புதன், 7 ஏப்ரல், 2010

காசில்லாத முதியவளின் நெடுந்தொலைவுப் பயணம்

5E

பெருவிருப்போடு

நண்பர்களிடம் பேசுகிற தருணங்களை

களவாடுகிற பேருந்துகள்

சிலவற்றைக் கொண்டது

இம்மாநகரம்


காசில்லாத முதியவளின் நெடுந்தொலைவுப் பயணம்
ஏதுமறியாத குழந்தையின் பசியை விடவும் கொடுமையானது.

கடந்த சில நாட்களில் முருகேசன் மாமாவே கவிதை என்று ஒத்துக் கொள்கிற தரத்தில் சில கவிதைகளை இங்கே பதிந்துள்ளேன். சங்கர் உள்ளிட்ட சிலரும் நன்றாக இருக்கிறதென்று சொன்னார்கள். எல்லோருக்கும் எனது நன்றி. அந்த கவிதைகள் குறித்த உரையாடலின் போது நான் அந்தக் கவிதைகளை எழுதிய சூழல் அந்தக் கவிதைகளில் காணக்கிடைக்கவில்லை என்று சங்கரும் மாமாவும் சொன்னார்கள். குறிப்பாக மாநகரப் பேருந்துகள் பற்றியது.

விஜய் ஆனந்த் எனக்கு மிகவும் இணக்கமான நண்பன். தோழர் என்ற சொல் அவனது அப்பாவிடமிருந்து எங்களுக்கு ஒட்டிக்கொண்டது. அதை ஒரு வழமையாகவே நான் விஜய் மற்றும் முத்தெழிலன் இவர்கள் மூவரும் சொல்லிக்கொள்வதுண்டு. சொல்ல வந்தது விஜய் ஒரு அருமையான நண்பன் என்பதைத்தான். மிகவும் இயல்பானவன். சலிப்பு என்பதை நான் அவனிடம் கண்டதில்லை. பெண்கள் விரும்பும் பெரும் பேச்சாளன். எனது மிக நீண்ட சில கடிதங்களை படித்தவன். அதை பத்திரப்படுத்த சொல்லித்தான் எழுதி இருந்தேன். பத்திரமாக வைதிருக்கிறானாவெனத் தெரியவில்லை. போகட்டும். ரொம்ப நாள் கழித்து சென்ற வாரம் வியாழக்கிழமை என்று நினைவு. நானும் முத்துவும் விஜய் சுதாவின் முதல் பெண்ணான பாரதியை பார்க்க போயிருந்தோம்.

பாரதிக்கு அன்று கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. வயிற்றுப்போக்கு. மருத்துவர் தாய்ப்பாலைத்தவிர பிற எதுவும் சில நாட்களுக்குத் தரவேன்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் பாரதிக்கு போதவில்லை. பசியால் பல நேரங்களில் அழுவதாக விஜய் சொன்னான். நான் போயிருந்த நேரத்திலும் பாரதிக்கு பசி போலும். மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தக் குழந்தைக்கு வயிற்றுப்போக்கும் தெரியாது. வேறு எதுவும் தெரியாது. அது பசிக்கு அழுகிறது. நம்மால் அதன் பசியை முழுமையாக திருப்திப்படுத்த முடியாத நிலையில் அந்தக் குழந்தையின் அழுகையை கேட்டுக் கொண்டிருப்பது வாழ்க்கை யின் மிகவும் கொடிய தருணமாக எனக்குப்பட்டது. என்ன செய்வது. இதையும் கடக்கத்தான் வேண்டும். அதன் பின் தோழர் முத்து அவசர வேலை இருப்பதாகச் சொல்லி கிளம்பிவிட்டான்.
நான் விஜயிடம் பேசிவிட்டு போகலாம் என இருந்துவிட்டேன். வெறும் வாயால் பேச முடியாது இல்லையா?. எனவே அவன் வீட்டு அருகில் உள்ள அஞ்சுகத்திற்கு போனோம். சாப்பிட்டோம். பேசினோம். நேரம் நிறைய ஆகி இருக்கவில்லை. பேச வெண்டியது இன்னும் நிறைய இருந்தது. எங்களுக்குள் தீர்ந்துவிடக்கூடிய பேச்சுகள் எதுவுமே இல்லை. ஆனால் வெளியே வந்ததும் ஒரு 5 E பேருந்து வந்து விட்டது. கூட்டம் இல்லை. எனக்கு மிகவும் தோதான பேருந்து. ஆனால் கடந்து விட்டது. எனவெ பேச்சை முறித்துக் கொண்டு விஜய் என்னை அடுத்த நிறுத்தத்திற்கு கூட்டிப் போய் அதே பேருந்தில் ஏற்றி விட்டான். பேருந்தில் ஏறிய பின் தான் எனக்கு வருத்தமாக இருந்தது. இன்னும் ஒரு அரைமணி நேரம் கூட இருந்து பேசிவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி இருக்கலாமே என்று. அதனால் என்மீதும் 5E மீதும் கோபம் வந்தது. அதைத்தான் அப்படி எழுதிவிட்டேன். ஆனால் அது கொஞ்சம் மாற்றப்பட வேண்டியது என்று மாமாவும் சங்கரும் சொன்னார்கள். மாற்றுவோம்.

அதே நாளில் தான் அடுத்த நிகழ்வும். 5E இல் இருந்து அடையார் பேருந்து நிலையத்தில் இறங்கி C51 பிடித்து ஈஞ்சம்பாக்கம் வந்தேன். மணி பத்தை தாண்டி விட்டது. அதன்பின்னும் உத்தண்டிக்கு பேருந்து உண்டு என்றாலும் உட்கார்ந்து போக வேண்டி ஷேர் ஆட்டோவில் போவது வழக்கம். இந்த ஷேர் ஆட்டோ பயணங்களைப்பற்றி தனியே எழுத வேண்டும். பலவிதமான அனுபவங்களையும் பலவிதமான நிகழ்வுகளையும் கொண்டன இந்தப் பயணங்கள். பிறகு பார்ப்போம். அந்த நாளில் நான் ஏற இருந்த ஆட்டோவில் ஒருமுதியவள்என்னை உள்ளே அமரச் சொல்லிவிட்டு வாசலருகே அமர்ந்தார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. தள்ளாத வயது. கூண் விழுந்த முதுகு. குள்ளமான பெண். போற வேகத்துல விழுந்தரப் போறம்மா என்றும் சொன்னேன். இருந்தாலும் அந்த அம்மாவின் மன தைரியத்தை பாராட்டியும் (இந்த இடத்தில் பிதாமகன் பட சூர்யா நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி) அவர்கள் இறங்க வேண்டிய நைனார்குப்பம் எனக்கு முன்னதான நிறுத்தம் என்பதாலும் நான் உள்ளே அமர்ந்து கொண்டேன். கொஞ்ச தூரம் போனதும் அந்த அம்மா என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தன்னிடம் ஒரு ரூபாய்தான் உள்ளதென்றும் மேலும் ஒரு ஆறு ரூபாய் ஆட்டோ கட்டணமாக வேண்டுமென்றும் கேட்டார். அவர் ஏற்கனவே திருவாண்மியூரில் இருந்து ஐந்து ரூபாய்க்கு ஈஞ்சம்பாக்கம் வந்தவர். நானும் தருகிறேன் அம்மா என்றேன். அந்த அம்மா அதன்பின் மிகவும் நன்றிகள் சொன்னார். என்னை தம்பி என்று சொல்லி அதை சொல்லி இருந்தால் கூட வருத்தப்பட்டிருக்கமட்டேன். ரொம்ப நன்றிங்க என்று சற்று மரியாதையாக சொன்னது மனவருத்தம் கொடுத்தது. கையெடுத்து கும்பிடுகிற கடைசி நிலையில் அந்த அம்மா வரவே நான் தோளைத்தொட்டு ஒன்னும் சொல்லாதீங்கம்மா நீங்க இறங்குங்க நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி மேலும் ஒரு பத்து ரூபாயை கொடுத்து அனுப்பினேன். என்னிடம் அன்று அந்த அம்மாவுக்கு கொடுக்க பணம் இருந்ததை என் சம்பாத்யத்தின் சாதனையாக நினைத்துக் கொண்டேன். பெரும்பாலான நாட்கள் காசில்லமல் அல்லது தொட்டுக்கொள்ள துடைத்துக்கொள்ளத்தான் இருக்கும். அன்று அந்த அம்மாவிற்கு கொடுக்க அதற்கு மேலும் பணம் இருந்தது. அது தெவை அற்றது என்பதால் கொடுக்கவில்லை. அந்த அம்மா இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டும் நண்பர் அந்த அம்மாவிடம் பெரும்பாலும் காசே வாங்கறதில்ல சார் என்றார். வழக்கமாக வருபவர் போலும் என்று நினைத்துக் கொண்டேன். இதில் வருந்தத்தக்க விசயம் என்னவென்றால் அத்தனை முதிய வயதில் அந்த அம்மா ஒரு ஆறு ரூபாயை என்னைப்போன்ற வயதினனிடம் மிக உரிமையோடு கேட்டிருக்கலாம். அந்தளவு கூசிப் போய் கேட்டதும் மிகவும் தழுதழுத்து சொன்ன நன்றி என்னை மிகவும் மன வருத்ததில் அமிழ்த்தின. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? ஒரு முதியவளுகு வசதியான பயணத்தைக்கூட வழங்க முடியவில்லை. அந்த முதியவள் ஒரு தேவையை உரிமையாக கேட்க முடியாமல் உதவியாகக் கோரும் அளவுக்கு நமது சமூகம் பாழ்பட்டுக் கிடக்கிறதா? இத்ததனையிலும் ஆறுதலான விசயம் அந்த ஓட்டுனர்தான். ஆட்டோ ஒட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய லாபகரமான தொழில் அல்ல. ஆட்டோவை வாடகைக்கு விடுபவர்கள் லாபம் சம்பாதிப்பவர்கள். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசே ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து நைனார்குப்பத்திற்கு 7 ரூபாய் வாங்கும் வேளையில் இந்த ஆட்டோ ஓட்டுனர்களும் அதே கட்டணத்தில் பயணிகளை கூட்டிப்போகிறார்கள். பெரிய லாபம் வந்துவிடப்போவதில்லை. அந்த நிலையிலும் அந்த நண்பர் அந்த அம்மாவுக்கு பணம் வேண்டாமென்று சொல்லி விட்டார். விஜயகாந்த் தலைகீழாக நின்று பார்த்தும் மண்டபத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலையில் அதை விட்டுத் தர சம்மதித்த போது அவர் மக்கள் நலனுக்காக பெருந்தன்மையாக செய்கிறார் என்று தம்பட்டம் அடிக்கப்பட்டது அப்போது என் நினைவுக்கு வந்தது. அந்த ஆட்டோ ஒட்டுனர் அன்று எனக்கு உண்மையான மனிதனாகப் பட்டார். என்னிடம் அன்று அதிகப்படியான பணம் இருந்ததால் நான் கொடுத்தது பெரிதில்லை. ஆனால் அவர் செய்தது மிகவும் பெரிய விசயம். நேரடியாக பாராட்டாவிட்டாலும் அந்த அம்மா அடிக்கடி வர்றவங்களாண்ணே என்று கேட்டு விட்டு வந்தேன்.

இந்த நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக எழுத நினைத்தேன். ஆட்டோ சம்பவத்தை ஒரு சிறு சிறுகதையாக மாமா எழுதச்சொன்னார். செய்வோம். இந்தப் பதிவும் மிகத் தெளிவாக இருக்காது. நானே டைப் செய்வது பெரிய வேலையாக இருப்பதால் நினைப்பதை கொண்டு வர முடியவில்லை. எழுதி விட்டு அடிப்பதும் இரட்டை வேலை. எனவே ஒரு தந்தி போல இந்தப் பதிவு. பின்னர் விரிவாக தெளிவாக நேரம் வாய்க்கிறபோது எழுதலாம்.

கருத்துகள் இல்லை: