வியாழன், 8 ஜூலை, 2010

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை

நண்பர் சங்கரின் அரசியல் அங்கத சினிமாவின் துவக்கம் – நண்பர் ஜே.பிக்கு ஓர் எதிர்வினை என்ற பதிவுக்கு என் பதிலாக இந்தப் பதிவு

சங்கர்

ரொம்ப நிறைய எழுத முடியாத நிலை. என்றாலும் உங்கள் பதிவின் நோக்கம் எழுதத் தூண்டுகிறது. எந்த நோக்கமானாலும் சமூகம் பற்றிய சமகால அரசியல் பற்றிய விமர்சனங்கள் தாங்கி வரும் படைப்புகளை வரவேற்கவே செய்ய வேண்டும். மணிரத்னம் கூட அவருடைய பார்வையில் சமகால அரசியலை அவர் படங்களில் அலசுகிறார். ஆனால் நான் மணியையும் சிம்புதேவனையும் ஒப்பிடவில்லை. நான் சிம்புதேவனின் பேட்டி பற்றி எழுதியதற்கு காரணம் படம் ஒரு இந்திய கெளபாய் படமாகத்தான் விளம்பரப்படுத்தப்பட்டது. தொலைக்காட்சிகளில் சிம்புதேவனும் அதை முன்னிறுத்தி, லாரன்ஸை முன்னிறுத்தி, செட்டுகளை முன்னிறுத்திதான் பேசினார். நான் இரண்டு நேர்காணல்களை பார்த்தேன். படம் வந்த பிறகு நான் அவரின் நேர்காணல்களை படிக்கவோ பார்க்கவோ இல்லை. எஸ் ராமகிருஷ்னன் குட்டி ரேவதி சர்ச்சையில் எஸ் ராம்கி என்ற தனிப்பட்ட மனிதன் மீதான மரியாதை குறைந்தது. நீங்கள் படத்தில் கண்டடைந்த அரசியல் மற்றும் அங்கதத்தை சிம்பு தேவன் முன்னிறுத்த வேண்டியது அவசியம் என்று நான் நினைப்பதற்கு மற்றுமொரு தமிழ்ப்படைப்பாளியை இங்கே அழைத்து வருகிறேன். எஸ். பி. ஜனநாதன். வணிக சினிமாவுக்கான அம்சங்களுடன் வந்த அவரது ஈ என்ற படம் விமர்சித்த அரசியல் சம்காலத்து சர்வதேச அரசியல் தான். அது மிகவும் நேரடியாக விமர்சனம் செய்த படம். அந்த படத்தின் கடையில் நெல்லை மணி பேசும் வசனங்கள் சுலபமாக சென்சாரால் தடை செய்யப்பட்டிருக்க வேண்டிய, அமேரிக்காவே பயப்பட வேண்டிய வசனங்கள். நான் பேராண்மை படத்தை பெரிதாக சிலாகித்து எழுதி இருந்தாலும் ஈ படம் நான் மிகவும் அதிசயித்த படம். சமகால அரசியலை சமரசம் இல்லாமல் விமர்சித்த எம். ஆர். ராதாவை என்ன பன்ன முடிந்தது இவர்களால்?

அமெரிக்க எதிர்ப்பு என்பது என்னைப்பொறுத்த வரை ஒரு வெகுஜன ரசனைக்கு வந்து விட்டது. அதை சிம்பு தேவன் உபயோகித்துக்கொண்டாரோ என்ற மயக்கம் எனக்கு உண்டு. யாரையும் சந்தேகப்படுவது எனது இயல்பு. அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால் மகிழும் முதல் ஆளும் நான் தான். உண்மையில் வெறும் அமெரிக்க எதிர்ப்பும் விமர்சனங்களும் ஒரு வகை திசை திருப்பல்கள் தான். பிரச்சனைகளின் மையம் அமெரிக்கா அல்ல. அமெரிக்கா அந்த பிரச்சனைகளை செயல்படுத்தும் கைகள் அவ்வளவே. என்றாலும் தமிழ்ப்படங்களில் இந்தளவாவது காட்டியிருப்பது மகிழ்ச்சிதான். ஆனாலும் அதன் நோக்கம் குறித்த என் சந்தேகங்கள் தீரவில்லை. சிம்புதேவன் ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர் என்று நினைவு. அதுகூட இப்போது செம்மொழி மாநாட்டை படு கேவலாமக விமர்சித்து எழுதி இருக்கிறது. அந்த ஒரு கட்டுரையை பாராட்டலாமே தவிர அந்தப் பத்திரிக்கையை முற்போக்கானதாக கருத முடியாது. அது என்ன நோக்கத்துக்காக அப்படி எழுதுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். அது போலத்தான் சிம்புதேவன் மீதான என் சந்தேகமும். இதற்கும் அவர் அங்கே வேலை பாத்ததுக்கும் சம்பந்தம் இல்லை. ஆயிரத்தில் ஒருவன் ஈழப்பிரச்சனையை மையப்படுத்துகிறது என்பதற்காக செல்வராகவனை ஈழ அதரவாளாக அடையாலம் கொள்ள முடியாது. சிம்பு தேவன் இந்தப்படத்திலும் இதற்கு முன்னாலும் எடுத்துக்கொண்ட எந்தப் பிரச்சனையும் ஆவ்ருக்கு நம்ம ஊரில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத பொதுவான தளத்தில் பேசப்படுபவைதான். ஆனால் எஸ் பி ஜன நாதனின் அரசியல் தத்துவ ரீதியாக ஆட்சியாளர்களை மிகவும் பயங்கொள்ள வைக்கக்கூடியது. அவர் தான் பயப்ப்பட வேண்டுமே தவிர சிம்பு தேவன் அல்ல. மேலாக தீ என்றொரு படம் இப்போது வந்ததே? நினைவில் இருக்குமாதெரியவில்லை. சன் பிக்சர்ச் படம். அவர்கள் குடும்பச்சண்டை உச்சத்தில் இருந்த போது வந்த படம். அதை செய்யத்தான் தைரியம் தேவை. ஓட்டுக்கு பணம் கொடுத்து பதவிக்கு வந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. காவல்துறை சங்கம் என மிக லோக்கலான அரசியலை அந்தப் படம் கொண்டிருந்தது. ஆனால் அது வெரும் குடும்பப்பகையின் விளைவே. இந்த மட்டில் சிம்புதேவனின் அமேரிக்க எதிர்ப்பும் காசு பண்ணும் ஒரு வழியே என்று நான் சந்தேகிக்கிறேன். என் சந்தேகம் பொய்த்துப்போக வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன்.

மிகவும் அதிகப்படி என்றாலும் படம் பார்த்த பிறகு எனக்கு அரட்டை அரங்கம் பார்த்த உணர்வுதான் வந்தது. நண்பர் முத்து இந்தப் படத்தை பார்த்த நாளில் இருந்து உசா புரம் அணுஒப்பந்தம் என்பது பற்றியெல்லாம் நிறைய பாராட்டினார். சிங்கம் லாரன்ஸின் இறக்கும் தருவாயில் வரும் வசனங்கல் ஈழத்தில் பிரபாகரன் பேச நேர்ந்த வசனாமாக இருக்கலாம் எனவும் சொன்னார். ஒரு துரோகிக்கு டக்ளாண்டி என்று டக்ளஸ் தேவானந்தாவை நினைவூட்டும் பெயர், பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் போன்ற வசனங்கள் எல்லாம் ஈழக்கொடுமைகளை பிரதிபலித்தவை என்று மிகச்சாதாரணமாக உணர்ந்து கொள்ளலாம். இன்னும் சொல்லபோனால் ஆயிரத்தில் ஒருவன் படம் ஈழ யுத்தத்தில் சோனியாவின் பங்கை நினைவூட்டுகிர விதமாக ரீமாவின் பாத்திரம் என்றும் அவர் சொன்னார். எனக்கும் படத்தின் பல்வேறு காட்சிகள் அதையே உறுதிப்படுத்தின. என்றாலும் சோழர்களின் மரியாதை சம்பத்தப்பட்ட சர்ச்சையில் அந்தப் படம் நுழைந்த போது செல்வராகவன் இது பற்றி விளக்காமல் ஒரு கற்பனையே என்ற அளவில் நின்று கொண்டார். உண்மை நோக்கம் அதுவென்றால் நேர்மையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. சிம்பு தேவன் எஸ் பி ஜனனாதன் போல அதைப்பற்றி நேரடியாக சொல்லி இருந்தால் அது மகிழ்ச்சி.ஆனால் அப்படி இல்லாமல் இது ஒரு கெளபாய் படம் என்று சொல்லி வருபவரின் படத்தை அரசியல் படம் என்று நாம் மகிழ்ந்து கொள்ளலாமே தவிர ஒத்துக் கொள்ள முடியாது. (எஸ் பி ஜனனாதனும் தற்சமயம் அரசுசாரா நிறுவனங்களின் கைப்பாவையாக மாறி விட்டார் என்ற தகவலும் உலவுகிறது. அதற்கு சான்றளிக்கும் காட்சிகலும் பேராண்மையில் உண்டு.). இந்த அரசியல் எல்லாம் மிக நுணுக்கமானவை சங்கர். NGO-களுக்கு நமது மனித உரிமைகளின் மேல் என்ன அக்கறை? கிராமத்து மக்கலை ஒன்று திரட்டி குளம் வெட்ட வேண்டிய தேவை அவர்களுக்கென்ன? ரொம்ப விரிவாகப் பேச வேண்டியவை. போக இங்கே சம்பந்தமில்லாதவை.

அதுபோக மாடுசெத்தான் மனுசன் திண்னான் என்ற வரிகள் செத்த மாடுகளை திண்பவர்கள் என்று காலங்காலமாக கேவலப்படுத்தப் பட்டு வரும் தாழ்த்தப் பட்ட மக்களை மேலும் கேவலப்படுத்துகிறது என்று சில அமைப்புகள் அந்த வரியை மாற்றச்சொல்லி போராட்டம் செய்தன. கண்டனம் தெரிவித்தன. இசையமப்பாளர் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் (இதுவும் இயக்குனர் என்றே நினைக்கிறேன்.) இவர்கள் அந்தப் பாடல் வரிகள் அவ்வாறான நோக்கத்தில் எழுதப்படவில்லை எனவே நீக்கத்தேவை இல்லை என்று தெரிவித்தனர். சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது. ஆட்கள் நினைவில் இல்லை.

நேரிலோ போனிலோ விரிவாக பேசுவோம். என்றாலும் எழுத தூண்டிய உங்கள் பதிவுக்கு நன்றி. முடிந்தால் இந்த விவாதங்களை தொடர்ந்து இருவரும் பதிவு செய்வோம்.