புதன், 4 பிப்ரவரி, 2009

அவன் பெயர் தமிழன்

ஒரிசாவில் புயல் அடித்த போது
இவன் கண்கள் கலங்கின.

மும்பையில் குண்டு வெடித்த போது
இவனின் நெஞ்சு வெடித்தது.

குஜராத்தில் பூகம்பம் வந்தது
உணவு உடைகளோடு ஓடினான்

கார்கிலில் சண்டை என்றார்கள்
இங்கே உண்டியல் தூக்கினான்.

இப்போது-
அவன் பிள்ளைகள் சாகின்றன.
அவன் பெண்டுகள் மானம் காக்கவும் வழியற்று மாய்கிறார்கள்
அவன் சகோதரனோ-
பதுங்கு குழிகளையோ புதைகுழிகளையோ வெட்டிக் கொண்டிருக்கிறான்.

அவர்களின் கதறலும் அவர்களுக்கான கதறலும்
வங்காள விரிகுடாவில் கரைகிறது.

சொந்தமென்று அவனை நம்ப வைத்தவர்கள்
சும்மா இருந்தார்கள்

கொஞ்சமாவது சூடு வரட்டும்.
கொஞ்சமாவது சொரணை ஊறட்டும்
என்று-
செத்துச் சொல்லிக் காண்பித்தான் முத்துக்குமரன்.

சூடும் வரவில்லை;
சொரணையும் வரவில்லை;
கவிதைதான் வருகிறது.

கருத்துகள் இல்லை: