வியாழன், 30 ஜூன், 2016

இந்தியர்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்யக் கற்றுக்கொடுப்பதை நிறுத்துங்கள்-அனுராக் சவுராசியா

http://www.nature.com/news/stop-teaching-indians-to-copy-and-paste-1.20157

இன்று வெகு நாட்களுக்குப் பிறகு எனது முதல் அறிவியல் ஆசான் மேடம் ஞானமணி அவர்களை சந்தித்தேன். முதன் முதலாக நானும் தமிழகத்தின் ராபர்ட் டி நீரோ Balram Jeyapaul Narayanan அவர்களும் மேடத்தின் ஆய்வகத்தில் எம்.எஸ்.சி ஆய்வுக்காக போன போது சுமார் மூன்று நாட்கள் வரும்படியான கண்ணாடித்தளவாடங்களைக்கொடுத்து கழுவி வைக்கச் சொன்ன முதல் நாள் அன்று எப்படி பேசினார்களோ அதே இணக்கத்தோடு இப்போதும் பேசுவார். பேச்சினூடே இன்றைய மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வம் இந்திய அறிவியலின் போக்கு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் பின்காணும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கக் கொடுத்தார். இரண்டு வரிகள் படித்ததுமே என் கருத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். முழுசா படிச்சிட்டு சொல்லுன்னாங்க. முழுசா படிச்சப்புறம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த மாத ஆரம்பத்தில் நண்பர்Ramesh Subramani (ஃபிஜியில் வேலை செய்கிறார்) சென்னை வந்திருந்த போது சொன்னார் “ வெளிநாடுகளில் இந்திய அறிவியலாளர்களின் மீது மரியாதை போய்விட்டது; சந்தேகம் தான் அதிகமாகிறது. மிக அதிக மதிப்புள்ள ஜர்னல்களில் பேப்பர் போட்டாலும் நம்புவது கடினம் என்றார்.
அதையேதான் திரு அனுராக் சவுராசியா (http://nbaim.academia.edu/Anuragchaurasia) சமீபத்திய நேச்சர் இதழில் எழுதி இருக்கிறார். (அனுராக் சவுராசியா- உலக வங்கி நிதியுதவிய ஆய்வுத்திட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாக பி.டி. கத்தரிக்காய், தக்காளி முதலியவற்றை இந்தியாவில் உருவாக்கிய குழு மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள ஆய்வுகளை முறைப்படுத்தும் வழிமுறைகளை உறுதிப்படுத்தியது மற்றும் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள ஆய்வை நடத்திய குழு இவற்றில் முக்கிய பங்கு வகித்தவர்). 2005இல் இவர் முன்நின்று ஆரம்பித்த வேளாண்முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர்களுக்கான தேசிய மையத்திற்கு எனது பி.எச்.டிக்காக நான் வளர்த்த- தெரிந்தெடுத்த சில அருமையான பாக்டீரியாக்களையும் வழங்கி இருக்கிறோம்)
அவரின் பிற பின்புலங்களைத்தவிர்த்து இந்த குறிப்பிட்ட கட்டுரையில் ”இந்தியர்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்யக் கற்றுக்கொடுப்பதை நிறுத்துங்கள்” என்கிறார். தனது மகன் தேர்வில் சுயமாக எழுதியது புத்தகத்தில் உள்ளது போல இல்லை என்பதால் மதிப்பெண் குறைக்கப்பட்டார் என்று ஆரம்பிக்கிறார். உண்மைதான். பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் மாணவர்களை தேர்வுக்குத்தான் தயார் படுத்துகின்றன. அரிதாக வெகு சில வாத்யார்களே மாணவர்கள் சுயமாக எழுதுவதை படித்துப்பார்க்கும் நேரத்தையும் அதை அங்கீகரிக்கும் முதிர்ச்சியையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளில் இப்படி ஆரம்பிக்கும் பண்பாடானது ஆய்வுக்கட்டுரைகளை கட்/காப்பி-பேஸ்ட் செய்யும் வரை கொண்டு போய் விடுகிறது என்கிறார். அதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை எனவும் சொல்கிறார். தேசிய அளவில் நடந்த நமது கல்வி முறை குறித்து மிக ஆழமான பரிசீலனையும் அதன் பரிந்துரைகளும் விரைந்து செயல்படுத்த மிக அவசியமான தருணத்தில் உள்ளோம் என்கிறார். எல்லோரும் இன்று கல்வி முறை குறித்த விரக்தியில் தான் உள்ளோம். என்றாலும் எடுத்துச் சொரிய நல்ல கொள்ளிகள் நமக்கு நிறைய இல்லை.
மேலும் சொல்கிறார்;
1. திருடி எழுதுவது என்பது மிகவும் சகஜமாகிவிட்டது (உதாரணத்துக்கு சிலவற்றைச் சுட்டுகிறார்கள். அதில் சுட்டப்படுபவர்கள் தேசத்தின் பெரிய கல்விமான்கள்)
2. திருடி எழுதி மாட்டிக்கொண்டால் அதிகபட்ச தண்டனை “ இனி செய்யாதே....”
3. ஆய்வுக்கட்டுரைகள்; ஆய்வுத்திட்ட அறிக்கைகள்; ஆய்வுத்திட்ட முன்வரைவுகள் என எல்லாவற்றிலும் காப்பியடிப்பது சகஜமாகி விட்டது.
4. இப்படியான செய்கைகளுக்குப் பின்னும் கூட டாப்200 ரேங்க் கில் எந்த இந்தியப்பல்கலைக்கழகமோ ஆய்வு நிறுவனமோ இல்லை. இந்தியா கொண்டிருக்கும் கனவுக்கும் மனிதவளத்துக்கும் இது ஆரோக்யமானதல்ல
5. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அறிவியல் என்றாலே கேள்விக்கு பதில் சொல்வது என்கிற மட்டத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள்
இதை மாற்ற நமது கல்விமுறையில் மிகப்பெரும் மாற்றம் தேவை என்கிறார். பள்ளிக்கல்வியில் கொண்டு வரப்படும் மாற்றம் இந்திய அறிவியல் துறையின் போதாமையை கவனத்தில் கொண்டு துரிதமாக்கப்பட வேண்டும் என்கிறார்.
மிக நல்ல ஆராய்ச்சியாளர்கள் கோப்புகளை சரிபார்க்கும் நிர்வாக ஊழியர்களாக நம் தேசத்தில் மாறுகிறார்கள் அல்லது மாற்றப்படுகிறார்கள் என்கிறார். மிக நல்ல என்று இல்லாவிட்டலும் உண்மையாலுமே ஆய்வுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அரைகுறை அறிவோடு பி.எச்.டி முடித்த எனக்கு இப்படியான நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. சிலர் பி.பி.ஓ. வேலை செய்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். சிலர் ஹோம் மேக்கர்களாக இருக்கிறார்கள்; சிலர் வியாபாரமும் செய்கிறார்கள். என்னமும் செய்யட்டும். இப்படியான நிறைய பேர் வெளிநாடுகளுக்கும் போய் விட்டார்கள். ஆனால் அனைவரும் அறிவியல் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் என்பது நினைவில் வேண்டும்.
அனுராக் சொல்வது போல இந்த தேசத்தில் இதற்கு முன் சுய சிந்தனையாளர்களுக்கும், சுயமான படைப்பாளிகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை.
இப்பொதைக்குப் பரவாயில்லை.இன்னும் பத்தாண்டுகளுக்கு இதே நிலை நீடித்தால் நாட்டில் திறைமைக்கு பெரிய பஞ்சம் ஏற்படும். ராக்கெட்டெல்லாம் விடுகிறோம். ஊர் ஊருக்கு சுரங்கம் வெட்டி அதனுள் குதிரைப்பயணம் செய்த ஒரு தேசத்தில் மெட்ரோ ரயிலுக்கு சுரங்கம் வெட்ட சீனாவிடம் நுட்பம் கேட்கிறோம்.
Krishnaraj Mannangattiஅவர்கள் எனக்கு சில சித்தர் பாடல்களைக் கொடுத்தார். ஆயிரக்கணக்கில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூத்திரம். சூரணம் செய்ய குளிகை செய்ய. ஆனால் தற்போது ரிவர்ஸ் எஞ்சினியரிங் என்று இந்திய பார்மா உலகம் கையேந்தி நிற்கிறது.
மிகப்பெரும் அளவிலான மிகச் சீக்கிரமாக நமது கல்விமுறையை குறிப்பாக பள்ளிக்கல்வி முறையை மாற்ற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எண்ணெய் எடுக்கும் நுட்பம் தெரியாததால் தான் அரபிகள் மேல்நாடுகளிடம் ஏமாந்து எண்ணெயை தாரை வார்த்துள்ளன. அப்படியான நிலை இங்கே வரும் முன்பாக கல்விமுறையை மாற்ற வேண்டும். நடக்குமா?
http://www.nature.com/news/stop-teaching-indians-to-copy-and-paste-1.20157

1 கருத்து:

oshylu சொன்னது…

அருமை .. உண்மை ... வெட்கப்பட வேண்டிய ஒரு அதி முக்கிய விஷயம்.. மனம் திறந்த மட்டுமல்ல .. மனம் நொந்த பதிவும் கூட .. இந்த மாதிரி விவரங்கள் பெரும்பாலவர்களுக்கு தெரிவதில்லை ..