புதன், 17 ஆகஸ்ட், 2016

சினிமாவும் இலக்கியமும்


நிறைய கலை வடிவங்கள் இருக்கின்றன. அவற்றோடு பொதுவாக இலக்கியத்தை ஒப்பிடுவதோ அந்தக் கலைகளோடு இலக்கியம் இணைய வேண்டும் என்றோ பேசுவதில்லை. ஆனால் சினிமாவில் இலக்கியம் வேண்டும் என்றும் சினிமாக்காரர்கள் இலக்கியவாதிகளை பயண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சினிமாக்காரர்கள் இலக்கியப்புலிகளாக இருக்க வேண்டும் என்றும் சகஜமாக பேசப்படுகிறது. மற்ற ஊர்களில் நாடுகளில் இது போல உண்டா? தமிழ்நாட்டில் தான் இப்படியா? தடம் இதழிலும் சாரு இதைத்தான் எழுதுகிறார். சினிமா ஒழுங்கா எடுக்கல என்று சொல்லலாம். இலக்கியம் இல்லாததால் சினிமா ஒழுங்கா இல்லை என்றா சொல்வது? சினிமாவுக்கு இலக்கியம் தேவை இல்லை. சினிமாக்காரன் இலக்கியம் படித்திருந்தால் நல்லது. மிஷ்கின் தன் உதவியாளர்களை புத்தகம் படிக்க்ச் சொல்வார் என்று சொல்கிறார்கள். அப்படிக்கட்டாயம் ஏதும் இல்லை. சினிமா என்ற கலையை வாழ்வைப்புரிந்து கொண்ட யாரும் சரியாகச் செய்து விட முடியும். தமிழ் சினிமா உருப்படாமல் இருப்பதற்கு நிறைய காரணங்களிருக்கலாம். கண்டிப்பாக இலக்கியம் அல்ல. இங்கே இலக்கியமே ததிங்கினத்தத்தம் போடுகிறது. நாம் வாழ்கிற சமூகச் சூழல் அப்படி. அதைப் பற்றியெல்லாம் இங்குள்ள இலக்கியவாதிகள் மருந்துக்கும் பேச மாட்டார்கள். சினிமாவில் இலக்கியம் இல்லை; பேஸ்ட்டில் உப்பு இல்லை என்று பேசுபவர்கள் இங்கே நடக்கிற ஆயிரமாயிரம் பிரச்சனைகள் குறித்து மூச்சு கூட விடாமல் எழுதிக்கொண்டிருப்பர். சிலர் இருக்கிறார்கள். செலக்டிவாக அரசியல் பேசுவார்கள். கொண்டாடக்கூடிய முழுமையான ஒரே ஒரு இலக்கியவாதி கூட இல்லாத மாநிலத்தில் சினிமாவில் இலக்கியம் இல்லாவிட்டால் என்ன கெடுவிடப்போகிறது?

சினிமாவை காட்சி இலக்கியம் என்பதையோ அது பல கலைகளின் கூடாரம் என்பதையோ நானும் மறுக்கவில்லை. பலகாலமாக நம்பிக்கொண்டும் இருக்கிறேன். இங்கே நான் சொல்வது அது அல்ல. சாரு ஒழிவு திவசத்தே களி பற்றி எழுதும்போது அது ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இலக்கிய தொடர்பு இருப்பதாலேயே அது நல்ல படமாகிறது என்றார். மிஷ்கின் பாலு மஹேந்திரா இவர்கள் தன் உதவியாளர்களை அவர்களின் வாசிப்பு இலக்கிய அறிவு சார்ந்தே எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இங்கே இலக்கியம் என்று சொல்லப்படுகிற எழுதப்பட்ட வகைகளுக்கு அப்படி ஒரு புனித அளவீடு தேவை இல்லை. அற்புதமான பல படங்கள் உள்ளன. இலக்கியப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்படாத பல படங்கள் உள்ளன. சினிமா எடுப்பவர்கள் மட்டுமல்ல. எல்லா மனிதர்களுக்கும் இலக்கிய பரிச்சயம் அவசியம் தேவை. ஆனால் படத்தின் தகுதியை அதன் இலக்கியத்தொடர்போடு முடிச்சு போடுவது சரியல்ல. இங்கே பல இலக்கியவாதிகள் பிற கலை அனுபவங்களோடு , அரசியல் போக்கோடு தொடர்பே இல்லாமல் இருக்கின்றனர். இலக்கீயவாதிகளுக்கு பொறுப்பு ஒரு பரந்த தளத்தில் உள்ளது. அதே பொறுப்பு சினிமாக்காரர்களுக்கும் உண்டு. நான் சொல்ல வருவது ஒரு நுண்ணிய வேறுபாடு. இலக்கியத்தின் தேவை குறித்தல்ல. அதை மட்டுமே ஒரு அளவீட்டுத்தகுதியாக வைக்கக் கூடாது. மாற்று சினிமா லோ பட்ஜெட் சினிமா டெக்னிகலாக மட்டமாக இருக்கும் என்றும் இலக்கியத்தொடர்பு உள்ள ஒழிவு திவசத்தே களி இலக்கியத்தொடர்பாலேயே தொழில்நுட்ப பூர்வமாகவும் கலாபூர்வமாகவும் சிறந்த படமாகிறது என்கிறார் சாரு. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சினிமாவில் நுழைந்து தோற்றுப்போன அல்லது தடம் பதிக்காத (சினிமாவில்) இலக்கியப்புலிகள் ஏராளம். ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்ரா இப்படி. எல்லாரும் எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகிவிட முடியாது. பாபாவுக்கும் சண்டைக்கோழிக்கும் வசனம் எழுத எஸ்ரா எதுக்கு? எஸ் ரா எழுதியதால் அந்தப் படங்கள் கலையுச்சம் பெற்று விட்டனவா? மதுபானக் கடை என்ற எளிமையான படம் கொடுக்கும் அனுபவம் கூட இவர்களால் தர முடிவதில்லை. சினிமா ஒரு மிகப்ப்பெரும் ராட்சச மிருகம். அதனோடு சவாரி செய்ய இலக்கியம் மட்டுமே போதுமானதல்ல.

1 கருத்து:

oshylu சொன்னது…

இலக்கியம் பயில 40 வயதிற்கு முன்பாக அயல்நாடுகளில் பொதுவாகவே அனுமதிக்கபடுதில்லை..காரணம் அதை சிலாகிக்க மன முதிர்ச்சி தேவைப்படும் என நம்பப்படுகிறது..ஆனால் இந்தியாவில் BA literature 18 முதல் 20 வயதிற்குள் ? சிற்பிகள் அம்மி குத்துவதில்லை என சினிமா பாட்டெழுத மறுத்தார் கவிக்கோ.. என்னை பொறுத்தவரை அம்மியும் குத்ததான் வேண்டும் .. ஆக இலக்கியத்தேவை ஊறுகாய் போன்றதே