புதன், 18 ஆகஸ்ட், 2010

NDM 1சூப்பர்பக்: என்னதான் இது? சில அடிப்படை செய்திகள்



கடந்த வாரம் புதன்கிழமை என்று நினைவு. அண்ணா பல்கலைக்கழக உணவகம் முன்னமர்ந்து சுமாரான அந்த மாலைப்பொழுதில் இரண்டு குவளைகள் சாத்துக்குடி பழச்சாறு வாங்கிக் கொடுத்த நண்பர் சங்கருடன் பேசிக்கொண்டிருந்தேன். சங்கருக்கு நான் பெரிய நுண்ணுயிரியலாளன் என்று நினைப்பு. பேச்சினூடேஜேப்பிசூப்பர்பக்னு ஒரு பாக்டீரியம் பத்தி தினத்தந்தில படிச்சேன். இந்தியால இருந்து உலகம் பூரா பரவுதாமே?” என்றார். நான் அந்த செய்தியை அப்போது படித்திருக்கவில்லை. என்றாலும் உயிரெதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்பு சக்தி மிக்க ஒரு பாக்டீரியமாக இருக்கும் என்று அனுமானித்தேன். (பாக்டீரியா என்பது பன்மை. பாக்டீரியம் என்பது ஒருமை). இந்த மாதிரி பாக்டீரியா வைரஸ் பற்றியெல்ல்லாம் அலட்டிக்கொள்ளாத டார்ஜான் மோக்லி பரம்பரையில் வந்த என் மாமா திருப்பதி அவர்களேஎன்னப்பா ஜேப்பி சூப்பர்பக்னு சொல்றாங்களே அது ரொம்ப ஆபத்தானதாஎன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிடாவிருந்தில் கேட்டார். கார்த்திகேயன் குமாரசாமி சொன்னதெல்லாம் சொன்னார். கடந்த சில நாட்களாக நாளிதழ்கள் ஏதும் படித்திராத எனக்கு அவர் மூலமாக இந்த விசயம் மிகவும் ஊதிப்பெரிதாக்கப்பட்டதை அறிந்தேன். இது குறித்து விரிவான தகவல்களுடன் ஒரு தொழில்முறை அறிவியல் கட்டுரையை தமிழில் எழுத தரவுகளை சேகரித்து வருகிறேன். அதற்கு முன், இந்த விசயம் பற்றிய சில அடிப்படைத்தெளிவுகளை இந்த சிறிய கட்டுரையில் முன் வைக்கிறேன்.
1920 களில் அலெக்ஸாண்டர் பிளெம்மிங் பெனிசில்லின் உபயோகத்தை கண்டறிந்தது முதல் இந்த ஆன்டிபயாடிக் எனப்படுகி உயிரெதிர்ப்பொருட்கள் நுண்ணுயிர்களால் உண்டாகிற நோய்களை குணப்படுத்த உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த உயிரெதிர்ப்பொருட்கள் பல வகையான வேதி மூலக்கூறுகளால் ஆனவையாகவும் பலவிதமான வழிகளில் நுண்ணுயிர்களை அழிக்க வல்லவையாகவும் இருந்து வருகின்றன. சில மருந்துகள் பாக்டீரியாக்களின் செல்சுவர் (ந்மது பாதுகாப்புக்கான தோல் போல பாக்டீரியாக்களுக்கு) உருவாக்கத்துக்கான மூலப்பொருளான பெப்டைடொகிளைக்கன் என்கிற புரதச்சர்க்கரையை தகராறு செய்து பாக்டீரியாக்களை அழிகின்றன. சில மருந்துகள் பாக்ட்டீரியாக்களின் புரதச்சேர்க்கையை தடை செய்து சாகடிக்கின்றன. சிலவை பாக்டீரியாக்களின் டி.என்.. (DNA) ஆர்.என். (RNA) போன்ற மரபுமூலக்கூறுகளை தாக்கி அழிக்கின்றன. இன்னும் சிலதுகள் பாக்டீரியாக்களின் வளர்சிதை மாற்றத்தினை பாதித்து அவற்றைக்கொல்கின்றன. இந்த நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் மிகவும் தீவிரமானவை. மதிநுட்பம் வாய்ந்தவை. இல்லாவிட்டால் அவற்றால் நோயை உண்டாக்க முடியாது. இயல்பிலேயே நமது உடல் இந்த மாதிரியான நொயுண்டாக்கிகளிலிருந்து தப்பிக்கும் முகமான தகவமைப்புகள் கொண்டதாகும். அதையும் மீறித்தான் இந்த வஸ்தாதுக்கள் தமது திறமையால் நோயுண்டாக்குகின்றன. இவற்றின் இன்னொரு திறமை வெகு சீக்கிரத்திலேயே ஆன்டிபயாடிக்குகளுக்கு எதிர்ப்புத்தன்மையை பெற்று விடுவது. மிகவும் சின்னதாக இருப்பது, எளிய வாழ்க்கை சுழற்சி முதலானவற்றால் இந்த மாதிரி நுண்ணுயிர்களின் பரிணாம வளர்ச்சி வெகு சீக்கிரத்தில் நடந்து விடும். சுருங்கச்சொன்னால் நாள் கணக்கிலேயே அவற்றால் தாம் விரும்புகிற தகவமைப்பை அடைந்து விட முடியும். அப்படி நடப்பதுதான் இந்த மாதிரி சூப்பர்பக்-கள் உருவாகக் காரணம். ஆன்டிபயாடிக்குகள் மிகவும் கவனத்துடன் உபயோகப்படுத்துவது இதனால் தான் மிகவும் அவசியமாகிறது. சின்ன சின்ன வியாதிகளுக்கெல்லாம் வீரியமிக்க மருந்துகளை கொடுக்கும் போது இந்த நோயுண்டாக்கிகள் அந்த மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை மிக விரைவில் பெற்று விடுகின்றன. இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரி பெற்ற புதுசக்தியை அவை தமது அருகாமையில் உள்ள மற்ற நோயுண்டாக்கிகளுக்கும் வழங்கி விடுவதுதான். சுலபமாக பரிபாறிக்கொள்ள ஏதுவான பிளாஸ்மிடுகள் எனப்படும் சிறு மரபணுக்கட்டமைப்புகளில் இந்த எதிர்ப்புசக்திக்கான கூறுகள் பொதிந்திருப்பதால் பாக்டீரியாக்கள் எளிதில் இந்த எதிர்ப்பு சக்தியை தமது தோழர்களுக்கு வழங்கி விடுகின்றன.

NDM1 (New Delhi Beta Lactamase)
அப்படியான ஒரு எதிர்ப்பு சக்தி தான். NDM1 எனப்படும் இந்த நொதி (enzyme) 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் மருத்துவம் பார்த்துக்கொண்ட ஐரொப்பியர் ஒருவரிடம் இருந்து இது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு நியு டெல்லி பீட்டா லாக்டமேஸ் சுருக்கமாக NDM1 என்று பெயரிட்டு விட்டார்கள். இந்த புதுவகை எதிர்ப்புக்காரணியின் கூடுதல் தகுதி என்னவென்றால் இது மிகவும் அரிதாக அதே சமயம் கடைசி அஸ்திரமாக உபயோகிக்கப்படும் கார்பபீனம் எனப்படுகிற ரகத்திலான ஆன்டிபயாடிக்குகளையும் மிக பரவலாக உபயோகிக்கப்படும் அமினோகிளைக்கொசைடுகள் எனப்படுகிற ஆன்டிபயாட்டிக்குகளையும் எதிர்க்க வல்லது. மேலும் இந்த வல்லமை வெகு எளிதாக மற்ற நோயுண்டாக்கிகளுக்கும் பரவக்கூடியது. இந்த லாக்டமேசுகள் எனப்படும் நொதிகள் பீட்ட லாக்டம் வகையான ஆண்டிபயாட்டிக்குகளை எதிர்க்க வல்லன. பெனிசில்லின் கூட இந்த வகையான ஆன்டிபயாட்டிக்தான். மெத்திசில்லின் எதிர்ப்பு ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் என்கிற சூப்பர்பக் பல பத்தாண்டுகளாக மருத்துவ மற்றும் ஆய்வுலகில் வெகு பிரபலம். அனால் இது சாதாரணமாக பொதுமக்கள் பயப்படத்தேவை அற்ற ஒரு விசயம். ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிரமான விசயம். நாள் தோறும் பட்டினியாலும் நூறு நூறு ஆண்டுகள் பழமையான காலராவாலும், மலேரியாவாலும், சாதரணமான வயிற்றுப்போக்கு நோய்களாலும் இறக்கும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். புதிதாக சொல்லப்பட்டாலும் இந்த சூப்பர்பக்குகள் மிகக் கவனமாக கையாண்டால் கட்டுக்குள் கொண்டு வரக்குடியனவே. 2010 ஆரம்பத்தில் அமேரிக்காவில் இந்த NDM 1 கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் மிகப்பழைய சில வேறு ரக ஆன்டிபயாட்டிக்குகளை கொண்டு இந்த நோய்களை குணப்படுத்தி வருகிறார்கள். கனடாவிலும் அதே போலத்தான். தற்போது மிகவும் பரபரப்பாக்கப் பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் கூட பதினான்கில் இரண்டு ஆண்டிபயட்டிக்குகள் இதை அழித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மருந்துகள் தனித்தனியே சொதிக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலும் மருத்துவர்கள் கட்டுக்குள் வராத வியாதிகளை குனப்படுத்த கலவையான மருந்துகளை கொடுப்பது வழக்கம். அந்த கலவையை யோசித்து வழங்கினாலே இதை கட்டுப்படுத்தி விட முடியும். 2008 இல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இது வரை ஒருவர் மட்டுமே இறந்ததாக நான் படித்தேன். அவர் பாகிஸ்தானில் விபத்தில் கால் முறிவுக்கு சிகிச்சை செய்து கொண்டவர். நாள்பட்ட வியாதியோடு இறந்து விட்டார். இந்த ஆய்வையும் அந்த கட்டுரையையும் ஒட்டி பல சர்ச்சைகள். இதில் சென்னை பல்கலைகழக ஆய்வு மாணவர் கார்த்திகேயன் மற்றும் முனைவர் பத்மா ஆகியோரும் சம்பந்தப்படிருக்கிறார்கள். இதில் கார்த்திகேயன் Wyeth என்கிற மருந்து தயாரிப்பு பகாசுர நிறுவனத்திடமிருந்து கருத்தரங்கு போய்வர உதவி பெற்றிருக்கிறார். நான் கூட இருமுறை மஹிகோ என்கிற பகாசுர நிறுவனத்திடமிருந்து உதவி பெற்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் என் ஆய்வை அதன் முடிவை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. Wyeth நிறுவனம் மீது இப்போது பரவலாக ஆய்வை தமக்க்கு சாதகமாக திசை திருப்பி இருக்கலாம் என குற்றம் சாட்டப்படுகிறது. அது முழுவதும் சரியென்று என்னால் இப்பொதைக்கு சொல்ல முடியாவிட்டாலும் ஏறக்குறைய ஐந்து பகாசுர மருந்து த்யாரிப்பு நிறுவனங்களில் (AstraZeneca, Merck, Pfizer, Dechra, GlaxoSmithKline,) பங்குகள் வைத்திருக்கும் முனைவர் டேவிட் லிவர்மோர் இந்த ஆய்வில் சம்பந்தப்பட்டிருப்பது கவனிக்க வேண்டியது. உலகமயமாக்களின் விளைவாக மருத்துவ சுற்றுலா பிரபலமாகி வருவது, இந்திய மருத்துவமனைகள், இடைத்தரகர்கள், வெளி நாட்டு மருத்துவ கழகங்கள் இவையெல்லாம் இதில் லாபம் சம்பாதிப்பது இது போன்ற காரணங்களால் பணம் விளையாடுகிறதால் இந்த விசயம் பெரிதாக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வருகிற பயணிகள் இங்கே மிகக் குறைந்த செலவில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அது அவர்களுக்கும் லாபமாகப் படுகிறது. இத்தனை அமளிதுமளி ஆன பின்னும் கனடாவில் இருந்து முப்பது பேர்கள் பெங்களூருவுக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் சொல்லி வரும் இந்திய மருத்துவ வணிகத்தின் மீதான திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் என்பதிலும் உண்மை இல்லாமலில்லை எனத் தெரிய வருகிறது. இதை ஒப்புக்கொள்கிற அதே வேளை நமது மருத்துவமனைகளும், மருத்துவர்களும் அவ்வளவு தரத்தில் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த ஆய்வில் அப்பல்லோ மருத்துவமனையும் சம்பந்தப் பட்டிருக்கிறது. எனவே சிறிது பெரிது என்றில்லாமல் மருத்துவமனைகள் தரம் தாழ்ந்து உள்ளன என்பது மறுக்கவியலாத ஒன்று. அதே சமயம் நமக்கிருக்கிற நோயுள்ள மக்கள் தொகை மற்றும் இருக்கிற மருத்துவர்கள் மருத்துவமனைகள் விகிதாச்சாரத்தில் இதற்கு மேலும் தரத்தை எதிர்பர்ர்க்க வேண்டுமானால் அரசுதான் முன்முயற்ச்சி எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் தான் பலவித நோய்களின் பிறப்பிடம் என்று கூசாமல் சொல்லலாம். எவ்வளவு பணம் விளையாடுகிறது அங்கே. தரம்?. தனியார்கள் பெரு நிறுவனங்கள் லாப நோக்கோடுதான் தமது மருத்துவமனைகளை நடத்துவார்கள் . அவர்கள் மீது தரக்கட்டுப்பாடு விதிக்கும் முன்பாக அரசு தனது மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வசதிகளும் தரமான மருத்துவர்களும் உள்ளனர். சரியான செயல்பாடுகள் தான் வேண்டும். கால் உடைந்து சிகிச்சைக்காக ராய்ப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டு பல மாதங்களாக நுண்ணுயிர்த்தொற்றால் அவதிப்பட்ட எனது நண்பர் ஒருவரை கேட்டால் அவர் காறித்துப்புவார். ஒவ்வொரு கடமையிலிருந்தும் கைகழுவி வரும் அரசு குறைந்த பட்சம் பயமில்லாத மருத்துவ சேவைகளையாவது வழங்க முன்வர வேண்டும். உலகமயமாக்களின் நிர்ப்பந்தம் என்று சொல்லி அந்தத் துறையையும் கை கழுவி வரும் அரசு தன் பொக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். LIC இருக்க தனியாரிடம் காப்பீடு செய்து விளம்பரம் செய்து கொள்ளும் அரசின் இலவச மருத்துவ காப்பீடும் ஒரு ஏமாற்று வேலையே. கைகழுவும் முயர்ச்சிகளில் ஒன்றே. மிகத்தரமான மருத்துவமனைகள் நம்மிடம் உள்ளன என சபைகளில் முழங்கும் அதிகாரிகளும் நமது சேவகர்களும் கொசு கடித்தால் கூட் தனியார் மருத்துவமனைகளை நாடுகிற போது மக்களுக்கு எப்படி அரசு மருத்துவ மனைகளிடம் நம்பிக்கை வரும். வேறு வழியற்ற கதியற்றவர்கள் தான் அரசு மருத்துவமனைக்கு போகிறார்கள். இந்தக் கட்டுரை நீளமாக போய்க்கொண்டு இருக்கிறது. வேறு வேலைகள் இருக்கின்றன. இது சம்பந்தமான எனது ஆய்வு அனுபவங்களையும் சேர்த்து இரண்டொரு வாரங்களில் விரிவான தெளிவான கட்டுரை எழுதுகிறேன். இதில் உள்ள படங்கள் பாக்டீரியா மற்றும் அவற்றை அழிக்கும் சில ஆன்ட்டிபயாட்டிக்குகள் சம்பந்தப் பட்டது. சூப்பர் பக்குகள் அல்ல. இவை என் ஆய்வின் படங்களே. நண்பர் விக்னேஷ் இதை எழுதி இருந்தால் நண்ராக இருந்திருக்கும். அவர் ஆங்கிலத்தில் செய்தி கொடுத்திருக்கிறார். அதனால் நான் எழுத வேண்டியதாகி விட்டது.

14 கருத்துகள்:

Vignesh சொன்னது…

அருமையான பதிவு

Jayaprakashvel சொன்னது…

thanks machi. Actually I thought you would write on this.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

I red your essay, its really good introduction.. i got some news messages.. Thanks JP

Jayaprakashvel சொன்னது…

Thanks Doctor. For visit and comments

கண்ணா.. சொன்னது…

அவசியமான அருமையான பகிர்வு.

அடுத்த பதிவையும் விரைவில் எழுதுங்கள் :)

Jayaprakashvel சொன்னது…

Thanks Kanna. Sure will write soon.

அலைகள் பாலா சொன்னது…

good one sir, useful article. so many peoples are dying in malnutrition, road traffic accidents. But media and governments concern about swine flu, which has low mortality

அலைகள் பாலா சொன்னது…

good one sir, useful article. like that, so many peoples are dying in malnutrition, road traffic accidents. But media and governments concern about swine flu, which has low mortality

Jayaprakashvel சொன்னது…

Yes bala. media are making good business out of it. Especially tamil media doesnt have any scientific eyes. even they give misleading translations.

Naziasulthana சொன்னது…

After seeing this article only i am aware of this NDM1 good information

Jayaprakashvel சொன்னது…

Thank you Research

Krishna சொன்னது…

Sir really an awesome information on the SUPERBUG. Surely will pass this info to all possible.

photo சொன்னது…

very good article about superbug