செவ்வாய், 4 டிசம்பர், 2018

டெம்ப்ளேட்சினிமாக்கள்



படச்சுருள் டிசம்பர் 2018 இதழில் பிரசுரமான எனது கட்டுரை

டெம்ப்ளேட்சினிமாக்கள்

சமீப கால வணிக தமிழ்ச்சினிமா பரப்பில் ஒரு புதிய அலை உருவாகி விட்டதைப் போன்ற கருத்தாக்கம் அங்கங்கே தூவப்பட்டு வருகிறது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற ரீதியில் அதையும் சமூகம் ஏற்றுக்கொண்டும் சில நேரங்களில் கொண்டாடியும் வருகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1960-80 களில் இந்திய அளவிலும் தமிழ் சினிமாவிலும் நாம் ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டிய சில படங்களும் மாற்றங்களும் கண்ணில் பட ஆரம்பித்தன.அந்த மாற்றங்களை ஒட்டி சினிமா ரசிகர்களும் மெல்ல மெல்ல நடை போட ஆரம்பித்த காலக்கட்டத்தில் 1980 இல் வந்த முரட்டுக்காளை மற்றும் 1982 இல் வந்த சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வெளிவந்து இன்னும் சில பத்தாண்டுகள் தமிழ்ச் சினிமாவுலகை பின்னுக்கு இழுத்துச் சென்றது.  நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டம், பட்ஜெட், வியாபாரம், விநியோகம் போன்ற வார்த்தைகள் சினிமாவைத் தீர்மானித்தன. கதைக்காக அன்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அல்லது நாயக பிம்பம் போன்றவற்றைச் சொல்லி காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டன. கதையோடு ஒட்டாத நகைச்சுவைப் பகுதிகளும் நிறைய வர ஆரம்பித்தன. பாகவதர் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் மேற்சொன்னவைகள் இருந்த போதிலும், 1970 களில் திரைத்துறையில் நிகழ்ந்த புதிய அலை எனப்பட்ட சினிமாக்களின் தாக்கம் மேலே எடுத்துச் செல்லப்படாமல் இருக்கும் வகையில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வெளிவந்தன. எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்கள் நிறைய இடங்களில் நேர்ப்பேச்சில் மேற்சொன்ன பார்வையை வைத்துள்ளார். நாம் ஆறுதல் படக்கூடிய நல்ல படங்கள் வர ஆரம்பித்த நாட்களில் எல்லாம், சீரான இடைவெளியில் ஜெமினி ஏ.வி.எம் போன்ற தொழில்முறை பட நிறுவனங்கள் வணிக நோக்கிலான மசாலா சினிமாக்களை வெளியிட்டு ஒரு ஆரோக்யமான சூழல் உருவாகாமல் பார்த்துக்கொண்டன என அவர் உறுதியாக கருதுகிறார்.

1970 களில் இருந்ததைப் போல சமீபத்திலும் ஒரு புதிய அலை உருவாகி இருப்பதாக பரவலாக பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதுவும் மேற்குத்தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் போன்ற படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் என்பதைப் போல பேசிக்கொள்கிறார்கள். உண்மையில் நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்வதன்றி வேறில்லை. ஒப்பீட்டளவில் சமீப காலத்தில் நாயக பிம்பம் பெரிதாக தேவைப்படுவதில்லை என்பதான தோற்றத்தை இம்மாதிரியான படங்கள் கொடுப்பதை மறுக்க முடியாது.  ஆனால் ஆரோக்கியமான சூழல் உருவாகி விட்டதாக நாம் கருதிக்கொள்ளும் நல்வாய்ப்பை எப்போதும் தமிழ் சினிமா வழங்கி விடுவதில்லை. 96 என்னும் படத்தையும் பாராட்டுமளவு நமது வறட்சி உள்ளது.

ஆனால் சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது; நிகழ்ந்து வருகிறது. எந்த இயக்குநரிடமும் உதவியாளராகப் பணிபுரியாமல் கூட தயாரிப்பாளர் என்னும் தெய்வத்திடம் நேரம் வாங்கி படவாய்ப்பை புதிய இயக்குநர்கள் பெற்றுவிட முடிகிறது. நாளைய இயக்குநர் போன்ற சுயமரியாதையை அடகு வைக்கும் நிகழ்ச்சியிலோ அல்லது குறும்படம் எடுத்தோ விசிட்டிங் கார்டு போல அதன் மூலமாக படவாய்ப்பைப் பெறும் நம்பிக்கையை நிறைய இளைஞர்களுக்குத்தருகிறது. என்றாலும் இதில் ஒரு அபாயமும் இருக்கிறது. சினிமா என்பதைப் பற்றிய முறையான புரிதலும் பார்வையும் இல்லாமல், பார்ப்பவர்களை கவரக்கூடிய காட்சியமைப்புகள் மட்டும் இருந்தால் போதுமென்ற ரீதியில் படமெடுக்கும் இயக்குநர்களும் இப்படியான பாதைகளில் உள்நுழைந்து வருகிறார்கள். போக முன்பாவது சில ஆயிரம் பேர் சினிமா எடுக்கவென அல்லது சினிமாவில் நடிக்கவென படையெடுத்தார்கள். இப்போது லட்சக்கணக்கான குறும்பட இயக்குநர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள். அவர்களுக்கான சினிமா கல்வியும் பயிற்சியும் முறையாக இல்லாவிட்டாலும் ஒரு கணிசமான எண்ணிக்கையினருக்கு பட வாய்ப்பும் கிடைத்து விடுகிறது. இவை போக அசத்தப் போவது யாரு கலக்கப்போவது யாரு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜூனியர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் இப்படியான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன.
தற்கால வியாபாரச் சினிமா சூழலில் எதிர்முகமாக சிற்சில படங்களில் தொழில்முறையில் அல்லாத நடிகர்களை அல்லது நடிக்க வேண்டும் என்ற கனவில்லாதவர்களை படங்களில் நடிக்க வைப்ப்தும் நடக்கிறது. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற போர்வையில் எளிய கலைஞர்கள், கிராமத்து மனிதர்கள் ஏதுமறியாக் குழந்தைகள் திரைத்துறைக்குள் வருகிறார்கள். குறிப்பிட்ட படங்களின் தேவை கருதி ஒன்றிரண்டு முறை திரையில் தோன்றும் இது மாதிரியானவர்கள், பிறக்கான நாட்களில் கண்டுகொள்ளப்படாமல் போகும் யதார்த்தமும் உண்டு. அவர்களில் சிலர் தம் சுயத்தை இழந்து சினிமாவின் கரங்களுக்குள் தஞ்சம் அடைந்து நிற்பதுவும் உண்டு. தங்கமீன்கள் படத்தில் செல்லம்மாவாக வரும் குழந்தை தனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து மிகவும் ஏமாந்து போனதாக ஒரு தகவல் படித்தேன். அமைதியான கிராமத்தின் ஊடே ஒரு நெடுஞ்சாலை வந்த பிறகு அதுவும் மக்களும் தம் சுயத்தை இழப்பது போல தற்கால சினிமாவிலும் விபத்துகள் ஏற்படுவதுண்டு. ஒரு சிறிய குழந்தைக்கு விருது பற்றியதான எதிர்பார்ப்பை உண்டாக்கியதும், அதனை ஏமாற்றமாக்கியதும் இந்தச் சூழலின் சாபங்கள்.

வணிக சினிமாவுக்கென பிரத்யோகமான டெம்ப்ளேட்டை தற்சமயம் பெருமளவில் பின்பற்றி வருகிறார்கள். “ஒப்பன் பண்ணினா” என்கிற ரீதியில் பார்வையாளர்களை பட்டென கவரும் ஒரு அறிமுகக் காட்சி, சுமார் இருபது நிமிடங்களில் கதாபாத்திரங்கள், களம் போன்றவற்றை அறிமுகம் செய்வது, இண்டர்வெல் பிளாக் என்று எதிர்பார்ப்பைத்தூண்டும் ஒரு திருப்பம், பிறகு பிரச்சனையை சமாளிப்பது அல்லது மையக்கதையை நகர்த்துவது இறுதியாக யாரும் எதிர்பாராத ஒரு இறுதிக்காட்சி.. இப்படியான டெம்ப்ளேட்டில் அங்கங்கே பாட்டு, நகைச்சுவை சண்டைக்காட்சிகள் போன்ற மசாலாக்களைத் தூவினால் படம் தயார் என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. இந்த டெம்ப்ளேட் எல்லா சராசரி நாயகர்களுக்கும் பொருத்தமான ஒன்றாகிறது. இந்த டெம்ப்ளேட்டினை நல்லவிதமாக கையாளத்தெரிந்த இயக்குநர்கள் அல்லது நல்லவிதமாக அமைந்து விடும் படங்கள் வெற்றிப்படங்களாகின்றன. இப்படியான டெம்ப்ளேட்டை உடைக்கும் படங்கள் ஒன்றோ இரண்டோ எப்போதாவது வருகின்றன. இதில் மாபெரும் அவலமாக இந்த டெம்ப்ளேட்டுகள் மறுபடியும் இரண்டாம் பாகமாகவும் வந்து விடுவதே. முதல்முறை வெற்றிகரமாக ரசிகனை முட்டாளாக்கி விட்டால் இரண்டாவது முறையாகவும் ஆக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒரே டெம்ப்ளேட்டை மறுபடியும் திருப்பிப் போடும் படங்களும் வருகின்றன. காஞ்சனா 1 காஞ்சனா 2; கலகலப்பு 1; கலகப்பு 2; சிங்கம் 1 சிங்கம் 2; சிங்கம் 3; அரண்மனை 1; அரண்மனை 2 விஸ்வரூபம் 1-விஸ்வரூபம் 2 என்று போய்க்கொண்டு இருக்கிறது.  இவையெல்லாம் தமிழ் சினிமாவை எழுந்து நிற்க முடியாத படிக்கு அழுத்தும் காரணிகள்.

இது போக முற்போக்கு பேசுவதாக அல்லது அறிவுஜீவித்தனத்தை காட்டுவதாக, சமூகத்தின் அரசியல் திசைவழியை மாற்றக்கூடிய அல்லது மறக்க வைக்கவென டெம்ப்ளேட் படங்களைக் கொடுக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள்.ஐயாயிரம் கோடி பத்தாயிரம் கோடி திருடுபவனை விடு; முதலில் ஐந்து பைசா திருடுபவர்களை தண்டி; ஆயுதங்களைக் கடலில் கொட்டி விட்டால் போர்கள் நடக்காது; யாருக்கு எந்த அநீதி நடந்தாலும் ஒரு தலைவன் உருவாகி அவர்களைக் காப்பாற்றுவான் போன்ற தத்துபித்து முற்போக்கு இயக்குநர்கள் ஒரு மாதிரியான போலி முற்போக்கு படங்களை தனது டெம்ப்ளேட்டில் வழங்குகிறார்கள். நமது சூழலுக்கும் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமே அற்ற காட்சியமைப்புகளோடு கூடிய படங்களை மேதாவித்தனத்தோடு கொடுக்கும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அடிப்படை வாத அரசியலை சரியெனச் சொல்லும் பிற்போக்குவாதிகளும் தற்போது சினிமாவைக் கைப்பற்றி வருகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை, முற்போக்கு கருத்துக்களை பேச வருவதாக அறியப்படும் படைப்பாளிகளும் இவர்களின் பின் சென்று இந்த கொடூர வணிகச் சூழலில் தம் சுயம் இழந்து அரசியலற்ற அரசியலைப் பேசும் போலிப் படைப்புகளை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். நாயகன் தளபது படங்களின் நீட்சியாகவே காலா போன்ற படங்கள் நின்று விடுவது இந்த ஆபத்தான போக்கினால் தான். சிங்கம் 2 கலகலப்பு 2 போன்ற மசாலாப் படங்களின் ஆபத்துகளை விட, நாயகன் தளபதிகளின் இரண்டாம் பாகமாக வேறு முகமூடியோடு வரும் காலா போன்ற படங்கள் ஆபத்தானவை.

இந்த டெம்ப்ளேட் யுகத்தில் கொரிய-ஜப்பானிய-இரானிய படங்களின் அலைகளுக்கு நடுவே முத்தையாக்களும் சசிக்குமார்களும் இன்னமும் சாதியப் பெருமை பேசும் படங்களை கொடுக்கும் டெம்ளேட்டுகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். இனவரைவியல் பேசும் படங்களுக்கும் இந்த நிலப்பிரபுத்துவ பெருமிதங்களை முன்வைக்கும் சாதியப் படங்களுக்கும் வேறுபாடு உள்ளது. எஜமான் சின்னக் கவுண்டர். தேவர்மகன் போன்ற படங்களின் நீட்சியாகவே…. கிடாரி, கொடிவீரன், குட்டிப்புலி போன்ற படங்கள் வருகின்றன. இப்படங்கள் கொடுத்திருக்கும் ஒரு இயக்கம் காரணமாகவே தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க கமல்ஹாசனுக்கு துணிச்சல் வருகிறது. நாடகக் காதல், ஆணவக்கொலை போன்ற பிற்போக்குவாத செயல்கள் அதிகமாக நடப்பதற்கும் இம்மாதிரியான படங்கள் வருவதற்கும் தொடர்பு உண்டு. இப்படியான டெம்ப்ளேட்டுகள் அதீத ஆபத்தான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியன.
இது மாதிரியான டெம்ப்ளேட் திரைப்படங்கள் சிற்சில சமயங்களில் வணிக வெற்றியையும் அடைந்து விடுவதால் அவை முன்மாதிரியாக அமைந்து வேறுவிதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.உதாரணத்துக்கு பீட்ஸா என்றொரு திகில் படம் குறைந்த செலவில் சொல்லிக்கொள்ளும்படியான லாபமும் வெற்றியும் பெற்றதால் பிறகான சில ஆண்டுகளில் நிறைய திகில்படங்களாக வெளிவந்தன.சினிமா வெறும் வியாபாரம் மட்டும் அல்ல. அட்டகத்தி போன்ற சில எளிய படங்கள் அவ்வப்போது வந்த போதிலும் சினிமா வணிகம் எனும் பகாசுர எந்திரத்தில் நல்ல முயற்சிகள் கூட கரைத்து உண்ணப்பட்டன. இம்மாதிரியான டெம்ப்ளேட் படங்கள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன?. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் சினிமா ரசனையையும் சினிமா ரசிகர்களையும் ஒரு வகையில் அவமானப்படுத்துகிறார்கள். இவர்களுக்கு இதுதான் என்று முன்முடிவோடு அணுகுகிறார்கள் என்பது அவமானமே. 

இந்த ஃபாஸ்ட்புட் இயக்குநர்களும் டெம்ப்ளேட் படங்களும் வந்த பிறகு சினிமா ஒரு கலை என்பதைக் கூட நாம் மறக்ககூடிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. வணிகச் சூழலின் அழுத்தம் நல்ல கலைஞர்களையும் சமரசத்துக்கு ஆட்படுத்து தனக்குள் கபளீகரம் செய்து கொள்கிறது. ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் பரம்பரை என்பது போன்ற ஒன்று தொடர்ந்தது. இமயங்களும் சிகரங்களும் இருந்த போதிலும், முறையான சினிமா ஒரு கல்வியாக இங்கே கற்பிக்கப்படவில்லை. பொதுவாக கல்விப்புலங்கள் கலையை போதித்தாலும், கலைக்கென்று தனிப்பட்ட மரபு இருக்கத்தான் செய்கிறது. எல்லா கலை வடிவங்களிலும் அது அமைந்து விடுகிறது. ஆனால் தீயூழாக தமிழ்சினிமாவில் அப்படியான கலை மரபு உருவாகுவதை இந்த டெம்ப்ளேட் திரைப்படங்களும் ஃபாஸ்ட்புட் இயக்குநர்களும் தள்ளிப்போட்டு வருகிறார்கள்.

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்றோ, பிரச்சார சாதனம் என்றோ ஒடுக்கிவிடாத படிக்கு சில படங்கள் அவ்வப்போது வருகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகில் படம் எடுப்பது முன்னைக் காட்டிலும் சவால் குறைவான ஒன்றாகிறது. ஆனால் படத்தைக் காட்சிப்படுத்துவது என்பது பெரும் சவாலாக இருப்பதே சினிமா பெரும் வியாபாரமாகிவிட்டதால் தான். வழக்கமாக வணிக சினிமா இதழ்கள் கூடப் புலம்பும் ஒரு விஷயம் பெரிய பட நிறுவனங்கள் அல்லது வியாபாரப் பெறுமதி மிக்க நடிகர்களின் படங்களோடு ஒரு எளிய படம் போட்டி போடக்கூடிய ஆரோக்கியமான சூழல் இப்போது இல்லை என்பது. இன்றளவும் சுயாதீனமான படங்கள், குறும்படங்களுக்கு என்று முறையான காட்சிப்படுத்தும் வசதிகள் கிடைப்பதில்லை. இத்தகைய படங்களுக்கான இடத்தை பெரும் வணிகப்படங்கள் இல்லாமலே செய்து விடுகின்றன. பெரிய பட நிறுவனங்கள் அல்லது பெரிய கதாநாயகர்கள் இவர்களுக்கு என்றே படங்களை உருவாக்குகிறார்கள் புதியவர்களும். இப்படியான போக்கு என்றைக்கும் சுதந்திரமான கலைப்படைப்பை உருவாக்காது.

இந்த உலகம் இன்றைக்கு உயிர்த்திருப்பதற்குக் காரணம் பூமியில் இருக்கக்கூடிய உயிரிய பன்மைத்துவம் என்கிறது அறிவியல். அதாவது இந்தப் பூமியில் வெறும் மனிதர்கள் மட்டும் அல்லாமல், புல், செடி, கொடி, மரம், மாடு, தவளை, ஆமை, மீன், புறா, கோழி, கழுகு, பாம்பு, பூச்சி, பூஞ்சைகள், பாசிகள், பாக்டீரியாக்கள் என்ற பலதரப்பட்ட உயிரிகள் இருக்கும் பன்மைத்துவத்தாலேயே உலகம் அழியாது நிலைத்திருக்கிறது. மனிதன் என்ற ஒரே ஒரு உயிரினம் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் புவியில் உயிர்களே இல்லாது போயிருக்கும். இந்த விதி எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்தும். சினிமாவுக்கும் அப்படியே. ஆனால் சமீபத்திய வணிகச் சூழல் இதை ஆதரிப்பதாக இல்லை. படம் முடிந்தாலும் ஒரு எளிய படத்தை வெளியிட்டு விட முடியாது. அந்த நாளில் பெரிய படங்கள் ஏதும் வராமலிருக்க வேண்டும். அப்படியானால் தான் காட்சிப்படுத்தும் அரங்குகள் கிடைக்கும் என்பது வழக்கமாக ஆகிவிட்ட படியால், டெம்ப்ளேட் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மினிமம் கியாரண்டி போன்ற நிலைக்கு படங்களை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்ததிற்கு படைப்பாளிகளைத்தள்ளுவது இந்தச் சூழலின் மிகப்பெரிய ஆபத்து. அட்ட கத்தி எடுத்து விட்டு கபாலியையும் காலாவையும் எடுக்க இறங்கும் ரஞ்சித்துகள் ரஜினிகளுக்கு அரசியல் சப்பைப்பட்டு கட்ட வேண்டிய நிர்ப்பத்தம் இங்கேதான் அமைகிறது. அதே அபாயம் தான் மாரி செல்வராஜுக்கும் நடக்கிறது. அவர்களின் அரசியல் பார்வை அல்லது அரசியல் நியாயம் எப்படிப்பட்டது என்ற  கேள்விக்கு அப்பாற்பட்டு அப்படியான நம்பிக்கை தரும் படைப்பாளிகளையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும் இந்த வணிகத்திரையுலகின் தற்காலப் போக்குதான் நமக்கு கவலை தருவதாக உள்ளது. பரியேறும் பெருமாளையோ அட்டகத்தியையோ யாரும் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நேர்மையாக நகர்வதை இந்தச் சூழல் ஆதரிப்பதில்லை. இந்தப் பின்னடைவை அவர்களின் போதாமையாகக் கருதாமல், நமது சூழலின் போதாமையாகவே பார்க்க முடிகிறது.

தமிழ்சினிமா நூறு ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது. ஐரோப்பிய அமெரிக்க ஸ்டூடியோக்களுக்கு இணையான தொழில்நுட்பம் நமக்கு இங்கேயே கிடைக்கிறது. இந்திய அளவிலும் தமிழக அளவிலும் குறிப்பிடத்தக்க சினிமா ஆசான்களையும் நாம் பெற்றுள்ளோம். படம் எடுக்க பணம் ஒரு பொருட்டாகவும் இருப்பதில்லை. இப்படியான ஆரோக்கியமான சூழலில் அதற்குச் சான்றான படங்கள் நமக்கு மிக மிகக் குறைவாகவே அமைகின்றன. நூற்றாண்டு கண்ட ஒரு கலைவடிவத்தை இன்னமும் நாம் கோயில் வாசலில் சில்லறைகளுக்காக ஆசிர்வதிக்கும் யானையைப் போல பயண்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. இன்னமும் பழைய படங்களை ரீ மேக் செய்கிறோம். கிராபிக்ஸ் போன்ற உத்திகளை கோமாளிக்காட்சிகள், நம்பமுடியாத சண்டைகள் எடுப்பதற்கு உபயோகித்து வருகிறோம். மேலாக படத்தின் தலைப்புகளைக்கூட பழைய தலைப்புகளில் இருந்து எடுத்து உபயோகிக்கிறோம். கொரிய இரானிய படங்களைத் தழுவியோ, உரிமம் பெற்றோ, காப்பியடித்தோ நமது படங்களை உருவாக்குகிறோம். தெலுங்கில் இருந்து தமிழுக்கு தமிழில் இருந்து தெலுங்குக்கு என்று பந்தாடுகிறோம். ஒரே இயக்குநர் ஒரே ஒரு படத்தை மாநிலம் வாரியாக மறு உற்பத்தி செய்து கொண்டு போகிறார்.

புதிய அலை என்று சொல்லத்தக்க மாற்றங்கள் இங்கே இன்னும் நிகழ்ந்து விடவில்லை என்ற போதிலும் சில நம்பிக்கையளிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. நாயக பிம்பத்தை நம்பாத சினிமாக்கள் அவ்வப்போது வருகின்றன. நம்பிக்கை தரும் திரைப்படைப்பாளிகள் இயக்குநர்கள் சிலர் புதிதாக வந்துள்ளனர்.சினிமா என்பது மிகப்பெரும் வணிகமாக உள்ள இன்றைய சூழலில் சினிமா எடுக்க வருபவர்கள் சினிமாவைப் பற்றிய புரிதலோடு சினிமா பற்றிய அறிவோடு வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. சினிமா வெறும் விற்பனைப் பண்டம் அல்ல. வணிக சினிமாக்கள் பெருவாரியான மக்களை நேரடியாகச் சந்திக்கின்றன. வணிகச் சினிமாக்களை சினிமா பற்றிய புரிதல் உள்ளவர்கள் எடுக்கும் போது மக்களின் திரை ரசனை மேம்படும். சமீப காலங்களில் சில படங்கள் அப்படியான உள்ளடக்கத்தோடும் வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் கூட்டிப் பெருக்கி துடைத்து விடக்கூடிய விளக்குமாறாக அவ்வப்போது வரும் முற்றிலும் வியாபார நோக்கிலான சினிமாக்கள் இருக்கின்றன. முற்போக்கு கருத்துக்களைப் பேசுவதான பாவனையில் சில வியாபார சினிமாக்கள் வருகின்றன. உண்மையில் அவர்களுக்கு முற்போக்கும் ஒரு வியாபார பண்டம். இன்னும் அதிக எண்ணிக்கையிலான நேர்மையான திரைப்படைப்பாளிகள் வர வேண்டும். ஒரு கலைஞனுக்கு நேர்மையும் அரசியல் புரிதலும் மிக அவசியமானது.

கருத்துகள் இல்லை: