வியாழன், 1 ஜூலை, 2010

களவாணி- ஒரு எளிமையான பொழுதுபோக்கு படம்

இன்று மாயாஜால் ஐந்தாவது திரையில் களவாணி படம் பார்த்தேன்.ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு முழு நீள பொழுதுபொக்கு படம். நண்பர் முத்தெழிலன் பி வி ஆர் காம்ப்ளக்ஸ் என்ற மல்டிப்ளக்ஸில் இந்தப் படத்தை பார்த்து விட்டு மேலும் அதே செலவுக்கு என்னையும் உடன் அழைத்துப் போய் (அவரது செலவில்) இரண்டாவது முறையாக படம் பார்த்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இயக்குனர் படத்தில் சில விசயங்களை சரியாக கவனிக்காமல் தவறு செய்திருந்தாலும் ஒட்டு மொத்த படத்தின் உற்சாகம் அந்தத் தவ்றுகளை புறந்தள்ளி விடுகின்றன. நடிகர்கள் தேர்வு முதல் இடங்களை தேர்வு செய்தது என பல இடங்களில் இயக்குனர் சற்குணம் மிகவும் திறமையானவராகப் படுகிறார். என்றாலும் நான் கவனித்த சில தவறுகள் எளிதாக சரியாக செய்திருக்க வேண்டியவை.

இங்கிட்டு மீனாச்சி அங்கிட்டு யாருஎன்று அற்புதமாக நமக்கெல்லாம் அறிமுகமான விமல் இந்தப் படத்திலும் மிக அற்புதமாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். அறிக்கி என்கிற அறிவழகனைபோல ஊருக்கு ஒரு ஆள் கட்டாயம் உண்டு. அந்த உடல்மொழியும் யமஹா காலை மூடியிருக்கும் செருப்பு வெள்ளை சட்டை வேட்டி என இயல்பானவற்றை கூடுமான அளவு இயல்பாக செய்திருக்கிறார். ஆனால் அவனின் அம்மா மற்றும் தங்கை பாத்திரங்கள் கொஞ்சம் செயற்கையாகத்தோன்றுகிறது. மேலே சொன்னது போல இந்த எல்லாக் குறைகளையும் படம் அடித்துத் தள்ளி போகிறது. பஞ்சாயத்துகருப்புவருகிற மிகப்பெரும்பாலான காட்சிகள் கதையோடு இயைந்த சிரிப்புப் பகுதிகள். மிகவும் ரசிக்கத்தக்கன. ஒன்றிரன்டு இருபொருள் மொழிதல்கள் இருந்தாலும் ரசிக்கத்தக்கனவே.

கதை நடக்கும் இடம் ஒரத்தனாடு மன்னார்குடி பகுதிகள். புதிய இடங்கள். புதிய தளம். படத்தின் ஆரம்ப கட்ட கிரிக்கெட் போட்டி காட்சிகள் பார்க்கும் போது ஒளிப்பதிவாளர் மேல் எரிச்சலாக இருந்தது. ஆனால் பின் வந்தன மிக அருமையாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தை பற்றி சிலாகித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் மூன்றை மட்டும் இங்கே வைக்கிறேன்.

1. இந்தப் படத்தில் இளங்கோ என்ற கோபக்காரர் (மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.) தனது பெரியப்பாவின் சொல்லுக்கு கொடுக்கும் மரியாதை. ஊர்களில் இன்னும் சில பெரியப்பாக்கள் மதிக்கப்படுகிறார்கள். அந்த செய்தி இந்தப் படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

2. சண்டை நடக்கப்போகிறதோ என நாம் எதிர்பார்க்கும் தருணங்கள் காமெடிக்காட்சிகளாவது எதிர்பாராத வியப்பு.

3. சரண்யா தவிர பெரும்பாலான பாத்திரங்களின் இயல்பான நடிப்பு.

மிகவும் உறுத்தலாக இருந்த ஒரே பெரிய அதே சமயம் முக்கியமான விசயம். மகேஸ் என்ற கதை நாயகி பள்ளிக்கூட சிறுமியாக காட்டப்படுவது. இது போல ந்டக்கிறது என்றாலும் திரையில் கொஞ்சம் மாறுதலாக காண்பிப்பது நல்லது. அதை வியாபார நோக்கில் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அது போல நடக்க கூடாது என்பது என் விருப்பம்.

நமக்கு நெருக்கமானவர்களுக்கு நாம் விரும்பிய ஒன்றை பரிந்துரை செய்வதும் ஒருவிதத்தில் பரிசளிப்பது போன்றதுதான். இதைப்படிக்கும் அன்புள்ளவர்கள் அத்தனை பேரையும் இந்தப் படத்தை பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். இந்தப் படத்தை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்.

படம் பாருங்கள். நல்லா இருக்கு.

.

கருத்துகள் இல்லை: