நேற்று மாலை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் பஷீர் பற்றிய நினைவரங்கம் ஒன்றுக்குப் போனேன். பஷீரின் குரலிலேயெ, பஷீரின் ”சுல்தானிய” அசைவுகளுடன் Bhasheer, the Man என்ற விவரணைப்படம் திரையிட்டார்கள். 1987 இந்தப் படத்துக்கு தேசிய விருது (சிறந்த வாழ்க்கைச்சித்திரம்) வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய விருது பெற்ற படங்களுக்கேயான வீணை இசையோடும், அண்மைக்காட்சிகளோடும், மெதுவான நகர்தலோடும் அற்புதமாக இருந்தது. பஷீரின் ஸ்டைலான விரலசைவுகள், காலசைவுகள், அவர் பீடி குடிப்பது என படம் அற்புதம். பஷீரின் எள்ளல் பேச்சு, அவர் வாழ்ந்த சொர்க்கபுரியின் அழகு, அவரின் கிராமஃபோன் என 1980 களின் பரபரப்பற்ற உலகத்தோடு படம் ஒரு பெரும் அனுபவம். யூடியூபில் கிடைக்கிறது. இப்படியான படங்களை இது மாதிரியான அரங்குகளில் பார்த்தால் இன்னும் அருமை. இப்படித்தான் பனுவலில் ஒரு முறை செவன் சாமுராய் போட்டார்கள். கடைசிவரை பார்த்தேன்.
பஷீர் பற்றி மூவர் பேசினர். திரைக்கலைஞர் ரோகிணி வழக்கமாகப் பேசினார். பஷீர் தமது ஆசான் என்றார். பேச்சினூடே சுரா அவர்களின் பஷீரின் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு பெரும் விபத்து என்றார். நான் படித்த பஷீரின் அனைத்து எழுத்துகளையும் சுரா வின் மொழிபெயர்ப்பில் தான் படித்தேன் எழுத்து பிறகு கிருஷ்ண பிரபு பேசினார். மிகுந்த தயாரிப்புகளோடு பரபரப்போடு பேசினார். மொழிபெயர்க்கும் போது முழு படைப்பும் வந்து விடுவதில்லை என்று லேசாக ஆரம்பித்து விட்டு தன் ஏரியாவுக்கு வந்தார். எஸ் ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த கதைகள் என்ற தொகுப்பு நூலில் உள்ள பிழைகளை - பிழைகள் என்றால் எழுத்துப்பிழைகள் அல்ல. வாக்கியப்பிழைகள் கருத்துப்பிழைகளை எடுத்து எடுத்து பேசினார். இப்படி தமிழில் முக்கிய கதைகளை தொகுக்கும் போதே இத்தனை வண்டி தப்பு எனும் போது மொழிபெயர்ப்புகள் எப்படி ஒரு படைப்பாளியை முழுமையாகக் கொண்டு வந்து விடும் என்கிறார். உண்மைதான். தமிழில் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் தமிழ் இலக்கணம் தெரியாத எனக்குக் கூட நிறைய தப்புகள் தெரியும் வண்ணம் பிழைகளோடே நூல்கள் பதிக்கப்படுகின்றன. சினிமாவும் இலக்கியமும் சற்றேரக்குறைய ஒன்று கலந்து விட்டது போலவே தோன்றுகிறது. வணிகம் பிரதானமாகிவிட்டது. புத்தகக் காட்சிக்காக வேண்டு நூல்களை பதிக்கிறார்கள். 10 பக்கம் எழுதிட்டேன்; 60பக்கம் எழுதிட்டேன்; எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பத்தி என எழுத்தாளன் ப்ரோமோ செய்ய வேண்டி உள்ளது; பேஸ்புக்கில் வெட்டிச் சண்டை போட வேண்டி ஆகிறது. பொண்டாட்டி தாலியை அடகு வச்சு புத்தகம் போட்டேன். ------ஓசியில விசிட்டிங் கார்டு மாதிரியில்ல கொடுக்க வேண்டியிருக்கு என அலுத்துக்கொண்ட நா முத்துக்குமார் கூட இப்போது அப்படி சொல்ல மாட்டார். நிறைய பதிப்பகங்கள்; நிறைய பேரிடம் பதிக்கும் அளவு பணமும் இருக்கிறது; அல்லது ப்ரோமோ செய்ய குழு இருக்கிறது. ஆகவே புத்தகம் எழுதுவது கடினமானது அல்ல. இந்தப் பெருமழையிலும் புத்தகம் எழுதாமல் விரதம் காக்கும் Krishna Prabhu இதைச் சொல்ல தகுதியானவர்தான். அவர் சொன்ன இடம் வேண்டுமானல் சரியில்லாமல் இருக்கலாம். சொன்னதும் ஆதங்கமும் சரியே.பிழைகள் இருக்குதுன்னு எழுதினா புரூஃப் ரீடிங் பண்ணவே ஆள் இல்லை; கண்காட்சிக்கு காலம் நெருங்கிடுச்சு; ஆபீசில் ஓவர் ஒர்க் என சால்ஜாப்பு சொல்வதற்கு எழுதியவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்; தவிர்கவே முடியாது என்று சொல்ல பதிப்பகங்கள் தயாராகவே இருக்கின்றன. போகிற போக்கில் சாரு இப்படியெல்லாம் பண்ணுவதில்லை பரவாயில்லை என்றார்; ஆமாம் சாரு இப்படியெல்லாம் பண்ணுவதில்லை. வி்ஷயத்தையே தகவல் பிழையோடு எழுதிடுவார்.
எழுத்துப்பிழைகளுக்கும், தகவல் பிழைகளுக்கும், வாக்கிய இலக்கணப்பிழைகளுக்கும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் நியாயமாக வெட்கப்பட வேண்டும். கிருஷ்ண பிரபு சொல்வதைப் போல இதை நிறையப் பேர்கள் புதிதாகப் படிக்கிறார்கள். இந்த நேர்த்தி கூட இல்லாமல் அவசரம் அவசரமாக பதிப்பிக்க அது என்ன புரட்சிகர ஆவணமா? புத்தகம் தானே. ஆற அமர சரியாக போட்டுட்டு போறடு? அட்டைப்படம் வடிவமைக்கவும் ப்ரோமோ பண்ணவும் செய்யவும் ஒதுக்குவதைப் போல புத்தகத்தை செம்மையாக கொண்டு வரவும் ஒதுக்க வேண்டும்.
நிறைய புதியவர்கள் படிக்க வருகிறார்கள். ஆட்டுமந்தைகளும் அதில் உண்டு. எல்லோருக்குமாக நல்ல நூல்கள் வரட்டும். கிருஷ்ண பிரபு ஆரம்பித்தது சரியான நேரம். எந்த இலக்கிய பரபரப்பும் இல்லாத நேரம். இப்போது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஆற அமர யோசிக்கலாம். எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
மேற்சொன்ன அரங்கில்ஷாஜி Shaji Chen பேசியது என்றென்றும் மறக்காதது. மிக யதார்த்தமான உண்மையான பாவனையற்ற பேச்சு. அதுகுறித்த பதிவு நாளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக