வியாழன், 28 அக்டோபர், 2010

தீதும் நன்றும் பிறர் தர வாரா?




எனக்கொரு கனவு நெடு நாட்களாய் உண்டு. ஊரில் எனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ஊர் காவிரியின் கரையில் இருந்தாலும் எங்கள் ஊருக்கு வடக்கே மேட்டு நிலம். காவிரி நீர் சுமார் அரை கிலோ மீட்டர்களுக்கு மேல் பாய்வதில்லை. எனவே அந்த மூன்று ஏக்கர் நிலமும் தரிசாகவே உள்ளது. எனது அப்பாயி பாட்டன் விவசாயம் பார்த்த என் பள்ளிப் பருவங்களில் அங்கே மானாவாரியாக கடலை, துவரை, தட்டைப்பயறு,

நரிப்பயறு , கொள்ளு மொச்சை என பயிரிட்டார்கள். பிற்காலங்களில் அந்த மாதிரியான விவசாயமே அற்றுப் போனது. இப்போது அப்படியான பயிர்களை யாரும் விளைவிப்பது இல்லை. செஞ்சியில் மட்டும் பேருந்து நிலையத்தில் வேகவைத்த மொச்சைப்பயிர்களை இப்பொதும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அது போகட்டும்.அந்த மூன்று ஏக்கர் நிலத்தில் நடுவினில் ஒரு வீடு கட்டி எளிமையான விவசாயம் செய்ய வேண்டும் என்பது

தான் அந்தக் கனவு. பாரதியின் காணி நிலம் கனவு போல. சின்ன வயதில் இருந்து விவசாயத்தை ஊன்றிக் கவனித்தது, விடாப்பிடியான ஒரு விவசாயியின் ஒரே மகனாக இருப்பது, பயிர்ப்பாதுகாப்பில் பத்தாண்டு கால ஆய்வு அனுபவம் இதனாலெல்லாம் என்னால் ஒரு விவசாயியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறேன். முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளோம். கொஞ்சம் அதற்கான பணிகளை ஆற்றி விட்டு ஆழ்குழாய் கிணறு போடுமளவு பணம் சேர்த்துக் கொண்டு ஒரு நடுத்தர வயதில் அந்தக் கனவு

வாழ்வை வாழலாம் என கனவு கண்டு வருகின்றேன்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனது பகுதிகளில் நிலவி வரும் சில சூழல்களைப் பார்க்கும் போது அது கனவாகவே இருந்து விடுமா என்று அச்சப்படுகிறேன். அந்த அச்சப்படும் சூழல் உண்மையில் எனது ஊரில் இன்னும் வரவில்லை. எனது ஊருக்கெ மேற்கே இருபது கி. மீ தொலைவில் உள்ள எனது அம்மாவின் ஊரான மேலப்பாளையத்தில் தான் அந்த கொடூரம் நிகழ்ந்து வருகிறது. புலியூர் மேலப்பாளையம் என்கிற அந்த ஊரில் எனது அம்மாவின் குடும்பம் அமராவதி நதிக்கரையில் தென்னந்தோப்பில் வசித்து வருகிறார்கள்; சில தலைமுறைகளாக.


வண்டல் படுகைகளில் தென்னையும் களிமண் பகுதிகளில் மஞ்சளும் நெல்லுமாக ஒரு வளமிக்க பகுதியாக அது இருந்தது. ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை. இந்த புலியூர் மேலப்பாளையம் என்பது கரூரில் இருந்து கிழகே சுமார் ஏழு கி மீ தொலைவில் உள்ளது. கரூர் நகரிலும் அதற்கு சற்று முன்னாலும் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் அமராவதி நதிக்கரையில் உள்ளன. அரசு அவ்வப்போது அவற்றை மூடுவதும் பிறகு திறப்பதும் செய்திகளாக பலருக்கும் தெரிந்திருக்கும். 1997-2000 வரையிலான மூன்றாண்டுகள் என் மாமா வீட்டில் இருந்து தான் படித்தேன். அப்போது அமராவதியில் மீன் பிடித்திருக்கிறேன். குளித்திருக்கிறேன். தண்ணீரைக் குடித்திருக்கிறேன். அதெல்லாம் அந்தக் காலம். இப்போது கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதியின் நிலத்தடி நீரும் நஞ்சாகிப் போய் விட்டது. ஆலைக்கழிவுகளால் மாசடைந்த பல நதிகளைப்பற்றி பல ஆவணப்படங்களில் பார்த்தும், செய்திகளில் கேட்டும் இருப்பவனுக்கு அனுபவிக்கும் நிலையும் வந்து விட்டது. இப்போது ஊருக்கு போகிற போதெல்லாம், ஒரு கிலோ மீட்டர் தள்ளி உள்ள கோவில்பாளையத்தில் இருந்து காவிரி நீர் வரும் குழாயிலிருந்து நீர் பிடித்து கொடுத்திருக்கிறேன். அமராவதியின் கரையில் காவிர்த்தண்ணீர் என்பது கேட்க சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அது மிகக் கொடுமையானது. கடந்த முறை ஒரு உந்துதலின் பேரில் மாமா தோப்பில் வருகிற ஆழ்குழாய் நீரை குடித்துப்பார்த்தேன். சத்தியமாய் அந்த தண்ணீர் நஞ்சே தான். தூள் படத்தில் வருவது போல அவ்வளவு கொடூரமாக அந்த தண்ணீர் இருக்கிறது. பட்டறைகள் அந்த ஊரில் இருந்து மேற்கே 7 கி மீ தொலைவில் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் அந்தப் பகுதி வரை நிலத்தடி நீரை நஞ்சாக்கியுள்ளன அந்தப் பட்டறைகள். தொழில் நகரம் என்ற பெருமையால் கரூர் திருப்பூர் முதலாளிகள் எல்லாம் பணத்தில் கொழிக்கிறார்கள். ஆனால் அதற்கு பின்னுள்ள விவசாயிகள்?

எனது பெரிய தாத்தாவுடன் கடந்த இரு சந்திப்புகளின் போதும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மஞ்சள் விவசாயம் அறவே அற்றுப் போய் விட்டது. நெற்பயிர்கள் நாற்றாங்கால்களில் கருகுகின்றன. தென்னைகளில் காய்ப்பு குறைந்து விட்டது. மொத்தத்தில் நதி செத்து விட்டது. விவசாயம் செத்து விட்டது. நீர் செத்து விட்டது. மக்கள் மட்டும் எப்படியோ தக்கன தழைத்தல் போல உயிரோடு இருந்து வருகிறார்கள்.

நான் அங்கே படிக்கிற போது எழுதி பயணம் புதிதில் வந்த கவிதை ஒன்று.

தாகமெடுத்தது ஆத்துக்கு.

வாய் நனச்ச புண்ணியம்

சாயப்பட்டறைக்கு.

சில வாரங்கள் முன்பு எழுதிய

“சாயமேற்றிய துணிகள் கப்பலேறி போகின்றன.

கழிவான சாயங்கள் நதியேறிப் போகின்றன.

நதியோர நிலங்கள் நஞ்சேறி மடிகின்றன.

அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்”

இந்தக் கவிதையின் நீட்சிதான் இந்தக் கட்டுரை?

இந்தக் கொடுமைக்கெல்லாம் யார் காரனம்? தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை மிக உயரிய தத்துவமாக சொல்லி வந்திருக்கிறேன். முருகேசன் மாமாவிடம் மூன்று முறை பலத்த விவாதமும் செய்து இருக்கிறேன். என்றாலும் இப்பொது அவர் சொல்வது தான் உண்மை எனப்படுகிறது. இந்தக் கொடுமைகளுக்கு யார் காரணம்? இந்த விவசாயிகளா?. இங்கே பருத்தி விளைகிறது. இங்கே சாயம் ஏற்றுகிறார்கள். இங்கே நதியை நஞ்சாக்குகிறார்கள். இங்கே நிலங்களை பாழ் பன்னுகிறார்கள். ஆனால் இத்தனையும் கடந்து இந்தத் துணிகள் ஏற்றுமதி ஆகின்றன. அங்கேயிருந்து ஒரு லேபில் சாய்த்து ஒட்டியிருந்தால் கூட அவன் திருப்பி அனுப்புகிறான். இவ்வளவு கொடுமைகள் இங்கே நிகழ்த்தி விட்டு துணிகளை நாம் உடுத்தினாலாவது பரவாயில்லை. நமது மக்களை சாகக் கொடுத்து நமது நிலங்களை சாகக் கொடுத்து நீரை நஞ்சாக்கி வெளி நாட்டுக்காரன் சட்டை போடும் இந்தத் தீமைக்கு யார் காரணம்? நாம் தானா? இந்தத் தீது பிறர் தந்ததா நாம் தருவித்ததா?

நான் ஆரம்பத்தில் சொன்ன கனவுக்கும் இந்த கொடுமைக்கும் தொடர்பு உண்டு. இந்த அமராவதி ஆறு புலியூரில் இருந்து எட்டு கி மீ தொலைவில் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. அந்த திருமுக்கூடலூரிலிருந்து பத்து கி மீ தொலைவில் என் சொந்த ஊர் உள்ளது. ஒரு ஆண்டுக்கு ஒரு கி மீ என்ற வேகத்தில் இந்த நஞ்சடைதல் பரவி வருகிறது. அப்படிப் பார்க்கையில் இன்னும் இருபது ஆண்டுகளில் இந்த நஞ்சு எங்கள் ஊர் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கும் பட்சத்தில் நான் விவசாயி ஆகும் கனவு எப்படி நனவாகும் என்ற பயம் எழுகிறது. என்றாலும் திருமுக்கூடலூருக்கு கிழக்கே மாயனூரில் ஒரு தடுப்பணை கட்டி வருகிறார்கள். அது நிலத்தடி நீரின் நஞ்சை நீர்த்துப் போக வைக்கும் என்று என் அம்மாயி ஊரில் நம்புகிறார்கள். அது ஒரு ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் அதன் சாத்தியக் கூறுகள் குறைவு. ஆற்றில் ஓடுகிற ஆலைக் கழிவு பத்தாண்டுகளில் நிலத்தடி நீரில் கலக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மணல் விபச்சாரமே. எந்தக் கட்சி ஆளுங்கட்சியானாலும் அவர் செய்கிற முதல் வேலை இதுவாக இருக்கிறது. காவிரியை விட அதிக காலம் இதில் மணல் அள்ளலாம் என்பதால் அள்ளித் தீர்த்து விட்டார்கள். அய்யர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த கொஞ்ச காலத்துக்கு மணல் விபச்சாரம் தடை பட்டிருந்தது. பின் பேராதரவோடு நடந்து வருகிறது.

இதற்கு என்னால் பெரிதாக ஒன்னும் செய்ய முடியவில்லை. ஆனால் ஆறுதலாக ஒரு ஆய்வு செய்து வருகிறேன். இந்தக் கொடுமையை தடுத்து நிறுத்தும் நிலையில் நான் இல்லை என்றாலும் இன்னும் ஒரு ஆண்டில் இதிலிருந்து விவசாயம் மட்டும் தப்பிக்குமளவு வழிமுறையை நான் சார்ந்திருக்கும் நுண்ணுயிரியல் புல அறிவைக் கொண்டு கண்டடைய முடியும் என்று நம்புகிறேன். அதை வெற்றிகரமாக முடித்து பின் உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்துகிறேன். படித்த படிப்பு இப்படியாவது உதவட்டும்.

2 கருத்துகள்:

நளினி சங்கர் சொன்னது…

கனவு மெய்ப்படவேண்டும் ஜே.பி.

வாழ்த்துக்கள்.

Jayaprakashvel சொன்னது…

கண்டிப்பா சங்கர். என் வீட்டில் ஒரு திறந்த வெளி திரை அரங்கும் இருக்கும். நீங்கள் வருகிற ஒரு இரவில் உங்கள் படம் அங்கே திரையிடப்படும்.