சனி, 5 ஜூன், 2010

அவர்கள் - நாம் – இவர்கள்


அவர்கள்
மாவீரர் துயிலுமிடங்களின்
எஞ்சிய மண்ணையும் துடைத்தழிக்கிறார்கள்.


அவர்கள்
கடவுளுக்கு முன்பிறந்தவர்களையும்*
பச்சையாக வேட்டையாடுகிறார்கள்.

அவர்கள்
ஆடு மேய்ப்பவர்களையும்
ஏவுகணைகள் வீசிக் கொல்கிறார்கள்.

அவர்கள்
மருந்து எடுத்துப்போகிற
கப்பல்களையும் கவிழ்த்துச் சிரிக்கிறார்கள்.

அவர்கள்
பனிமூடிய முகடுகளிலும்
அடிமைவிலங்குகளைப் பூட்ட ஆட்களைத் தேடியலைகிறார்கள்


அவர்கள்
வனங்களின் சமாதிக்கடியில்
எரிஎண்ணெய் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும்
அவர்கள்
...........................................................
.........................................கிறார்கள்.

இவர்கள்
துப்பாக்கி தூக்குகிறார்கள்
எரிகணைகள் வீசுகிறார்கள்.
கண்ணிவெடிகள் வைக்கிறார்கள்.
உயிரையும் ஆயுதமாக்குகிறார்கள்.
கண்டன ஊர்வலங்கள் போகிறார்கள்.
முழக்கப்போர்கள் செய்கிறார்கள்.
துண்டறிக்கைகள் கொடுக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்
உண்ணா நிலை இருக்கிறார்கள்
மனிதச்சங்கிலி கோர்க்கிறார்கள்.
தெருமுனைக் கூட்டங்களில் பேசுகிறார்கள்.

வர்கள்
...........................................................
.........................................கிறார்கள்.

நடுவிலிருக்கும் நாம்..........?
வேறென்ன செய்வது?
வேடிக்கையாவது பார்ப்போம்.

நன்றிகள் :

இந்திரனுக்கு. * குறியிட்ட வரி அவருடையது

தலைப்புக்காக : சங்கருக்கும் பாலாவுக்கும்2 கருத்துகள்:

நளினி சங்கர் சொன்னது…

ஜேபி முதலில் இந்த கவிதையை பற்றி. அடுத்து 'நன்றிக்கு' வருகிறேன்.

இதுவரை நான் வாசித்த உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.
உங்கள் அரசியல் கவிதைகளின் மிகப்பெரிய விசிரியாகிவிட்டேன் ஜே.பி.

உங்கள் எழுத்துக்களின் மிகப்பெரிய பலமாக தோன்றுவது உங்களின் அரசியல் அறிவு.

உங்கள் படைப்புலகங்களின் என் ஆதர்ச வரிசை
காதல்,அன்பு > அரசியல் > குழந்தைகள் (சவுரிஷ்)> பயனம் > அவதானிப்புகள். இது ஒரு பொதுப்படையான ஒன்றுதான். சில நேரங்களில் இந்த வரிசையை உடைத்துப்போடக்கூடிய கவிதைகளும் உள்ளன. குழந்தைகயின் கையினைக் கிழிக்கும் காலண்டர் ஆணி பற்றிய கவிதை, சிறுநீர் கழித்தல் கவிதை... போன்றவைகள் அதற்கு உதாரணம்.

நன்றி; நான் மிகவும் கொண்டாடும் ஒரு திரைப்பட இயக்குநருடன் என் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டு நன்றி சொன்னதற்கு. ஆனால் நன்றி சொல்லும் அளவுக்கு அந்த தலைப்பில் என் பங்கு இருப்பதாக தோன்றவில்லை.

ஒரு ட்வுட்; இங்க சங்கர்னு சொல்லி இருக்கர்து என்னத்தான!!!

Jayaprakashvel சொன்னது…

சங்கர் அந்த சங்கர் நீங்கதான். அந்த தலைப்பை கவிதைக்கு சூட்டலாம் என்ற எண்ணம் உங்களுடையதுதானே. அதனால் அதற்கு பொருத்தமானவர் தான் நீங்கள்.
அரசியல் அறிவெல்லாம் பெரிதாக இல்லை சங்கர். செய்திதாள்கள் கூட தொடர்ச்சியாக படிப்பதில்லை. இன்டர்னெட் மட்டும்தான். என்றாலும் அவ்வப்பொது சில நண்பர்களிடம் பேசுவது பெரிதாக உதவுகிறது. எனது அரசியல் சார்புக்கும் அவர்களே காரணம்.

இந்த விசயத்தை எழுத நினைத்து வெகு நாட்களாகிறது. வடிவம் பற்றிய குழப்பத்தில் இருந்தேன். உங்களின் அவன் இவன் படித்த பிறகு அது எனக்கு எளிதாகிப்போனது. இருந்தும் கடைசி வரிகள் எனக்கு உவப்பாக இல்லை. வெகு சம்பிரதாயமான சாதாரணமான வரிகள் அவை. அது மொத்த கவிதையயும் வலுவிழக்க வைக்கிறதோ என்ற மயக்கம் உள்ளது. நீங்க நல்லா இருக்குன்னு சொல்றீங்க. கொஞ்சம் ஆறுதலா இருக்கு.