ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

ஒரு குழந்தை இறக்கிறது


ஒரு குழந்தை இறக்கிறது
குறி இதழ் 21 இல் வெளியானது

முன்னொரு காலத்தில் ஒரு குழந்தை இருந்தது.
ஆலை விபத்தில்
விழிகள் திறந்திருந்தபடி
இறந்து போனது அது…

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
பிறக்கும் முன்பாகவே
தாயின் வயிற்றில் இருந்து
வாளால் அறுத்து எடுக்கப்பட்டு
தீயிலிடப்பட்டு
இறந்து போனது.

அதே குழந்தை
பின்னொரு நாளில்
கடல்சூழ் நாட்டில்
வேதிக்குண்டுகள் வீசப்பட்டு
இறந்து போனது.

அதே குழந்தை 
இன்னொருமுறை இறந்துபோகும் முன்
கரியாகிக் கிடக்கும் தன் தமயனை
எரிந்தபடியே நின்றுபார்த்தது.

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
கடற்கரை மணலில் முகம் புதைந்தபடி
இறந்து போனது

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
சகோதரியின் வன்கலவியின் போது
கழுத்தறுபட்டு இறந்து போனது.

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
நெஞ்சில் துப்பாக்கி குண்டு வாங்கி
கால்மடிந்தபடிக்கு
இறந்து போனது

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
சகோதரிக்கு தன் மூச்சை வழங்கி விட்டு
நச்சுக்குண்டுக்கு
இறந்து போனது

அதே குழந்தை-
யாரோ ஒருவருடைய யுத்தத்தால்…
யாரோ ஒருவருடைய சாதி வெறியால்…
யாரோ ஒருவருடைய மதவெறியால்…
யாரோ ஒருவருடைய வல்லரசுக் கனவால்..
இன்னும்-
என்னென்னவோ வழிகளிலெல்லாம்
இறந்து கொண்டிருக்கிறது.

யாராவது தேவதூதர்கள் வந்து
இந்த உலகை
குழந்தைகள் வாழத்தகுந்த உலகாக
ஆசிர்வதிக்கும் வரை
அந்தக் குழந்தை
இறந்து கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை: