பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது கருணைமனுக்களை நிராகரிக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துவிட்டது. செப்டம்பர் 9 தூக்கு என்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மரண தண்டனைக்கெதிரான விவாதங்களும் போராட்டங்களும் வலுப்பெற்றுள்ளன. இதே காலகட்டத்தில் செங்கோட்டை தாக்குதலுக்காக தண்டிக்கப்பட்ட ஆரிப், பாராளுமன்றத்தாக்குதலில் தண்டிக்கப்பட்டுள்ள அப்சல் குரு ஆகியோரது தண்டனைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக் குறைப்பே வலியுறுத்தப் படுகிறது. உயிரென்றால் எல்லாம் உயிர்தான். பாராளுமன்றத்தாக்குதல் நடத்தியவர்களும் அதை விடுதலைப் போராட்டம் என்றுதான் அறிவிக்கிறார்கள்.
இப்படியான நிலையில், மரண தண்டனை என்பதை முற்றாக ஒழிக்க வேன்டும் என்பதே என் விருப்பம். அப்சல் குருவின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும்; பேரறிவாளனது தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும். கடந்த வருடத்தில் மட்டும் உலகெங்கும் 2000க்கும் அதிகமானோர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த நாடுகளில் சீனா ஆயிரத்துக்கும் அதிகம் பேரைக் கொன்று முதலிடத்தில் உள்ளது.
மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டு மனித நேயம் காக்கப்பட வேண்டும் என்பதும் நாம் நமது சமூகத்தின் நாகரீக மேன்மையைக் மெருக்கூட்டவேனும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதும் என் விருப்பம். இதே விருப்பம் உங்களுக்கும் இருந்தால் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக்குறைப்புக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிட தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.
இந்த நேரத்தில் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக்குறைப்பை வெறும் இன அபிமானமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த முயற்சியில் முதல் படி இந்த மூவருக்கும் என்று கொள்ளவும். இவர்கள் மூவரும் தற்போது தூக்குக் கயிறு எடுக்கப்படும் நாளை எண்ணிக்கொண்டு உள்ளவர்கள். அப்சல் குரு மற்றும் ஆரிப் ஆகியோரின் கதியும் இதுவே. இவர்கள் இருவரையும் குறித்து தமிழக சட்டமன்றம் பேச முடியாது. முற்றாக மரணதன்டனை ஒழிப்பு என்ற மிகப் பெரிய போராட்டத்தில் முதல் படியாக பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக் குறைப்பை வலியுறுத்துவோம். இந்த ஐவரும் தவறு செய்தார்களா இல்லையா என்ற விவாதத்துக்கு அப்பாற்ப்பட்டு இவர்கள் வாழ விரும்பி தண்டனை ரத்து கோரியவர்கள் என்பதை நினைவில் கொள்க. வாழ விரும்புகிறவனின் உயிரைப்பறிப்பது ஒரு நாகரீக சமூகத்துக்கு அழகல்ல.
உங்கள் என்னமும் இதே போல இருப்பின் அவசியம் விரைவில் தமிழக முதல்வருக்கு ஒரு மடல் அனுப்புங்கள்; முடிந்தால் உடன் ஒரு பத்து பேரின் கையெழுத்தை வாங்கி வலுவுடன் அனுப்புங்கள். தெருவில் இறங்காவிட்டாலும் குறைந்த பட்சம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு இந்த கடிதங்களையாவது அனுப்புவோம்.
காமெடி காந்தி அண்ணா ஹஸாரேவின் போராட்ட நாடக அலையையும் மீறி இவர்களின் தண்டனைக்குறைப்பை வலுவாக வலியுறுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக