செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

குழந்தைகள் வளர்ப்பு - சில ஆதங்கங்கள்


பணம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டதும் அதற்காக அசிங்கமான முறையில் சோதனையிட்டதாலும் எம். ஜி ஆர். ஜானகி கல்லூரி மாணவி திவ்யா தற்கொலை செய்துகொண்டார். கடந்த வாரத்தில். அது சம்பந்தமான நான்கு பேராசிரியைகள்(????) கைது செய்யப்பட்டது, அவர்கள் நால்வருக்கும் ஒரு சேர நெஞ்சு வலி வந்து அது சரி செய்யப்பட்டு பின் புழலில் இருப்பது தெரிந்த செய்தி. மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்க செய்தி. அந்த ஆசிரியைகள் நடந்து கொண்டதும் மன்னிக்க முடியாத குற்றம்.

ஆனால் இங்கே யோசிக்க வேண்டிய விசயம் அந்த மாணவியின் சமூக பொருளாதார நிலை. தந்தை காவலாளி; தாய் துப்புரவுப்பணியாளர்; ஆல்காட் குப்பம் குடிசை வீட்டில் வாசம் என மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து படிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்த திவ்யாவுக்கு இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது வருத்தத்துக்கு உரியது. கோடி கோடிகளாக திருடி விட்டு சகஜமாக உலவுகிற மானஸ்தர்கள் மிகுந்த இந்த நாட்டில் இந்த மாணவியின் தற்கொலை மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. நமது பெற்றவர்கள் குழந்தைகளுக்கு வெறும் படிப்பை-பட்டத்தை வாங்கித்தர மட்டுமே ஆசைப்படுகிறார்கள். வாழ்க்கையை சொல்லித்தருவதில்லை. அப்படியான ஒரு நிலைக்கு பிள்ளைகளை தயார்படுத்துவதில்லை. எல்லா விலங்குகளும் தம் பிள்ளைகளுக்கு தனித்து எந்த சங்கடத்தையும் சவாலையும் எதிர்த்து வாழ கற்றுக் கொடுக்கின்றன. மனிதர்கள் மட்டுமே அதுவும் நம் இந்தியாவில் இன்னும் மோசமாக கல்யானம் நடந்து முடிந்தாலும் பிள்ளைகளை தம் கட்டுக்கோப்பில் வைத்திருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வியுற்றால் குறைவாக மதிப்பெண் பெற்றால் இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளுமளவு பிள்ளைகளை தன்னம்பிக்கை இல்லாதவர்களாக நமது சமூகம் வளர்த்து வருகிறது. மேலும் ஒரு செய்தி. சேலத்தில் விடுதியில் தங்கிப்படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் தமது கிராமத்துக்கு வார விடுமுறைக்கு செல்லும் போது செருப்பு ஏற்றிச் செல்லும் ஒரு வேனில் உதவி கேட்டு வந்துள்ளனர். இறங்க வேண்டிய இடத்தில் வண்டி நிற்காததால், கடத்தப் படுகிறோம் என்று பயந்து நான்கு மாணவிகள் ஓடும் வண்டியில் இருந்து குதித்து விட்ட்டனர். அதில் ஒரு பெண் இறந்து விட்டாள். விசாரணையில் ஓட்டுனர் தாம் வண்டியை நிறுத்தும் முன்பாக அவர்கள் பயந்து இறங்கி விட்டதாக சொல்கிறார். இது மாதிரி இவர்கள் ஒவ்வொரு வாரமும் உதவி கேட்டு எதாவது வண்டியில் வருவது வழக்கம் என பிள்ளைகளின் பெற்றோர் சொல்லி இருக்கின்றனர். இங்குதான் பெற்றவர்களின் தப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு இதையும் சொல்லித்தர வேண்டும். கூடுமானவரை முறையான போக்குவரத்துகளை பயண்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்து செர்ந்து விட்டதால் அவர்கள் ஒன்றும் சொல்ல வில்லை. இப்படி பிரச்சனை என்றாகிற போது எல்லொருக்கும் வருத்தம்.

நிறைய உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன. கடந்த வருடத்தில் சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் ஒரு தொழிற்சாலை பார்வையிடலை முடித்து விட்டு வரும் வழியில் காவிரியில் குளிக்கும் போது முக்கொம்பு என்ற இடத்தில் இறந்து பட்டனர். அதில் ஒரு பையனின் அப்பா இது மாதிரி கல்விப்பயணங்கள் போகும் போது பெற்றோரிடம் எழுதி வாங்க வேண்டும் என்கிறார். அவரும் ஒரு பள்ளியின் தாளாளர். அவர் தன் பள்ளியில் இப்படி செய்திருப்பாறா என்பது சந்தேகமே. வீட்டுக்குத் தெரியாமலா ஒரு மாணவன் இரண்டு நாட்கள் கல்விப் பயணம் போகப் போகிறான். போகிற இடத்தில் இது மாதிரியான ஆபத்தான குளியல்களை அனுமதித்த ஆசிரியர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதே சமயம் ஆசியர்கள் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கும் அதே பொறுப்புணர்வை கொடுக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் மூன்று கைக்குழந்தைகளை மடியில் இருந்து தவற விட்டு சாகடித்த முதியவர்களைப் பற்றிய செய்திகளையும் படித்துள்ளேன். இதற்கு யாரை குறை சொல்வது?.

பொதுவாக நமது சமூகம் குழந்தைகள் வளர்ப்பில் இன்னும் அதிகமான புரிதலோடும் பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

3 கருத்துகள்:

அசோக் குமார் சொன்னது…

\\ மனிதர்கள் மட்டுமே அதுவும் நம் இந்தியாவில் இன்னும் மோசமாக கல்யானம் நடந்து முடிந்தாலும் பிள்ளைகளை தம் கட்டுக்கோப்பில் வைத்திருக்கிறார்கள் //.உண்மைதான் அண்ணா!! இது கண்டிப்பாக எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி! சமீபத்தில் என்னுடைய ஆசிரியர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது சலிப்போடு " என்ன சார் 29 வயசாச்சு இன்னும் எங்க அப்பா அம்மா பேச்சை கேட்டுத்தான் நடக்க வேண்டியதாக இருக்கு என்றேன். உடனே அவர் 35 வயசாச்சு நானும் அப்படித்தானே என்றார்... எங்கே போய் சொல்வது இந்த குறையை.

நளினி சங்கர் சொன்னது…

ஜெ.பி, நேற்றும் ஒரு பள்ளி சிறுமி தற்கொலை.

இது போன்ற இழப்புகளுக்கு முதல் காரணம் இக்குழந்தைகளின் பெற்றோர்களே. இந்த தருணங்களில் குழந்தைகளின் கவலைகளை அசட்டை செய்யாமல் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருந்தால் கூட இந்த இழப்புகளை தவிர்த்திருக்கலாம். கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கு கூட ஒரு எளிமையான பிரச்சனையினை கையாலும் பக்குவம் இல்லாமல் போகின்றது.

இத்தனை வருடம் இந்த கல்விக்கூடங்கள் என்னதான் இவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். வேலை, பணம், போட்டி.

'நாம் ஒரு எறும்பை நசுக்கி கொல்லும்போது நம்முடைய குழந்தைகளும் அதை பார்த்துக்கொண்டு இருக்கின்றன' என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

உலகத்திலே மிகவும் கவனமான, பொறுப்பான வேலை குழந்தைகளை வளர்ப்பதுதான். இதை திறம்பட நாம் செய்தாலே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இயலும்.

Jayaprakashvel சொன்னது…

மக்கள் தம் பிள்ளைகளை வெற்றி என்ற ஒரு மாயவார்த்தையை நோக்கி ஓட நிர்ப்பந்திக்கிறார்கள். புதுசா காதல் கல்யாணம் பண்ணுனவங்க கூட நம் சொந்தத்துக்கு முன்னாடி வாழ்ந்து காட்டனும் என்கிறார்கள். வாழ்க்கை நமக்கானது என்கிற அடிப்படை புரிதல் இல்லை பெரும்பாலும். சம்பாரிப்பதும் அதை சேமிப்பதும் பெருக்குவதும் வீடு கட்டுவதும் வாழ்க்கையின் அடிப்படை கண்ணிகளாக மாறிவிட்டன. ஒரு பள்ளிக் குழந்தை சேமித்து வைத்து என்ன செய்யப் போகிறது?இதற்கு பெற்றவர்கள் முழுமுதற் காரணம். குழந்தை வளர்ப்பு என்பதை நம்மளவிலாவது கொஞ்சம் அக்கறையோடு செய்வோம். நன்றி நண்பர்களே