வியாழன், 29 ஏப்ரல், 2010

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம பாரதி

கடந்த வாரம் நண்பர் சங்கர் மூலமாக கவிதா எழுதியமொக்கத்தாயிஎன்ற கதை படிக்கக் கிடைத்தது. மேலோட்டமாகப் பார்த்ததில் பட்டினியால் செத்த ஒரு முதியவளின் கதை அது. என்றாலும் உடனடியாகப் படிக்கவில்லை. கடந்த 28 ம் தேதி படூருக்கு வேறொரு வேலையாகப் போயிருந்தேன். போக்குவரத்துக்கு விருப்பம் போல பயணம் செய்யும் சீட்டு வைத்திருந்தேன். ஆனால் காலையில் மிக குறைவாக சாப்பிட்டதால் மதியம் கொடூரமான பசியாகி விட்டது. எதாவது ஆந்திரா மெஸ் இருக்குமா என பார்த்துக் கொண்டே வந்தேன். முன்பு நண்பர்கள் பிரஷாந்த்தும் விஜய்யும் அங்கே தங்கி படித்த காலங்களில் சில ஆந்திரா மெஸ்களில் சாப்பிட்டு இருக்கிறேன். என்னைப் போல அதிகமாக, விரும்பி சாப்பிடுகிறவர்களுக்கு ஆந்திரா மெஸ் ஒரு விருப்பமான இடம். அங்குதான் நல்ல சோறு வேண்டுமளவு போடுவார்கள் ஆனால் அன்று எந்த ஆந்திரா மெஸ்ஸும் இல்லை. என்றாலும் வேறொரு கடைக்குப் போனேன். சாப்பாடு எவ்வளவு என்றேன். 33 என்றார்கள். லிமிட்டெட்- அன்லிமிட்டெட்- என்றேன். அன்லிமிட்டெட் என்றார்கள். கொஞ்சம் தாரளாமாக காசு புழங்குகிற நாட்களில் வரும் சில்லறைகளை எதிர்கால தேவை கருதி பேக்கிலேயே போட்டு வைப்பது வழக்கம். எனவெ உட்கார்ந்து சில்லரைகளை எண்ணிப் பார்த்தல் நோட்டும் சில்லறையுமாக நாற்பது ரூபாய் இருந்தது. ஒரு ஆம்லெட்டோடு அமர்க்களமாக சாப்பிட்டு வந்தேன். அன்று அறை வந்த உடனேயே மொக்கத்தாயி கதையை படித்து முடித்தேன். கவிதா நன்றாகவே எழுதி இருந்தார்கள். நடைதான் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமானது என்றாலும் கதை நன்றாக இருந்தது. நான் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி படித்திருக்கிறேன். அந்தக் கதையில் இதே போல பசிக்கொடுமையாலோ வேறு எதாலோ ஒரு முதியவளை நெற்குதிருக்குள் போட்டு உயிரோடு மூடி வைப்பதாக ஒரு பகுதி வரும். அந்த முதியவள் செத்தும் நிறைய பெருக்கு பேயாக தெரிவதாக அந்தப் பகுதி போனதாக நினைவு. அந்தப் பகுதியை நினைவு படுத்தும் விதமாக மொக்கத்தாயி என்ற முதியவள் கவிதாவின் கதையில் பசிக்கொடுமையால் ஒரு அடைமழைக்காலத்தில் உயிர் விட்டு விடுகிறாள். அந்தப் பக்கமாக வருவோரையெல்லை பேயாகப் பிடித்துக் கொள்கிறாள். பசிக்குது பசிக்குது என்ற குரல் கேட்டுக்கொண்டே இருப்பதாக கதை முடிகிறது.

பசி என்பது என்னைப் பொறுத்தவரை மிகக் கொடுமையானது. ஊரில் நிலம் வைத்து நெல்லறுக்கும் விவசாயி என் அப்பா. பல பேருக்கு குறிப்பாக முதியவர்களுக்கு எனது வீட்டில் இருந்து பல நேரங்களில் அரிசியாகவோ சாப்பாடாகவோ போகும். அதெல்லாம் வெறும் உறவின் நிமித்தம் மட்டும் செய்யப்படுவதல்ல. காவிரிக்கரையில் இருக்கும் எனது ஊரில் இது போல அரிசியோ சாப்பாடோ கொடுப்பது பெரிதல்ல. ஆனாலும் எனது ஊரிலேயே பட்டினியால் அவதிப்படுவர்கள் இருக்கும் போது வறட்சி தழும் தென் மாவட்டங்களில் அப்படியானவர்கள் என்ன செய்வார்கள்? கவிதாவின் கதை எனக்கு மிகவும் பிடித்ததற்கு இதுவும் ஒரு காரணம். குழந்தை மற்றும் முதியவர்களின் பசி உலகின் கொடூரங்களில் ஒன்று. கதையின் ஒரு இடத்தில் கதைசொல்பவருக்கு பிடித்தமான உணவு பற்றிய செய்தியும் அதன் பின்னே பட்டினியால்தான் மொக்கத்தாயி செத்ததாகவும் செய்தி வரும். சினிமாக்களில் வருகின்ற காட்சிகளின் தொடர்ச்சி போல இது எனக்குப்பட்டது. இடத்தில் கதைசொல்பவருக்கு பிடித்தமான உணவு பற்றிய செய்தியும் அதன் பின்னே பட்டினியால்தான் மொக்கத்தாயி செத்ததாகவும் செய்தி வரும். சினிமாக்களில் வருகின்ற காட்சிகளின் தொடர்ச்சி போல இது எனக்குப்பட்டது. இன்னும் வெளிவராத இந்தக் கதையை மேலும் எழுதுவது நல்லதா என தெரியவில்லை. கதை விரைவில் வெளிவரும்போது இன்னும் விரிவாக எழுதலாம். ஆனால் பசி தொடர்பான எனது அனுபவத்தை இதை ஒட்டி பதிவு செய்யவே இதை எழுதுகிறேன்.


நமக்கு அதாவது எனக்கு வயிரும் பசியும் மிகப் பெரியது. கொஞ்ச நேரம் தள்ளிப்போனால் கூட கைகால்கள் நடுங்க ஆரம்பித்து விடும். பெரும்பாலும் கடந்த பத்து வருடங்களாக வெளியேயே சாப்பிடுவதான வாழ்க்கை எனக்கு. வெகு சில நாட்களைத்தவிர மற்றெல்லா நாட்களிலும் சாப்பிடுவதற்கு காசு இருக்கும். அல்லது நண்பர்கள் இருப்பார்கள். அப்படியிருந்தும் இரண்டு பசி நாட்கள் என்னனால் மறக்க முடியாதவை ஆகிவிட்டன. ஒரு நாள் 2003 ல். அப்பொது ஐந்தாயிரம் கூலிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வெலையில் இருந்தேன். அந்தக் குறிப்பிட்ட நாலன்று கையில் காசு சுத்தமாக இல்லை. அழுக்காக இருந்ததா என்று எண்ண வேண்டாம். கொஞ்சம் கூட காசு இல்லை. மதியம் எனது துறை, உயிர் நண்பன் இருந்த ஜியாலஜி அண்ணன்கள் நிறைய பேர் இருந்த பயோகெமிஸ்ட்ரி என எங்கேயும் உரிமையோடு கேட்கும் நண்பர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. சொந்த துறையிலும் கேட்டு வாங்கும் அளவுக்கு ஆட்கள் இல்லை. அக்கம் பக்கமும் யாரும் இல்லை. கை காலெல்லாம் நடுங்க மனம் வெறுத்துப் போய்க்கொண்டு இருந்தேன். அப்பொது எம். எஸ். சி. கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டு இருந்த இளையவரான வீரமணி கண்ணில் பட்டார். அவர் அப்போது மிகவும் நெருங்கிய நண்பரல்ல. அப்போது கேண்டீனில் சாப்பாடு பத்து ரூபாய்தான். வீரமணி ஒரு பத்து ருபாய் இருந்தா கொடுங்க என்று கேட்டேன். நல்ல வேலையாக அவரிடம் இருந்தது. அன்று சாப்பிட்டேன்.

அதன் பின் 2004 ல் ஒரு நாள். அப்போது வால்பாறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒரு ஆவணப்படம் பார்க்க (படம் பெயர் "பீ") கோயம்புத்தூர் சென்று வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இரவு பதினொன்றுக்கு மேல் இருக்கும். தங்கியிருந்த அறை கடை வீதியில் இருந்து தள்ளி இருந்தது. அப்போதும் பயங்கர பசி. நண்பர்களை தூக்கத்தில் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை. காசை பார்த்தால் பத்து ரூபாயும் கொஞ்சம் சில்லரையும் தான் இருந்ததது. அந்த நேரத்தில் ஒரு சாலையோரக் கடையில் சூடாக இட்லி வைத்திருந்தார்கள். நான் கடை அருகே போய் காசை மறுபடியும் எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் இட்லி விலையை விசாரித்தேன். அவர் என் நிலைமையை புரிந்து கொண்டவராக காசப்பத்தி கவலைப்படாதீங்க சார். நல்லா சாப்பிடுங்க. இருக்கறத கொடுங்க. மீதியை முடிஞ்சா நாளைக்குக் கொடுங்க என்றார். அன்று சாப்பிட்டது என் வாழ்வின் மிக அருமையான சாப்பாடாக எனக்குப் பட்டது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மதித்த விதம் மனிதன் என்கிற விதத்தில் என்னை கவுரமாக எண்ண வைத்தது. நான் யார் என்பது அவருக்கு நிச்சயம் தெரியாது. அப்படியிருந்தும் என்னை மனதாற சாப்பிட சொன்ன அந்த நண்பரின் பெருந்தன்மைக்கு என்ன செய்தாலும் தகும். ஆனால் நான் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்புடையவர்களிடம் மீண்டும் வலிந்து தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. அது ஏனென்று இன்னும் விளங்கவில்லை. இதே போல சேலம் பேருந்து நிலையத்தில் இருந்த காசை பறி கொடுத்து விட்டு வெறும் ஆளாய் நின்றவனுக்கு ஊர் திரும்ப காசு கொடுத்த கல்லூரியில் வேறொரு பிரிவு மாணவரிடம் பணத்தை திரும்பக் கொடுத்ததோடு வெறு தொடர்பு இன்னும் இல்லை. அப்படி தொடர்பு கொள்ளாதால் தான் இன்னும் அந்த நிகழ்வுகள் நினைவில் உள்ளனவோ என்றும் நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: