ஞாயிறு, 25 ஜூலை, 2010

நாதியற்ற சாவு

அடிக்கடி போய் வருகிற அந்த
பெருநகர நெடுஞ்சாலையில்,
ஏதோவொரு நாளில்,
கழிவு நீர்க்கால்வாயின் புறத்தில்,
அந்த செத்த நாயின் உடலைப் பார்த்தேன்.

முன்தினமோ கொஞ்சம் முன்னரோ
அது செத்திருக்க வேண்டும்.

பற்கள் மட்டும் மூக்கருகே துருத்தியிருக்க
நாற்றமெடுக்காத அந்த நாயின் சடலம்
கவனிப்பாரற்றிருந்தது.

பின்வந்த நாட்களிலெல்லாம்
நாளொரு நாற்றமும்
பொழுதொரு மாற்றமுமாக
நாயின் உடலம் உருக்குலைந்து வந்தது.

காகங்கள் குறைந்த
இந்தப் பெருநகரத்தில்
நாயின் அழுகல்
மெதுவாகவே நிகழ்ந்தது.

பின்
ஏதோவொரு நாளில்
அழுகுவதற்கு ஏதும் சதைகளற்று
நாறுவதற்கு ஏதும் அழுகலற்று
வெறும் எலும்புகளின் கூடென
நாயின் சடலம் காய்ந்து கிடந்தது.

அன்று-
தூரத்தில்...
யாரோ யாரையோ...
நாதியற்றுச் சாவாய்- எனத்திட்டியது
காதில் விழுந்தது.

கருத்துகள் இல்லை: