புதன், 17 நவம்பர், 2010

ஜார்ஜ் ஆர்வெல்லும் மாலதி மைத்ரியும் அதன் பின் அந்த விலங்குப் பண்ணையும்ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் - விலங்குப் பண்ணை என்ற குறுநாவல் பற்றி சமீபத்தில் இரண்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். குமுதம் தீபாவளி மலர் இலக்கியச் சிறப்பிதழில் (எஸ் ராமகிருஸ்ணன் பெயரில் ஒரு அரைவேக்காட்டு கதையும் அதில் உண்டு) இந்த நூலைப் பற்றி மிகவும் சிலாகித்து சொல்லி இருக்கிறார் திரு. உதயச்சந்திரன் . . எஸ். படித்தவுடன் மிகவும் எரிச்சலாக இருந்தது. இதே புத்தகத்தை ஆரம்ப மற்றும் தீவிர வாசகர்களுக்கு சிபாரிசு செய்திருந்தார் மாலதி மைத்ரி அவர்கள். எல்லா நாட்டுக்கும் எல்லா அரசியல் நிலவரங்களுக்கும் இன்றும் பொருத்தமாக ஒருதீர்க்க தரிசனம் போல இந்த நாவல் இருக்கிறதென சொல்லி இருக்கிறார்உதயசந்திரன்.இந்தப் புத்தகத்தை1997 ஆம் ஆண்டு ஆங்கிலத் தாளுக்காக பி. எஸ். சி யின் போதுபடித்தேன். செல்வின் என்றொரு அற்புதமான ஆசிரியர் அப்போது பாடம் எடுத்தார். நான் படித்தது கந்தசாமி கண்டர் கல்லூரி என்கிற ஒரு மிகவும் பின்தங்கிய கிராமப்புற அதுவும் மாலை நேரக்கல்லூரி (காலையில் அரசு உதவிபெறும் பிரிவுகளும் மாலையில் சுய நிதி பிரிவுகளும் இருக்கும். நான் மாலை நேர மாணவன்). இன்று நினைத்துப் பார்க்கும் போது அங்கே எனக்கு சில நல்ல வாத்தியார்கள் கிடைத்தது பெரும் ஆச்சர்யமாக உள்ளது. அவர்களுல் ஒருவர் செல்வின். ஒருமுறை சமாளிபிகேஷன் என்றால் என்னவென வகுப்பில்கேட்டார். வரிசையாக பெரும் பெரும் படிப்பாளிகள் எல்லாரும் என்னென்னவோ யூகித்தார்கள். என் முறை வந்தது. அது சமாளிப்பு என்பதன் பிறழ்வடிவம் என்பதை சொன்னேன். அவர் அதை சரியென்றார். இதற்குப் பிறகும் எனக்கும் அவருக்கும் ஒரு நட்பிழை வரவில்லை. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த வாத்தியார்களில் அவரும் ஒருவர். அவர்தான் இந்த நாவலை எடுத்தார். அப்போதே இது ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியையும் அதன் வீழ்ச்சிப் போக்கினையும் பேசும் நாவலென சொன்னார். உண்மையில் அது அப்படியான ரஷ்யப் புரட்சியை கிண்டலடிக்கிற கம்யூனிசத்தை கிண்டலடிக்கிற ஒரு அற்புதமான பகடியுடைய நாவல். எழுத்து என்கிற வகையில் அது மிக எளிதான அருமையான நடையில் எழுதப்பட்ட நல்ல நாவல்தான். ஆனால் அதில் பொதிந்திருக்கும் அரசியல் முதலாளித்துவ அரசியல். நான் கம்யூனிஸ்ட் அல்ல. என்றாலும் ரஷ்யப்புரட்சியை மதிப்பவன். அதை இந்த நாவல் கேலி செய்கிறது.
ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் (டிராட்ஸ்கி மற்றும் ஸ்டாலின்) என்ற இரு பன்றிகளின் தலைமையில் புரட்சி நடந்து பண்ணையாளர் விரட்டப்பட்டு விலங்குப் பண்ணை ஆக்கப் படுகிறது. ஸ்னோபால் மிகவும் திறமையான நன்னோக்கம் கொண்ட பன்றியாக காட்டப் படுகிறது. ஒரு கட்டத்தில் ஸ்னோபால் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டு விரட்டியடிக்கப் படுகிறது. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெப்போலியன்-பன்றிகள் ஆதிக்கம் அதிகமாகி சமத்துவ விதிகள் திருத்தப் படுகின்றன. பன்றிகள் வெலை செய்யாது . மேற்பார்வை மட்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைப் போல நடவடிக்கைகளை இந்த பன்றிகள் பெறுகின்றன. அதாவது ஸ்டாலின் காலத்தில்பொதுவுடமை சமத்துவம் எல்லாம் மீறப்பட்டதாக ஜார்ஜ் ஆர்வெல் இந்தநாவலில் சொல்கிறார். நெப்போலியன் தனக்கென வெறிபிடித்த வேட்டை நாய்களின் படையொன்றை வைத்துக் கொண்டு தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் ஸ்னோபாலின் ஆதரவாளன் என்று கொன்று குவிக்கிறது. இத்தனை களேபரத்திலும் பாக்சர் கடினமாக உழைப்பது மற்றும் நெப்பொலியன் செய்வதெல்லாம் சரி என்ற இரு கோட்பாடுகளை மிக கருத்தோடு கடை பிடிக்கிறது.

ஒரு
கட்டத்தில் சாத்தியமேஇல்லாத ஒரு காற்றாலையை நிறுவ பன்றிகள் உத்தரவிடுகின்றன. அப்பணியின்போது பல இடைஞ்சல்கள். எல்லவற்றுக்கும் அடித்து விரட்டப்பட்ட ஸ்னோபால் (டிராட்ஸ்கி) தான் காரணமென பொய் பிரச்சாரம் வேறு செய்யப் படுகிறது. பாக்சரும் இந்தகடின பணியின் போது இறந்து விடுகிறது. ஏழு கட்டளைகளை விதித்துக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விலங்குப் பண்ணையில் எழும் நெப்போலியன் ரக பன்றிகளால் மீறப்பட்டு ஏனைய விலங்குகள் மட்டும் கட்டாயமாக பின்பற்றுமாறு ஆக்கப் பட்டன. பிறகு முடியும் போது பன்றிகள்மனிதர்களோடு கூட்டகிவிடுவதாகவும் மனிதர்கள் போலவே நடை உடைகளைஅமைத்துக் கொள்வதாகவும் மற்ற விலங்குகள் அதை பீதியோடு பார்ப்பதாகவும்சொல்லப் படுகிறது இந்த நாவலில். நெப்போலியன் மனிதர்களோடு கூட்டு சேர்ந்து பணம் பன்னுகிறது. விலங்குப்பண்ணையின் பெயரும் மாறுகிறது. கடைசியில் மனிதர்களுக்கும் பன்றிகளுக்கும் வித்யாசமின்றி போகிறது.

இது கம்யூனிசத்தை விமர்சிக்கிறதோரணையிலான நாவல் அல்ல. கம்யூனிச வெறுப்பு எனும் ஊசியை பகடியெனும் பஞ்சைக் கொண்டு மூடி, கண்ணில் செருக முயலும் கயமைத்தனமான படைப்பு இது. கம்யூனிசம் மீது என்னவொரு பயம் இருந்திருந்தால் சென்னைப் பல்கலைக் கழகம் இப்படியான ஒரு நாவலை கல்லூரியில் நுழையும் இளைஞனுக்கு பாடமாக வைத்திருக்கும்?

உதயச்சந்திரன் அரசு இயந்திரத்தின் ஒரு அங்கம். எனவே அவர் இந்த நாவலின் பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவரின் அரசியல் என ஒத்துக் கொள்ளலாம். சுதந்திரமான படைப்பாளியான மாலதி மைத்ரி இந்த நாவலைப் பற்றி தெரிந்துதான் சிபாரிசு செய்தாரா? அப்படி தெரிந்து செய்து இருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். வெறும் படைப்பனுபவத்திற்காக அந்த சிபாரிசு என்றும் சப்பைக்கட்டு கட்டமுடியாது. இதை விட எளிமையான நல்ல நாவல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உண்டு. அப்படி இருக்கையில் மாலதி மைத்ரி இதை சிபாரிசு செய்தது ஒன்று அவரின் அறியாமையாக இருக்கும். அது மன்னிக்கப் பட வேண்டியது. அறிந்தே சொல்லி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. ஜார்ஜ் ஆர்வெல்லுக்கு கிடைத்தவெகுமதி அவருக்கும் கிடைக்கும்.

2 கருத்துகள்:

THOPPITHOPPI சொன்னது…

அருமை

தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ?

நளினி சங்கர் சொன்னது…

நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை ஜே.பி. ஆனால் குமுதம் பார்த்தேன்.

சமீபத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் ஒரு ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றிருந்தேன் ஜே.பி. பெரும்பாலானோர் படத்தின் ஆங்கில வசனம் புரிந்திவிட்டது என்பதற்காகவே சப்தமாக சிரிக்கின்றனர்... என்கிற சங்கதி அப்போதுதான் எனக்கு பிடிபட்டது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இருவரும் இந்த குரூப்பாதான் இருக்கும்.

//////////////////////

"இது கம்யூனிசத்தை விமர்சிக்கிறதோரணையிலான நாவல் அல்ல. கம்யூனிச வெறுப்பு எனும் ஊசியை பகடியெனும் பஞ்சைக் கொண்டு மூடி, கண்ணில் செருக முயலும் கயமைத்தனமான படைப்பு இது. கம்யூனிசம் மீது என்னவொரு பயம் இருந்திருந்தால் சென்னைப் பல்கலைக் கழகம் இப்படியான ஒரு நாவலை கல்லூரியில் நுழையும் இளைஞனுக்கு பாடமாக வைத்திருக்கும்?"
/////////////////////////

ஏ சூப்பர் பா....

ராமகிருஷ்ணன் என்கிற பெயரில் வந்ததாக நீங்க சொன்ன கதையை நானும் படிச்சன் ஜே.பி.... ஆமா... அது நம்ம எஸ்.ரா வா? நான் ஏதோ ராமகிருஷ்ண மடத்தில் வேலை பார்க்கும் வருங்கால சாமியார் எழுதினது-னு இல்ல நினைச்சேன். ஏம்பா நல்லா பாத்தீகளா... நம்ம எஸ்.ரா தானா:)