வியாழன், 3 மே, 2012

புரட்சி

ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.

கருத்துகள் இல்லை: