வியாழன், 29 ஏப்ரல், 2010

சாகாதிருக்கும் உனக்கான ப்ரியங்கள்

தொலைக்காதிருந்த என் கண்ணியம்

மீண்டெழுந்திருந்த என் தன்மானம்

இன்னும் எல்லாமும்

சாகாதிருந்த உனக்கான ப்ரியத்தின் முன்

இன்று மண்டியிட்டு விட்டன.


முட்களால் அலங்கரிக்கப்பட்ட பாதுகை

அணிந்த உன் கால்கள்

என் ஞாபகக் கிடங்கில்

புழுதியெழுப்பும்படியாக

நடனம் தொடங்கி விட்டன.


காலம் அழித்தொழித்த

என் வடுக்களின் மேலெல்லாம்

உன் புன்னகை வாளெடுத்துப்

புதுக்காயங்கள் செய்கின்றாய்.


உடலில் தைத்து ரணமாக்கிய

கண்ணாடிச்சில்லுகளையெல்லாம்

இந்த நெடிய பயண வழியில்

களைந்து விட்டேன்

பாதை நெடுகிலும்

இறைந்து கிடந்த அவற்றை

பெரும் சிரத்தையுடன்

பொறுக்கியெடுத்து வந்து

இன்றென் விழிகளில் வீசிப்போகிறாய்.


தேவதையே!

என் சிறகொடித்தத் தெருவிளக்கே!!

மீண்டுமுன்னைக் காணச்செய்த

காலத்தின் அந்தக் கணத்தை

எனக்காய்ச் சபித்து விடு.

சாபங்கள் உனக்குப் புதிதா என்ன?

கருத்துகள் இல்லை: