வெள்ளி, 2 அக்டோபர், 2009

சாதியும் சாதி நிமித்தமுமாய்.......

சாதீய மனப்பான்மை வளர்ந்து கொண்டு போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை. வெறும் மனதுக்குள் மட்டும் சாதி இல்லை. பல வடிவங்களில் அது அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. சாதிய அடக்கு முறை என்பது மேல் சாதி இடைசாதியினர் மட்டும் செய்வது இல்லை. பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசிடம் சான்றிதழ் வாங்கியவர்கள் கூட- ஆதிதிராவிடர் பள்ளர் பறையர் முதலானோர் சக்கிலியரை அடக்கி வைக்கிறதை பார்த்து உள்ளேன். சமீபத்தில் பெருமாள் முருகனிடம் பேசியபோதும் இது சம்பந்தமாக பேசியபோது ஒரு தகவல் சொன்னார். பாமா தலித் மக்களின் வாழ்வை பதிவு செய்கிற நாவலில் அல்லது நாவல்களில் அருந்ததியரை அவன் இவன் எனவும் வேறு சாதியினரை மரியாதையாகவும் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். கரூர் மாவட்டம் புலியூர் வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம் இந்த இரண்டும் சிறுவயதில் இருந்தே எனக்கு தெரிந்த பகுதிகள். நான் பிறந்து படித்து வளர்ந்த இடங்கள். இங்கே சக்கிலியர்கள் மிகவும் கீழான நிலையில் உள்ளனர். என் கிராமத்தில் நிலம் வைத்து விவசாயம் செய்கிற பள்ளர் இன மக்கள் நிலம் இல்லாத கூலிகளான பறையர் இன மக்களை கீழாக மதிப்பதையும் பார்த்து வளர்ந்துள்ளேன்.

எனது ஊரில் இந்த இரண்டு இன மக்களையும் உறவு முறை சொல்லி அழைத்து பழகினாலும் வீட்டுக்குள் அழைத்து வருவதோ அவர்களும் வர நினைப்பதோ இல்லை. எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். அவர்களது விசேசங்களுக்கு இந்த மக்களும் போவது உண்டு. ஆனால் சாப்பிடுவதில்லை. போகப் போக இந்த கொஞ்ச நஞ்ச வித்யாசமும் மறைந்து விட வேண்டும் என விரும்புகிறேன். பறத் தெரு பள்ளத் தெரு என்று சொன்ன மக்கள் இப்போது ரோஜா நகர் முல்லை நகர் என சொல்கிறார்கள். அரசுப் பதிவுகளிலும் மாறி விட்டது. இதெல்லாம் வரவேற்க வேண்டிய அம்சங்கள்.

எல்லோருக்கும் ஓரளவு பொருளாதார நிறைவு அல்லது சமத்துவம் வரும்போது சாதி என்பது அவசியமாக இருக்காது. அப்போது கண்டிப்பாக சாதி மறக்கப் படும் ஒழிந்து போகும். அந்த அடிப்படையிலேயே பெரியார் தன சமூகப் புரட்சியினை வழிநடத்தினார். சாதியக் கட்டுமானங்களை தகர்க்க அவர் கடவுளை முதலில் தகர்க்க வேண்டி இருந்தது. அதனால் கடவுள் இல்லை என்றார். கடவுளை கட்டிக் காப்பது பார்ப்பன சாதி. எனவே அந்த சாதியை விரோதிகளாக பிரகடப்படுத்தி போராடினார். ஆனால் காலப் போக்கில் பெரியார் எந்த நோக்கத்திற்காக இந்த இரண்டு விசயங்களையும் தொடங்கினாரோ அதை மறந்து விட்டு கடவுள் இல்லை என்பதையும் பார்ப்பானை திட்டுவதையுமே பெரியாரியல் என்று பலரும் நினைக்கிறார்கள். நமது சமுகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை சாதி இருக்கும். இன்று நகரங்களில் வாழும் வசதியான தாழ்த்தப்பட்ட மக்களோடு இடைசாதியினரும் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகளின் விருப்பத்தின் பேராலோ திருமண பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை கிராமங்களில் வர வெகு காலமாகும். எனது கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கடன் வாங்கும் குடியானவர்கள் உண்டு. குடியானர்வளின் நிலங்களை தாழ்த்தப்பட்டோர் வாங்குவதும் நடக்கிறது. மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். ஆனால் மெதுவாக நடக்கும் என்றே படுகிறது. அதுவரை செத்துப் போன பாரதியிடம் வீரம் காட்டாமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது நடக்கும்.

கருத்துகள் இல்லை: