வியாழன், 2 டிசம்பர், 2010

மறுகாலணியாதிக்கம் என்பது புரட்டல்ல. உண்மைதான்.


மறுகாலணியாதிக்கம் என்பது ஒரு மாயை என்றும் புரட்டென்றும் அதியமான் அவர்கள் எழுதி இருக்கிறார். இப்போது பல வெளி நாட்டு நிறுவனங்களால் - பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் உருவாகி இருக்கும் அதிக சம்பளத்துடன் கூடியதான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, அவை கொண்டு வரும் அன்னிய செலாவணியையும் கணக்கில் கொண்டு அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என அறிகிறேன். இந்த நிறுவனங்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை என்ற என் வாதத்துக்கு தொழிற்சங்கங்கள் இருந்து கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கேட்பார்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்றும் பதில் வைத்திருக்கிறார். ஆனால் அவரின் வாதங்கள் மிகப் பழையன. பலர் கேட்டு பலர் பதில் சொல்லி புளித்துப்போனவை. என்றாலும் முதலாளி தொழிலாளி என்ற வர்க்கங்கள் இருக்கும் வரை இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும். பொருளீட்டும் வெறிகொண்ட சுரண்டல்வாதிகளான முதலாளிகளிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு இப்படியான கடமை - உரிமை கதைகள் எந்த நாளும் பேசப்படும்.

சில தொழிற்சங்கங்கள் வேலை செய்ய தடையாக இருப்பதும் சில தொழிற்சங்கவாதிகள் பணமீட்டும் வெறியர்களாக இருப்பது முதலாளித்த்துவத்தின் திட்டமிடாத தன்னியல்பான லாபவெறியின் விளைவுகளே. இந்த எளிய உண்மை அதியமான் ரக முதலாளித்துவ ஆதரவாளர்களுக் புரியாமல் இருக்காது. மேலும் இந்த மாதிரியான தொழிற்சங்கங்கள் இருப்பது இப்போதைய, முதலாளித்துவ சமூகத்தில் என்பது கவனத்தில் இருக்கட்டும். பொதுவுடமை சமூகத்தில் தொழிற்சங்கங்கள் செயல்படும் விதம் வேறு. வெறும் தொழிற்சங்கவாதி மட்டுமே இருக்கிற இடத்தில் திருட்டேது?. இடையில் லாபம் சம்பாதிக்க வெறி கொண்டலையும் சிலரால் அந்த தொழிற்சங்கவாதிகள் தடம் புரள்வதும் அல்லது இதை எதிர்பார்த்தே சங்கம் இருப்பது இவை எல்லாம் லாபவெறி மிக்கவர்களின் கூட்டுச் சதியே. சொத்துடைமை என்பது ஒழிக்கப்பட்ட பொதுவுடமை சமுதாயத்தில் யார் லாபம் சம்பாதிக்க இந்த தொழிற்சங்கவாதிகள் விலை போவார்கள்? இந்த மாதிரியான சங்கங்களின் போக்கு இந்த சமுதாய அமைப்பின் குற்றமாக இருக்கும் போது அதை பொதுவுடமையின் குற்றம் என்று சொல்வது ராசா தப்பே செய்யவில்லை என்பதைப் போலுள்ளது. நீங்கள் இப்போது இருப்பது பொதுவுடமை சமூகம் அல்ல. அதே நேரத்தில் பெயருக்கேனும் இத்தகைய சங்கங்கள் இல்லாவிட்டால் பெயரளவுக்கான உரிமைகளும் கிடைக்காமல் போகும். ஒரு சின்ன உதாரணம். கடந்த வாரத்தில் நீலகிரியில் ரயிலுக்கான முன்பதிவு மையத்தில் ரயில்வே ஊழியர்கள் அல்லாமல் ஒப்பந்த தனியார் ஊழியர்களை நியமித்ததை எதிர்த்து ஒரு சங்கம் போராடியது. தப்பா? சரியா?

இடதுசாரிகள் கேரளத்தில் ஆண்ட போது 2003 என்று நினைவு. அப்போது நாடெங்கிலும் சுங்கவரிகள் கட்டப்பட்டு பயணிக்கும் வகையான மேம்பட்ட நான்கு வழிச்சாலைகள் மிகுதியும் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. அந்த காலகட்டத்தில் ஆய்வுக்களப்பணி நிமித்தமாக நான் கோட்டயம் அருகே சென்றிருந்தேன். அப்போது வாகன ஓட்டியிடம் ஏன் சாலைகள் இப்படி மோசமாக உள்ளன? நெடுஞ்சாலைகள் எல்லாம் தரமுயர்த்தப்பட்டுள்ளனவே இது ஏன் இன்னும் இல்லை? என்றேன். அவர் சொன்னார் " எனது மாநில மக்கள் எமது நிலத்தில் சாலைகளில் செல்ல காசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றால் அப்படியொரு சொகுசு சாலை எங்களுக்கு வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார் எங்கள் முதல்வர். இப்போது திருச்சிக்கு நான்கு மணி நேரத்தில் நீங்கள் உங்கள் காரில் போகலாம். சாலை சுங்கமாக மட்டும் இரு நூறு செலுத்த வேண்டி இருக்கும். சாலை வரி வாங்கும் அரசு, வாகன வரி வாங்கும் அரசு எதற்காக இப்படி தனியாரிடம் சாலைகளை ஒப்படைக்க வேண்டும்? அந்த சுங்கவரியெல்லாம் எங்கே போகின்றன? இது மறுகாலணியாதிக்கம் இல்லையா? இந்த உலக வங்கிகள் எல்லாம் நமக்கு கடன் கொடுக்க என்ன அவசியம்?. நகரங்களை இந்த மாதிரி விரைவு சாலைகளால் இணைப்பதால் அவர்களின் வியாபரம்தான் பெருகும். தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி காணும். நெல் வயல்களுக்கு தரப்படாத மின்சாரம், அதிகம் காசு கொடுத்தால் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் தருவதாக சொல்கிறார் நமது முதல்வர். இங்கே யார் மக்கள் நல அரசு நடத்துகிறார்கள்?. இந்த அரசுகள் யாருக்காக வேலை செய்கின்றன? திருப்பூரிலும் கரூரிலும் நதிகளைச் சாகடித்து, விவசாயத்தை அழித்து, குடி நீரை நஞ்சாக்கி சாயமேற்றப்படும் துணிகளை அந்தக் கொடுமைகளை அனுபவிக்கும் மக்களா உடுத்துகிறார்கள்? இப்படி நதிகளை சாகடித்து, விவசாயத்தை அழித்து, குடி நீரை நஞ்சாக்கி சேர்க்கிற வெறிப்பணம் யாருக்கு? அப்படிப்பட்ட தொழில்வளர்ச்சி வேண்டுமா? அந்த முதலாளி அமராவதி ஆற்றின் தண்ணீரை தன் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுப்பானா? இப்படி மக்களை பலிகொடுத்து வருகிற அன்னிய செலாவணியால் நாடு கடன் இல்லாமல் இருப்பதை விட கம்பஞ்சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிடலாமே?

கேள்விக்கான பதிலுக்கு வருவோம். வெள்ளையர்கள் இங்கே வரும்போது காலணியாக்கம் செய்யவேண்டும் என்று வரவில்லை. வியாபாரம் தான் செய்ய வந்தார்கள். அதன் பின் தான் இந்திய நாடுகள் காலணியாகின. சின்ன விளக்கம் தான். என்ன குளிர்பானம் குடிப்பது என்பதைக் கூட பெப்சி கோலா நிறுவனக்கள் தான் தீர்மானிக்கிண்றன. சென்னையில் எங்காவது கோலி சோடாவை காட்டுங்கள். எனது சம்பளத்துக்கு எனது வருமானத்துக்கு ஏற்ற இரண்டு ரூபாய் கோலி சோடா எங்கும் இல்லை. கிளப் சோடா பனிரெண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள். தேர்வு செய்யும் உரிமை நமது. அதை அவர்கள் பறித்து விட்டார்கள். செல்போன் விலை குறைந்தென்ன? எத்தனை ஓட்டல்களில் குடிக்குமளவுக்கு சுத்தமான தண்ணீர் வைக்கிறார்கள்? பதினைந்து ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்தை என்னை போண்ற குறைந்த கூலிக்காரர்களுக்கு வித்தித்தது யார்? இந்த பன்னாட்டு நிறுவனங்கள்தானே? இது காலணியாக்கம் இல்லையா? அப்போது வெள்ளையர்கள் வந்து ஆதிக்கம் செய்தார்கள். இப்போது அவர்களின் ஏஜெண்டுகளாக நம்மவர்கள் அவர்கள் சம்பாதிக்க உழைக்கிறார்கள். அவனே தேடி வந்து கடன் கொடுக்கிறான். வண்டி வாங்க சொல்கிறான். வீடு வாங்க சொல்கிறான். மதி மயங்கிய மக்களும் வாங்கிவிட்டு பின் வாழும் காலமெல்லாம் வட்டி கட்டி வயிறெரிகிறார்கள். கால்சென்டர்களில்சொந்தப்பெயரை அடகு வைத்து விட்டு சம்பளமாம் சம்பளம்? அதை வாங்குகிறவர்கள் எத்தனை பேர் நிம்மதியோடு வாங்கிப் போகிறார்கள். ஊரே உறங்கும் வேலையின் தூக்கம் வழிய வழிய உழைக்கிறார்கள் இந்த நவீனப் பாட்டாளிகள். மணிக்கணக்கு பாராமல் மென்மொழி எழுதுகிறார்கள் என் இனிய பாட்டாளிகள். அவர்களுக்காக என் கண்கள் நனைகின்றன. காமத்தை, காதலை, உறவுகளை, நட்பை, பருவம் மாறி காலம் ஒப்பாது அவசரம் அவசரமாக Cab வருவதற்குள் செய்து விடத்துடிக்கும் அவர்களை சம்பாதிக்க வைத்து வாரக் கடைசியில் மாதக் கடைசியில் செலவு செய்யும் வெறிக்கு ஆளாக்கி வைத்திருக்கும் இந்த நிலை மறுகாலணியாதிக்கம் என்று நான் சொல்கிறேன். முதலீட்டியவாதி (மரியாதை!?) அதியமான் என்ன சொல்கிறார்? இப்படியான மேல் நாட்டு கடனுதவிகளை, நிறுவன நிர்மானங்களை எதை மையமாக கொண்டு யார் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலை படிக்குமாறு சந்தேகம் உள்ள எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன்.

நாட்டில் செய்யப்படும் ஏறக்குறைய அனைத்து முன்னேற்றப்பணிகளும் முதலாளிகள் லாபமீட்டவே உருவாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் குழந்தைகள் மிகுந்த தேசத்தில் முகத்துக்கு முகம் பார்த்து பேச வேண்டிய தேவை என்ன வந்தது? சாக்கடைகள் வீட்டுக்குள் புகும் நகரங்களில், பத்து பைசாவுக்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டிய தேவை என்ன வந்தது? என்ன அடிப்படை வசதிகள் இங்கே வந்துள்ளன? குறைந்த பட்ச மருத்துவ உதவிகள் கூட உறுதி செய்யப்படாத ஊரில் செல்போன் சிக்னல் கிடைத்தாலென்ன கிடைக்காமல் போனாலென்ன? சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு போங்கள். எத்தனை மக்கள் மருத்துவ வசதிகளுக்கு காத்திருக்கிறார்கள்? வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்து மருத்துவம் பார்த்துப் போகிறார்கள். உல்னாட்டு மக்கள் சாகிறார்கள்? நாய்க்கடிக்கு எத்தனை அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் உள்ளன? பாம்பு கடித்தால் எங்கே மருந்து உள்ளது என்பதை கண்டு கொள்ளும் முன்பே செத்துப் போகும் காசில்லாத கிராமவாசிகளின் ஊரிலெல்லாம் பெப்சியையும் கோக்கையும் யார் கேட்டார்கள்?

எனது மாமா ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு (இறந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன) திருச்சி பொது மருத்துவமனையிலிருந்து இங்கே சிபாரிசு செய்யப்பட்டிருந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் வெளிநோயாளிகள் பகுதியில் நாளெல்லாம் காத்திருந்து உள்ளே போனால் இவரின் நோய் முற்றி விட்டது. மருந்து மிக குறைவாக உள்ளது. வேறு சிலருக்கு கொடுக்கலாம். மருந்து உட்கொள்கிற நிலையை தாண்டி விட்டார் என்றார்கள். தயோயூரியா என்ற மருந்து என நினைக்கிறேன். அவர்கள் மருந்தை பதுக்கி விட்டு பொய் கூட சொல்லி இருக்கலாம். இங்கே சொல்ல விரும்புவது அப்படியான அத்யாவசிய மருந்துகளை அதிகளவு தயாரிக்கவும் வக்கற்ற ஒரு தேசத்தில் செல்போன் கம்பெனியும் கார் கம்பெனியும் தேவையா?. பச்சிளம் குழந்தைகளுக்கு தரமான பி ஸி ஜி வாக்சின் தயாரிக்க வக்கில்லாத சென்னையில் நொக்கியா தொழிற்சாலை உங்களுக்கு உவப்பாக இருக்கிறதா? வசதியுள்ளவன் வாழவும் காசில்லாதவன் சாகவுமான வாழ்க்கை உங்களுக்கு உவப்பாக உள்ளதா? அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்தாமல் தனியாரிடம் போய் சிகிச்சை செய்து கொள் காசை அவனுக்கு நான் கொடுக்கிறேன் என்று சொல்ல வைத்து எது? அரசு ஊழியர்களுக்கு பென்சன் இல்லையென்று சொல்ல வைத்தது எது? இதெல்லாம் மறுகாலணியாதிக்கம் இல்லையென்றால் உங்கள் அகராதியில் இவற்றுக்கெல்லாம் என்ன பெயர்?

இதெயெல்லாம் என்னைபோன்ற கீழ்மட்ட, நடுத்தர மக்கள் சகித்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள். விரும்பி வாழவில்லை. விரும்பி வாழ்கிறேன் என்று எவனாவது சொன்னால் அது பித்தலாட்டமே. காசு சம்பாதிக்க சென்னை வந்தவனெல்லாம் இதை வைத்துக் கொண்டு இங்கேயெ இருக்காமல் பொங்கலுக்கும் தீவாளிக்கும் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடுவது எதற்காக? எழுதப்படும் பத்து கவிதைகளில் எட்டு கவிதைகள் இழந்த வாழ்வின் வலியை பகிர்ந்து கொள்கின்றன.எதனால்? இந்த வாழ்வு பிடித்தால் அவன் இலக்கியத்தில் இது வரப்போகிறது? இன்னும் ஏன் பழையதை பேசுகிறான்?

இந்தச் சம்பளம்- வாங்கும் தகுதியை உயர்த்தியுள்ளது. ஒப்புக்கொள்கிறேன். ஒரே ஒரு நாள் சென்னையின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று பாருங்கள். எத்தனை கார்கள் கடந்து போகின்றன; எத்தனை பைக்குகள் கடந்து போகின்றன? எத்தனை பேர் தனி ஆட்டோ தேடுகிறார்கள்; ஷேர் ஆட்டொவில் ஏறுகிறார்கள்; குளிர்சாதனப் பேருந்தில் ஏறுகிறார்கள்; சொகுசுப் பேருந்தி ஏறுகிறார்கள் என்று. அவர்களெல்லாம் போன பின்னும் வெள்ளை போர்டு வராதாவென மணிக்கணக்காக காத்து நிற்கும் மக்கள் என் மக்களில்லையா? அவர்களுக்கு என்ன செய்தன இந்த அரசுகள்? இத்தனை கால் சென்டர்கள் இத்தனை மென்மொழி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவங்கள் வந்த பின்னும் இன்னும் இந்த மக்கள் ஏன் வெள்ளை போர்டுக்காக காத்திருக்கிறார்கள்? போருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்னும் கொடூரமான அட்டூழிய வசனத்தை விரும்பி வைத்திருக்கும் அதியாமானிடம் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கிறேன். (பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை-பார்க்கிற போதெல்லாம் அந்த வார்த்தைகளை எரிக்கத் தோன்றுகிறது; பொருளில்லாமல் இருப்பவர்களைத் தள்ள எந்த நரகத்தை வைத்துள்ளீர்கள்; இந்த உலகம் பொருள் உள்ளவர்களுக்கு அல்லது பொருள் சேர்க்கத்தெரிந்தவனுக்கு மட்டுமே என்னும் அதிகாரம் முதலாளித்துவத் திமிர் இல்லாமல் முதலீட்டிய பண்பா?; இதற்கும் பதில் சொல்லுங்கள்).

12 கருத்துகள்:

thamizhan சொன்னது…

very true.No answer.simply accept.

K.R.அதியமான் சொன்னது…

this free blogger and cheap net connections and millions of new jobs too are a result of this maru colony aathikkam.

and trade unions are banned in thousands of local companies too for decades. for example private spinning mills in Cbe.

and let us talk about the govt employees trade unions first.

more later JP.

thamizhan சொன்னது…

மறு காலனி ஆதிக்கம்.உண்மைதான்.அதற்கு மாற்று.எல்லோருக்கும் வேலை.நிலம்,மொழி,இனம் சார்ந்த வேலை வாய்ப்பு கிடைக்குமானால்,அந்நிய நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அடுத்த 25 வருடங்களின் சம்பளத்தை முன்கூட்டியே அடகு வைத்து வீடு,கார் என்று வாங்கி நிரந்தர கடன்காரனாக மாறுகிறோம் என்பது மண்டையில் உரைக்க வேண்டும்.அரசும்,உள்நாட்டு,வெளிநாட்டில் உள்ள இந்திய தொழில் அதிபர்களும் நினைத்தால் இதை நடைமுறைபடுத்த முடியும் என்பதே உண்மை.

Jayaprakashvel சொன்னது…

அதியமான்
இங்கே நான் எழுதி இருப்பது மறுகாலணியாதிக்கம் குறித்த உங்கள் கட்டுரைக்கு எனது கருத்துக்களையும் உங்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தும். அடிப்படையான என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன். சங்கம் குறித்த உங்களின் வாதத்தை அதன் பின் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

K.R.அதியமான் சொன்னது…

JP,

first define what the term 'neo-colonisation' means.

does the MNCs that have been allowed into India post 1991 in anyway similar to the East India Company ? or do they have un democratic and illegal powers to control or suppress Indian industry, labour and govt ?

and are the functionning of these MNCs different from local swadeshi companies ?

and most importantly try to look at the big picture and answer my most vital question at :

http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

Kurumbukkaran சொன்னது…

very nice article jp,iam looking more from you.

Jayaprakashvel சொன்னது…

மறு காலனியாதிக்கம் புரட்டு என்று சொல்லி இருக்கும் நீங்கள் அதன் விளக்கத்தைக் கொடுத்தால் மிகவும் நல்லா இருக்கும். இந்த MNC இதெல்லாம் ஒரு வகைதான். அது மட்டுமே காலனியாதிக்கம் இலலை. இப்போது அணு உலை பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்களே அதுவும் புதிய காலனியாதிக்க வகைதான். எப்படியெல்லாம் மற்ற நாட்டை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என இந்திய உள்பட எல்லா நாடுகளும் முனைந்து வருகின்றன. இந்தியாவின் குஜராத்திய முதலாளிகள் ஆப்ரிக்காவில் சுரண்டுவதும் அங்கே அடி வாங்குவது இதே வகையில் தான் வரும். வெறும் MNC என்ற சின்ன குடையில் இந்தப் பிரச்சனையை அடக்கப் பார்த்தால் உங்கள் அரசியல் அறிவு சந்தேகத்துக் குரியது. பெப்சிக்காரன் கொடுத்த பிரிட்ஜ் இருக்கும் கடைகளில் நீங்கள் வேறு எந்த பானத்தையும் வாங்க முடியாது. இதெல்லாம் என்ன?

K.R.அதியமான் சொன்னது…

///மறு காலனியாதிக்கம் புரட்டு என்று சொல்லி இருக்கும் நீங்கள் அதன் விளக்கத்தைக் கொடுத்தால் மிகவும் நல்லா இருக்கும்///

When people like us consider any such concept of neo-colonialism as nonsense and fiction, you are the one who has to 'define' what this exactly means and denotes !! fancy asking me to define something which does not exist !

///இப்போது அணு உலை பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்களே அதுவும் புதிய காலனியாதிக்க வகைதான்///

Wrong. actually, this agreement was very clear. We can have either nuclear weapons or nuclear power. the choice is ours. that is these sellers of technology will sell only if we use it for civil use and not for military use. No one forced us at gun point or thru sanctions.

We are desparate for increasing power and power cuts are rampant all over India. We need nuclear power also. Or we can reject this agreement and live without power. Choice was ours. hence no question of anyone forcing us.

K.R.அதியமான் சொன்னது…

// பெப்சிக்காரன் கொடுத்த பிரிட்ஜ் இருக்கும் கடைகளில் நீங்கள் வேறு எந்த பானத்தையும் வாங்க முடியாது. இதெல்லாம் என்ன?
//

may be. but the shop keeper could have rejected the free fridge from Pepsi and stock all colas. no one is preventing him from that.

and why don't you talk about IBM, Intel and other IT MNCs which provide this cheap net and connections thru which this very argument is made possible.

your kind thinking led to the expulsion of IBM in 1977 and India lost a valuable 15 years for computarisation. Only mypoic views made expulsion of IBM in 1977.

and pls read thru my link about 1991 fin crisis and IMF and try to answer that vital question at the end of that post above...

Jayaprakashvel சொன்னது…

அதியமான்
மறுபடியும் கேள்வியை உங்களுக்கே திருப்ப வைத்துள்ளீர்கள். மறுகாலணியாக்கம் இல்லை என்றால் ஏன் அதை பற்றி எழுத வேண்டும்? பேசறவங்க பேசட்டுமே?

இருந்தாலும் நீங்கள் எனது ஆதாரமான கேள்விககளுக்கும் உங்களின் மூல பதிவினை ஒட்டிய எனது கருத்துக்களையும் விட்டு விட்டு மறுபடியும் கேள்வியே கேட்டாலும் பதில் சொல்லலாம். ஒன்னும் தப்பில்லை.

ன் நீங்க 123யையும் அணு உலை பாதுகாப்பு மசோதாவையும் குழப்பிக்கொண்டு இருக்கீங்க. நான் சொல்ற பாதுகாப்பு ஒப்பந்தத்துல அணு உலையில் விபத்து ஏற்பட்டா அதுக்கு உலைகட்டிய நிறுவனம் பொறுப்பு அல்ல. அதுக்கான இழப்பீட்டை மத்திய அரசு கொடுக்குமாம். என்ன கதை இது? இதன் பெயர் தான் மறுகாலணியாதிக்கம். அவர்களின் தலையசைப்புக்கேற்ப்ப நம்ம தலைவிதி. இதுதான் காலணி ஆதிக்கம். வெறும் கிழக்கிந்திய கம்பெனி மட்டும் நம்மை காலணியாக்கியது போல உங்க முந்தைய பின்னூட்டத்துல எழுதி இருக்கிங்க. ரொம்ப தப்பு அது.
அதே போலத்தான் இப்போ இந்த நிறுவனங்கள் கம்பெனிகள் எல்லாம் தங்களின் சவுகர்யத்துக்கேற்ப நமது விதிமுறைகள் நடைமுறைகளை மாற்றி வைக்கின்றன. ஏகென்ட் ஆரஞ்ச் செய்த, நபாம் செய்த ஒரு நிறுவனம் தனது தவறுக்கு நிவாரணம் தரமுடியாது செய்த தப்பை திருத்தவும் முஇட்யாது என்கிரது. டந் கெமிகல்ஸ். போபால் ஆஅலியில் இன்னும் நச்சுக் கலன்கள் உள்ளன. அதை சரி செய்ய பணமாகும் முடியாது என்கிறது டவ். சிதம்பரமும் டாட்டாவும் அதை நாமே செய்து கொள்ளலாம் என்கிறார்கள். போபாலின் மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. இன்னும் ஆபத்தும் முழுதாக விலகவில்லை.

கம்ப்யூட்டர் கம்பெனி பற்றி சொல்ரீங்க. நான் அதுக்கெல்லாம் என் பதிவில் விலாவரியாக எழுதியும் நீங்க கேட்பது விசித்திரமாக உள்ளது. இங்கே அடிப்படை வாசதி கூட இல்லை. மருத்துவ வசதி எல்லோருக்கும் இல்லை. இப்படி இருக்கற ஊர்ல இன்டெர்னெட் என்ன வேண்டிக் கிடக்கிரது? பாம்புக் கடிக்கு மருந்து இல்லாத நாய்க்கடிக்கு மருந்து இல்லாத ஊரில் கம்ப்யூட்டர் கம்பெனி எதுக்கு? எல்லாம் எழுதி இருக்கேன். படிச்சுட்டு வந்து பதில் எழுதரீங்களா? சந்தேகமா இருக்கு.
ஒரு பி ஸி ஜி வாக்சின் செய்யத் துப்பில்லாத சென்னை மானகரில் ஐ. பி. எம் வந்தால் என்ன மைக்ரொசாfட் நோக்கியா வந்தாலென்ன?

Jayaprakashvel சொன்னது…

இப்படி பேசிக்கிட்டு ஏண்டா இன்டெர்னெட்லஎழுதறீங்கன்னு அடுத்து கேட்பீங்க. இப்படி எழுதுவதும் இருக்கும் அத்தனை தளங்களையும் சமூக முன்னேற்றத்துக்கு சமூக விடுதலைக்கு பயண்படுத்திக் கொள்வது ஒரு மனிதனின் சமூகக் கடமை. இது இல்லாவிட்டாலும் என்னால் இருக்க முடியும். நான் செய்ய விரும்புவதை செய்ய முடியும்.

K.R.அதியமான் சொன்னது…

JP,

the same argument fits for nuclear liability bill too. take it or leave it. but in this matter Indian govt should have held consulations and adhered to the standards held in US or EU for similar type of reactors.
it is our fault and our weakness. No one is forcing us to sign.

You are the one who is confusing the failure of govt (in delivery and transparency) with allowing free markets and industries to function and expand without any govt control or intervention.
Who is responsible for this terrible failure, corruption and leakages in govt services ? US and MNCs ? or we the Indians and our elected reps and bureacracy ?

and this cheap net, mobiles and telecome is an ENABLER of efficient delivery of all kinds of services, including govt services. it cuts transactions costs and time and saves lots of trouble.

regarding Bhopal : no one talks about the basic issue of 10 lac appilcations that were filed for compensation. It took 20 years to filter them and eliminate nearly 5 lac bogus applications. hence this enormous delay and the money paid by Union Carbide was lying idle for decades.

Bhopal and Dow can be termed as stray incident or a terrible accident. but there are thousands of chemical factories funcationing till date. what do you propose to do with them all ?

finally, India is now considered as 'partner' by US and looked upon with respect for the first time since 1947. Until 90s we were looked upon as beggers, and corrupt nation. We were begging IMF for dollars and wheat from US. you are too young to know all this. and all you know is neo-colonialism.
Actually India is much much stronger and independent now than in the past. try to answer my basic question about neo-colonialism.