திங்கள், 18 ஜூலை, 2016

எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஆற அமர யோசிக்கலாம்


நேற்று மாலை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் பஷீர் பற்றிய நினைவரங்கம் ஒன்றுக்குப் போனேன். பஷீரின் குரலிலேயெ, பஷீரின் ”சுல்தானிய” அசைவுகளுடன் Bhasheer, the Man என்ற விவரணைப்படம் திரையிட்டார்கள். 1987 இந்தப் படத்துக்கு தேசிய விருது (சிறந்த வாழ்க்கைச்சித்திரம்) வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய விருது பெற்ற படங்களுக்கேயான வீணை இசையோடும், அண்மைக்காட்சிகளோடும், மெதுவான நகர்தலோடும் அற்புதமாக இருந்தது. பஷீரின் ஸ்டைலான விரலசைவுகள், காலசைவுகள், அவர் பீடி குடிப்பது என படம் அற்புதம். பஷீரின் எள்ளல் பேச்சு, அவர் வாழ்ந்த சொர்க்கபுரியின் அழகு, அவரின் கிராமஃபோன் என 1980 களின் பரபரப்பற்ற உலகத்தோடு படம் ஒரு பெரும் அனுபவம். யூடியூபில் கிடைக்கிறது. இப்படியான படங்களை இது மாதிரியான அரங்குகளில் பார்த்தால் இன்னும் அருமை. இப்படித்தான் பனுவலில் ஒரு முறை செவன் சாமுராய் போட்டார்கள். கடைசிவரை பார்த்தேன்.
பஷீர் பற்றி மூவர் பேசினர். திரைக்கலைஞர் ரோகிணி வழக்கமாகப் பேசினார். பஷீர் தமது ஆசான் என்றார். பேச்சினூடே சுரா அவர்களின் பஷீரின் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு பெரும் விபத்து என்றார். நான் படித்த பஷீரின் அனைத்து எழுத்துகளையும் சுரா வின் மொழிபெயர்ப்பில் தான் படித்தேன் எழுத்து பிறகு கிருஷ்ண பிரபு  பேசினார். மிகுந்த தயாரிப்புகளோடு பரபரப்போடு பேசினார். மொழிபெயர்க்கும் போது முழு படைப்பும் வந்து விடுவதில்லை என்று லேசாக ஆரம்பித்து விட்டு தன் ஏரியாவுக்கு வந்தார். எஸ் ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த கதைகள் என்ற தொகுப்பு நூலில் உள்ள பிழைகளை - பிழைகள் என்றால் எழுத்துப்பிழைகள் அல்ல. வாக்கியப்பிழைகள் கருத்துப்பிழைகளை எடுத்து எடுத்து பேசினார். இப்படி தமிழில் முக்கிய கதைகளை தொகுக்கும் போதே இத்தனை வண்டி தப்பு எனும் போது மொழிபெயர்ப்புகள் எப்படி ஒரு படைப்பாளியை முழுமையாகக் கொண்டு வந்து விடும் என்கிறார். உண்மைதான். தமிழில் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் தமிழ் இலக்கணம் தெரியாத எனக்குக் கூட நிறைய தப்புகள் தெரியும் வண்ணம் பிழைகளோடே நூல்கள் பதிக்கப்படுகின்றன. சினிமாவும் இலக்கியமும் சற்றேரக்குறைய ஒன்று கலந்து விட்டது போலவே தோன்றுகிறது. வணிகம் பிரதானமாகிவிட்டது. புத்தகக் காட்சிக்காக வேண்டு நூல்களை பதிக்கிறார்கள். 10 பக்கம் எழுதிட்டேன்; 60பக்கம் எழுதிட்டேன்; எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பத்தி என எழுத்தாளன் ப்ரோமோ செய்ய வேண்டி உள்ளது; பேஸ்புக்கில் வெட்டிச் சண்டை போட வேண்டி ஆகிறது. பொண்டாட்டி தாலியை அடகு வச்சு புத்தகம் போட்டேன். ------ஓசியில விசிட்டிங் கார்டு மாதிரியில்ல கொடுக்க வேண்டியிருக்கு என அலுத்துக்கொண்ட நா முத்துக்குமார் கூட இப்போது அப்படி சொல்ல மாட்டார். நிறைய பதிப்பகங்கள்; நிறைய பேரிடம் பதிக்கும் அளவு பணமும் இருக்கிறது; அல்லது ப்ரோமோ செய்ய குழு இருக்கிறது. ஆகவே புத்தகம் எழுதுவது கடினமானது அல்ல. இந்தப் பெருமழையிலும் புத்தகம் எழுதாமல் விரதம் காக்கும் Krishna Prabhu இதைச் சொல்ல தகுதியானவர்தான். அவர் சொன்ன இடம் வேண்டுமானல் சரியில்லாமல் இருக்கலாம். சொன்னதும் ஆதங்கமும் சரியே.பிழைகள் இருக்குதுன்னு எழுதினா புரூஃப் ரீடிங் பண்ணவே ஆள் இல்லை; கண்காட்சிக்கு காலம் நெருங்கிடுச்சு; ஆபீசில் ஓவர் ஒர்க் என சால்ஜாப்பு சொல்வதற்கு எழுதியவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்; தவிர்கவே முடியாது என்று சொல்ல பதிப்பகங்கள் தயாராகவே இருக்கின்றன. போகிற போக்கில் சாரு இப்படியெல்லாம் பண்ணுவதில்லை பரவாயில்லை என்றார்; ஆமாம் சாரு இப்படியெல்லாம் பண்ணுவதில்லை. வி்ஷயத்தையே தகவல் பிழையோடு எழுதிடுவார்.
எழுத்துப்பிழைகளுக்கும், தகவல் பிழைகளுக்கும், வாக்கிய இலக்கணப்பிழைகளுக்கும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் நியாயமாக வெட்கப்பட வேண்டும். கிருஷ்ண பிரபு சொல்வதைப் போல இதை நிறையப் பேர்கள் புதிதாகப் படிக்கிறார்கள். இந்த நேர்த்தி கூட இல்லாமல் அவசரம் அவசரமாக பதிப்பிக்க அது என்ன புரட்சிகர ஆவணமா? புத்தகம் தானே. ஆற அமர சரியாக போட்டுட்டு போறடு? அட்டைப்படம் வடிவமைக்கவும் ப்ரோமோ பண்ணவும் செய்யவும் ஒதுக்குவதைப் போல புத்தகத்தை செம்மையாக கொண்டு வரவும் ஒதுக்க வேண்டும்.
நிறைய புதியவர்கள் படிக்க வருகிறார்கள். ஆட்டுமந்தைகளும் அதில் உண்டு. எல்லோருக்குமாக நல்ல நூல்கள் வரட்டும். கிருஷ்ண பிரபு ஆரம்பித்தது சரியான நேரம். எந்த இலக்கிய பரபரப்பும் இல்லாத நேரம். இப்போது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஆற அமர யோசிக்கலாம். எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
மேற்சொன்ன அரங்கில்ஷாஜி  Shaji Chen பேசியது என்றென்றும் மறக்காதது. மிக யதார்த்தமான உண்மையான பாவனையற்ற பேச்சு. அதுகுறித்த பதிவு நாளை

வியாழன், 30 ஜூன், 2016


இந்தியர்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்யக் கற்றுக்கொடுப்பதை நிறுத்துங்கள்-அனுராக் சவுராசியா

http://www.nature.com/news/stop-teaching-indians-to-copy-and-paste-1.20157

இன்று வெகு நாட்களுக்குப் பிறகு எனது முதல் அறிவியல் ஆசான் மேடம் ஞானமணி அவர்களை சந்தித்தேன். முதன் முதலாக நானும் தமிழகத்தின் ராபர்ட் டி நீரோ Balram Jeyapaul Narayanan அவர்களும் மேடத்தின் ஆய்வகத்தில் எம்.எஸ்.சி ஆய்வுக்காக போன போது சுமார் மூன்று நாட்கள் வரும்படியான கண்ணாடித்தளவாடங்களைக்கொடுத்து கழுவி வைக்கச் சொன்ன முதல் நாள் அன்று எப்படி பேசினார்களோ அதே இணக்கத்தோடு இப்போதும் பேசுவார். பேச்சினூடே இன்றைய மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வம் இந்திய அறிவியலின் போக்கு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் பின்காணும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கக் கொடுத்தார். இரண்டு வரிகள் படித்ததுமே என் கருத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். முழுசா படிச்சிட்டு சொல்லுன்னாங்க. முழுசா படிச்சப்புறம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த மாத ஆரம்பத்தில் நண்பர்Ramesh Subramani (ஃபிஜியில் வேலை செய்கிறார்) சென்னை வந்திருந்த போது சொன்னார் “ வெளிநாடுகளில் இந்திய அறிவியலாளர்களின் மீது மரியாதை போய்விட்டது; சந்தேகம் தான் அதிகமாகிறது. மிக அதிக மதிப்புள்ள ஜர்னல்களில் பேப்பர் போட்டாலும் நம்புவது கடினம் என்றார்.
அதையேதான் திரு அனுராக் சவுராசியா (http://nbaim.academia.edu/Anuragchaurasia) சமீபத்திய நேச்சர் இதழில் எழுதி இருக்கிறார். (அனுராக் சவுராசியா- உலக வங்கி நிதியுதவிய ஆய்வுத்திட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாக பி.டி. கத்தரிக்காய், தக்காளி முதலியவற்றை இந்தியாவில் உருவாக்கிய குழு மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள ஆய்வுகளை முறைப்படுத்தும் வழிமுறைகளை உறுதிப்படுத்தியது மற்றும் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள ஆய்வை நடத்திய குழு இவற்றில் முக்கிய பங்கு வகித்தவர்). 2005இல் இவர் முன்நின்று ஆரம்பித்த வேளாண்முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர்களுக்கான தேசிய மையத்திற்கு எனது பி.எச்.டிக்காக நான் வளர்த்த- தெரிந்தெடுத்த சில அருமையான பாக்டீரியாக்களையும் வழங்கி இருக்கிறோம்)
அவரின் பிற பின்புலங்களைத்தவிர்த்து இந்த குறிப்பிட்ட கட்டுரையில் ”இந்தியர்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்யக் கற்றுக்கொடுப்பதை நிறுத்துங்கள்” என்கிறார். தனது மகன் தேர்வில் சுயமாக எழுதியது புத்தகத்தில் உள்ளது போல இல்லை என்பதால் மதிப்பெண் குறைக்கப்பட்டார் என்று ஆரம்பிக்கிறார். உண்மைதான். பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் மாணவர்களை தேர்வுக்குத்தான் தயார் படுத்துகின்றன. அரிதாக வெகு சில வாத்யார்களே மாணவர்கள் சுயமாக எழுதுவதை படித்துப்பார்க்கும் நேரத்தையும் அதை அங்கீகரிக்கும் முதிர்ச்சியையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளில் இப்படி ஆரம்பிக்கும் பண்பாடானது ஆய்வுக்கட்டுரைகளை கட்/காப்பி-பேஸ்ட் செய்யும் வரை கொண்டு போய் விடுகிறது என்கிறார். அதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை எனவும் சொல்கிறார். தேசிய அளவில் நடந்த நமது கல்வி முறை குறித்து மிக ஆழமான பரிசீலனையும் அதன் பரிந்துரைகளும் விரைந்து செயல்படுத்த மிக அவசியமான தருணத்தில் உள்ளோம் என்கிறார். எல்லோரும் இன்று கல்வி முறை குறித்த விரக்தியில் தான் உள்ளோம். என்றாலும் எடுத்துச் சொரிய நல்ல கொள்ளிகள் நமக்கு நிறைய இல்லை.
மேலும் சொல்கிறார்;
1. திருடி எழுதுவது என்பது மிகவும் சகஜமாகிவிட்டது (உதாரணத்துக்கு சிலவற்றைச் சுட்டுகிறார்கள். அதில் சுட்டப்படுபவர்கள் தேசத்தின் பெரிய கல்விமான்கள்)
2. திருடி எழுதி மாட்டிக்கொண்டால் அதிகபட்ச தண்டனை “ இனி செய்யாதே....”
3. ஆய்வுக்கட்டுரைகள்; ஆய்வுத்திட்ட அறிக்கைகள்; ஆய்வுத்திட்ட முன்வரைவுகள் என எல்லாவற்றிலும் காப்பியடிப்பது சகஜமாகி விட்டது.
4. இப்படியான செய்கைகளுக்குப் பின்னும் கூட டாப்200 ரேங்க் கில் எந்த இந்தியப்பல்கலைக்கழகமோ ஆய்வு நிறுவனமோ இல்லை. இந்தியா கொண்டிருக்கும் கனவுக்கும் மனிதவளத்துக்கும் இது ஆரோக்யமானதல்ல
5. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அறிவியல் என்றாலே கேள்விக்கு பதில் சொல்வது என்கிற மட்டத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள்
இதை மாற்ற நமது கல்விமுறையில் மிகப்பெரும் மாற்றம் தேவை என்கிறார். பள்ளிக்கல்வியில் கொண்டு வரப்படும் மாற்றம் இந்திய அறிவியல் துறையின் போதாமையை கவனத்தில் கொண்டு துரிதமாக்கப்பட வேண்டும் என்கிறார்.
மிக நல்ல ஆராய்ச்சியாளர்கள் கோப்புகளை சரிபார்க்கும் நிர்வாக ஊழியர்களாக நம் தேசத்தில் மாறுகிறார்கள் அல்லது மாற்றப்படுகிறார்கள் என்கிறார். மிக நல்ல என்று இல்லாவிட்டலும் உண்மையாலுமே ஆய்வுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அரைகுறை அறிவோடு பி.எச்.டி முடித்த எனக்கு இப்படியான நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. சிலர் பி.பி.ஓ. வேலை செய்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். சிலர் ஹோம் மேக்கர்களாக இருக்கிறார்கள்; சிலர் வியாபாரமும் செய்கிறார்கள். என்னமும் செய்யட்டும். இப்படியான நிறைய பேர் வெளிநாடுகளுக்கும் போய் விட்டார்கள். ஆனால் அனைவரும் அறிவியல் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் என்பது நினைவில் வேண்டும்.
அனுராக் சொல்வது போல இந்த தேசத்தில் இதற்கு முன் சுய சிந்தனையாளர்களுக்கும், சுயமான படைப்பாளிகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை.
இப்பொதைக்குப் பரவாயில்லை.இன்னும் பத்தாண்டுகளுக்கு இதே நிலை நீடித்தால் நாட்டில் திறைமைக்கு பெரிய பஞ்சம் ஏற்படும். ராக்கெட்டெல்லாம் விடுகிறோம். ஊர் ஊருக்கு சுரங்கம் வெட்டி அதனுள் குதிரைப்பயணம் செய்த ஒரு தேசத்தில் மெட்ரோ ரயிலுக்கு சுரங்கம் வெட்ட சீனாவிடம் நுட்பம் கேட்கிறோம்.
Krishnaraj Mannangattiஅவர்கள் எனக்கு சில சித்தர் பாடல்களைக் கொடுத்தார். ஆயிரக்கணக்கில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூத்திரம். சூரணம் செய்ய குளிகை செய்ய. ஆனால் தற்போது ரிவர்ஸ் எஞ்சினியரிங் என்று இந்திய பார்மா உலகம் கையேந்தி நிற்கிறது.
மிகப்பெரும் அளவிலான மிகச் சீக்கிரமாக நமது கல்விமுறையை குறிப்பாக பள்ளிக்கல்வி முறையை மாற்ற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எண்ணெய் எடுக்கும் நுட்பம் தெரியாததால் தான் அரபிகள் மேல்நாடுகளிடம் ஏமாந்து எண்ணெயை தாரை வார்த்துள்ளன. அப்படியான நிலை இங்கே வரும் முன்பாக கல்விமுறையை மாற்ற வேண்டும். நடக்குமா?
http://www.nature.com/news/stop-teaching-indians-to-copy-and-paste-1.20157

திங்கள், 27 ஜூன், 2016

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு ஒரு இருக்கை


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு ஒரு இருக்கை அனுமதிக்க நிதி திரட்டி வருகிறார்கள். இரு அமெரிக்க வாழ் மருத்துவர்கள் (தமிழர்கள்) முன்னின்றும் முதல் நிதியாக மூன்று கோடி போட்டும் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கான அறிமுகக்கூட்டம் தியாகராயர் அரங்கில் சனிக்கிழமை சாயுங்காலம் நடைபெற்றது.விழாவில் தமிழில் பிழைப்பு நடத்தும் பிரபலஸ்தர்கள் யாரும் இல்லை. வழக்கமான இலக்கிய கூட்டங்களில் காணக்கிடைக்கும் அரைவேக்காடுகளும் கண்ணில் படவில்லை. தாஜ்நூர் இசையில் பழனிபாரதின் பாடல் ஒன்றை தீம் இசை என வெளியிட்டார்க்ள். மிகவும் சுமாரான ஆல்பம் அது. சுமார் கூட அதிகம் தான்.
ஞாநி அவர்கள் “ஹார்வர்டில் தமிழ் இருக்கை: இங்கே அம்மணம். அங்கே பட்டாடையா?” என்று இந்த முன்னெடுப்பைப்பற்றி விமர்சிக்கிறார். ஞாநி அவர்களின் உள்ளார்ந்த வெறுப்பு புரியவில்லை என்றாலும் நேரிடையாக சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
1. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் முனைவர் பட்டம் வரை படிக்கிறார்கள்.
2. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதி மட்டமாக உள்ளது. அங்கே தமிழ் படிக்கும் தலித் மற்றும் வன்னியர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
4. தமிழ் மீடியத்தில் படிப்பவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் இல்லை.
5. சில பத்திரிக்கைகள் மற்றும் கம்பெனிகளுக்கு இதில் என்ன ஆர்வம்
(அந்தப்பத்திரிக்கை இந்து; கம்பெனி சி.பி.சி.எல் என கணிக்கிறேன்)
6. இங்கே ஒரு 40 கோடி ரூபாய் திரட்டினால், அதைக் கொண்டு முதலில் தமிழுக்கு இங்கேயே செய்யவேண்டிய வேலைகள் ஏராளமாக இருக்கின்றன.
மிகவும் தட்டையான பார்வை இது. ஞாநிக்கு இப்படி தோன்றாமல் போனால் தான் ஆச்சர்யம். எதையும் வளைந்து பின்பக்க்கம் பார்த்து தன் தனித்துவமாகா பேசுவார். பேசட்டும். இந்த 40 கோடி தமிழ் நாட்டில் திரட்டுவதால் என்ன கெட்டுவிடப் போகிறது? கடந்த தேர்தலில் புழங்கிய பணத்தொடு 40 கோடியை ஒப்பிடுங்கள். கடுகு அய்யா கடுகு
தமிழ்நாட்டில் எப்போதும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் தீரட்டும் என்றால் சூரியனும் சந்திரனும் உள்ளவரை காத்திருக்க வேண்டியதுதான். சுனாமி வந்த அன்று சினிமா பார்த்த நாடு இது. வெள்ளம் புகுந்த வீடுகளில் திருடுடிய வீடு இது. நெடுஞ்சாலை விபத்தில் இறந்தவர்களின் நகைகளை திருடும் நாடு இது. எப்போ இதெல்லாம் குறைய............?
வள்ளுவர் கோட்டம் அருகே இன்னமும் பிச்சை எடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதை கட்டாமல் விட்டிருக்கலாம் என்று சொல்ல முடியுமா? சல்லிப்பயல்களும் சில்லறைத்தனங்களும் இருக்கத்தான் செய்யும் . சிலப்போது சில விஷயங்கள் நடக்கும். சாவு வீட்டில் காப்பி கொடுப்பதில்லையா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு 40 கோுடி ஒரு காசா ?
இந்த 40 கோடியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிலோ ஈழத்திலோ எள்ளளவு பிரச்சனையை கூடத் தீர்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே கட்டிய பயண்பாட்டில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனை ஆக்குவது போல முயன்றால் தப்பு சொல்லலாம். பிசாத்து காசு 40 கோடியில் ஹார்வார்ட் உள்ளவரை ஒரு தமிழ் இருக்கை இருக்கப்போகிறது. யாருமே பேசாத சமஸ்கிருதத்துக்கு கோடிகள் கொட்டும் போது கோடிகள் பேசும் தமிழுக்கு சில கோடிகள் போட்டால் என்ன? இது அரசின் வரிப்பணம் அல்ல. மனமிருப்பவர்கள் கொடுக்கட்டும். அரசும் இதில் உதவ வேண்டும். செய்பவர்களுக்கு பிண்ணனி எப்படியும் இருக்கட்டும். தமிழின் பெயர் இன்னும் சில நூற்றாண்டுகள் அமெரிக்காவில் இருக்கும் இருக்கட்டுமே.
கொடுக்க விருப்பமுள்ளவர்கள் கொடுக்கட்டும். ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லாவிட்டால் இங்கே எல்லாம் சரியாகி விடுமா? எவனோ செய்யறான். எவனோ கொடுக்கறான். தமிழ் இன்னும் கொஞ்ச காலம் அமெரிக்க மண்ணிலும் தழைக்கட்டுமே..........? வரிப்பணத்தில் கட்டிய சட்டசபையை வம்புக்காக மருத்துவமனையாக மாற்றுகிறார்கள். அரசுப்பணத்தில் கட்சிக்கூட்டம் நடக்குது. கட்சி அறிக்கையை செய்திதுறை கொடுக்குது. இப்படியெல்லாம் ஒரு நாட்டில் நடக்குதாம். அதெல்லாம் போலாம் இது போகக்கூடாதா?
முதல் ஐந்து குற்றச்சாட்டுகளும் தமிழக அரசு மீது வைக்க வேண்டியவை. அவை அனைத்தும் அரசு செய்ய வேண்டியன. அதை இப்படி திரட்டப்படும் 40 கோடியில் செய்யலாம் என்கிறார். ஆகவே ஹார்வார்ட் தமிழ் இருக்கை தேவை அல்ல. அல்லது அதற்கு இங்கே நிதி திரட்டாதே என்கிறார்.
பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பரின் பலபத்தாண்டு கடின உழைப்புகளான சினிமா வரலாற்றுப்பதிவுகளை அரசு வாங்கிக் கொண்டது. அதை எப்படி பராமரிக்கிறது? அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்படி பராமரிக்கிறது? ரோஜா முத்தையா என்ற தனிநபரின் உழைப்பை சிகாகோ பல்கலையின் நிதியுதவி காப்பாற்றி ரோஜா முத்தையா நூலகம் அமைய உதவியது என்கிறார் இந்து ராம். அப்படி எதாவது நல்லது ஹார்வார்டு இருக்கையாலும் நடக்கும் என்கிறார். அப்படி இருக்க ஒரு இருக்கை தான் அமைந்து விட்டு போகட்டுமே?
இந்த கம்பெனிகளுக்கு, இந்து ராமுக்கோ, அந்த இரு மருத்துவர்களுக்கு அல்லது ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு என்ன ஒரு மறைமுக அஜெண்டாவும் இருந்து விட்டுப் போகட்டும். தமிழ் என்ற வார்த்தை இன்னும் சில நூறாண்டுகள் அமெரிக்க மண்ணில் புழங்குமே அதற்காகவாவது இந்த இருக்கை அமைப்பதை ஆதரிப்போம்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழுக்கு மத்திய மாநில அரசுகள் என்ன செய்தன? யாராவது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு போனீர்களா? அங்கு வேலை செய்யும் பேராசிரியர்கள் என்ன செய்ய முடிகிறது? எத்தனை நூல்களை கொண்டு வருகிறது? தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் என்ன செய்கிறது என்று கேட்டுப் பாருங்கள். செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் தரமணியில் ஒண்டுக்குடித்தனம் நடத்தி வருகிறது. எத்தனை ஆண்டுகள் ஆகிறது செம்மொழி என்று சொல்லி...? அந்தநிறுவனத்திற்கு வளாகச்சுவர் மட்டும் கட்டியுள்ளார்கள் குளோபல் மருத்துவமனை அருகே. (பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் தான்)
இதையெல்லாம் ஞாநி போன்றவர்கள் அரசிடம் எடுத்துச் சொல்லி சரியாக நடத்தி இருந்தால் ஹார்வார்டில் போய் ஏன் நாம் இருக்கை கேட்கப்போகிறோம்?

அமைப்பாக இல்லாமல் உதிரிகளாக நடுநிலைமை பேசுபவர்கள் இப்படித்தான் பேச முடியும். யாராவது எதாவது செய்யும் வரை எதுவும் பேச மாட்டார்கள். ஆரம்பித்ததும் பேசுவார்கள்.
ஹார்வார்டு உண்மையிலேய மெச்சத்தகுந்த பல்கலைக்கழகம் தான். சமஸ்கிருதம் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்துக்கும் அங்கே இருக்கை இருக்கிறதாம். தமிழைத்தவிர. எட்டுகோடி தமிழர்கள் இருக்கும் உலகில் 40 கோடி செலவில் ஒரு சிறிய ஆய்வு இருக்கை அமையப்போகிறது என்பது ஒரு நல்ல விசயம் தானே...?
ஒரு கனடிய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைய முயற்சி நடந்தது. அது அப்படியே இருக்க இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்கிறார் தோழர் யமுனா ராஜேந்திரன். அங்கேயும் இருக்கட்டும். இங்கேயும் இருக்கட்டும். என்ன போகிறது?
என்னைபொறுத்தவரையில் இந்த இருக்கை அமைய தமிழக அரசும் அரசியல் கட்சிகளும், தமிழ்த்தலைவர்களும் (தமிழினத்தலைவர் கலைஞர்; அய்யா தமிழ்க்குடிதாங்கி; பொங்குதமிழ்ப்போராளி அண்ணன் சீமான், ஈழத்தாய் உட்பட), தமிழ் முதலாளிகளும் பெரிய அளவிலும்
பொதுமக்களும், எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் கலைஞர்கள் யாவரும் தம்மால் முடிந்த அளவும் இந்த முயற்சிக்கு நிதியளித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அந்த நிகழ்வு நடக்கும் போதே நான் யோசித்தேன். உலகின் பெரும் பல்கலைகழகங்கள் அனைத்திலும் தமிழுக்கு இருக்கை அமைக்க வேண்டும். நாம் கண்டுபிடிக்கத்தவறிய தொல்சிறப்புகளை அவர்களாவது வெளிக்கொண்டு வரட்டும்

http://harvardtamilchair.com/

திங்கள், 11 ஜனவரி, 2016

குளிர்

2002 நவம்பர் மாத இறுதியில் பரத் மற்றும் கார்த்திக் அண்ணாவுடன் ஆய்வுப்பணி நிமித்தமாக பல வடமாநிலங்களுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. இமாச்சல் பிரதேஷ் பலம்பூர , கடுமையான பனிப்பொழிவு மிக்க ரொதாங்பாஸ் வழியாக திரும்பினோம். பெரும்பாலான இடங்களில் கடும் பனி. இருந்தாலும் சமாளித்தோம். பலம்பூர் போகும் போது எதோ ஒரு இடத்தில் இரவு பேருந்து நின்று விட உள்ளூர் மக்களுடன் குளிர் காய்ந்தெல்லாம் பயணித்தோம். அப்போது குளிர் பெரிதாக வாட்டிவிடவில்லை


2003 இறுதியில் வால்பாறையில் வேலைக்குச் சேர்ந்தேன். சராசரியாக காலை நேர வெப்பநிலை 3-5 டிகிரிக்குள் இருக்கும் இடம் அது. ஆய்வகம் இன்னும் தாழ இருந்தது. காலை எட்டரை மணிக்கெல்லாம் உள்ளே இருக்க வேண்டும். ஆறு ஐம்பதுக்கு நீரார் அணைப் பேருந்து வரும். அப்போது கரும்பாலம் அருகில் தங்கியிருந்தோம். பாலாதான் முதலில் எழுந்து கிணற்றில் நீரிறைத்து சுட வைத்து குளித்து விட்டு பிறகு   மற்றவர்களை எழுப்புவார். ஆனால் நானும் சவுமிக்கும் பெரும்பாலும் பேருந்தை பிடிக்க முடியாத படிக்கு தாமதமாகத்தான் சேருவோம். அடுத்த வண்டி ஈட்டியார் வரைதான் போகும். அதைத்தான் பெரும்பாலான நாட்கள் பிடிப்போம். ஈட்டியார் பேருந்து நிறுத்த மலை முகட்டின் மேலிருக்கும் தேநீர்க்கடையில் கடுந்தேநீர் அருந்திவிட்டு இருவரும் நடப்போம். குறைந்தது நான்கு கிலோமீட்டர்கள். அப்போது குளிர் பெரிதாக தெரியவில்லை.


நெருஞ்சி இலக்கிய முற்றம் அப்போது கோவை சிபி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதக்கூட்டம் போடுவார்கள். அங்கேதான் பீ முதலான சில முக்கிய ஆவணப்படங்களைப் பார்க்க வாய்த்தது. ஒரு நாளில் நான் கூட ஒரு கவிதை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை பெரும்பாலும் தவற விட்டதில்லை. ஆனால் முடித்து விட்டு திரும்பும் போது உக்கடத்தில் இருந்து கடைசிப்பேருந்து தான் இருக்கும். போய்சேர இரவு பனிரெண்டுக்கு சமீபம் ஆகும். அந்தக் குளிரும் பெரிதாக தெரியவில்லை.


ஊருக்குப் போய் திரும்பும் வாரங்களில் ஊமாண்டி முடக்கு அருகே காலை நாலுமணிக்கு தேநீர் குடிக்க பேருந்தை நிறுத்துவார்கள். குளிரையும் சேர்த்தே அனுபவித்து அருந்திய நேரங்கள் அவை.
நேற்று மீண்டெழும் சென்னைக்கான பொங்கல் விழாவினைப் (கண்ணம்மா பேட்டை) பார்த்து விட்டு தோழர் கிருஷ்ணராஜ் அவர்களுடம் திரும்பும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. கோட்டூர்புரம் அண்ணன் துரைமுருகன் வீட்டுக்கு அருகே உள்ள தேநீர்கடையில் கடைசித் தேநீரை அருந்தி பேச்க்கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. கடுமையான குளிர். கர்சீப் ஹெல்மெட் எல்லாம் தாண்டி குளிர் ஊடுருவ வண்டியை உருட்ட வேண்டியதாயிற்று.


உண்மையில் சமாளிக்க முடியாத அளவு குளிர்.

ஒருவேளை எல் நினோ / லா நினா காரணமா?
அல்லது வயதாகிவிட்டதா................?

சனி, 29 நவம்பர், 2014

பல்லுயிரியம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை

ரெண்டு நாட்களுக்கு முன்பு பல்லுயிரியம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு கருந்தரங்குக்கு போயிருந்தேன். வழக்குரைஞர்கள், கல்விப்புல அறிவியளாலர்கள், காப்புரிமை அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், தொழில்புல ஆய்வாளர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது. இரு வழக்குரைஞர்கள் அதில் பேசினார்கள். பேசியதன் சாரம் இந்தியாவின் காப்புரிமை மற்றும் பல்லுயிரியம் குறித்த சட்டங்கள் நடைமுறைகள் உயிர்த்தொழில் நுட்பவியல் சார்ந்த ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் காப்புரிமைகளையும் குறைத்து வருவதாக அங்கலாய்த்தார்கள். உயிர்த்தொழில்நுட்பவியல் குறித்த வணிகநோக்கோடு கூடிய ஆய்வுகளுக்கும், ஆய்வு முடிவுகளை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கும் முன்பும், காப்புரிமையின் போதும் தேசிய பல்லுயிரிய ஆணையத்திடன் முன் அனுமதி பெற வேண்டும் என்பது 2002 இல் இருந்து நடைமுறை. தேசிய பல்லுயிரிய சட்டம் 2002 இப்படித்தான் சொல்கிறது. அதுதான் இவர்களுக்கு பெரிய தடங்கலாம். அதனால் தொழில் நலிந்து வருகிறதாம். அதில் ஒருவர் சொல்கிறார் பத்தாண்டுகளாக பணத்தைக் கொட்டி ஆய்வு செய்தவர்கள் இப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டால் எப்படி நாட்டின் வருமானம் உயரும் என்று.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்? Part 1

யமுனா ராஜேந்திரனின் சமீபத்திய பதிவு ஒன்றில் “காட்சிப்பிழை' முன்னிறுத்தும் வெகுஜன சினிமா பார்வையில் எனக்குக் கிஞ்சிற்றும் உடன்பாடு இல்லை” என்பதாக எழுதி இருந்தார். ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து என் பார்வையில் கொஞ்சம் விரிவாக எழுதி வருகிறேன். அதற்கு முன்னோட்டமாக இது. தற்கால சூழலில் காட்சிப்பிழையின் தேவை மிகவும் அவசியம். தமிழின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக சினிமா மாறி விட்டது. வெகு மக்கள் பேசுகிற பேச்சுகளில் எடுத்தாளுகிற உவமானங்களில் எல்லாமும் சினிமா இரன்டற கலந்து விட்டது. சில மாதங்கள் முன்பு கவுதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு வரி-வணிக சினிமாவில் கலையின் சாத்தியங்களை அடையக் கூடிய இடங்களும் உள்ளதாக வருகிறது. உண்மை. சிவாஜி கனேசன் நன்றாக நடித்த படங்களும் உண்டு. வணிக சினிமாக்களை முற்றாக புறக்கனித்து விட்டு மாற்று சினிமா என்று சொல்லப்படுவதையோ நல்ல சினிமா என்பதையோ முன்னெடுத்து விட முடியாது. உணர்வெழுச்சியால் மட்டுமே ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் வெகுஜன சினிமாவின் வலைமையை புரிந்து கொண்ட அலவு கூட லட்சிய பின்புலமுள்ள அமைப்புகளோ சிந்தனையாளர்களோ புரிந்து கொள்வதில்லை. இங்கே சினிமா என்ற பெயரில் ஒன்று இருக்கிறது. அதில் இருந்து தான் நல்ல சினிமா தர முடியும். இலக்கியங்கள் பிறந்த பின்புதான் இலக்கணங்கள் எழுதப்பட்டன. ஆக நல்ல சினிமா என்பதன் அளவுகோல்கள் வெளியே இருந்து வந்து விட முடியாது. ஏற்கனவே இருப்பது ஒன்றில் இருந்து வருவது எளிதாகவும் முன்னெடுத்துச் செல்ல லகுவாகவும் இருக்கும். நாளைய இயக்குனர்கள் காப்பி அடிக்கிறார்கள் அப்படி இப்படி என்று சொன்னாலும், அவர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். கதாநாயக பிம்பங்களை உடைத்து வருகிறார்கள்.  ஆனானப்பட்ட விஜயே நண்பன் படத்தில் நடிக்கிறார். இப்படியான மாற்றங்களை விரும்புபவர்கள் வெகுஜன சினிமாவை கவனிப்பதும் அதில் நல்ல அம்சங்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி சினிமா பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்தவும் செய்தல் முக்கியமானது.

இலக்கியம் எதற்காகப் படிக்கிறீர்கள்?



கடந்த சில வாரங்கள் முன்பு நண்பர் சங்கர் அவர்களின் இல்லத்தில் கவிஞானி சபரி வந்த ஒரு மாலை வேளையில் பலதரப்பட்ட பேச்சுக்களின் நடுவே இலக்கியவாதிகளின் நாடகத்தனம் பற்றிய பேச்சு வந்தது. எழுத்தாளர் கவிதா எழுத்துக்கும் எழுதுபவர்களின் வாழ்வுக்கும் இடையேயான முரண்களை மிகவும் கடுமையாக விமர்சித்தார். எழுத்தில் அன்பையும் அறத்தையும் சொல்லிவிட்டு வாழ்வில் வன்மத்தையும் குரூரத்தையும் வெளிக்காட்டும் இலக்கியவாதிகள் மிகவும் எமாற்றுக்காரர்கள் என்று ஆதங்கப்பட்டார். மற்றெல்லாரின் கருத்தும் அதுவேவாக இருந்தது. நான் மட்டும்வேறு கட்சி (போலி அறிவுஜீவியாதலால்). அதில் என்ன ஆச்சர்யம்... அப்படியானவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது என்று கேட்டேன். ஒட்டு மொத்த தேசமே ஒருவன் அல்லது அணி நல்லா விளையாடனும் என்று எதிர்பார்க்கிறது. காசுக்காக தோற்றுப் போகிறார்கள். போலியாக சினிமா செய்கிறார்கள். போலியாக வைத்தியம் பார்க்கிறார்கள் போலியாக கல்வி கொடுக்கிறார்கள். இப்படி அடிப்படை விஷயங்களிலேயே போலித்தனமாக இருக்கும் சமூகத்தில் ஏன் இலக்கியத்தில் மட்டும் தூய்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றேன்.  சபரியும் சங்கரும் சொன்னார்கள் இலக்கியம் மனுஷனை பண்படுத்துவது. ஒரு நல்ல இலக்கியப்படைப்பை வாசிக்கும் போது மனிதனின் மனோபாவம் பண்படுகிறது. ஒரு அருமையான படைப்பை வாசித்து முடித்த உடனே ஒருவன் ஒரு கொடுமையான செயலை செய்து விட முடியாது என்றனர். நான் அப்படி எந்தெந்த இலக்கியவாதிகள் ஏமாற்றி விட்டனர் என்று கேட்டேன். அவர்கள் சொன்னதில் சற்றேரக்குறைய தமிழில் அதிகம் புத்தகம் விக்கிற எழுதுகிற எழுத்தாளர்கள் மிகப்பெரும்பாலோனோர் வந்து விட்டனர். எனக்கு அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நான் சில ஆண்டுகளுக்கு முன் பெற்ற முதிர்ச்சியை இப்போது நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்றேன். நல்ல இலக்கியவாதிகள் இன்னுமுள்ளனர் என்றும் அவர்கள் விளம்பரத்தில் பெரும்பாலும் இல்லை என்றும் முக்கியமாக சென்னைக்கு வெளியே நிறைய பேர் உள்ளனர் என்றும் சொன்னேன்.

வேடசந்தூர் என்னும் சிறிய நகரத்தில் மணிகண்டன் என்ற நண்பர் பால் வியாபரம் செய்கிறார். குறி என்கிற இலக்கிய இதழை நடத்தி வருகிறார். அந்த பத்திரிக்கையில் அவர் எழுதுவதில்லை. நிறைய பேர்களை எழுத வைக்கிறார். தமிழின் பெரும்பாலான புத்தகங்களை படிக்கிறார். புத்தகங்களை படிக்க வைக்கிறார். ஜீவ கரிகாலன் இருக்கிறார். குகை மா புகழேந்தி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலக்கிய உலகில் இவர்களைபோல எத்தனையோ பேர்கள் இலக்கியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். வெளிச்சத்தில் மட்டுமே உண்மை இருப்பதில்லை. உண்மை இருட்டிலும் இருக்கும். நான் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி சொல்வது ஒன்று. இது போலிகளின் உலகம். இங்கே உண்மையை கண்டடைவது பெரும் சாதனை.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்று உறுதியாக நம்புகிறவன் நான். எனது நண்பர்கள் இந்த நம்பிக்கை அதாவது எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருக்கனும் என்ற நம்பிக்கை எனக்கு மிகப் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையும் கொடுத்தது. கவிஞர் முருகேசனின் ஒரு தோழியின் வாசலில் முன்னுரையில் வாசு மாமா எழுதியிருப்பார். எதிர்பார்ப்புகளின் திடவடிவம் தான் எஅம்பிக்கை என்று. அப்படியான நம்பிக்கையை நொறுக்கும் விதமான ஒரு வாழ்வை இன்றைய ந்கர்வுகலாச்சார பயணாலிகளான சில போலி இலக்கியவாதிகள் நொறுக்கி வருவது சகஜமாகிவிட்டது. நிறைய பேர் புதிதாக படிக்கவும் படைக்கவும் வருகிறார்கள். அப்படியான காலகட்டத்தில் வெளிச்சத்தில் வாழும் இலக்கியவாதிகள் உண்மையில் இலக்கியத்தின் உள்ளர்த்தத்தை உண்மையாக்க வேண்டும். பிழைக்க வழிகள் நிறைய உள்ளன.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014


ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சிம்மாசனங்களும் கிரீடங்களும் பல

ஒரு முறை என் அப்பவுடன் (2003 என்று நினைவு) சென்னை புத்தகக் காட்சிக்கு போயிருந்தேன். நிறைய நண்பர்கள் சூழ விக்ரமாதித்யன் நின்று பேசிக்கொண்டிருந்தார். கவிஞர் முருகேசன் மாமா மூலமாக சில முறைகள் அவரைப்பார்த்தும் பேசியும் இருக்கிறேன். அவரை முதலில் சந்தித்து பேசியது அகலாத நினைவு. பின்னொரு முறை எழுதுகிறேன். அவரிடம் போய் பெயர் சொன்னவுடம் தெரிந்து கொண்டார். மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தார். பெரும் சிரிப்போடு உடனிருந்தவர்களிடம் "இவன் நம்ம பயடா..." என்று தோளோடு இருத்தி சொன்னார். வேறெந்த படைப்பாளியிடமிருந்தும் இப்படியொரு அணுக்கமான வார்த்தைகளை இன்னமும் கேட்கவில்லை.பின்னர் கடந்து வந்ததும் என் அப்பா சொன்னார். "இவ்வளவு பெரிய ஆளுக்கெல்லாம் உன்னைத்தெரியுதே"..மதுபோதையில் இருந்த ஒரு தாடிக்காரரை அப்பா பெரிய ஆள் என்று சொல்ல ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். என்னை விக்ரமாதித்யன் எதிர் கொண்டதும் அணுக்கமாக பேசியதும் தான். இப்படியாகத்தான் விக்ரமாதித்யன் என்ற கவியையும் கடந்து ஒரு தனி மனிதனாகவும் அண்ணாச்சியை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. அவர் மெல் பெரு மதிப்பும் ப்ரியங்களும் வைத்துள்ளேன்.
அண்ணாச்சிக்கு சாரல் விருது என்று ரொம்ப நாள் முன்பாக அறிந்தேன். விழா விபரங்கள்  பேஸ்புக்கில் இருந்தது. மதியமே அவரிடம் பேசிவிட்டு நேற்று மாலை விழாவுக்குப் போயிருந்தேன். போய் வாழ்த்து சொன்ன போது அவருடன் சுகுமாரன் இருந்தார். கண நேர யோசனையும் இல்லாமல் என்னைப்பற்றியும், படிப்பு, தங்கியிருக்கும் இடம், நெய்தல் மூன்று இதழ்கள் கொண்டு வந்தது (மூன்று இதழ்களிலும் அவர் எழுதினார்; முதல் இதழ் வெளிவர பெரிதும் உதவினார்) நான் தற்போது வேலை பார்க்கு இடம் எல்லாமும் சொன்னார். அதுதான் அண்ணாச்சி. கண்ணிகளை இணைத்துக்கொண்டே போவார். புதுப்புது நட்புகளை அறிமுகம் செய்வார். பார்க்கும் போதும் பேசும் போதும் படிக்க வேண்டிய நூல்களை பரிந்துரைப்பார். என்னை அவர் நினைவு கொள்ள வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. ஆனாலும் கொஞ்சம் தமிழ் இலக்கியம் படிக்கிறவன் என்பதால் என்னையும் கணக்கில் வைத்திருக்கிறார்.
ஜேடி ஜெர்ரி பாராட்டுக்குரியவர்கள். அண்ணாச்சி உட்பட தகுதியான பலருக்கும் சாரல் விருதளித்துள்ளார்கள்.நன்றிகள் பல- அவர்களுக்கும் அவர்களது அறக்கட்டளைக்கும். ஞானக்கூத்தன், பாலா, நக்கீரன் கோபால், தேணுகா, கரு. பழனியப்பன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் பேசினர். அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த போதே நான் எழுத யோசித்த பல விஷயங்களையும் பின் மேலும் பலவற்றையும் சுகுமாரன் பேசினார். அவர் பேசப்பேச அண்ணாச்சி குறித்த இந்தப்பேச்சுக்களை ஒரு டாக்குமெண்டரியாக தொகுக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த வீடியோக்களை ஜேடி ஜெர்ரியோ பிறரோ படமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். விக்ரமாதித்யன் குறித்த சுகுமாரன் நக்கீரன் கோபல் கரு பழனியப்பன் இவர்களின் பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டியன. யாரவது தகுதி உள்ளவர்கள் உடனடியாக இதைச்செய்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நானே பண்ன வேண்டியிருக்கும்.
நேற்று நானிருந்த மனநிலையில் எழுதியிருந்தால் இன்னும் நேர்த்தியாகவும் விரிவாகவும் இருந்திருக்கும். அவசரகதியில் இதை எழுதுவதால் இப்படியாகிவிட்டது. இரண்டு நிமிடங்களில் தன் ஏற்புரையை முடித்துக்கொண்டார் விக்ரமாதித்யன். கபிலர் முதல் லிபி ஆரண்யா வரையான தமிழ்க்கவிகள் (விக்ரமாதித்யன் சொன்னது) மரபின் முக்கிய ஆளுமையான விக்ரமாதித்யனை புற அடையாளங்களை அளவீடாகக் கொண்டு நம் தமிழ் இலக்கியப்பரப்பு அவரை அளவிட்டுவிட்டதோ என்று தோண்றும் அவ்வப்போது. அணுகுவதற்கு இலகுவான எளிமையும் கிரகிக்க தோதான நேரடித்தன்மையும் சிலாகிக்க வேண்டிய கவித்துவ அழகும் ததும்பும் விக்ரமாதித்யனின் படைப்புக்கள் என்னைப்போன்ற பாமர ரசிகர்களை மட்டுமல்ல விக்ரமாதித்யன் சுகுமாரன் போன்ற கவி ஆளுமைகளையும் ஈர்ப்பதில் வியப்பில்லை.

தமிழ்க்கவிகளே தமிழின் அடையாளம் என்று உரக்க சொன்ன அண்ணாச்சியின் வார்த்தைகளில் இரண்டு கவிதைகள் எழுதியவன் என்ற முறையில் எனக்கும் கொஞ்சம் இருமாப்பு கூட பசியையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் விளக்கு வரை நடந்து வந்து பேருந்தில் வீடு திரும்பினேன். எனக்கு விருது கிடைத்தால் கூட இப்படியொரு மனநிறைவு இருந்திருக்காது. ராபர்ட் ஆரொக்கியம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த நிகழ்வுக்குப் பின் நெய்தல் மீண்டும் வரும் அபாயம் உள்ளது. அண்ணாச்சி பற்றிய ஒரு டாக்குமெண்டரி செய்யவும் கூடும்.
சிம்மாசனங்களும் கிரீடங்களும் பல; உங்கள் பிருஷ்டமும் சிரசும் பொருந்தினால் சரி -விக்ரமாதித்யன் (வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை)