வியாழன், 10 ஜூன், 2010

அரசு குறைந்த பட்சம் மக்களுக்கு வாழும் உரிமையையாவது உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த எட்டாம் தேதி ஒரு வேலை விசயமாக கலங்கரை விளக்கம் அருகே பேருந்தில் போய்க்கொண்டு இருக்கும் போது போபால் விபத்துக்கு காரணமானவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை என்ற செய்தித்தாள் விளம்பரம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நூற்றுக்கணக்கானவர்கள் செத்த மும்பை நட்சத்திர ஓட்டல்கள் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட அஜ்மல் கசாபுக்கு மரணதண்டனை விதித்த இந்திய நீதித்துறை 25 ஆயிரம் பேர்கள் உடனடியாக இறக்கவும் ஐந்து லட்சம் மக்கள் தினம் தினம் மரண வேதனையுடன் வாழவும் காரணமான போபால் யூனியன் கார்பைட் ஆலை விபத்துக்கு பொறுப்பாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமே நிகழக்கூடும். இப்படியொரு தீர்ப்பை யாருமே வரவேற்கப்போவது இல்லை. இதற்கு இந்த வழக்கின் தீர்ர்பு வழங்கப்பாடாமலேயே கிடப்பில் இருந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆனபின்னும் இழப்பீடு உரியமுறையில் வழங்கப்படவில்லை. அந்த மக்களுக்கு இந்த தீர்ப்பு இன்னும் ஒரு வேதனைதான். தீர்ர்ப்பு சொன்னவர்களை குற்றம் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்கப்பட்ட பிரிவுகள் அவ்வளவு பலவீனமானவை. அவ்வளவு பலவீனாமான பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்தை விடவும் கொடூரமானது.

இந்த விபத்தின் பிண்ணனி மற்றும் அதற்கு பின்னான நிகழ்வுகளை பற்றிய விரிவான கட்டுரைக்கு பின்வரும் இணைப்பை தொடரவும் (http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_4661.html). எல்லாவற்றையும்- எதிர்காலத்தையும் இழந்த லட்சக்கணக்கான மக்களுக்கான இழப்பீட்டுத்தொகையையும் முழுதாக வாங்கித் தர வக்கில்லாத இது நாள் வரை ஆண்ட இப்போது ஆள்கிற அரசுகள் மிகவும் கண்டனத்துக்குரியவை. மக்களாட்சி எனப்படுகிற இந்த தேசத்தில் இதுவரை எந்த அரசும் மக்களுக்கானதாக இருந்ததில்லை என்பதற்கு இதுவே வேதனையான சாட்சி. இவ்வளவு நடந்த பின்னும் 26 வருடங்களாக செய்ய முடியாத வாரன் ஆண்டர்சன் விசாரணையை செய்ய இன்னும் வாய்ப்புள்ளது என சப்பைக்கட்டு கட்டுகிறார் வீரப்ப மொய்லி. வாரன் ஆண்டர்சன் மீதான விசாரணைக்கு உதவுவது என்பது முடிந்து போன ஒன்று என்று அமேரிக்க தரப்பில் சொல்லி விட்டார்கள். அதன் பின்னும் மொய்லி இப்படி அளக்கிறார். ஹெட்லியை விசாரித்துக் களைத்து விட்டது போலும். ஆனாலும் தாமதமாக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டது எனவும் இந்த விவகாரத்தில் நீதி புதைக்கப்பட்டது எனவும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படி இதுவரை சாதித்தது போதாது என்று அணு உலைகள் அமைக்கிற வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு வசதியை செய்து வைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. எதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் வழக்கத்தில் பாதியளவு இழப்பீட்டை மட்டுமே சம்பத்தட்ட நிறுவனம் செய்யும் என்பதே அந்த வசதி. இது நாட்டில் பரவலாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பாதுகாப்பு குறைவாக உள்ள இந்திய அணு உலைகள் எந்த விபரீதம் விளைவிக்குமோ என்ற பயத்திற்கும் மேலாக இப்படி ஆரம்பிக்கும் போதே கைகழுவுகிற வேலையை செய்வது ஒரு மக்களுக்கான அரசு செய்வது அல்ல. அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத அரசு அடிப்படை உரிமைகளை காப்பாற்றித்தர முடியாத அரசு, குறைந்த பட்சம் மக்களுக்கு வாழும் உரிமையையாவது உறுதிப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: