சனி, 10 ஜனவரி, 2009

வால்பாறை


அந்த மலைவனத்தில்
நீங்கள் வெட்டிய முதல் மரம்
ஒரு ஓநாயின் மேல் விழுந்தது.

வெட்டுண்ட மரத்தின்
வேரைப் பறித்த போது
சிறு முயலின் குழியை மூடி விட்டீர்கள்.

தரையை சமதளமாக்குகையில்
பாறைகளை உருட்டி
லைக்கன்களைப் புதைத்தீர்கள்.

நீங்கள் உண்டாக்கின
தேயிலையின் கசப்பில்
மான்கள் தடுமாறின.

நடுவே உங்களின் வீடுள்ள
குன்றில் தான்
முன்பு வரையாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

வழியெங்கிலும் உங்கள்
வாகனங்களே வலம் வந்ததால்
சிறுத்தைகளும் புதர்களுக்குள்ளே முடங்கி விட்டன.

வலசைப் பாதை மாறின யானைகள்
உங்களின் ஆலைச்சங்கொலியில்
தமது பிளிறலையும் மறந்து விட்டன.

சிற்றாறுகளின் வழிகளை மாற்றினீர்கள்;
ஓடைகளின் பாடலை நிறுத்தினீர்கள்.


கானகத்தில் இருளை எழுதியவை உங்களின் விரல்களே.


வெளிச்சம் வரட்டும்;
வெளியே வாருங்கள்.



லைக்கன்கள் : மண்ணை வளமாக்கும் சிலவகை பாசிகள் மற்றும் பூஞ்சைகள் சேர்ந்த கூட்டுயிரி




1 கருத்து:

சிவகுமார்.டி சொன்னது…

கவிதை அருமை நண்பரே..!
வெளியே வந்திருக்கும் உங்களைப் போன்றோரால் வெளிச்சமும் இனி நிச்சயம் வரும் என நம்புகிறேன்.
http://bodhivanam.blogspot.com/