ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மைனாரிட்டி அ.தி.மு.க. அரசும் சமச்சீர் கல்வியும்

கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசின் அட்டூழியங்களினால் வெறுப்புற்ற தமிழக மக்கள் அ.தி.மு.வுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர் என்று பலதரப்பிலும் பேசப்படுகிறது. உண்மையில் நான் அன்றாடம் சந்திக்கும் பலதரப்பட்ட மக்களும் இதே மனநிலையில் தான் உள்ளனர். எதாவது மாற்றம் வருமென்று பெரிய நம்பிக்கையில் உள்ளனர். சில அடாவடிகளை குறைத்துக் கொண்டதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அரசும் மக்களுக்கு இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆனாலும் ஜெயலலிதாவின் உடன்பிறந்த வியாதியான வறட்டுப் பிடிவாதத்தால் இன்று நமது எதிர்காலமான பள்ளிக் குழந்தைகள் மிகவும் குழப்பத்திலாழ்ந்துள்ளார்கள்.
இந்த நிலைமைக்கு ஜெயலலிதாவின் பிடிவாதம் மட்டும் காரணம் அல்ல. அது ஒரு சின்ன காரணம் தான். உன்மையான காரணம் மெட்ரிக் பள்ளிக்கூட முதலாளிகள் தான். அவர்களின் லாபவெறியினால் தான் நம் குழந்தைகள் இரண்டு மாத காலமாக பாடங்களைப் படிக்காமல் உள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று தெரியாத தமிழ் மக்களும் அது என்ன என்று கேட்டும் கவனித்தும் வருகிறார்கள்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஒரு முழுமையான சமச்சீர் கல்வி அல்ல என்ற போதிலும் சமச்சீர் கல்வியை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்ற வகையில் அது மிகவும் வரவேற்கத்தக்கது. சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் சம்பந்தமான மாற்றம் அல்ல. அப்படியாக இருந்திருந்தால் இந்த மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்படி அரசுடன் கள்ளக்கூட்டு வைத்து பிள்ளைகளை வஞ்சித்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வி படிப்படியாக கல்வியில் சமத்துவத்தை கொண்டு வரக் கூடியது. அன்றாடக்கூலிகளின் - அடித்தட்டுப் பாட்டாளிகளின் பிள்ளைகள் மெட்ரிக் பள்ளிகளிலும் கான்வென்ட்களிலும் படிக்க முடியாது என்பதால்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். கொஞ்சம் சாப்பாட்டுக்கு சிரமமில்லாத நடுத்தட்டு மக்கள் கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.
வசதி படைத்த கணவான்கள் பெரும்பள்ளிகளிலும் கோடீசுவரர்கள் வெளி நாட்டிலும்  தம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். எப்படி நமது சமூகம் வர்க்கங்களாக பிளவுண்டு அடிமைப்பட்டு கிடக்கிறதோ அப்படியே சமூகத்தின் அங்கமான கல்வியும் வர்க்க வேறுபாடுகளால் தளைப்பட்டு கிடக்கிறது. இப்படி சொல்வதை சிலர் புதியதலைமுறை பத்திரிக்கைகளில் வரக்கூடியதைப் போல கம்யூனிஸ்ட்டுகள் என்று கிண்டலடிக்கலாம். ஆனால் இது தான் உண்மை. காசு உள்ளவன் பிள்ளைகள் பெரிய பள்ளிகளில் படிப்பதும் காசு இல்லாதவன் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் படிப்பதும் கஞ்சிக்கே இல்லாதவன் பிள்ளை பள்ளிக்குப் போகாமல் வேலைக்குப் போவதும் மறுக்க முடியாத சமூக அவலங்கள்.
பெருநகரத்தில் கணவான்களின் காசுக்காக பள்ளிக்கூடத்தொழில் நடத்தும் சோ. ராமசாமி போன்ற பார்ப்பன அறிவாளிகள் சமச்சீர் கல்வியை கட்டைவண்டி என்று கிண்டலடிக்கிறார்கள். அதன் பிண்ணனியில் தம் வருமானம் குலைந்து விடக் கூடாது என்ற ஆற்றாமையே எனக்குக் கேட்கிறது. இப்படி அரசு பள்ளிகளின் கல்வித்திட்டம் தனியார் பள்ளிகளிலும் அரசுப்பள்ளிகளிலும் ஒன்றே என்று சொல்லி விட்டால், தாம் உயர்ந்த கல்வியை கொடுப்பதாய் புளுகிவிட்டு காசு பார்க்க முடியாது என்ற கடுப்பிலேயே தனியார் பள்ளி முதலாளிகள் என்ன விலை கொடுத்தாவது இந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை முடக்க முயல்கிறார்கள்.
தனியார் பள்ளி முதலாளிகள் இங்கே கிடந்து துடிப்பதில் அர்த்தம் இருக்கிறது. அரசும் ஏன் கிடந்து துடிக்க வேண்டும்? புரிந்து கொள்வது மிக எளிது. இது மக்களுக்கான அரசு அல்ல. பெரும்பான்மையினருக்கான அரசு அல்ல. காசு கொழிக்கும் சிறுபான்மையினரான முதலாளிகளுக்கான அரசு இது. வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று வசைபாடிய ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழகத்தில் நடப்பது கருத்தியல் மைனாரிட்டி அரசு. பெருந்திரளான மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொஞ்சமே கொஞ்சம் உள்ள கல்வி வியாபாரிகளின் தயை வேண்டி தமிழக அரசு இந்த சமச்சீர் கல்வியை முடக்க பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறது. இப்படி சில முதலாளிகளின் நலனுக்காக பாடுபடும் மைனாரிட்டி அ.தி.மு.க அரசு மிகவும் தவறாக வழி நடத்தப் படுகிறது என்று அரசு வக்கீலே சொல்கிறார். பின் அவர் அது தன் சொந்தக் கருத்து என்று பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்பட்டேன். மக்கள் விரோத அரசுகள் ஆளும் நாட்டில் நீதிமன்றம் எப்படி இருக்கும்? அதுவும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கும். உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரம் போய் விட்டது. உச்ச நீதிமன்றம் பாடப்புத்தகங்களை வழங்கும் கெடுவை தல்லிப் போட்டுக் கொண்டே போகிறது. பாடப்புத்தகங்கள் வழங்க பத்தாம் தேதி வரை கெடு விதிக்கும் கோர்ட், தீர்ப்பை இருபத்தி ஆறாம் தேதி வரை தள்ளி வைக்கிறது. யாருக்காக இந்த நாடகமென்று இனியும் சொல்ல வேண்டுமா? தமிழக அரசும் ஒரு படி மேலே போய் விட்டது. தீர்ப்பு இன்னும் வரவில்லை. அதற்குள் பாடப்புத்தகங்களை அச்சிட முதலாளிகளை அரசு தேர்வு செய்து கைகாட்டியும் விட்டது. என்ன பாடத்திட்டம் என்ற தீர்ப்புக்கு முன்னமே இப்படி அடாவடி யார் செய்வார்கள்? சந்தேகமே இல்லாமல் பாசிஸ்ட்டுகள் தான் (என்னிடம் சில நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். பாசிசம் என்றால் என்னவென்று. வெகுசிலரின் நலனுக்கான தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக பெரும் பான்மையான மக்களின் மேல் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஏவிவருகிறதான இந்த அரசுதான் பாசிச அரசு என்பதை அவர்களுக்கு இதன் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்).
ஏன் சமச்சீர் கல்வி வேண்டும்? எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டுமானால் எல்லாமும் சமமாக வேண்டும். (அம்பேத்கர் சொன்ன குட்டையான கைக்கு நீளமான வாளும் நீளமான கைக்கு குட்டையான வாளும் என்ற எடுத்துக் காட்டை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்). மிக முக்கியமாக கல்வி சமமாக்கப்படவேண்டும்.  ஏற்றத்தாழ்வுகள் நிரம்பின இந்த சமூகத்தில் சமச்சீர் கல்வி அப்படியான சமத்துவத்தை கொண்டு வந்து விடுமென்று எதிர்பார்க்க முடியாது. ஒன்றுமே இல்லாததற்கு எதாவது ஒன்று இருக்கலாம் என்ற ஆறுதல் காரணமாக சமச்சீர் கல்வியை வரவேற்க வேண்டும். போகப்போக ஒரு சமத்துவமான சமூகத்தில் உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டு வந்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் சமச்சீர் கல்வியை வரவேற்கலாம். பள்ளிகளில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வு வெறும் பாடத்திட்ட மாறுதல்களால் சரிசெய்துவிடக் கூடியது அல்ல. என்ற போதிலும் இப்படியான ஏற்றத்தாழ்வுகள் மிக்க பள்ளிக்கல்வி இதுகாலம் வரை உருவாக்கி வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களையும் போராட்டத்தின் முதல் அடியாக இந்த மாற்றம் இருக்கும்.
இதில் கிளைக்காமெடியாக ஞானி போன்றவர்கள் அரசு அலுவலர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முதலில் அவர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறர்கள். அவர்கள் அரசுப்பள்ளிகளை தவிர்க்கக் காரணம் என்ன? தம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு தவறல்ல. அரசுப்பள்ளிகளை தரமுயர்த்தினால் அவர்கள் ஏன் அங்கே போகப் போகிறார்கள்? அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை; தமிழில் கற்றவர்களுக்கு முன்னுரிமை என்று அரசு சட்டம் இயற்றட்டும். அப்புறம் எல்லோரும் அங்கே போவார்கள். மத்திய அரசின் வேலைகளுக்கான உயர்கல்விக்கான விண்ணப்பங்களில் எல்லாம் எந்தக் கல்விமுறையில் படித்தாய் என்ற கேள்வி தவறாமல் இடம்பெறுகிறது. எனவே மக்கள் சி. பி. எஸ். சி மெட்ரிக் என்று தேடி ஓடுவதை தப்பு என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் பிழைக்க வேண்டும்; சம்பாதிக்க வேண்டும் என்று உந்துதல் உண்டு. அதன் காரணமான இப்படித்தான் செய்வார்கள்.
ஒரு சிறிய ஆய்வு கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் கொடூரத்தை விளக்கி விடும். மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் உயர்கல்விக்கு போனார்கள்; எத்தனைபேர் உயர்பதவிகளில் சேர்ந்தார்கள் என்று ஒரு கணக்கும் அதே ஆண்டில் இருந்து அரசுப்பள்ளிகளில் இருந்து உயர்கல்விக்கும் உயர்பதவிக்கும் போனார்கள் என்ற கணக்கும் எடுத்து சீர்தூக்கிப் பார்த்தால் இந்த ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கி வைத்த உண்மையான விளைவுகள் புரிந்து விடும். இப்படியான ஒரு ஒப்பீட்டு புள்ளிவிவரத்தை விசயம் தெரிந்தவர்கள் யாராவது கேட்டு வாங்கினால் பரவாயில்லை. அது சமூகத்தில் கல்வி பற்றிய மதிப்பிடுகளை மறுபரிசீலனை செய்ய உதவும். இதற்காக அப்துல் கலாமையும் அண்ணாதுரையையும் (மயில்சாமி) எடுத்துக்காட்டாக கொண்டு வந்து காட்ட வேண்டாம். அப்டுல் கலாமௌடன் அரசுப்பள்ளியில் படித்த மற்ற மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? அண்ணாதுரையின் வகுப்புத்தோழர்கள் என்னவானார்கள்? இந்த வேர்களைத் தேடிப் போனால் உங்களுக்கு உண்மை உறைக்கும். அப்துல்கலாம்கள் போன்ற விதிவிலக்குகளைக் காட்டி அரசுப்பள்ளிகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவோர் உண்மையைத் திரிப்பவர்கள். (இதே போல இதற்கு முன்பு ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். காவி பயங்கரவாதிகள் சங்க பரிவாரங்கள் பாபர் மசூதியை இடித்த போது அங்கே அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வேடிக்கை பார்த்த ஆறாயிரம் போலீஸ்காரர்களில் எத்தனை பேர் முஸ்லீம்கள் என்ற போது வந்த பதில் மிகவும் அதிர்ச்சிகரமானது. ஒருவரும் இல்லை. திட்டமிட்ட இது போன்ற அநீதிகள் ஒருபக்கம்; திட்டமிடாமல் அதன் போக்கில் வளர்ந்த சமூக அநீதிகள் ஒருபக்கம்).
இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி சி.பி.எஸ்.சி. முறையை மாற்றவில்லை. கல்வி மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாலேயே கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி பள்ளிகள் இவையெல்லாம் சமச்சீராக்கப்படவிலை. ஆங்லோஇந்தியன், ஓரியன்டல், மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகள் மட்டும் இந்த சமச்சீர் கல்வியில் ஒன்றாக்கப்பட்டுள்ளன. நூறுக்கும் குறைவாக உள்ள ஆங்லோஇந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகள் இந்த சமமாக்கலில் பெரிதும் எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால் பதினோராயிரத்துக் குறைவான மெட்ரிக் பள்ளிகள் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளோடு தம்மை சமப்படுத்திக் கொள்ள தயாராக இல்லை. இந்த பதினோராயிம் பள்ளி முதலாளிகளின் லாபவெறிக்கு ஐம்பதாயிரம் அரசுப்பள்ளிகளில் படிக்கிற லட்சக்கணக்கான மாணவர்களை பலியாக்கி இருக்கிறது அரசு.
இப்படி வெறும் பதினோராயிரம் பள்ளி முதலாளிகளின் ஊதுகுழலாக அரசு சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்களுக்காக மக்களின் பணத்தில் வாதாடிக்கொண்டு இருக்கிறது. கோர்ட்டும் தீர்ப்பு சொல்கிறது. மேலும் முறையிடச் சொல்லுகிறது. பாடப்புத்தகங்களை வழங்க கெடு வைக்கிறது. அதையும் தள்ளி வைக்கிறது. மறுபடியும் தீர்ப்பை தள்ளி வைக்கிறது. தீர்ப்பை 26ம் தேதி வரை தள்ளி வைப்பது என்பது அந்த தேதி வரை பிள்ளைகளை தவிக்க விடுவது என்றுதான் அர்த்தம். இந்த இரண்டு மாத பாடச்சுமையை தீர்க்க இனிமேல் பிள்ளைகள் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகளை இழக்குமோ? எத்தனை சுமைகளைத்தாங்குமோ?
இப்படியெல்லாம் எழுதுவதால் தி.மு.க இதில் சரியாக நடக்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். பாளையங்கோட்டைக்கெல்லாம் அஞ்சாத சிங்கம் திகாரிலிருக்கும் மகளுக்காக ராம்ஜெத்மலானியை வைத்து வாதாடுகிறது. சமச்சீர் கல்வி பிரச்சனையில் அறிக்கையோடு சரி. சமச்சீர் கல்வி வந்தாலென்ன வராவிட்டாலென்ன. திகாரில் இருப்பவர்களை வெளியே கொண்டுவர வேண்டும்; வீரபாண்டியாருக்காக மறியல் நடத்த வேண்டும். இந்த நிலையில் சமச்சீர் கல்வி என்பது அவருக்கு ஒரு ஊறுகாய் கூட கிடையாது.  நாம் வேண்டுவதெல்லாம் ஒன்று சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துங்கள். அல்லது எந்த பாடத்திட்டம் என்பதையாவது விரைந்து முடிவெடுங்கள்.
(இந்தக் கட்டுரை தோழர் சிற்பிமகனுடன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டிருந்த போது அவரின் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.  கருத்து அவருடையத்து; எழுத்து என்னுடையது; உணர்வு இருவருடையது).

4 கருத்துகள்:

Thennavan சொன்னது…

\\தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஒரு முழுமையான சமச்சீர் கல்வி அல்ல என்ற போதிலும் சமச்சீர் கல்வியை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்ற வகையில் அது மிகவும் வரவேற்கத்தக்கது.\\

//பெருந்திரளான மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொஞ்சமே கொஞ்சம் உள்ள கல்வி வியாபாரிகளின் தயை வேண்டி தமிழக அரசு இந்த சமச்சீர் கல்வியை முடக்க பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறது.//

அருமையான அலசல்

ramalingam சொன்னது…

உணர்வு என்னுடையதும்தான்.

Jayaprakashvel சொன்னது…

thank you friends

ராவணன் சொன்னது…

கருணாநிதி, கனிமொழி போன்ற கல்விமான்களின் கவிதைகள் இல்லாதிருப்பின் சமச்சீர்கள் கல்வி நல்லதே. அந்த நச்சுக்கள் கலக்காதவரை யாரும் எதிர்க்கமாட்டார்கள்.