புதன், 5 மே, 2010

பட்டை டம்ளர்

சில சம்பவங்களை பார்த்ததும் எழுதி விட வேண்டும் என்று தோன்றும். அதிலும் சில விசயங்கள் நமது பிள்ளைப் பருவ நிகழ்வுகளை தொட்டுச்செல்லும்போது மிகவும் முக்கியமாகப் படும். நேற்று மாலை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் உள்ள ஒரு பழச்சாறு கடையில் அத்திப்பழ சாறு அருந்திக்கொண்டு இருந்தேன். எதிரே ஒரு அம்மா தன் இரு சின்ன பெண் குழந்தைகளுடன் வேறு ஏதோ சாறு அருந்திக் கொண்டிருந்தார்கள். இரன்டு குழந்தைகளும் பத்து வயதுக்குள் இருபார்கள். இடையில் அந்த அம்மா எழுந்து போய் கடைகாரரிடம் " இந்த ஜூஸை வடிகட்டி தர முடியுமா? அவளுக்கு அது பிடிக்கல. " என்றார்கள். அதை கேட்பதற்கு அந்த அம்மாவுக்கு மிக தயக்கமாக இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. அவங்க இது போல குடிக்கும் போது எதாவது மாறி இருந்தால் கூட கேட்டிருக்கப் போவதில்லை. சின்ன வயசுல உள்ளூர்ல நடக்கும் கல்யாணங்களுக்கு என் அம்மா பெரும்பாலும் என் வீட்டில் இன்னமும் இருக்கும் ஒரு பட்டை டம்ளரை எடுத்துக் கொண்டு போவார்கள். கல்யாணம் முடிந்து வரும்போது எனக்கு பாயாசம் வாங்கி வர. கண்டிப்பாக என் அம்மா அப்போது ரொம்ப சங்கடப் பட்டிருப்பாங்க. ஊர்ல எல்லாரும் சொந்தக்காரங்க தான். யார் வீட்லயும் எப்பவும் போயி சாப்பிடலாம். ஆனாலும் விசேசங்களில் தனியாக வாங்கி வருவது என்னைப் பொருத்தவரை சங்கடமானது. இது வரை எனது பிரியமானவர்களுக்காக இந்த சங்கடங்களைக் கடந்து எதுவும் பெற்றுத்தந்ததில்லை. அப்படிப்பட்ட விசேசமான ஒரு தோழி விடுதி விழாவுக்கு வந்திருந்த போது அவள் விரும்பிக் கேட்ட பாடலை அவள் என்னிடம் கேட்டும் மீண்டுமொறு முறை போடுவதற்கு ஒலிபரப்புபவரை கேட்க சங்கடப்பட்டோ அல்லது அப்படி தனியாக சிபாரிசு செய்யத் தயங்கியோ முடியாது என மறுத்து விட்டேன். உண்மையான பிரியமாக இருந்திருந்தால் சங்கடத்தை பார்த்திருக்காது.

கருத்துகள் இல்லை: