும் சம்பந்தம் இல்லை. ஆயிரத்தில் ஒருவன் ஈழப்பிரச்சனையை மையப்படுத்துகிறது என்பதற்காக செல்வராகவனை ஈழ அதரவாளாக அடையாலம் கொள்ள முடியாது. சிம்பு தேவன் இந்தப்படத்திலும் இதற்கு முன்னாலும் எடுத்துக்கொண்ட எந்தப் பிரச்சனையும் ஆவ்ருக்கு நம்ம ஊரில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத பொதுவான தளத்தில் பேசப்படுபவைதான். ஆனால் எஸ் பி ஜன நாதனின் அரசியல் தத்துவ ரீதியாக ஆட்சியாளர்களை மிகவும் பயங்கொள்ள வைக்கக்கூடியது. அவர் தான் பயப்ப்பட வேண்டுமே தவிர சிம்பு தேவன் அல்ல. மேலாக தீ என்றொரு படம் இப்போது வந்ததே? நினைவில் இருக்குமாதெரியவில்லை. சன் பிக்சர்ச் படம். அவர்கள் குடும்பச்சண்டை உச்சத்தில் இருந்த போது வந்த படம். அதை செய்யத்தான் தைரியம் தேவை. ஓட்டுக்கு பணம் கொடுத்து பதவிக்கு வந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. காவல்துறை சங்கம் என மிக லோக்கலான அரசியலை அந்தப் படம் கொண்டிருந்தது. ஆனால் அது வெரும் குடும்பப்பகையின் விளைவே. இந்த மட்டில் சிம்புதேவனின் அமேரிக்க எதிர்ப்பும் காசு பண்ணும் ஒரு வழியே என்று நான் சந்தேகிக்கிறேன். என் சந்தேகம் பொய்த்துப்போக வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன்.

மிகவும் அதிகப்படி என்றாலும் படம் பார்த்த பிறகு எனக்கு அரட்டை அரங்கம் பார்த்த உணர்வுதான் வந்தது. நண்பர் முத்து இந்தப் படத்தை பார்த்த நாளில் இருந்து உசா புரம் அணுஒப்பந்தம் என்பது பற்றியெல்லாம் நிறைய பாராட்டினார். சிங்கம் லாரன்ஸின் இறக்கும் தருவாயில் வரும் வசனங்கல் ஈழத்தில் பிரபாகரன் பேச நேர்ந்த வசனாமாக இருக்கலாம் எனவும் சொன்னார். ஒரு துரோகிக்கு டக்ளாண்டி என்று டக்ளஸ் தேவானந்தாவை நினைவூட்டும் பெயர், பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் போன்ற வசனங்கள் எல்லாம் ஈழக்கொடுமைகளை பிரதிபலித்தவை என்று மிகச்சாதாரணமாக உணர்ந்து கொள்ளலாம். இன்னும் சொல்லபோனால் ஆயிரத்தில் ஒருவன் படம் ஈழ யுத்தத்தில் சோனியாவின் பங்கை நினைவூட்டுகிர விதமாக ரீமாவின் பாத்திரம் என்றும் அவர் சொன்னார். எனக்கும் படத்தின் பல்வேறு காட்சிகள் அதையே உறுதிப்படுத்தின. என்றாலும் சோழர்களின் மரியாதை சம்பத்தப்பட்ட சர்ச்சையில் அந்தப் படம் நுழைந்த போது செல்வராகவன் இது பற்றி விளக்காமல் ஒரு கற்பனையே என்ற அளவில் நின்று கொண்டார். உண்மை நோக்கம் அதுவென்றால் நேர்மையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. சிம்பு தேவன் எஸ் பி ஜனனாதன் போல அதைப்பற்றி நேரடியாக சொல்லி இருந்தால் அது மகிழ்ச்சி.ஆனால் அப்படி இல்லாமல் இது ஒரு கெளபாய் படம் என்று சொல்லி வருபவரின் படத்தை அரசியல் படம் என்று நாம் மகிழ்ந்து கொள்ளலாமே தவிர ஒத்துக் கொள்ள முடியாது. (எஸ் பி ஜனனாதனும் தற்சமயம் அரசுசாரா நிறுவனங்களின் கைப்பாவையாக மாறி விட்டார் என்ற தகவலும் உலவுகிறது. அதற்கு சான்றளிக்கும் காட்சிகலும் பேராண்மையில் உண்டு.). இந்த அரசியல் எல்லாம் மிக நுணுக்கமானவை சங்கர். NGO-களுக்கு நமது மனித உரிமைகளின் மேல் என்ன அக்கறை? கிராமத்து மக்கலை ஒன்று திரட்டி குளம் வெட்ட வேண்டிய தேவை அவர்களுக்கென்ன? ரொம்ப விரிவாகப் பேச வேண்டியவை. போக இங்கே சம்பந்தமில்லாதவை.

அதுபோக மாடுசெத்தான் மனுசன் திண்னான் என்ற வரிகள் செத்த மாடுகளை திண்பவர்கள் என்று காலங்காலமாக கேவலப்படுத்தப் பட்டு வரும் தாழ்த்தப் பட்ட மக்களை மேலும் கேவலப்படுத்துகிறது என்று சில அமைப்புகள் அந்த வரியை மாற்றச்சொல்லி போராட்டம் செய்தன. கண்டனம் தெரிவித்தன. இசையமப்பாளர் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் (இதுவும் இயக்குனர் என்றே நினைக்கிறேன்.) இவர்கள் அந்தப் பாடல் வரிகள் அவ்வாறான நோக்கத்தில் எழுதப்படவில்லை எனவே நீக்கத்தேவை இல்லை என்று தெரிவித்தனர். சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது. ஆட்கள் நினைவில் இல்லை.

நேரிலோ போனிலோ விரிவாக பேசுவோம். என்றாலும் எழுத தூண்டிய உங்கள் பதிவுக்கு நன்றி. முடிந்தால் இந்த விவாதங்களை தொடர்ந்து இருவரும் பதிவு செய்வோம்.


ஞாயிறு, 4 ஜூலை, 2010

எப்படித்தான் இருக்கிறீர்கள்?


முள் கம்பிகளுக்குள் வாழ விதிக்கப்பட்டவர்களே!!!
எப்படி இருக்கிறீர்கள்?

இழந்து விட்ட கணுக்கால்களின்
ரணங்கள் ஆறி விட்டனவா?

கரங்களை இழந்த உமது குழந்தைகள்
உணவுண்ணப் பழகிக் கொண்டனவா?

கர்ப்பினிப் பெண்களைப் புதைத்த இடத்தில்
மலர்கள் ஏதேனும் பூத்துள்ளனவா?

ராணுவத்தடைகளைத்தாண்டி
பெண்கள் தண்ணீரை மட்டும் சுமந்து வருகிறார்களா?

காணாமல் போய்விட்டவர்களைப்பற்றி
தகவல்கள் ஏதும் உண்டா?

இங்கேயா?

உங்களின் கவிதைகளை
நாங்களே எழுதுவோம்.


உங்களின் கண்ணீரை
நாங்களே மேடையேறி வடித்துக் கொள்வோம்.

உங்கள் வாழ்வை
உருக உருக திரைப்படமாய் எடுப்போம்.

சலித்துப்போகாதிருக்க
மாநாடுகள் நடத்திக் கொள்வோம்.

சோறோ...
சுதந்திரமோ...
சுய நிர்ணய உரிமையோ...
நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.
இங்கேயிருந்து கரங்களும் நீளாது; குரல்களும் எழாது.

வியாழன், 1 ஜூலை, 2010

களவாணி- ஒரு எளிமையான பொழுதுபோக்கு படம்

இன்று மாயாஜால் ஐந்தாவது திரையில் களவாணி படம் பார்த்தேன்.ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு முழு நீள பொழுதுபொக்கு படம். நண்பர் முத்தெழிலன் பி வி ஆர் காம்ப்ளக்ஸ் என்ற மல்டிப்ளக்ஸில் இந்தப் படத்தை பார்த்து விட்டு மேலும் அதே செலவுக்கு என்னையும் உடன் அழைத்துப் போய் (அவரது செலவில்) இரண்டாவது முறையாக படம் பார்த்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இயக்குனர் படத்தில் சில விசயங்களை சரியாக கவனிக்காமல் தவறு செய்திருந்தாலும் ஒட்டு மொத்த படத்தின் உற்சாகம் அந்தத் தவ்றுகளை புறந்தள்ளி விடுகின்றன. நடிகர்கள் தேர்வு முதல் இடங்களை தேர்வு செய்தது என பல இடங்களில் இயக்குனர் சற்குணம் மிகவும் திறமையானவராகப் படுகிறார். என்றாலும் நான் கவனித்த சில தவறுகள் எளிதாக சரியாக செய்திருக்க வேண்டியவை.

இங்கிட்டு மீனாச்சி அங்கிட்டு யாருஎன்று அற்புதமாக நமக்கெல்லாம் அறிமுகமான விமல் இந்தப் படத்திலும் மிக அற்புதமாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். அறிக்கி என்கிற அறிவழகனைபோல ஊருக்கு ஒரு ஆள் கட்டாயம் உண்டு. அந்த உடல்மொழியும் யமஹா காலை மூடியிருக்கும் செருப்பு வெள்ளை சட்டை வேட்டி என இயல்பானவற்றை கூடுமான அளவு இயல்பாக செய்திருக்கிறார். ஆனால் அவனின் அம்மா மற்றும் தங்கை பாத்திரங்கள் கொஞ்சம் செயற்கையாகத்தோன்றுகிறது. மேலே சொன்னது போல இந்த எல்லாக் குறைகளையும் படம் அடித்துத் தள்ளி போகிறது. பஞ்சாயத்துகருப்புவருகிற மிகப்பெரும்பாலான காட்சிகள் கதையோடு இயைந்த சிரிப்புப் பகுதிகள். மிகவும் ரசிக்கத்தக்கன. ஒன்றிரன்டு இருபொருள் மொழிதல்கள் இருந்தாலும் ரசிக்கத்தக்கனவே.

கதை நடக்கும் இடம் ஒரத்தனாடு மன்னார்குடி பகுதிகள். புதிய இடங்கள். புதிய தளம். படத்தின் ஆரம்ப கட்ட கிரிக்கெட் போட்டி காட்சிகள் பார்க்கும் போது ஒளிப்பதிவாளர் மேல் எரிச்சலாக இருந்தது. ஆனால் பின் வந்தன மிக அருமையாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தை பற்றி சிலாகித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் மூன்றை மட்டும் இங்கே வைக்கிறேன்.

1. இந்தப் படத்தில் இளங்கோ என்ற கோபக்காரர் (மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.) தனது பெரியப்பாவின் சொல்லுக்கு கொடுக்கும் மரியாதை. ஊர்களில் இன்னும் சில பெரியப்பாக்கள் மதிக்கப்படுகிறார்கள். அந்த செய்தி இந்தப் படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

2. சண்டை நடக்கப்போகிறதோ என நாம் எதிர்பார்க்கும் தருணங்கள் காமெடிக்காட்சிகளாவது எதிர்பாராத வியப்பு.

3. சரண்யா தவிர பெரும்பாலான பாத்திரங்களின் இயல்பான நடிப்பு.

மிகவும் உறுத்தலாக இருந்த ஒரே பெரிய அதே சமயம் முக்கியமான விசயம். மகேஸ் என்ற கதை நாயகி பள்ளிக்கூட சிறுமியாக காட்டப்படுவது. இது போல ந்டக்கிறது என்றாலும் திரையில் கொஞ்சம் மாறுதலாக காண்பிப்பது நல்லது. அதை வியாபார நோக்கில் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அது போல நடக்க கூடாது என்பது என் விருப்பம்.

நமக்கு நெருக்கமானவர்களுக்கு நாம் விரும்பிய ஒன்றை பரிந்துரை செய்வதும் ஒருவிதத்தில் பரிசளிப்பது போன்றதுதான். இதைப்படிக்கும் அன்புள்ளவர்கள் அத்தனை பேரையும் இந்தப் படத்தை பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். இந்தப் படத்தை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்.

படம் பாருங்கள். நல்லா இருக்கு.

.